30/5/18

கடவுளின் வீடு



அது அழகான இடம் அவசியம் பார்க்கவேண்டிய ஒர் இடம். தவறவிடாதீர்கள். அந்தப் பயணத்தையும், இடத்தையும் வாழ்நாளில் மறக்கமாட்டீர்கள் என்றார் நண்பர். அங்குள்ள இயற்கையின் எழிலில் மயங்கி அவர் ஒவ்வொரு ஆண்டும் அங்குச் சென்று ஓய்வெடுப்பதையும் சொல்லி ஆவலை அதிகப்படுத்தினார். அவர் சொன்ன இடம் விசாகபட்டினத்திலிருந்து 120 கீமி தொலைவிலிருக்கும் அரக்கு பள்ளதாக்கு.

ஆந்திர-ஒடிஸா எல்லைப்பகுதியிலிருக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் இந்த அரக்கு வேலி என்றழைக்கப்படும் பள்ளதாக்கு. ஆந்திர மாநிலத்துக்கு இயற்கை அளித்திருக்கும் கொடையான இந்த அழகான பள்ளதாக்குக்கு ரயிலில் சென்று மறுநாள் பஸ்ஸில் திரும்ப ஆந்திர மாநில சுற்றுலாத்துறை. ஒர் இரவு தங்க, உணவு வசதிகளுடன் பேக்கேஜ் டிக்கெட் தருகிறார்கள்
.
பல காலமாக இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு பகல் நேர பாஸன்ஞ்சர் தொடர் வண்டியில் கடந்த ஆண்டு ஒரு ஏசி சேர் காரை இணைதிருக்கிறார்கள் இது அழகான இயற்கை சூழலை ரசித்துப் பார்த்துக்கொண்டேசெல்லவதற்கென்றே வசதியாக அமைக்கப் பட்ட பெட்டி. இருபுறமும் பளிச்சென்று தெரியும் வெளிப்புற காட்சிகளைப் பார்க்க பெரிய கண்ணாடி ஜன்னல்கள். வசதியாகத் திருப்பிக்கொள்ளும் சீட்டுகள். கண்ணாடி ஜன்னல்களுடன் கூடிய மேற்கூரை. பிரமாதமாக இருக்கிறது
.
நண்பர் சொன்னது மிகச்சரியான வார்த்தைகள் என்பதை தொடர் வண்டி புறப்பட்ட ஒன்றை மணியில் உணர்கிறோம். 13400 மீட்டர் உயர மலைப்பகுதிக்கு மெல்ல ஏறுகிறது. இரண்டு புறமும் பசுமை அடர்ந்த காடு, தொலைவில் கருநீலவண்ணத்தில் மலைச்சிகரங்கள். அதைத்தொட்டுச் செல்லும் மேக கூட்டங்கள் சட்டென்று காட்சி தரும் அருவிகள். சில இடங்களில் மெல்லிய தூறல் என அற்புதமான காட்சிகள். கண்ணாடி மேற்கூரையில் வானமும் நமது தொடர் வண்டியைப் பார்த்துக்கொண்டு செல்லும் பறவைகளும் கூட அவ்வப்போது தெரிகிறது.வண்டியினுளிருக்கும் டிவி திரையிலிருந்து எழும் மெல்லிய இசை சுழலுக்கு மேலும் இதம் சேர்க்கிறது.

மலைப்பகுதியில் பயணிக்கும்போது இடது புறம் பசமையான பள்ளதாக்கும் வலது புறம் சிறிதும் பெரிதுமாக அருவிகளும் நம்மை அசத்துகின்றன. 5 மணி நேரத்தில் 58 குகைகளையும் 84 பாலங்களையும் கடக்கிறது. தொடர் வண்டி. சில குகைகள் மிகப் பெரிது. இருள் சூழுவதால் குகைகளுக்குள் நுழைந்தவுடன் வண்டியின் உள்ளே விளக்குகள் எரிகிறது அந்தக் குகையின் நீளம் உயரம் பற்றிய விபரங்கள் ஒலிபெருக்கியில் கேட்கிறது. சில இடங்களில் தொடர் வண்டிகீழ் நோக்கிசென்று பின்னர் மேலேஏறுகிறது. இந்தக் குகைகள் பாலங்கள் தவிர பள்ளதாக்கின் கணவாய்களிலும் செல்லுகிறது எனப் புரிந்துகொள்கிறோம். சில இடங்களைக் கடக்கும் போது இந்த ரயில் பாதை குகைகளைச் சில திரைப்படங்களில் சண்டை கட்சிகளில் பார்த்த நினைவு வருகிறது
பல இன்னல்களுக்கடையே பல ஆயிரக்காணக்கான மனிதர்கள் கடும் உழைப்பில் பாலங்களும், குகைகளுமாக உருவாகியிருக்கும் இந்தத் தொடர் வண்டிப்பாதை உருவானதற்கு காரணம். சட்டிஸ்கர் மாநில நிலக்கரி சுரங்களிலிருந்து நிலக்கரி மற்றும் தாதுக்களை நேரடியாக விசாகபட்டணம் ஏற்றுமதிக்காகத் துறைமுகத்துக்கு கொண்டுவரவும் விசாகப் பட்டின உருக்காலையில் பயன்படுத்தபடுவதற்கும் தான்.
இன்றும் அந்தப்பணி தொடரும் நிலையில், ஆந்திர சுற்றுலாத்துறையில் யாரோ ஒரு புண்னியவானுக்கு, இந்தப்பாதையில் செல்லும் ஒரு பாஸஞ்சர் வண்டியில் இப்படியொரு கோச்சை அமைத்து டூரிஸ்ட்களை கவரும் யோசனை பிறந்து அது செயலாக்கவும் பட்டிருப்பது நமது அதிர்ஷ்டமே
.
சிடம்பள்ளி என்ற இடத்தில் நீண்ட குகையைக்கடக்கும்போது குகையின் முடிவில் வரும் அருவியைக் காணத்தவறாதீர்கள் என்ற அறிவிப்பு கேட்கிறது. காத்திருக்கிறோம். மெல்ல வளைவில் செல்லும் தொடர் வண்டி அந்த அருவியில் சற்று நனையுமளவுக்கு அருகில் அந்த அருவி. கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்ப்பதால் அருவியின் ஓசையக் கேட்க முடியவில்லையென்றாலும் உணர்கிறோம்
.
போரா குலாவு (BORRAGUHALU) என்ற நிலையத்தில் நிற்கும் வண்டியிலிருந்து இறங்கி போரா குகைகளைப் பார்க்கச் சுற்றுலா பேருந்தில் பயணிக்கிறோம். ஒடிசா மொழியில் போரா என்றால் பெரிய துளை என்றும் குலாவு என்றால் குகை என்றும் பொருள்.
ஒரு பெரிய மலையின் உச்சிப்பகுதிக்கு ஏறிப் பின் அங்கிருக்கும் ஒரு பெரிய வாசலின் வழியே கிழே இறங்கி அந்தக் குகைகளைப் பார்க்க வேண்டும்.
அந்தக் குகையின் உட்புறம் முழுவதும் மேலிருந்து உருகி வழிந்து உறைந்தது போல விழுதுகளாகவும் பல வடிவங்களில் பிம்பங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது
.
மிகப்பெரிய அளவில் பரந்திருக்கும் அந்தக் குகையின் உள்ளே வெவ்வறு உயரங்களிலிருக்கும் இயற்கையாகப் படந்திருக்கும் இவைகளின் மீது பல வண்ணங்களில் எல்இடி விளக்கு ஓளிகளைப்பாய்ச்சி காட்டுகிறார்கள். ஒரிடத்தில் கிட்டதட்ட லிங்க வடிவிலிருக்கும் பாறையில் அண்மையில் பூஜித்து வழிபட்ட அடையாளங்கள்

சுண்ணாம்புக்கற்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் இப்படி இயற்கை குகைகள் இருக்கும். அப்படிப்பட்ட குகைகளில் நீரில் இருக்கும் ஹூமிக்(HUMIC) அமிலத்தினால். சுண்ணாம்புக்கற்களுக்குள் இருக்கும் உப்புப்படிவங்கள் கரைந்து உள்நோக்கி செல்வதனால் இப்படிப்பட்ட குகைகள் உருவாகின்றன.  சில் இடங்களில் நீர் கசிந்து கொண்டிருக்கிறது.  இப்படி உருவான இந்தக் குகையை 1807 வில்லியம் கிஞ் ஜார்ஜ் என்ற ஆங்கிலேயே சர்வேயர் கண்டுபிடித்துபதிவுசெய்திருக்கிறார் என்கிறது பூவியல் சரித்திரம்.
 இந்தக்குகைகளின் வயது 15கோடி வருடங்கள். இங்கு 15000 ஆண்டுகளுக்கு மனிதன் வசித்தற்கான அடையாளங்களை ஆந்திர பலகலைகழக ஆராய்ச்சி கண்டுபிடித்திருப்பதைச்சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது சுற்றுலாத்துறையின் தகவல் பலகை.

ஆனால் உள்ளூர் பழங்குடி கைடு சொன்ன கதை சுவாரஸ்யமானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மேய்ந்து கொண்டிருந்த தன் மாடு ஒன்றை காணோம் என்று தேடிக்கொண்டுவரும்போது இந்த இடத்தைப் பார்த்ததாகவும் அந்தப் பெரிய பொந்துக்குள் ஆழத்தில் விழுந்த அந்த மாட்டுக்கு எந்த ஆபத்தும் நேராத அதிசயத்தை வியந்து உள்ளே  இறங்கிச்சென்று பார்த்தபோது அங்கே சிவ லிங்கம் இருந்ததைப் பார்த்தாகவும் அது முதல் இது சிவன், பார்வதி வினயாகர் வாழும் கடவுளின் வீடு  என்று தங்கள் இனத்தவர் நம்புவதாகவும் சொன்னார். பொறுமையாக நீங்கள் உற்று கவனித்தால் அந்தப் படிமங்களில் கடவுளரின் உருவங்களைப் பார்க்கலாம் என்றும் சொன்னார்

இந்தக் குகைகளிலிருந்து 20 கீமி தொலைவில் அழகான அருவி அருகில் ஆந்திர சுற்றுலாத்துறையினரில். மிக ரசனையுள்ளவர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்து விடுதியை கட்டியிருக்கிறார்கள் 
.
திரும்பும் பயணத்தைச் சுற்றூலாத்துறையின் பேருந்தில். தொடர்கிறோம் தொடர் வண்டிப்பயணத்தில் பார்க்க முடியாத இந்தப்பள்ளதாக்கின் அழகிய மறுபக்கத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டே வருகிறோம் இருபுறமும் கனண்ணுக்கெட்டிய வரை கண்ட காடு. காபி தோட்டங்கள். பசும் புல்வெளிகள் காட்சிகள் எல்லாம் மெல்ல  பரபரப்பான சாலைகளாக மாறியது   நாம் விசாகபட்டிணத்தை நெருங்கிறோம் என்பதைச் சொன்னது.


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்