8/5/18

சீனாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கட்டிய கோவில்


சீனாவின் தென் கிழக்கில் இருக்கும் ஒரு தொழில் நகரம் குவான்ஷூ(QUANZHOU) இதன் அருகிலில் உள்ள கடற்கரை கிராமங்களில் ஒன்று சேடியன்.(CHEDIAN) கல்பாவிய.சிறிய சந்துகளும் முன் முற்றங்களுடன் கூடிய வீடுகளும், அது பல ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்தது என்பதைச்சொல்லும் சாட்சிகள். அங்குள்ள கல்யூன் என்ற புத்தர் கோவில் மிகப்பழமையானது.சீனாவின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் புத்தமத்தினர் தினசரி ஆயிரகணக்கில் வந்து வழிபடும் ஒரு கோவில்.
அந்தப் பழமையான புத்தர் கோவிலில் இருக்கும் ஒரு பெ


ண் தெய்வத்தை உள்ளுர் மக்கள் தினமும் தவறாமல் அதன் முன்னேயிருக்கும் வாயகன்ற வெண்கலப் பாத்திரத்தில் நிரம்பியிருக்கும் மணலில் ஏற்றிய ஊதுவத்திகளைச் சொருகி பிராத்தனைகளைச்சொல்லி வழிபடுகிறார்கள்
.
அந்தப் பெண் தெய்வம் சீனாவின் பல இடங்களிலிருக்கும் “கியூனியன் தேவி”(GUANYIN)- போதிசத்துவரின் பெண் வடிவம் என்று உள்ளுர் மக்கள் கருதுகிறார்கள். நான்கு கைகளுடனும் அவற்றில் உடுக்கு, ஆயுதம் ஏந்தி கால்கள் சப்பணமிட்ட நிலையில் இருக்கும் அந்தத் தேவியின் காலடியில் வேலால் தாக்கபட்ட நிலையில் ஒரு அரக்கனின் உருவமும் அருகில் இரு காவலர்களூம் நிற்கிறார்கள். அந்த தேவியின் வடிவம் சீனாவின் மற்ற இடங்களில் வழிபடப்படும் கியூனியன் தேவியின் உருவத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தாலும் உள்ளுர் மக்கள் இது தேவியின் மற்றொரு வடிவாக இருக்கும் என நம்பி புத்தபிரானை வழிபடும் முன் இந்தச் சன்னதியையும் வணங்கிச் செல்கிறார்கள்.
இது சீனர்கள் வழிபடும் தெய்வமில்லை. இந்த இடத்திலிருந்த ஒரு பழமையான இந்துக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழர்க:ள் நிறுவி வழிபட்டு வந்த கோவில். அது கால போக்கில் புத்தர் கோவிலாகிவிட்டது. இது தெரியாமல் கிராம மக்கள் தொடர்ந்து ஒரு இந்து கடவுளை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் லீ சான் லாங் என்ற ஆய்வாளார். புத்தர் கோவிலின் நுழை வாயிலில் இருக்கும் மேடையின் பக்க வாட்டில் வரிசையாகப் பல நிலைகளைலிருக்கும் நரசிம்மரின் உருவங்களையும் இந்தக் கோவிலின் சன்னதிக்கு முன்னிருக்கும் தூண்களில் இந்துபுராணக்கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் இருப்பதையும் சொல்லுகிறார்.
சேடியன் கிராமம் பல நூறாண்டுகளுக்கு முன்னர் சீனாவின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. சீனாவின் கடல் வாணிகத்தில் முக்கிய இடம்பெற்றிருந்த இந்த துறைமுகத்திற்கும் தமிழக கடல் நகரங்களுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து கப்பலில் வந்த வணிகர்கள் இந்த நகரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நகரத்தில் இந்தக் கோவில் மட்டுமில்லை சுற்றுவட்டாரத்தில் பல கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது  இதுகுறித்து ஆய்வுகள் செய்யும் சீனப்பேராசியர்கள் குழு.
சாங் என்ற மன்னர் (கி.பி 960-)பரம்பரையும் தொடர்ந்து வந்த யூவான் (கிபி1279) மன்னர் பரம்பரையினர் சீனாவை ஆண்டுவந்த காலத்தில் இந்தத் துறைமுகத்திற்கு தமிழகத்திலிருந்து கப்பல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன. அந்த வணிகத்தைக் கவனிக்க தமிழர்கள் பெருமளவில் குழுக்களாக இங்கு வந்து வசித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தச் சுற்று வட்டாரத்தில் இரண்டு பெரிய கோவில்களையும் பல சிறிய கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள். என்கிறது வியூ வின்லாங் என்ற ஆராய்ச்சியாளரின் குறிப்பு. உள்ளூர்காரான இவர்தான் முதன் முதலில் இங்கு கண்டுபிடிக்கபட்ட ஒரு நரசிம்மரின் சிலையின் மூலம் அது தமிழ் நாட்டு கடவுள். என்றும் தமிழ்நாட்டுக்கும் இந்த கிராமத்துக்கும் உள்ள தொடர்பைக் கணடுபிடித்து 1930களிலேயே சொன்னவர். தொடர்ந்த ஆராய அவர் கேட்ட நிதி கொடுக்கபடாததாலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களாலும் ஆய்வு தொடரப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரம்பரியப் பெருமை மிக்க சீன நகரங்களில் பெரிய அளவில் பல நகரங்களில் கருவூலங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது. அதில் ஒன்று கடல் வாணிகத்தில் முன்னோடியாக இருந்த சேடியன் நகரம். பண்டைய சீனர்களில் கப்பல்கட்டும் முறை கடல் வாணிகத்தில் அவர்கள் சென்ற கலங்களின்  மாதிரிகளுடன் விளக்க பெரும் பொருட்செலவில் ஒரு நவீன அருங்காட்சியகம் எழுந்தது. அதன் இரண்டாம் மாடியில் நகரத்தின் அருகில் கிடைத்த சிலைகள் சிற்பங்களை வைக்கவும் முடிவானது.
 அந்த சிலைகளும் சிற்பங்களும் அப்படியே அச்சு அசலாகத் தமிழக, ஆந்திர கோவில்களில் காணப்படும் சிற்பங்களாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சிலைகளின் பின்னணி தொடர்பான ஆய்வுகள் தொடர வேண்டும் என்ற ஆர்வம் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து எழுந்திருக்கிறது.
எத்தனை கோவில்கள் இருந்து பின்னாளில் அழிந்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை ஆனால் சுற்றுவட்டாரத்தில் பல இடங்களிலிருந்து சிலைகள் எடுக்கப்பட்டிருப்பதால் பல கோவில்கள் இருந்திருப்பதாக நம்பப்படுகிறது என்கிறது அருங்காட்சியகத்தின் குறிப்பு அதலிருக்கும் வரைபடம். சிலைகள கண்டுபிடிக்கபட்ட இடங்களாக இந்த நகரைமட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டங்களையும் காட்டுகிறது.
அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நரசிம்மர். யாளி சிவலிங்கம் காளி போன்ற பல சிலைகள். இருக்கின்றன. ஒரு யானை சிவலிங்கத்திற்கு நீர் சொறிந்து அபிஷேகம் செய்கிற காட்சி. கிருஷ்ணன், பின்னணியில் பாம்பு போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்ட தூண்கள் எல்லாமே கடல் கடந்து வந்த தமிழனின் சிற்பகலைக்கு சாட்சியாகயிருக்கிறது. சிலைகளின் கற்கள் உள்நாட்டு வகையாக இருப்பதால் தமிழக சிற்பிகள் வந்திருக்க வேண்டும் அல்லது வரையப்பட்ட படங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளூர்கலைஞர்களின் உதவியுடன் சிலைகள் வடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்களின், பல்கலைகழகங்களின் தொடர்ந்த ஆர்வத்தால் அருங்காட்சியகத்தில் “சீனாவிற்கும் தென் இந்தியாவிற்குமான 1000 ஆண்டுத் தொடர்பு” என்று ஒரு தனிப் பகுதியே நிறுவப்பட்டிருக்கிறது. சிலைகளுக்கும் கல்செட்டுக்களுக்கும் ஆங்கிலத்தில்  விளக்கமும் இருக்கிறது சிவலிங்கமும் யானையும் இருக்கும் சிற்பத்தின் மூலையில் ஒரு சிலந்தியின் உருவமும் இருக்கிறது. சிவனை பாதுகாக்க தினசரி அந்த சிலந்தி கட்டிய வலையை யானை அபிஷனக்தினால் கலைத்து விட்டுக்கொண்டேயிருந்ததால் அந்த சிலந்தி கோபமுற்று யானையின் துதிக்கைக்குள் நுழைந்து அதைக்கொன்று விட்டது என்ற கதையை அருகிலிருக்கிறது
.
அருங்காட்சியகத்திலிருக்கும் கல்வெட்டுக்களில் அன்றைய தமிழ் எழுத்துக்களில் இருப்பதின் ஆங்கிலவடிவம் அருகில் வைக்கபட்டிருக்கிறது. அதில் ஒன்று இது.
ஹரனுக்கு நமஸ்காரம். எங்கும் வளம் நிரம்பியிருக்கட்டும். சித்திரை மாதத்தில் சித்தரை நாளான்று 1203ஆம் வருடம் தவசக்கரவர்த்தி சம்மந்த பெருமாள் ஆசிபெற்று மன்னர் செக்காச்சி கான் எழுத்தில் தந்த அனுமதியுடன் உடைய நாயினாரின் உருவம் மன்னரின் நலத்துக்காகப் பிரதிஷ்டை செய்யபட்டது
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் 2000 மைல்களுக்கு அப்பாலிருக்கும் ஒரு தேசத்துக்குத் தமிழையும் தன் கடவுளையும் கொண்டுசென்றுஅங்குஅதை நிறுவியிருக்கிறான் அது இன்ரும் வழிபடப்படுகிறது  என்பதையறியும்போது   வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்