கடந்த சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்ப வசதி. GPS. உங்கள் காரில் இருக்கும் அந்தக் கருவியில் நீங்கள் போகவேண்டிய இடத்தைச் சொன்னால் அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது சரியான பாதை போகும் நேரம் எல்லாம் அந்தக் கருவி சொல்லும். அது சொன்ன பாதையிலிருந்து மாறி நீங்கள் வேறுபாதையில் காரை ஒட்டிக்கொண்டு போனால் நீங்கள் தவறாகப் போகிறீர்கள் என்றும் அந்த இடத்திலிருந்து மீண்டும் எப்படி சரியான இடத்துக்குப் போக வேண்டும் என்றும் சொல்லும்.(திட்டாமல்- கோபித்துக்கொள்ளாமல்) ஆம்! அந்தக் கருவி பேசும். இது இப்போது இந்திய கார்களிலும் செல்போன்களிலும் வந்துவிட்டது.
இப்படியொரு ஜிபிஎஸ் கருவி இருந்தால்போதும், அமோசன் காடுகளிலோ, அண்டார்ட்டிகா பனிபாலைவனத்திலோ கூட நீங்கள் காணாமல் போகவே முடியாது ஏழு கடல், ஏழு மலையையும் சர்வசாதாரணமாகத் தாண்டி வீட்டுக்கு வந்துவிட முடியும். காரணம், தெளிவான வழிப்பாதையை அதன் மூலம் அறிய முடிவதுதான். இன்று இந்தியாவிலும் இந்த வசதி கிடைத்ததற்கு காரணம் அமெரிக்கா விண்வெளியில் நிறுத்தியிருக்கும் செயற்கை கோள்கள் தான்.
அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பும் மட்டுமே கொண்டிருக்கும் இந்தச் செயற்கை கோள் வசதியை நமது இஸ்ரோ நமக்காக இப்போது செய்யவதற்காக அனுப்பிக் கொண்டிருக்கும் கோள்கள்தான் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். கோள்கள். .கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த வரிசையில் 5 (1-இ) வது கோளை விண்வெளிக்கு அனுப்பி சரியான இடத்தில் நிறுத்தியிருக்கிறது. இஸ்ரோவின் சாதனை மகுடத்தில் இது இன்னொரு வைரம்.
இஸ்ரோவின் நொடிப்பொழுதில் வழிகாட்டும் GPS திட்டம் சரியாக இயங்க 7 கோள்கள் கொண்ட ஒரு தொகுப்பு பூமத்திய ரேகைக்கு 36000 கீமீக்கு மேலே நிறுவப்பட வேண்டும். அதில் 3 பூமத்திய ரேகைக் மேலேயும் மற்ற 4ம்அதற்கு 29 டிகிரி சாய்வாகவும் நிறுவப்பட வேண்டும். எனக் கணக்கிட்டு 2013ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொன்றாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோள்கள் நிறுத்தப் பட வேண்டிய இடங்கள் மிக துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, அந்த இடத்தில் கச்சிதமாக நிறுத்தபடவில்லை என்றால் திட்டம் வெற்றி பெறாது. இதுவரை அனுப்பிய 4 கோள்களும் சரியான இடத்திலிருப்பதைப் போலவே இந்த 5வது கோளும் திட்டமிட்டபடி விண்வெளியில் பாய்ந்த சில நிமிடங்களில் அதன் திட்டமிட்ட இலக்கில் போய் நின்றது
ஏன் எழு கோள்கள்?.
இஸ்ரோ இந்த வசதியைத் திட்டமிட்டிருப்பது இந்தியாவிற்கு மட்டுமில்லை. இதனால் பலன் பெறப்போவது பல தென்கிழக்கு நாடுகளும் தான். இந்தியாவைச் சுற்றி 1500 கீமி பரப்பளவை கண்காணிக்கபோகிறது என்பதாலும், இப்போது அமெரிக்கா கோள்கள் தரும் தகவல்களைவிட மிக அதிகளவு தகவல்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும் 7 கோள்கள் திட்டமிடபட்டிருக்கிறது.
இந்தக் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். கோள்கள் எப்படி வேலைசெய்கிறது?. ஒவ்வொரு கோளிலும் சக்திவாய்ந்த ஒரு அணுசக்தி கடிகாரம் இருக்கிறது. அது அனுப்பும் மின் அலைகளைப் பூமியில் உள்ள GPS கருவி பெற்று அது இருக்குமிடத்தகவலை கோளுக்கு அனுப்புகிறது.கோளிலிருக்கும் மேப் ரிடர் போன்ற மற்ற கருவிகளின் உதவியுடன் வழிகாட்டும் பணி நடைபெறுகிறது. இவ்வளவும் ஒருவினாடியின் ஒரு லட்சம்பகுதிக்குள் நடைபெறும். வினாடி பிசகினால் வழி காட்டவேண்டிய இடம் தவறலாதாகி ஓர் லட்சம் மைல் தள்ளியிருக்கும் இடத்தைக் காட்டிவிடும் இந்தக் காரணத்தினால் கோளில் உள்ள அணுசக்தி கடிகாரம் மிக மிகத் துல்லியமாக இயங்க வேண்டும். . கோள்களில் இருக்கும் அந்தக் கடிகாரங்கள் 300மில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி மட்டுமே தாமதமாகும் என்ற அளவுக்குத் துல்லியமானது. எல்லாவற்றையும் விட இந்தப் பணிகளைச்செய்ய அந்தக் கோள் மிகச்சரியான் இடத்தில் நிலைநிறுத்த பட வேண்டும்.
. இந்தச் சவாலான சாதனையைத்தான் இஸ்ரோ தவறு இல்லாமல் 5 முறையும் செய்திருக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் மற்ற இரண்டையும்(1F,1G) அனுப்பி இந்தக் கோள்களின் கட்டமைப்பை உருவாக்கி விட்டால் இந்திய GPS செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
ஏற்கனவே இருக்கும் இந்த வசதியை ஏன் நாம் மீண்டும் செய்ய வேண்டும்? இப்போது அமெரிக்கா தந்திருக்கும் வசதி பிறநாடுகளில் 24 மணி நேரமும்கிடைப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் இந்தியா உருவாக்கும் இந்தச் சேவை தரை, கடல் தவிர் வான்வெளி பாதைகளுக்கும் இயற்கையின் சீற்றங்களின் போக்கை அறிவதற்கும் பயன்படப்போகிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசாவின், ஓராண்டு பட்ஜெட்டில் செலவழிக்கும் தொகையில் பாதியைத்தான் இதுவரையில், அதாவது கடந்த 40 ஆண்டுகளில் இஸ்ரோ செலவிட்டுள்ளது. அதற்குள் விண்வெளித்துறையில் எந்த நாடும் எட்ட முடியாத பல சாதனைகளைச் செய்திருக்கிறது. இந்த வெற்றிகளுக்குப் பின்னே இருக்கும் விஞ்ஞானிகள், பொறியாளர்களில் பலர் இளைஞர்கள். உலக அரங்கில் இவர்களின் அர்ப்பணிப்பான பணிகளினால் தான் நாட்டின் பெருமையும் கெளரவும் உயர்ந்திருக்கிறது.
அவர்கள் சாதனையால் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும் நாம் அவர்களுக்கு நம் நன்றியையும் சொல்வோம்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்