19/7/17

சீனாவின் புதிய “பட்டுபாதை”சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குலகையும் சீனாவையும் இணைத்த  ஒரு வர்த்தக பாதை  சினாவின் “சில்க் ரூட்” (–பட்டுப் பாதை) என்பதை வரலாறு நமக்குச்சொல்லுகிறது.  இந்தத் தொன்மையான பட்டுப்பாதையின் வழித்தடத்தில் சீனா, இந்தியா, இலங்கை இணைந்திருந்தன. சீனாவைச் சேர்ந்த ஃபாஹியான் போன்ற  புத்தமத அறிஞர்கள்  இந்தப் பாதையில் பயணித்துதான் இலங்கைக்கு புத்தமதத்தை எடுத்துச்சென்றனர். காலப்போக்கில் நாடுகளுக்கிடையே நிலவும் இன்றைய நவீன எல்லைக்கோடுகள் இந்தப் பாதையை வெறும் சரித்திரபுத்தகங்களில் இடம் பெறும் ஒரு வார்த்தையாக மட்டும்  மாற்றிவிட்டது 

இந்த சில்க் ரூட் எனும் பாரம்பரியப் பாதையை மீண்டும்  துவக்கி தங்கள் பெருமை மிக்க கலாச்சாரத்தை தொடரப்போவதாக சிலஆண்டுகளுக்கு   முன் சீன அரசு அறிவித்திருந்தது.   2013 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு  'ஒன் பெல்ட், ஒன் ரோடு' (One Belt, One Road-OBOR))   என்று பெயரிட்டது.  
கடந்த 3 ஆண்டுகளாக மிகத் தீவிரமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.  பாரம்பரியமான  பட்டுப்பாதையாக இல்லாமல்  உலகப் பொருளாதார குறியீட்டில்(GDP) 60%த்தை நிர்ணயிக்கும் முக்கிய 58 நாடுகளைத்  தரை, கடல் வான் வழியாக இணைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டமாக அறிவித்திருக்கிறது.  OBOR திட்டத்தின்  கட்டுமானங்களின் மதிப்பீடு  1  டிரில்லியன் டாலர்கள். (ஒரு லட்சம் கோடி டாலர்கள்)
முதல் கட்டமாக  சீனாவின் முக்கிய நகரான குன்மிங் மற்றும் கொல்கத்தா இடையே, அதிவேக ரயில்கள் செல்லும் வழித்தடத்தை அமைப்பதற்கு, சீனா  ஒரு திட்டத்தை முன் வைத்தது.. இந்த வழித்தடம், வங்கதேசம், மியான்மார் வழியே செல்லும் என்பதால், 4 நாடுகளின் வர்த்தகத்தை, மேம்படுத்துவதற்கு, இது உதவும் என்று  சொல்லி 2,800 கி.மீ தூரத்துக்கு அதிவேக ரயில் தடத்தை அமைக்க, 4 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை சீனா  ஏற்பாடு செய்தது. இந்தியா உடனடியாக ஏற்காத இந்த  யோசனையை மற்ற நாடுகள் வரவேற்றன. 
 இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் அடுத்த  முக்கிய கட்டமாக லண்டனில் இருந்து சீனா வரையிலான  12.500 கி.மீ தொலைவுள்ள வழித்தடத்தில் சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கிச் சாதித்துள்ளது சீனாவின் ரயில்வே துறை.                                                                                                                                              சீனா ரயில்வே கார்ப்பரேஷனின் ஈஸ்ட் விண்ட் சரக்கு ரயில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டது. 20 நாள் பயணத்திற்குப் பின்னர் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ‘யிவு’வை அடைந்தது.   மறுபடியும் பிறந்திருக்கும் சில்க் ரூட்டின் வெற்றியாக வர்ணிக்கப்பட்டது இந்தப் பயணம்.                                        லண்டனில் இருந்து புறப்பட்ட இந்த சரக்குரயில், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் வழியாகச் சீனாவை வந்தடைந்துள்ளது. இதே போல் 2014ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிட் நகருக்கு ஒரு  சரக்குரயில்  இயக்கப்பட்டது.  இந்தச் சோதனை ஓட்டங்களைச் தொடர்ந்து  கடந்த மே மாதம் பிஜெய்ங் நகரில் இந்த “ஒன்பெல்ட். ஒன்ரோட்”  திட்டத்திற்காக ஒரு உச்சி மாநாட்டைக் கூட்டியது சீனா.   29  நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் 70 நாடுகள் இந்தத் திட்டத்தில்  சீனாவுடன் ஒத்துழைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.  இங்கிலாந்து ஜெர்மனி போன்ற வலிமையான நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்தியாவும் அமெரிக்காவும் பங்கேற்க வில்லை. சீனாவுடன் கருத்து வேறுபாடு உள்ள வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகள்  பங்கேற்றன. பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
. நமது பக்கத்துவீட்டுக்காரர்களை இதில் பங்கேற்பதை தவிர்க்க நமது அரசால் எடுக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்க  வில்லை. பாகிஸ்தான் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறது.. திட்டம் மிக வேகமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. 
“பாரம்பரிய கலாச்சார பாதை என்பதெல்லாம்  கண்துடைப்பு.''சீனாவின் '' ஒன் பெல்ட் ஒன் ரோடு'' எனப்படும் சில்க் ரூட் திட்டம்  உள்நோக்கம் கொண்டது என்கிறார் அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படை கமாண்டர் ஸ்காட் ஸ்விப்ட்.  சீனா, இந்திய இடையே கடல் எல்லைப் பகுதியில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்திய கடற்பரப்பை தொடர்ந்து சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், தெற்கு சீனக் கடல் பகுதியிலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒரு பிரச்னை. . மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் குறிவைத்து நிலம் மற்றும் கடல் வழியாக சில்க் ரோடு என்ற திட்டத்தை பெரிய பொருளாதார செலவில் கொண்டு வருகிறது சீனா. இந்த திட்டம்.   வெறும் வணிகம் மட்டும் குறிக்கோளாகக்கொண்டது இல்லை அதற்கும் அப்பாற்பட்ட பல விஷயங்களைக்கொண்டது. என்கிறார் இவர். 

இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது இந்தியா பங்கேற்காதற்காக முதலில் சொல்லபட்ட காரணம். ஆனால் உண்மையான காரணம்  பின்னால் வெளியானது.
 சீனா பாகிஸ்தானை இணைக்கும் பொருளாதார நெடுஞ்சாலை இந்தியா சொந்தம் கொண்டாடும் பல்திஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இடம் வழியாகப் பொருளாதார நெடுஞ்சாலை அமைக்கச் சீனா திட்டமிட்டிருப்பதை இந்தியா ஏற்கவில்லை.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் இந்த நெடும்பாதை குறித்து இந்தியா தனது ஆட்சேபணைகளை  பதிவு செய்திருக்கிறது.
“அண்டை நாடுகளின் வளர்ச்சிக்குச் சீனா மேற்கொள்ளும் பங்களிப்பே இது, சீனாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பான இந்தப் பாதை அரசியல் மற்றும் எல்லை தகராறு குறித்தது அல்ல, பொருளாதாரப் பாதை மட்டுமே” என்கிறார்  சீனாவின், வெளியுற  அமைச்சர்  “

உலகின் மிக சக்தி வாய்ந்த  முதல் நாடாக, சீனா இன்னும் 10 ஆண்டுகளுக்குள் ஆகி விட  வேண்டும் என்ற  சீன அதிபர் ஜின்பிங்கின் கனவின் வடிவமே அவருடைய இந்தச்  செல்லத் திட்டம்.  இந்த மிகப்பெரிய தடையில்லாத பாதையை நிறுவதின் மூலம்.  பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளை தங்கள்  வணிக சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து  சீனாவின் உற்பத்திக்கு மிகப்பெரிய சந்தையை உருவாக்கி அதன் மூலம்  சீனாவின் பொருளாதார வலிமையைப் பெருக்குவதுதான் திட்டம். அதைப்புரிந்து கொண்டதனால்தான் அமெரிக்கா எதிர்க்கிறது. எல்லைப் போரில் எழுந்த பரஸ்பரம் நம்பிக்கையற்ற நிலையினால் இந்தியா ஏற்க மறுக்கிறது.    என்று ஐரோப்பிய பத்திரிகைகள் எழுதுகின்றன. 
60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் எல்லைப் பிரச்சனையை முடிவுக்கொண்டுவர இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் தருவதை இந்தியா ஒரு நிபந்தனையாக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ஒரு கருத்து எழுந்திருக்கிறது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை முழுமை அடைய இந்தியா ஒத்துழைக்கப்போகிறதா? அல்லது ஒதுக்கித் தள்ளபோகிறதா??
திறமையான இரண்டு  செஸ் ஆட்டகாரகளின் இறுதி ஆட்டத்தை கவனிப்பது போல பல ஆசிய, ஐரோப்பிய நாடுகள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன.

 கல்கி 22/07/17ல் எழுதியது

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்