10/3/16

அடுத்த அமெரிக்க அதிபராவாரா? இந்தப் பெண்மணி

250 ஆண்டு அமெரிக்க வாலாற்றில் இதுவரை ஒரு பெண்மணி அதிபரானதில்லை. இந்த ஆண்டு நடக்கப்போகும் அதிபர் தேர்தலில்அதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. அடுத்த அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. அமெரிக்க தேர்தல் முறைப்படி பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும்முன் அவர்கள் கட்சியினால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உட்கட்சி ஜனநாயகம் வலுவான அரசியல் அமைப்பு முறையுள்ள அமெரிக்க அரசியலில் கட்சிகள் இந்தத் தேர்தல்களை மாநிலந்தோறும் நடத்தி எந்த வேட்பாளர் அதிகமான மாநிலங்களில் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறாரோ அவரைத் தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். அவர்களில் ஒருவரை மக்கள் நேரிடையாக வாக்களித்து அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள்.
இப்போது அமெரிக்க அரசியல் கட்சிகளான குடியரசு, மற்றும் ஜனநாயக கட்சிகளில் உட்கட்சி தேர்தல்களம் சூடுபிடித்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் முதல் உட்கட்சி தேர்தல் அய்வோவா மாநிலத்தில் துவங்கியது. அதில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இந்த மாநிலத்தின் முதல் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தான் அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் ஹிலாரியின் வெற்றி ”அமெரிக்காவிற்கு ஒரு பெண் அதிபர்” என்பதற்கான அறிகுறிதென்படுவதாக ஊடகங்கள் பேசின.
இந்த முதல் வெற்றிக்குப் பின் நடந்த இரண்டாவது நீயூஹெமிஸிபியர் மாநில தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கும் போட்டியாளர், பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி யிருந்தது. அதில் ஹிலாரி வெற்றி பெறவில்லை. இது கட்சி வட்டாரத்தில்; அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது. இந்த மாநிலத்தில்தான் முந்திய கட்சி வேட்பாளர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டு ஹிலாரி வெற்றிபெற்றிருந்தார். ஆனால் ஒரு மாநில தேர்தல் முடிவு மட்டும் முழுவெற்றியாகிவிடாது இன்னும் 48 மாநில தேர்தல்கள் இருக்கிறது என்ற எண்ணமும், ஹிலாரி சேமித்திருக்கும் தேர்தல் நிதியும் நம்பிக்கை தருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படும். அதற்காகக் கட்சிகள் மட்டுமில்லாமல் வேட்பாளர்களும் தனியாக நிதி திரட்டுவார்கள். அரசுப் பதவியில் அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், பதவியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பதவி விலகி நிதி சேர்க்க ஆரம்பித்த விட்ட ஹிலாரியிடம் இப்போது 100 மில்லியன்(1 மில்லியன் 10 லட்சம்) டாலர்களுக்கும் மேல் இருக்கிறது. இந்தப் பணவசதி, பிரச்னைகளை எதிர் நோக்கும் துணிவு, அயலுறவு அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் எல்லாம் இவருடைய பலம். இவர் அமைச்சராக இருந்தபோது அரசாங்க விஷயங்களுக்குத் தன்னுடைய சொந்த இ மெயிலை பயன் படுத்தினார் என்ற குற்ற சாட்டுக்கான 11 மணி நேர பாராளுமன்ற குழுவின் விசாரணையை சந்தித்தவர். மேலும் கணவர் கிளிண்ட்டன் தேர்தலுக்காகப் பணியாற்றிய காலத்திலியே தேர்தலைச் சந்திக்கும் யுக்திகள் தெரிந்த ஸ்டிரஜிஸ்ட்டாக மதிக்கப்பட்டவர். இவற்றினால் இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் எனப் பத்திரிகைகள் கணிக்கின்றன.
இதைப் போல மற்றொரு கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் இம்மாநிலத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். பிரபல தொழிலதிபரான இவருடைய அதிரடி அணுகுமுறையால் அமெரிக்க தேர்தல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர் வல்லவரா ? அல்லது வடிவேலுவா? என்று பொதுமக்களும் ஊடகங்களும் குழம்பிப் போய்க் கிடக்கிறார்கள். முதலில் யாருமே சீரியஸாக கண்டுகொள்ளாத இவர், ஒருவேளை வெற்று பெற்று அதிபரும் ஆகி விடுவாரோ என்ற நிலை தற்போது நிலவுகிறது. டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சுகளில் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை. முன்னதாக இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். 'நான் அதிபர் ஆனால் ஒரு டாலருக்கு ஒரு காலன் பெட்ரோல் தருகிறேன்' என்று தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். சவுதி அரேபியாவிடம் அமெரிக்கா சரியாக 'டீல்' செய்தால் பெட்ரோல் மலிவாகக் கிடைக்கும். தொழிலதிபரான தனக்கு வியாபார டீல் என்பது கை வந்த கலை. மற்ற அதிபர் வேட்பாளர்களுக்கு அது தெரியாது. மேலும் ஐஎஸ் ஐஎஸ் வசம் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவேன். அதன் மூலம் பெட்ரோல் விலை 50 சென்ட்கள் (அரை டாலர்) வரை குறையும்.
பெட்ரோல் விலை சாமானிய அமெரிக்கர்களின் அன்றாட பிரச்சனை. நம்ம ஊரில் ரூபாய்க்கு 3 படி அரிசி, கிலோ ஒரு ரூபாய் அரிசி, இப்போது இலவச அரிசி திட்டங்கள் மாதிரிதான் உலக சந்தையில் பெட்ரோல் விலை அடிமாட்டு விலைக்குக் குறைந்துள்ள நிலையில், தானாகவே ஒரு டாலருக்கு விலை குறைந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தப் போக்கு தொடர்ந்தால் 'வாரத்திற்கு பத்து காலன் இலவச பெட்ரோல் தருகிறேன்' என்று கூட டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி தரக்கூடும்!
இந்த மனிதர் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும், ஹிலாரிகிளிண்ட்டன் ஜனநாயக கட்சி வேட்பாளராகவும் இறுதி முடிவானால் ’சபாஷ் சரியான போட்டி’ என்று இருக்கும். ஆனால் சதுரங்க ஆட்டத்தின் முதல் மூவ்களில் முடிவைக் கணிக்க முடியாதைப் போல இந்த முதல் கட்டத்தில் எதுவும் சொல்ல முடியாது.
கடைசி மூவ் யாருடையது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது
 (கல்கி 7/3/16)
.  




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்