22/3/16

GOல்டு வார்




மக்களோ, அரசோ, இயல்புவாழ்க்கையோ பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று நடந்திருக்குமானால் அது சமீபத்தில் நடந்த நகைக்கடை வியாபாரிகளின் போராட்டமாகத்தான் இருக்கும். அதே போல் நாடுதழுவிய கடையடைப்பு என அறிவித்துவிட்டு டிவியிலும் செய்திதாட்களிலும் நகைக்கடைகளுக்கு அதிகளவில் விளம்பரங்கள் செய்த கொண்டிருந்த முரண்பாடு இருந்ததும் இந்தப் போராட்டத்தில் தான். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாலைத் தெருவில் கொட்டினார்கள். தங்க வியாபாரிகள் அதுபோல் செய்யவேண்டியதுதானே எனச் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யும் விஷயமாகிப் போயிருந்தது இந்தப் போராட்டம். உலகிலேயே அதிகமாகத் தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் இந்தியாவில் மட்டுமே. இந்தியாவில் மக்கள் தமது வருமானத்தில் சராசரியாக 30% சேமிப்பாக வைக்கிறார்கள் என்றால், அதில் 10 சதவீதத்தைத் தங்கமாக வாங்கி வைக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இதில் கைமாறும் பணத்தில் பெருமளவிற்கு சரியான பில்கள், கணக்குகள் காட்டப்படுவதில்லை. உள்நாட்டுக் கருப்புப் பணத்தில் தங்கம் பெரும்பகுதியாக இருக்கிறது என்பதால் அரசு, தங்கத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதி வரி அதிகரிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும் வைரம்மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக நகைகள் வாங்குவோரின் பான் கார்டு (வருமான வரி நிரந்தர எண்) தெரிவித்தல் கட்டாயம் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக அமல்படுத்தியது. பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத பணம், லஞ்சப்பணம்தான் தங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்கும் முதல் முயற்சியே பான் கார்டு கட்டாயம் என்ற உத்தரவு. இதைத்தொடர்ந்து தங்க கொள்முதலை விற்பனையைக் கண்காணிக்க 1% கலால் வரி அறிவிக்கப்பட்டது. கலால் வரி செலுத்துவதற்கு இருக்கும்நடைமுறைகளினால் நகை உற்பத்தியாளர்கள் பலவற்றை மறைக்க முடியாது,. தங்கம் வாங்குபவர்களில் 68% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்போர். இவர்களிடம் வங்கிக் கணக்குகள் இல்லை. வரி செலுத்துவோர் மக்கள் தொகையில் 3% மட்டுமே. ஆகவே, பான் கார்டு அனைவரிடமும் இருக்காது. எனவே இப்படிப் பட்ட அறிவிப்புகள்  தங்கம் வாங்க விரும்பும் சதாரண மக்களை  பல இன்னல்களுக்கு உள்ளாக்கும் என்றும் அதைவலியுறுத்துவதற்காக அகில இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டங்களை அறிவித்தது நகை வியாபாரிகள் சங்கம். ஆனால் இந்தப் போராட்டங்கள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாதற்கு முக்கியக் காரணம் தங்கம் ஏழைகள் அன்றாடம் வாங்கும் பொருள் அல்ல. எனவே அதன் விலையேற்றம் வாங்க முடியாதவர்களைப் பாதிக்கப்போவதில்லை. வாங்கும் வசதி படைத்தவர்களுக் விலையைப் பற்றிய கவலை இல்லை. ”இந்த வரிவிதிப்பினால் தங்கம் வாங்கமுடியாமல் எங்கள் வீட்டுக் கல்யாணம் நின்றுவிட்டது” என்ற குரலோ, திட்டமிட்டமிட்டபடி சேமிப்பிலிருந்து ”தங்கம் வாங்க முடியவில்லையே” என்ற ஆதங்கக் குரலோ முணுமுணுப்போ கூட மக்களிடமிருந்து எழவில்லை. நாடு முழுவதும் தங்க விற்பனையில் வரிஏய்ப்பு செய்யும், தாங்கள் கண்காணிக்கப்படுவதை விரும்பாத நகை வியாபாரிகள் தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் . மேலும் கோடிக்கணக்கில் தங்கம் ஸ்டாக் வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த விலையேற்றத்தினால் எந்த நஷ்டமும் அடையப்போவதில்லை என்பதால் மக்களுக்கு அவர்கள்மீது எந்த அனுதாபமும் எழவில்லை. எல்லாவற்றையும் விட 1% வரிவிதிப்பை வியாபாரிகள் மக்கள்மீதுதான் திணிக்கப் போகிறார்கள்.அப்புறம் ஏன் இந்த முதலைக் கண்ணீர் என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. அதாவது வாங்குவோருக்கும் விற்பனையாளர் என்ற இரு தரப்புக்குமே பாதிப்பில்லாத ஒரு விஷயத்திற்கு நடந்த போராட்டம் தோற்றத்தில் ஆச்சரியமில்லை வருட வருமானத்தின் 10% சேமிப்பான 2 லட்சத்தைத் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் வருமானம் 20 லட்சமாக இருக்கும் என்பதால்  வருமானவரி செலுத்தும் அவரிடம் பான் கார்ட் இருக்கும்.  கிராமங்களிலிருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கில்லை என்பதையும் முழுவதுமாக ஏற்பதிற்கில்லை. சமீபத்தில்  பல கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் இரண்டே நாளில் மக்களின் வங்கிக்கணக்கில் சேர்ந்தது.  இதுபலருக்கு வங்கி கணக்கு இருப்பதையும், அதன் அவசியத்தை மக்கள் உணர்ந்திப்பதையும் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தால் அரசுக்கு இழப்பு இல்லையா? உண்டு தங்க நகை விற்பனை தடைப்படும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிலைகளிலும், அதாவது தங்கம் இறக்குமதி, விற்பனை, நகைகள் தயாரிப்பு, நகை விற்பனை எனப் பல நிலைகளில் சுமார் 40% வரி விதிப்பு உள்ளது.ஆனாலும் மத்திய அரசு இந்த இழப்பைப்,பொருட்படுத்தவில்லை.காரணம் இதைவிட முக்கியமான விஷயமான ஆண்டுதோறும் அதிகரிக்கும் தங்க இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நடப்பு கணக்கின் பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதால் இந்த வருமானஇழப்பை சந்திக்கத் தயாராகவிருக்கிறது. கருப்புப் பணம் தங்கமாகிறது என்பதும், அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெறுவது தங்கமாகத்தான் இருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை.மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. . ஆனால், கருப்புப் பணம் தங்கமாகப் பதுக்கப்படுவது தடுக்கப்பட்டேயாக வேண்டும். விற்பனை கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி, கொண்டு வரப்பட்டிருக்கும் அரசின் இந்த முயற்சி மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம் 110316

2 கருத்துகள் :

உங்கள் கருத்துக்கள்