22/5/16

பயணம் - பொன்மாலைப்பொழுதுகள் 1இன்று மாலை எங்களுர் ஹார்பருக்கு கூட்டிப் போகிறேன். உங்களுக்கு நிச்சியம் பிடிக்கும், ரெடியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு ஆபிஸுக்கு கிளம்பினார் நண்பர். நமக்குத் தெரிந்து சின்ன, சின்னக் குட்டி திட்டுகள் இணைந்த சின்னத் தீவு பஹ்ரைன். அதிலிருப்பது ஒரு குட்டி மீன் பிடி துறைமுகம்தான் அதில் சிறிய பயணிகள் படகுகள் கூட வர முடியாது. அப்படியிருக்கும்போது ஹார்பர் என்கிறாரரே?. என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மாலையில் ஹாரன் ஒலியே கேட்காத அழகான அமைதியான சாலையில் அரைமணி நேர டிரைவ்க்கு பின் “இதுதான் நீங்கள் பார்க்கப் போகும் ஹார்பர்” என்று இரண்டு ராட்சத ஸைஸ் பூட்ஸ்களை எதிரும் புதிருமாக நிறுத்திவைத்திருப்பதைப் போல இரண்டு கட்டிடங்கள் முன்னால் நிறுத்தினார். அந்த 53 மாடி கட்டிடத்தின் பெயர் Bharin Financial Harbour உலகின் பல முக்கிய வங்கிகளின் அலுவலகங்கள் அந்தக் கட்டிடத்திலிருக்கின்றன. பல இரவு பகலாக வேலை செய்கின்றன.

இன்றைக்கு 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிகள் இயங்கும் இந்த வாமன தேசத்தில் இன்னும் அவர்கள் வருகை தொடர்ந்தவண்ணமிருக்கிறது.
அவர்களின் வசதிக்காகவே நகரின் நடுவே.நவீன வசதிகளுடன் அலுவலகம் சிறப்பான தொலைதொடர்பு வசதிகள் கொண்ட இந்தப் பிரமாண்ட 53 மாடி ஹார்பரை கட்டியிருக்கிறார்கள்.

.தொழில்வளம் எதுவுமில்லாத வெறும் ஈச்சை மர காடுகளாயிருக்கும் இந்தச் சின்னஞ்சிறு பாலைவனத்தீவில் இவ்வளவு வங்கிகள் என்னசெய்கின்றன?

உலக “ஆப் ஷோர் பேங்கிங்”(off shore banking) என்ற பேங்க்கிங் தொழிலின் முக்கிய கேந்திரம் இதுதான், , மற்றொரு நாட்டில் நல்ல வருமானம் தரும் தொழில்களில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு, அதை அவர்கள் நாட்டிலிருந்து செய்யாமல் வேறு நாட்டிலிருந்து செய்ய உதவது இந்த வங்கிகளின் பணி. எளிதாகச் சொல்லவேண்டுமானால், ஒரு ஜப்பானிய நிறுவனம் மெக்கிஸிக்கோவில் அதிக லாபம் ஈட்டும் தொழிலில் முதலீடு செய்ய இங்குள்ள ஸ்விடன் நாட்டு வங்கிக்கிளை கடன் கொடுத்து உதவும்.
இதற்க்காக பல நாடுகளின் தொழில்களின் வளர்ச்சியை  பொருளாதாரத்தை கண்கொத்தி பாம்பாகக் கண்காணித்து தங்கள் வாடிக்கையாளர்களை செல்வந்தர்களாக்கிகொண்டிருக்கிரார்கள் இந்த வங்கியாளார்கள். ஒரே இரவில் கோடிகளை ஈட்டவும், இழக்கவும் செய்கிறார்கள். வருமானத்திற்கு வரி எதுவும் கிடையாது.லாபத்தை உலகின் எந்த மூலைக்கு மாற்றத் தடையேதுமில்லை. பல வங்கிகளில் இந்தியர்கள்.  அதில் கணிசமான அளவில் தமிழர்கள் பணியிலிருக்கிறார்கள். பெரிய பதவிகளில் இருக்கிறார்கள்
அழைத்தப் போன நண்பர் பஹ்ரைனின் மிகப்பெரிய வங்கியில் உயர் அதிகாரியாக இருப்பதால் அந்தக் கட்டிடத்திலிருக்கும் பல வங்கிகளுக்குள் எளிதாகச் சென்று அவர்கள் பணிகளைப் பார்க்கமுடிந்தது. புலிப்பாய்ச்சலில் வளர்ந்து கொண்டிருக்கும் இன்டர்நேஷனல் வங்கிபணிகளின் புதிய முகங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த வங்கித்தொழில் பஹ்ரைன் நாட்டின் முகத்தையே மாற்றியிருக்கிறது. பிரமாண்டமான பல மாடிகட்டிடங்கள், அகன்ற சாலைகள் என வளர்ந்து கொண்டிருக்கிறது. நகரின் புதிய அடையாளமாகச் சில ஆண்டுகளுக்கு முன் எழுந்திருப்பது 240மீட்டர் உயரத்தில் வேர்ல்ட் டிரேட் செண்ட்டர்.(world trade center) இரட்டைக் கோபுரம். தொலைவிலிருந்து பார்க்கும்போது சாய்த்து நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் படகைப் போல இருக்கும் இதை அருகில் பார்க்கும்போது தான் அது ஒரு படகில் விரித்துக் கட்டப்பட்டிருக்கும் இரண்டு பாய்மரங்கள் என்ற வடிவம் புரிகிறது. 50 மாடிகளுடன் அமைக்கப் பட்டிருக்கும் இந்த இரண்டு கட்டிடத்திற்கு இடையில் பெரிய சுழலும் காற்றாடிகளை நிறுவி மின் சக்தி பெற ஒரு காற்றாலையை நிறுவியிருக்கிறார்கள்.(wind mills) எப்போழுதும் சுழன்று கொண்டிருக்கும் இதன் மூலம் பெறும் மின் சக்தி இந்தக் கட்டிடம் முழுவதுற்கும் போதுமானதாக இருக்கிறதாம். புத்திசாலி பணக்காரர்கள்.
.
.கட்டிடத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள். வங்கிகள். கோபுரத்தின் மேலேயிருந்து பார்க்கும்போது தேசம் முழுவதுமே தெரிகிறது. ஆம். இந்த நகரம்மட்டும் தான் தேசம். கீழ்த்தளத்தில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் நிறைய சர்வதேச பிராண்டுகளின் கடைகள். இங்குமட்டுமில்லை நகரின் அத்தனை பெரிய கட்டிடங்களிலும் கீழ்த் தளம் மால் தான். எல்லா மால்களிலும் பிராத்தனைக்கு  வசதியாகத் தனி இடம்.
இவற்றைத்தவிர பல லட்சம் மீட்டர் பரப்பளவில் பல மாடிகட்டிடங்களில் பல தனி மால்கள்.உலகின் எந்த முன்னணி பிராண்டும் தங்கள் படைப்பை முதலில் அறிமுகப்படுத்துமிடம் துபாய், மற்றும் பஹரைனின் மால்களிலிருக்கும் கடைகளில்தான். சில மிகப் பிரமாண்டமானவை. ஒரு மாலில் 5000 கார்களை நிறுத்த அடுக்கமாடி பார்க்கிங் நிறுவியிருக்கிறார்கள்.
சரி கடைகளில் யார் வாங்குகிறார்கள்? எந்த வித வரியும் இல்லாமல் சர்வதேச விலையைவிட மலிவாகக் கிடைப்பதால் உள்ளூர்கார்களைத்தவிர அண்டை நாடுகளிலிருந்து விடுமுறைகளில் வந்து வாங்கித்தள்ளுகிரார்கள். இதற்கு வசதியாகியிருப்பது பஹரைன் மன்னர் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கடல் வழி சாலை தான். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கீழே படகுகள் கடந்து போக உயர்ந்தநிலையில் பாலமாக அமைக்கப்பட்டிருக்கும் கடல்வழி சாலையில் பலநாட்களில் நெருக்கடியாகிவிடுமளவிற்குப் போக்குவரத்து. அண்டை நாடுகளுக்குப் போக விஸா அவசியமானாலும் இங்கிருந்து தினசரி சவுதி அரேபியாவின் நகரங்களுக்கு போய்த் தினசரி வேலை செய்து திரும்புவர்களுமிருக்கிறார்கள்.
அனேகமாக எல்லா மால்களிலும் அல்லது அதன் அருகில் சினிமா தியட்டர்கள். 200 சீட்டுக்களுடன் 10 அல்லது தியட்டர் கும்பல். நிறைய வசதிகளுடன் அழகாக அமைத்திருக்கிறார்கள், தமிழ். மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி எனப் பல இந்திய மொழிகளில் புதுப்படங்கள் ரிலீசாகின்றன. இங்கு வியாழன் சில நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் புதுப்படங்கள் அன்றே ரீலீஸ் ஆகிறது. அதாவது தமிழ்நாட்டில் படம் வருமுன்னரே இங்கு பார்க்கிறார்கள். தமிழ் நாட்டில் படம் ரீலிஸாவதற்கு முன்னரே வியாழக்கிழமை இரவே முகநூலில் போஸ்மார்டம் ரிப்போர்ட் வந்துவிடும் ரகசியம் புரிந்தது. நான் போனபோது ஒரு லெபனான் படத்திற்கு நல்ல கூட்டம். புதுத் தமிழ் படம் தெறி காத்தாடிக்கொண்டிருந்தது.

ஒரே ஒரு நகரமாகவிருக்கும் இந்தத் தேசத்தை இப்போது நிறைய வசதிகளுடன் ஒரு சுற்றுலா மையமாகக்க துவங்கியிருக்கிறார்கள். உலகின் சிறந்த ஹோட்டல்கள் இங்கு வந்திருக்கின்றன. ஒரு ஹோட்டல் அருகிலிருக்கும் அமைதியான கடலை அலையடிக்கும், கடலாக, இயந்திரங்களின் உதவியால் உருவாக்கியிருக்கிறார்கள். அருகில் உள்ள குட்டி தீவுகளை ரிஸார்ட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஃபார்முலா ஒன் என்ற சர்வதேச கார் ரேஸ்களை நடத்த மிக அதிக செலவில் டிராக்களை அமைத்து உலகம் முழுவதுமிருக்கும் கார் ரேஸ்பிரியர்களை ஈர்க்கிறார்கள்

பஹரைன் நகர் உருவாகும்போது நிறுவப்பட்ட “பாபல் பஹரைன்” என்ற நுழைவாயில் முகப்பை மாற்றாமல் போற்றி பாதுகாக்கும் பகுதியில்தான் நகரின்பிரதான கடை வீதிகள். நிறையக் குறுகிய தெருக்கள் நிறைய இந்திய முகங்கள். வீதியோர கடைகள். சன்னமான குரலில் சரளமான மலையாளம். நடிகர் மோகன்லால், மம்முட்டி படங்களுடன் முடிதிருத்துமிடத்திலிருந்து, குருவாயரப்பன் சன்னதியுடன் கோவிலாக மாற்றப்பட்டிருக்கும் 2 பெட்ரூம் பிளாட் வரை எங்கும் நிறைந்த கேரள வாசனை. காய்கறி மார்கெட்டைப்போலத் தங்க நகைகளுக்குத் தனியாக 300 கடைகளுடன் கோல்ட் சிட்டி. என்ற மார்க்கெட்.

அணிவகுத்து நிற்கும் சோல்ஜர்கள் போல நகரெங்கும் ஒரே மாதிரியான ஈச்சை மரங்களாக இருப்பதைப்பார்த்து, இங்கு வேறு மரங்களைப் பார்க்க முடியாதா? என்ற கேட்டவுடன் நண்பர் உங்களுக்கு ஒரு அதிசய மரத்தைக் காட்டுகிறேன் என அழைத்துப் போனார்
.
நகரின் வெளியே 10 மைல் தொலைவில் பார்த்த ஒரு மரம் உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். சுற்றுவட்டாரத்தில் 20 மைலுக்கு எந்த நீர்வளம் இல்லாத அந்த மணல் பாலைவனத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழும் ஒரு மரம். எங்கிருந்து தனக்கு வேண்டிய நீரை எடுத்துக்கொள்கிறது என்ற ஆச்சரியத்தைத் தரும் மரம். இந்த மரத்தின் அடிப் பாகம் ஆலமரம்போலவும் இலைகள் புளிய மர இலைகளைபோலவும் தன் கிளைகளைச் சிறு மாமரம்போல தாழ்வாகப் பரப்பி ஆராய்ச்சியாளர்களுக்கு சவால் விட்டுக்கொண்டு நிற்கிறது. மிக அரிதான தாவரமாக அறிவிக்கப்பட்டு வாழும் மரமாக (tree of life) பாதுகாக்கப்படுகிறது. வழிபாட்டுக்கு உரியதாக மதிக்கப்படும் இதில் சிலர் தங்கள் பெயரைச் செதுக்கியிருக்கிறார்கள். அவை தமிழ் எழுத்துகளாக இருந்தது நெஞ்சில் வலியை உண்டாக்கியது. மரம் வேலியால் சிறைப்படுத்த பட்டிருப்பதின் காரணமும் புரிந்தது,
.
இப்போது இங்கே கோடைக்காலம் துவங்க ஆரம்பித்திருப்பதால் நல்ல வெளிச்சத்துடன் இருந்த நீண்ட மாலை மெல்ல இரவாக கரைந்து கொன்டிருக்கிறது. நகருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறோம் இந்த வாழும் மரம்  எண்ணங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.  
 “இறைவன் படைப்பில் புரிந்துகொள்ளமுடியாத சில ஆச்சரியங்கள் தான் -அவன்மீது கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச்செய்கிறது.” என்ற இஸ்ரேலிய பழமொழி நினைவிற்கு வந்ததது.

9/5/16

விருது

சென்னை ஸ்டெல்லாமாரீஸ் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேரா. முனைவர் உலகநாயகி பழனி அவர்களின் உறவுச்சுரங்கம் அமைப்பும் பாரதிய வித்தியா பவனும் இணைந்து திருமதி சிவசங்கரியின் படைப்புகள்பற்றிய ஒரு தொடர் நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துகிறார்கள். அதில் இம்மாதம் என்னைப் பேச அழைத்து விருது கொடுத்துக் கெளரவித்தார்கள்.தனது நீண்ட இலக்கிய பயணத்தில் திருமதிசிவசங்கரி  98 இலக்கியவாதிகள், 6 அரசியல் தலைவர்கள், இரண்டுபிரதமர்கள், குடியரசுத்தலைவர், திரைகலைஞர்கள், சதாரண மனிதர்கள் எனப் பலரை சந்தித்து பேட்டிகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்திருக்கிறார்.

அந்தச்சந்திப்புகளில்  வேறுபட்டசில  ஆளுமைகள்குறித்த          அவரதுபார்வைகளைப் பற்றிப் பேசினேன். அழைப்பை ஏற்று பல நண்பர்கள் வந்திருந்ததும். அரங்கம் (பெரிய அரங்கம்) நிறைந்திருந்தையும் விட அதிக மகிழ்ச்சி தந்த விஷயம். தேர்தல் அனல் அதிகமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும்  திரு. இல. கணேசன் வாக்களித்தபடி விழாவிற்கு தலமையேற்று உரைநிகழ்த்தியது தான்
.
சில அரசியல்வாதிகள் அளித்த வாக்கைக் காப்பாற்றவும் செய்கிறார்கள்