18/12/15

நோபல் பரிசு பெறுவாரா இந்த தமிழ்ப்பெண்?

கற்பனையில் கூட எல்லைகளை நிர்ணயிக்க முடியாத  அளவில் பறந்து விரிந்து கிடக்கும்  பிரமாண்டமான  பிரபஞ்சவெளி எண்ணற்ற ஆச்சரியங்களும்   எளிதில் புரிந்துகொள்ளமுடியாத புதிர்களும்  நிறைந்ததுஇந்த மர்ம தேசத்தில் இன்னும்  முழுவதுமாக அவிழ்க்கப்படாத முடிச்சுகளில் ஒன்றுகருப்பு துளைகள்என அறியப்பட்டிருக்கும்  black holes.  பூமியிலிருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளை. அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று அர்த்தம். சூரியன் பிறந்தே சுமார் 460 கோடி ஆண்டுகள்தாம் ஆகின்றன   என்பதிலிருந்து தூரத்தை  யூகித்துக்கொள்ளுங்கள்.
 இந்த கருப்பு துளைகள் பற்றிய  விண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்  தொடர்ந்து கொண்டுவருகின்றனஇதில் ஒரு புதிய விஷயத்தைத் தனது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்து   உலகநாடுகளிலுள்ள  விண்ணியல் விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறார்  இந்த இந்திய பெண் விஞ்ஞானி. அமெரிக்காவிலிருக்கும் அவருடன் பேசியபோது அறிந்தவை இவை

பிரியம்வதா என்னும் பிரியா டெல்லியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினீயர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். மேற்படிப்புக்கு அமெரிக்கா போனவர். உலகப்புகழ் பெற்ற  அமெரிக்க MIT பல்கலை கழகத்தில் விண்ணியலில் முதுகலை, தொடர்ந்து முனைவர் பட்டங்கள் பெற்று தற்போது அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில்  விண்ணியல் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர். தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து  கொண்டிருப்பவர்டென்மார்க் நாட்டின் கியூபன் ஹோவன் விண்ணியல் பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசியராக  அழைக்கப்பட்டிருப்பவர். டெல்லி  பல்கலை கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராகவும் கௌரவிக்க பட்டிருப்பவர்,
உலக விண்ணியல் விஞ்ஞானிகள் பிரமித்து போகுமளவிற்கு இவர் சமீபத்தில்  கண்டு பிடித்திருப்பது என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள கருப்பு துளைகளை பற்றி நாம் சற்று புரிந்து கொள்ள வேண்டும்
விந்தைகள் நிறைந்த விண்பேரண்டவெளியில்  ஒரு பகுதி இந்த   கருங்குழிகள் (Black Hole) அல்லது கருந்துளைகள் என்பன, இவை  வலுவான ஈர்ப்புச் சதியைக் கொண்டுள்ளவை தானும் ஒளிராது, தன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது  இந்தக் கருந்துளைகள்.. எனவே, கருந்துளையை நேரடியாகப் பார்க்க முடியாது. நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் கருந்துளையை இனம் காண வானவியலாளர்கள் வேறு வழிகளைக் கண்டுள்ளனர்.அதன் மிகக் கூடுதலான ஈர்ப்பு விசையின் காரணமாக, அதைச் சுற்றி இருக்கும் வான் முகில்கள், விண்மீன்களைப் பிடித்துக் கபளீகரம் செய்துவிடும். அவ்வாறு அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்யும்போது அந்தப் பொருள்கள் மேலே எறிந்த கல் நேரே கீழே விழுவது போல நேரடியாகக் கருந்துளையில் விழாது. வாஷ்பேசினில் நீர் சுழன்று சுழன்று துளைக்குள் விழுவதுபோலக் கருந்துளையைச் சுற்றிச் சுற்றிப் பொருள்கள் விழும்.
இதன் சுற்றுப்பாதையில் இப்படிச் சுழன்றுகொண்டிருக்கும்   கோள்களின் வேகம், அவைகள் இருக்கும் நிலைகளின் மூலம் இந்தக் கருந்துளைகளின்  அமைப்பை கணக்கீடுகள் மூலம் எப்படியிருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள். வளரும் தொழில் நுட்பம் கைகொடுக்க பெருமளவில் கணினிகள் மூலமும் ராட்சத டெலிஸ்கோப்புகள் மூலமும் இந்தக் கணக்கீடுகளை உறுதிசெய்திருக்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் இருக்கும் அடர் கருப்பு பகுதி  வாழ்நாள் முடிந்த பின் எரிந்துபோன நட்சத்திரங்களின் கூட்டம் என்றும். அவற்றுடன்  புதியஎரிந்தநட்சத்திரங்கள்  சேர்வதால் அவை  வரமின்றி வளர்கின்றன என்றும் சொல்லப்பட்டது.
இந்தப் பின்னணியில் பிரியம்வதா கடந்த சில ஆண்டுகளில் தனது தொடர்ந்த ஆராய்ச்சிகள் மூலம்  கருந்துளைகளை உருவாக்கும் அடிப்படையான  அடர் கருப்பு பொருள்களின் (dark matter)   இயல்புகளையும், கருந்துளைகள் உருவாகி வளர்வது குறித்தும் ஆராய்ந்து அறிக்கைகள் கட்டுரைகள் தந்திருக்கிறார். பலகாலமாக நம்பப் பட்டுவந்ததுபோல இந்த கருங்குழிகள் இறந்த நட்சத்திரங்களின் தொகுப்பு இல்லை. அவைகள்  ஒரு வாயுவாக தானாகவேஉருவாகி மிக வேகமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியைத் தானே நிறுத்திக் கொண்டுவிடுகிறது. கருந்துளைகளுக்கும் வரம்பு,விளிம்பு உண்டு என்பது தான் இவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கும் விஷயம்.  இந்த முடிவு இப்போது விண்ணியல் விஞ்ஞானிகளுக்கு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறதுஇது கரும் துளைகளை பற்றிய ஆராய்ச்சிகளை வேறு கோணத்திற்கு இட்டுச் செல்லப்போகிறது.
அவர் முதன்முதலாக கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அறிவித்திருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு  உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “ராமன் விளைவு” “சந்திரசேகர் வரையறைஎன்பதைப் போல பிரியா வரம்பு என்பதும் பேசப்பட்டு வருகிறது.
பிரியம்வதாவின் இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவருக்கு  பல நாடுகளின்  நிறுவனங்களின் விருதுகளும் ஃபெலோஷிப்புகளும்  வழங்கப்பட்டிருக்கிறது  ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதை மிகவிரைவில் இவர் பெறுவார்  என விஞ்ஞான உலகம் கணித்திருக்கிறது.
ஆண்டு தோறும் தவறாமல்  பாரதிக்கு விழா எடுத்து அதில் அரிய சாதனைகள் செய்தவரைத் தேர்ந்தெடுத்து  ”பாரதி விருது” வழங்கும் வானவில் பண்பாட்டு கழகம் இந்த ஆண்டின் பாரதி விருதுக்குப் பெருமைக்குரிய இந்த தமிழ்ப்பெண்மணியைதேர்ந்தெடுத்திருக்கிறது.

வானை, கடல்மீன்களை அளப்போதோடு நின்றுவிடாமல் விண்ணியல் சாத்திரத்தில் தமிழ் மக்கள் தேர்ச்சி பெற்று அவர்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்என கனவுகண்டவன் பாரதி. அந்தக் கனவை மெய்ப்பித்திருக்கும் இந்தப் பெண்ணை அந்த விருதுக்குத் தேர்வு செய்திருப்பது, மிகப்பொருத்தமானது.
விண்ணியல் விஞ்ஞானி பிரியம்வதா நடராஜன் அவரது சாதனைக்காகவும்இந்திய ஊடகங்களின் வெளிச்சம் இன்னும் விழாத இந்தப் பெருமைக்குரிய தமிழரைத் தேடிக்கண்டுபித்தற்காக வானவில் பண்பாட்டு கழக  நிறுவனர் ரவி அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்   








1 கருத்து :

உங்கள் கருத்துக்கள்