சென்னை அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கம். அமைதியாகியிருக்கும் பார்வையாளர்கள். ஆங்கில நாடகம் ஒன்றின் துவக்கத்துக்காக காத்திருக்கிறோம். மேடையில் இருள் கவிகிறது. நிழலுருவாக பாத்திரங்கள். மெல்லத்துவங்கி அதிகரிக்கும் தவிலின் ஓசை அதிகரிக்கும் போது ஒளியுடன் முதல் காட்சி விரிகிறது. தன்னை மதித்து கெளரவத்துடன் நடத்தாமல் தன் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் “உன் கணவர்” எனத் தாயிடம் சீறும் மகன். தந்தையின் பெருமையகளைச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்தும் தாய் என்று துவங்கும் அந்தக் காட்சி இன்று பல குடும்பங்களில் நிகழும் ஒரு காட்சி போலிருந்தாலும் - நாடகம் மஹாபாரத்திலிருந்து ஒரு கதை.
. தூரோணாச்சாரியாரை ஒரு ஆசானாக, போர்முறைகளை நன்கறிந்தபடைத்தலைவனாக நாம் அறிந்திருக்கிறோம். அந்த துரோணரின் குடும்பத்தில் அவருக்கும், அவரது மகன், மனைவிக்கிடையே நடந்த உணர்ச்சி கொந்தளிப்பு போராட்டங்களின் இறுதியில் ஒவ்வொருவரும் உணரும் உணமையைச்சொல்லுவது தான் ‘WHEN THINGS FALL APART’ என்ற ஆங்கில நாடகம்.
JUST US சென்னையில் இயங்கும் ஒரு பல்கலை குழு. இயல் இசை நாடகம் என இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் குழுவின் ஆங்கில நாடகங்கள் இந்திய இதிகாசங்களின் பாத்திரங்களின் உளவியலை ஆழ்ந்து நோக்கும் பார்வையிலிருக்கும். பல இந்திய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கும் இந்தக் குழுவினர் தங்களது 10ஆம் ஆண்டுவிழாவை “JUSTFEST” என்று இரு நாள் விழாவாகக் கொண்டனார்கள். அதன் முதல் நாளில் அரங்கேறியது தான் இந்த நாடகம்.
ஒரு நாடகத்தின் வெற்றியின் பெரும்பங்கு அதன் முக்கிய நடிகர்களின் திறமையில்தானிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாலே காதா பாத்திரங்கள் கொண்ட ஒரு நாடகத்தில் எந்த ஒரு கலைஞரும் அடுத்தவரை மிஞ்சிவிடாமல் கன கச்சிதமான நடிப்பால் அவர்களுடைய பாத்திரத்தை சிறப்பாகச் செய்யவைப்பது என்பது இயக்குநருக்கு சவாலான விஷயம். அதில் வெற்றி கண்டிருக்கிறார் இதன் இயக்குநரும் குழுவின் தலைவியுமான திருமதி கெளரி ராம்நாரயண்
கொப்பளிக்கும் கோபத்துடன் தந்தையை நிந்திக்கும் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தந்தை அர்ஜுனனுக்கு சொல்லிக்கொடுத்த ஒரு வித்தையை தனக்கு சொல்லிக்கொடுக்க வில்லை எனத் தாயுடன் வாதாடும் போதும், தந்தையுடன் மோதும்போதும். இறுதியில் போர்க்களத்தில் தன் மரணச்செய்தி கேட்டவுடன் அது தவறென அறியாமலே அவர் உயிர்துறக்க நேரிட்டபோது அவரின் அன்பையும் பாசத்தையும் புரிந்து கொண்டு தாயிடம் கதுறும்போதும் அந்தக் கலைஞர் அந்தப் பாத்திரமாகவேவாழ்ந்து காட்டிவிட்டார். நடித்துக்கொண்டிருப்பது ஒரு பெண் (திருமதி அகிலா) என்பதையே மறந்துவிடுகிறோம். அந்த அளவுக்கு உடல் மொழி, உணர்வுகளின் வெளிப்பாடு, கம்பீரமான ஆண்மை தொனிக்கும் குரல் அசத்திவிட்டார் இந்தப் பெண்.
“என்ன மனிதன் நீ?. சபையில் திரபெளதியின் ஆடையினை களைந்து அவமானப்படுத்தப்படும்போது உன் மாணவர்களைக் கண்டிக்காமல் இருந்த நீ ஒரு பிரமாணனா? ஆச்சாரியானா? என கணவரைத் தன் வார்த்தைகளால் கடுமையாக சுடும் தரோணாச்சாரியாரின் மனைவி கிருபி தன் குரலாலும் நடிப்பாலும் “ஆமாம் இவர் சொல்வது சரிதானே? எனப் பார்வையாளர்களையும் உணரச்செய்கிறார். அந்த அளவிற்குக் கோபத்தை கொட்டி நடித்திருப்பவர் திருமதி சுனந்தா ரகுநாதன்.
நாடகத்தின் வசனங்கள் எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகள். கோபத்தில் திரபெளதியை நீங்கள் இப்படிப் பார்க்கத்தானே ஆசைப்பட்டீர்கள்? என தன புடவையின் மேலாக்கை நீக்கதுவங்குகிறார்.கிருபி. துடித்துபோவது துரோணர் மட்டுமில்லை. பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் தான். இம்மாதிரி ஒரு காட்சியை மேடையில் துளிகூட கண்ணியம் குறையாமல் காட்டியிருப்பதில் காட்சியமைப்பில் இயக்கனருக்குள்ள ஆழ்ந்த அனுபவம் பளிச்சிடுகிறது.
ஒரு நாடகத்தின் காட்சிகளுக்கு உயிருட்டுவது இசையும் ஒளியும் தான். . இந்தக் குழு அதை நன்கு உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. நாடகம் முழுவதற்கும் தவில் கஞ்சிரா ஓசை தான் பின்னணி இசை. ஒரே ஒருஇடத்தில் கிதார். மட்டும். இசை காட்சிகளுடன் இணைந்திருப்பது போல ஒளியமைப்பும்..
கருப்பு பின்னணித்திரையில் விளக்குகளின் ஒளியை மாற்றிமைப்பதின் மூலமே இரவு, பகல், புலரும் பொழுது, குடிசை, காடு என களத்தை எளிதில் புரிய வைக்கிறார் ஒளி அமைப்பாளர். அதே போல் நடிகர்களின் மீது அவசியமில்லாத போது அதிக அளவில் ஒளி பாயாமலிருக்கிறது. இதைச்செய்திருப்பது சென்னை ஆர்ட் தியட்டர் என்ற நிறுவனத்தின் சார்ல்ஸ் என்ற இளைஞர். ஒளியமைப்பின் தொழில் நுட்பம் மட்டுமில்லாமல் நாடகத்தின் காட்சிகளை நன்கு புரிந்துகொண்டிருக்கும் இவர் பாராட்டப்படவேண்டியவர்.
இரண்டாம் நாள் நிகழ்ந்தது ஒரு சமூக நாடகம் ஓவியனாக வாழ்க்கைத்துவக்கி தோற்று கவிஞனான அருண்கொலட்கர் (Kolatkar )) என்ற மராட்டிய கவிஞன் ஆங்கிலத்திலும், மாராட்டியிலும் பல கவிதைகள் எழுதியிருப்பவர். இன்றைய இளம் கவிஞர்களுக்கு ஆதர்சம். காமன்வெல்த் எழுத்தாளர்கள் பரிசு, சாகித்திய அகதமி விருது போன்ற பல விருதுகள் பெற்ற இந்த கவிஞன் தனிமையை ரசிப்பவன், மாற்றியோசிப்பவன். அவரை ஒரு தமிழ் நாட்டு பெண்பத்திரிகையாளார் அவர் வசிக்கும் மும்பையின் காலா கோடா பகுதியில் அவர் வழக்கமாக அதிக நேரம் செலவிடும் ஒரு சாலையோர ஹோட்டலில் பேட்டிக்காகச் சந்திக்கிறார். பக்தி, கடவுள்,ஆங்கில கவிதைகள்,போலிவிமர்சர்கள், இலக்கியம் போன்ற பல தளங்களில் உரையாடுகிறார்கள் இது தான் கதை. இந்தக் குழு முதன்முதலில் போட்ட நாடகமான இதைப் பல இடங்களில் நடத்தியிருக்கிறார்கள். அதை மீண்டும் இப்போது நடத்தினார்கள்.
இரண்டுபேரின் உரையாடலை அதுவும் ஒரு பத்திரிகையாளரும் கவிஞரும் உரையாடும் உலர்ந்த விஷயங்களை ஒரு நாடகமாக்க முடியுமா? இயக்குநர் கெளரி ராம் நாராயணன் முடியும் என்பதை மட்டுமில்லை அதை ஒரு இசை நாடகமாகமே செய்ய முடியும் என நீருபிக்கிறார்..
வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞனின் வாழ்க்கையில் நிகழந்ததாக செய்யபட்டிருக்கும் கற்பனை கதை என்பதை முதல் காட்சியில் செய்தித் தாளில் படிக்கும் மரணச் செய்தியைக் கொண்டே புரியவைக்கிறார்கள் .
இந்த உலகில் எதுவுமே துச்சம் என அகம்பாவத்துடன் தன் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கவிஞன், தந்து பேட்டி சிறப்பாக வரவேண்டுமே என்று துடிப்பில் இருக்கும் பத்திரிகையாளர் என இருவருமே இயல்பாக நடிக்கிறார்கள். கூர்மையான வசனங்கள், தெளிவான உச்சரிப்பு எளிமையான அதே நேரத்தில் களனை சிறப்பாக சொல்லும் காட்சிமைப்பு எல்லாமே அருமை.
உரையாடல்களுக்கு நடுவே பாத்திரங்கள் சொல்லும் விபரங்கள் இசை சித்தரமாக விரிகின்றன. ஆடல் பாடலுடன் காட்சிகள் நகர்கின்றன. ஒருவீதியோர ரெஸ்டோரண்ட்., சின்ன பள்ளிக்கூடம் மிரட்டும் ஆசிரியை இட்லி விற்கும் மராட்டிய பெண்கள் டீ விற்கும் தமிழ்ப் பெண் என்று பாத்திரங்கள் இசை, நடன வடிவில் வந்த போகின்றனர். இசை என்றால் எல்லாவிதமான இசையும் வருகிறது.. கர்நாடக,மராத்தி அபங், ஜாஸ், பாப் எல்லாம் வெவ்வேறு பாடல்களில் இடையிடையே கவிஞர், பத்திரிகையாளர் உரையாடலும் மிக சீரியசான விஷயங்களில் தொடர்கிறது., பாடல்களில் கவஞரின் கவிதைகள் பயன்படுத்தபட்டிருக்கிறது. இறுதியில் ஒரு புலரும் காலையில் தன் வீட்டின் முன் பகுதியை பெருக்கிக்கொண்டிருக்கும் பின்னணியில் மும்மை ஏழ்மைப்பகுதியைப் பற்றிய ஒரு கவிதையை கவிஞரே சொல்லுவது போல முடிகிறது.
இந்த நாடகத்தின் பின்னணி இசையில் வாத்தியங்கள் எதுவும் கிடையாது. இனிய குரலில்சுத்தமான சுருதியில் காட்சிகளுக்கேற்ப பாடல்களைப் பாடுகிறார். ஒரு காட்சியில் பின்னணியாக பல்வேறு ராகங்களில் சரளிவரிசையின் சா. மா. பா மட்டும் ஒலிக்கிறது. அபங், கர்நாடக இசை, இந்துஸ்தானி, வெஸ்டர்ன் அவ்வளவையும் ஒரே பாடகி எந்த வித பக்க வாத்தியமும் இல்லாமல் பிரமாதமாக பாடுகிறார். பாடகி சவீதா நரசிம்மன். இவரது பாடல்கள் இல்லாமலிருந்தால் இந்த நாடகம் போரான உரையாடலாகியிருக்கும். பின்னணி பாடும் பாடகியும் மேடையிலேயே இருக்கிறார். ஒரு பாத்திரமாகவும் வருகிறார்.
ஆங்கிலநாடகங்கள் நடத்தும் குழுவாக இருந்தாலும் தமிழ் நாடக உலகிற்கு பெரும்பங்களிப்புச் செய்திருக்கும் ந.முத்துசாமி அவர்களை முதல் நாள் நாடகத்துக்கு முன்னும் திரு இந்திராபார்த்தசாரதி அவர்களை இரண்டாம் நாள் நாடகத்தின் போதும் கௌரவித்தது மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
திரு இந்திரா பாரத்த சாரதி அரங்கத்துக்கு வர முடியாததால் அவர் இல்லத்திற்கே குழு சென்று கௌரவித்த காட்சியை திரையில் காட்டினார்கள் .
திரு இந்திரா பாரத்த சாரதி அரங்கத்துக்கு வர முடியாததால் அவர் இல்லத்திற்கே குழு சென்று கௌரவித்த காட்சியை திரையில் காட்டினார்கள் .
மொத்தத்தில் “ஜஸ்ட்” திருவிழா இல்லை பெஸ்ட் திருவிழா
(கல்கி 9/7/17)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்