21/2/16

என்று தணியும் இந்தத்தாகம் ?




அறிவியலாளர்கள் ஆச்சரியங்களை நம்புவதில்லை. எந்த ஒரு நிகழ்வுக்கும் அறிவுபூர்வமான காரணங்களைச் சொல்லுவார்கள் அல்லது ஆராய்ந்து கண்டுபிடிப்பார்கள். ஆனால் நமது எல்லையில் சியாச்சின் மலைச்சரிவில் நிகழந்த ஒரு பனிப்பாறைசரிவில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவர 25 அடி ஆழத்தில் உறைபனிகளுக்கு நடுவில் மைனஸ் 45 டிகிரி குளிரில் ஆறு நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டிருக்கும் செய்தி அறிவியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
காஷ்மீரின் லடாக்கின் பனி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 600 அடி உயரத்திலிருக்கும் சியாட்சின் பனிமலைப்பகுதிதான். உலகிலேயே மிக அதிக உயரத்தில், ஆபத்துகள் மிகுந்த போர்க்களமாக அறியபட்டிருக்கும் பகுதி. வருடம் முழுவதும் உறைபனியும், 60 டிகிரி குளிரும், மணிக்கு 100கீமி வேகத்தில் பனிக்காற்றும் வீசும் பகுதி. புல் பூண்டு எதுவும் இல்லாத இந்தப் பனி பாலைவனப்பகுதியை ஒரு நாளைக்கு 6 கோடி செலவில் இந்திய ராணுவம் பாதுகாக்கிறது.அதிரடி தாக்குதலுக்குப் பெயர் பெற்ற மெட்ராஸ் ரெஜெமெண்ட்க்கு தான் இந்தப் பணி.  1949 கராச்சி ஒப்பந்தம் 1972 சிம்லா ஒப்பந்தம் எதிலும் இந்த மலைப்பகுதியின் எல்லைப்பிரச்சனை தெளிவாக வரையறுக்கப்படாதால், இந்தியா-பாக்கிஸ்தான் இரு நாடுகளும் ”போர் தயார்” நிலையிலேயே எப்போதும் இந்த பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
இங்குள்ள பாகிஸ்தான் எல்லைக்கு 5 கீமி அருகே மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு 800 அடி உயரம், 400 அகலம் உள்ள பனிப்பாறை ஒன்று சரிந்து முகாமின்மேல் விழுந்து 10 வீரர்களை 25 அடி ஆழத்தில் புதைத்தது. இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பனியில் 25 அடிக்குக் கீழே புதைந்த வீரர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், விமானப் படைப்பிரிவினரும் ஈடுபட்டனர். உடனடியாக மீட்க முடியாததால், 10 பேரும் இறந்ததாகக் கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டனர்.
போரே நடக்காத இந்தப் பகுதியில் இதுவரை 869 வீரர்கள் இறந்ததாகப் பாராளுமன்றத்தில் பதிவு செய்யபட்டிருக்கிறது. இவர்கள் பனியின் சீற்றத்திற்கு பலியானவர்கள். இவர்களைத்தவிர பலநூற்றுகணக்கானவீரர்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள்
ஒரு ராணுவ வீரன் பணியிலோ அல்லது போரிலோ இறந்தால் அவரது உடலைத் தகுந்த மரியாதைகளுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதனால் இறந்த வீரர்களின் உடல்களைத் தேடும் பணி துவங்கியது. விடா முயற்சியுடன் 150 வீரர்களும், டாட் மற்றும் மிஷா என்ற இரண்டு மோப்ப நாய்களும் மீட்புபணியில் இறங்கின. எலக்ட்ரிக் ரம்பம் மூலம் பனிப்பாறைகள் அறுக்கப்பட்டு, ரேடார், ரேடியோ சிக்னல் கருவிமூலம் வீரர்களின் உடல்கள் தேடப்பட்டன. இரவு நேரத்தில் வெப்ப நிலை மைனஸ் 55 டிகிரி வரை சென்றதாலும், கடும் குளிர் காற்று வீசியதாலும் மீட்பு பணி அவ்வப்போது பாதிக்கப் பட்டது. அதையும் மீறிப் பனிப்பாறைகளைத் தோண்டியதில் ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் புதைந்திருந்ததை மீட்பு குழுவினர் கண்டு பிடித்தனர். பனியில் புதைந்து 6 நாட்களுக்குப் பின் அவர் உயிருடன் இருந்தது மீட்பு குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதிர்ச்சியில் சோர்வாக இருந்த ஹனுமந்தாவின் உடல் சூடான ஆக்ஸிஜன் மற்றும் ஹீட்டர்கள் மூலம் சூடேற்றப் பட்டு ஹெலிகாப்டரிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டுபாட்டு கேந்திரத்தில் காத்திருந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம்மூலம் உடனடியாக டெல்லி மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டார். காத்திருந்த சிறப்பு மெடிகல் டீம் தங்கள் பணியைத் தொடர்ந்தது. அனைத்தும் மின்னல் வேகத்தில் சில மணிநேரங்களில் நடந்தது .ஆனால் ஆறு நாட்கள் ஆச்சரியமாக உயிர்பிழைத்திருந்த ஹனுமந்தப்பாவை சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தும் காப்பாற்றமுடியவில்லை. பிராத்தனை செய்து கொண்டிருந்த தேசம், வருந்தியது
பனிச்சரிவுகளில் மீட்பு பணி மிகச் சவாலானது. நம் வீரர்களுக்கு இதற்கான பயிற்சிகளும் அளிக்கபட்டிருக்கிறது. போட்டிருக்கும் அத்தனை பாதுகாப்பு உடைகளையும் தாண்டி எலும்பைத் தாக்கும் குளிரில் மிகவும் சிக்கலான கருவிகளைத் திறம்பட இயக்கி இறந்தவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். புதைந்திருப்பது எந்தப் பகுதி என்பதை கண்டறிய ஒலிக்கதிர்களை விமானத்திலிருந்து அந்தப் பகுதியில் செலுத்தி கண்டுபிடித்தபின் அந்த இடங்களில் சக்திவாய்ந்த ட்ரில்லர்கள் மூலம் துளையிட்டு அதன் மூலம் மின் அலை சிக்கனல்களை அனுப்பினார்கள். சியாச்சினில் பணியிலிருக்கும் ராணுவத்தினர் தங்களிருப்பிடத்தை அறியும் சிக்னல் எழுப்பும் கருவி அணிந்திருப்பார்கள். சில இடங்களிலிருந்து அந்த சிக்னல்கிடைத்தவுடன்  அந்த இடங்களில் விசேஷ கட்டர்களை செலுத்தி பனிப்பாறைகளை அறுக்க வேண்டும். கல், கான்கீரிட் போன்றவைகளைவிட கடுமையான இந்தப் நீலப்பனிப்பாறைகளை அறுக்கும் கத்திகள் இயங்க தேவையான அதிசக்தி மோட்டர்கள் அதற்கான பேட்ரிகள் எல்லாம் அடிவாரத்திலிருந்து ஹெலிகாப்படரில் கொண்டுவரபட்டது. அவைகள் இயங்க நின்றநிலையில் ஒரு ஹெலிகாப்டர் என்ஜின் ஒடிக்கொண்டிருந்தது.  மீட்புப் பணிகளைப் பகலில் கடுங்குளிருடன் கண்பார்வையை இழக்க செய்யும் அளவிற்கான வெண்பனியில் பட்டுத் திரும்பும் சூரிய ஓளியிலும், இரவில் மைனஸ் 35 டிகிரி குளிரிலும் செய்திருக்கிறார்கள்.
.கடும் போராட்டத்துடன் நடந்த இந்த மீட்பு பணியில் மற்ற 8 வீரர் களின் உடல்களும் மீட்கப் பட்டு விட்டன.

செய்திஅறிந்தவுடன் பிரதமர் டிவிட்டரில்''ஹனுமந்தப்பாவை பார்க்கப் போகிறேன். அவர் உடல் நலம் தேறி வர வேண்டுமென்று நாடே வேண்டுகிறது'' எனக் குறிப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றிருக்கிறார். பிரதமரின் இந்தச் செய்கை ராணுவவீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.
இறந்த வீரர்களுக்கு அஞ்சலியும் சவாலான மீட்புபணிகளை வெற்றிகரமாகச் செய்த வீரர்களுக்குப் பாரட்டுகளை தெரிவிக்கும் ஒவ்வொரு இந்தியனின் மனத்தில் எழும் கேள்வி


என்று தணியும் இந்த எல்லைப் பிரச்சனையின் தாகம்?




1 கருத்து :

  1. 1972 சிம்லா ஒப்பந்தத்தின் போதே சியாச்சின் பற்றி பேசப்பட்டது ஆனால் எந்தொரு முடிவிற்கும் வராமல் ஒத்திவைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பாகிஸ்தானுடன் எல்லை பிரச்சனை தீர்க்கபடாமலே இருந்து வருகிறது .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்