16/4/17

நைனிதால் -தேவதைகள் வாழும் வீடு


பசுமையான ஊசிமுனை இலைகளுடன் ஓங்கிவளர்ந்திருக்கும் தேவதாரு மரங்கள் நிறைந்த அந்த மலைச்சரிவிலிருக்கும் விடுதியிலிருந்து பார்க்கும்போது எதிரே மரகதப்பச்சை வண்ணத்தில் அமைதியாக அழகாகப் பரந்து விரிந்திருக்கும் நைனிதால் ஏரியும் அதன் மீது அமர்வதற்காக மெல்ல மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேக கூட்டங்களும் அவை அந்த ஏரியிலிருக்கும் அழகான வண்ண வண்ண பாய்களிடனிருக்கும் சிறு படகுகளுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் இந்த உயரத்திலிருந்து பார்க்க மிக அழகாகியிருக்கிறது. ஏரியின் ஒரு கோடியிலிருக்கும் நைனா தேவியின் கோவிலும் அதன் மீது கொடியும் தெளிவாகத் தெரிகிறது
>
ஒரு மாவட்டத்தலைநகர் என்ற எந்த பந்தாவும் இல்லாத இந்த சின்னஞ்சிறிய ஊர் உத்திரபிரேதசத்திலிருந்து பிரித்து
உருவாக்கப்பட்ட உத்திரகாண்ட் மாநிலத்தின்  முக்கிய நகரம்...
மலைப்பகுதியான இந்த நகரம் ஒரு சுற்றாலத்தலமட்டுமில்லை, புராதன புண்ணிய பூமியும் கூட. . சுற்றிலிருக்கும்
7 மலைகளில் அழகான ஏரிகள் மட்டுமில்லை. வீரம், கல்வி,நீதி, கலை, செல்வம் போன்றவகளை காக்கும் தேதைகளின்கோவில்களும் இருக்கின்றன.
,
நகரின் நடுவே இருக்கும் நைனிதால் ஏரியின் ஒரு பக்க கரையின் மீது தான் சாலை. அது மக்கள் நடக்க மட்டுமே. அந்த சாலையில் பொது வாகனங்கள் செல்ல அனுமதியில்லை நடக்கமுடியாதவர்களக்கு சைக்கிள் ரிக்க்ஷா வசதி. அதற்கு Q வில் நின்று 3 ரூபாய் டோக்கன் வாங்கவேண்டும். ( இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாத பீரிப்பெய்டு சைக்கிள்ரிக்ஷாக்கள்!) .

ஏரியின் ஒரு முனையிலிருக்கிறது நைனாதேவியின் கோவில் அர்ச்சகர் நல்ல ஆங்கிலம் பேசுகிறார். "இது மற்ற இந்தியகோடை வாசஸ்தலம் போல வெள்ளைக்காரர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்தப் பகுதி முழுவதும் இந்து மதபுராணங்களுடன் சம்பந்தப்பட்டது,
தெய்வங்களும், தேவர்களும் வாழ்ந்த பூமி. 1000 கோவில்களுக்கு மேலுள்ள மலைத்தொடர்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சந்தன் வம்ச மன்னர்களின் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள் இந்த ஏரி தட்சனின் யாகத்தில் பங்கேற்தற்காக கோபத்தில் சிவ பெருமான் தேவியை வெட்டிஎறிந்தபோது பார்வதிதேவின் கண் விழுந்த இடம். அதனால்தான் நைனி-தால் எனப்பெயர்
. 100 மைல் தூரத்தில் 12 ஜோதிலிங்கங்களின் ஆதி ஜோதிலிங்கமிருக்கிறது. போய்பாருங்களேன்." என்று அந்த அர்ச்சகர் ஆர்வத்தைத் தூண்டியதால் அந்தமிகப் பழமையான, ஜோதி லிங்ககளின் ஆதி லிங்கத்தைத் தரிசிக்க . இப்போது ஜோகெஷ்வருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.
வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதை, இதமான குளிர் சாலையின் இரண்டுபுறமும் பளபளக்கும் பெரிய பச்சை கார்பெட் விரித்ததுபோல பசுமையான காடு. பார்க்குமிடமெல்லாம் நிந்தன் பச்சைநிறம் தோன்றுதடா என பாடவைக்கிறது. சிறு சிறு மலை கிராமங்களை கடந்துபோய்க்கொண்டிருக்கும் நம்மை பள்ளத்தாக்கில்
தெரியும் அந்த கிராமம் சட்டென்று கவர்கிறது. அல்மெடா (ஆங்கிலத்தில் அல்மோரா என எழுதுகிறார்கள்) என அறிவிக்கும் வரவேற்பு பலகையின் அருகில் ராமகிருஷ்ண மடத்து இலச்சினையுடன் ஒரு சிறிய போர்டு. ஆச்சரியப்பட்டு விசாரித்து மெல்ல அந்த மலைச்சரிவில்இறங்கினால்.அழகான பள்ளத்தாக்கை நோக்கிய எளிமையான கட்டிடங்களுடன் அமைக்கப்பட்ட ஆஸ்ரமம்.மற்ற ராமகிருஷ்ண ஆஸ்ரமங்களைப்போலவே அமைதியும்,அழகும்மெல்ல முடிய பனிமேகங்கள் சட்டென்று விலகி பளிச்சென்று வெய்யில் தாக்கும் ஒரு வினோதமான வானிலையில் பயணத்தை தொடர்கிறோம். வழிநெடுக சிறிதும்பெரிதுமாக கோவில்கள்.உள்ளுர் காவல் தெய்வங்களிலிருந்து சிவபெருமான்
வரை பலவிதமான கோவில்கள். அதில் ஒன்று சிட்டை என்ற இடத்திலிருக்கும் கொலுதேவதா கோவில். வித்தியாசமாக இருக்கிறது. நுழைவாயில்,பாதை,மேற்கூரை கோவிலின் தூண்கள் மரங்கள் என்று எங்கு பார்த்தாலும் பெரிய,சிறிய மணிகள் கொத்துகொத்தாக தொங்குகிறது. விசாரித்ததில் நீதி தேவதையான அந்த தேவியிடம் கோர்ட் வழக்கு விவகாரங்கள்,வசூலிக்கமுடியாதகடன்,நிறைவேறாத ஒப்பந்தங்கள் போன்றவற்றின்,நகலுடன் ஒரு சிறிய மணியை இணைத்துக் கட்டி, நல்ல முடிவு வேண்டிப் பிரார்த்தித்து,கடவுளுக்கு கடிதம் எழுதுவார்களாம். வேண்டுதல் நிறைவேறியதும் பெரியமணிகட்டுவதாக வேண்டிக்கொள்கிறார்கள் என்றுதெரிந்தது.
பல மலைச்சரிவுகளையும் ஏற்றங்களையும் கொண்ட அந்த 35 கீமி மலைச்சாலையைக் கடக்க 2மணி நேரத்திற்கு மேலாகிறது. தேவதாருமரக் காடுகளுக்கே உள்ள மணம் நாசியைத்தாக்குகிறது. அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருக்கும் தேவதாரு மரங்களும் ,வீசும் குளிர்ந்த காற்றும் அதிக உயரத்திற்கு வந்துவிட்டதை உணர்த்துகிறது. இங்கிருந்து ஜோகேஷ்வர் வளாகம் துவங்குகிறது என்ற தொல்பொருள் துறையினரின் அறிவிப்பு நம்மை வரவேற்கிறது 9ம் 10ம் நூற்றாண்டுகளில் பல காலகட்டங்களில் எழுப்பட்டதாகவும் முக்கியமான ஜோதிர்லிங்கம் இருக்கும் பெரிய கோவில் 3கிமீ தொலைவில் இருப்பதாகச் சொல்லும் அந்த குறிப்பைபார்த்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறோம் சட்டென்று திரும்பிய ஒரு திருப்பத்தில் பள்ளத்தாக்கில் பசுமையான மரங்களின் பின்னணியில் சிறிதும், பெரிதுமாகக் கும்பலாக பல கோவில்கள். சதுரமான கீழ்ப்பகுதியாக துவங்கி,
நுழைவாயிலைத்தவிர வேறு எந்த திறப்போ மாடமோ இல்லாமல் இறுக்கி அடுக்கிய கல்கோட்டையாக உயர்ந்து கோபுரமாக குவிந்த உச்சியின் மீது மரத்தால் செய்த சிறிய மண்டபத்தைத் தொப்பியாக அணிந்திருக்கும் ஒரு பெரிய கோவில்.
அதேவடிவத்தில் சிறிதும் பெரிதுமாக அருகருகே பல கோவில்கள்.வேகமாக நடந்தால் இடித்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாகப் பல குட்டி (100கும்மேலிருக்கும்)கோவில்கள். . கோவில் தொல்பொருள் சின்னம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பூஜைகள் உண்டு. பிரதான கோவிலில் மூர்த்தி ஜோகெஷ்வர் சுயம்புவாக எழுந்த லிங்கம். தரையிலிருந்து 1அடி உயரமிருக்கும்

மூர்த்தியைச் சுற்றி மூன்றுபக்கங்களிலும் பக்தர்கள் கர்ப்பககிரகத்தில் பொறுமையுடன் உட்கார்ந்திருக்க, பளபளக்கும் ஆரஞ்சு வண்ண உடையில்அர்ச்சகர் வந்து அவர் ஆசனத்தில் அமர்கிறார். பாலில் தோய்ந்த அரிசி தேவதாரு இலைகளுடன்அரளிப்பூ எல்லோருக்கும் தருகிறார்.அவருடன் நாமும் செய்யும் அபிஷகம் முடிந்ததும் மெல்லிய குரலில் உள்ளூர் மொழியில் ஒரு ஸ்லோகம் சொல்லுகிறார் இடையிடையே அவர் அர்ச்சிக்கும்போது நாமும் அர்ச்சிக்கிறோம். பின் தீபாரதனை. பூஜைமுடிந்தது.
பூஜைக்குக் கட்டணம் விஐபி தரிசனம் எதுவும் கிடையாது. முதலில்வருவபருக்கு ஸ்வாமியின் அருகே அமர முன்னுரிமை. நம் அருகிலிமர்ந்து பூஜை செய்தவர் உத்திராஞ்சல் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி என்பதை வெளியில் வந்தபின் அவருக்குள்ள பாதுகாப்பை பார்த்தபின்தான் தெரிந்துகொள்கிறோம்.
அருகில் ஒரு சின்ன குன்றின் மேல் குபேரனுக்கு ஒரு கோவில். மூர்த்தி லிங்க வடிவிலிருக்கிறார். நுழைவாயிலில்
"வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு செல்வம் சேரும்" என எழுதப் பட்ட வாசகங்கள். அருகிலிருக்கு ஜோகேஷ்வருக்கு அவ்வளவு கூட்டமிருந்தும் இங்கு ஏன் அதிகமில்லை என்ற நமது கேள்விக்கு அந்த அர்ச்சகர் தந்த பதில் பற்றி சிந்தித்துக்கொண்டே நைனிதாலுக்கு திரும்பும் பயணத்தை துவக்குகிறோம்.

வேடிக்கைக்காகச் சொன்னதோ அல்லது வேதனையில் சொன்னதோ -நம்மைச் சிந்திக்கவைத்த அந்த வார்த்தைகள்
"செல்வம் சேர்ந்தால் பிரச்சனைகள் வரும் பிரச்சனைகளினால் வேதனை உண்டாகும் என்பதால் தேடிப்போய் வேண்டி வேதனையை வாங்கிக் கொள்வானேன் என்று பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்"


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்