9/8/18

தேடல்

தேடல் 

“எமோஷனல் ஆகாமல் அழுவதை நிறுத்திவிட்டுத் தெளிவாகச்சொல்லுங்கள். நீங்கள் சொல்வதை வைத்துத்தான் நாங்கள் உதவ முடியும்”

உதவிப் போலீஸ் கமிஷனர் இந்துமதியின் கம்பீரமான உருவத்துக்கும் விறைப்பான அந்த யூனிபார்முக்கும் சம்பந்தமே இல்லாமலிருந்தது அந்த மென்மையான குரல். அந்தக் குரலில் தெரிந்த கனிவு நம்பிக்கையத்தரத் தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்  சுமிதா,

“தினமும் போல இன்றைக்கும் டிரைவர் அடையாரிலிருக்கிற ஸ்கூலுக்கு குழந்தையை அழைத்துவரக் காரை எடுத்துக்கொண்டு 2 மணிக்குப் போனார். ஆனால் வழக்கமாகக் குழந்தை வெயிட் பண்ணும் இடத்தில் இல்லாதால் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்திருக்கிறார். வராததால் ஸ்கூல் உள்ளே கிளாஸ் ரூமில் போய்ப் பார்த்திருக்கிறார். அங்கு கிளின் பண்ணிக்கொண்டிருந்த ஆயா எல்லாப்புள்ளைங்களும் அரை மணி முன்னதாகவே போய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார். அருகில் எங்கும் குழந்தை இல்லாதால் அப்பாவிற்குப் போன் செய்திருக்கிறார். நானும் அப்பாவும் உடனே ஸ்கூலுக்கு பதறி அடித்துக்கொண்டு போனோம். அதற்குள் ஸ்கூலில் எல்லோரும் போய்விட்டார்கள் எச் எம் ஊரில் இல்லை. இருக்கும் இரண்டு டீச்சர்களூம் பதட்டத்தில் இருந்தார்கள். அப்பா எல்லா கிளாஸ் ரூம்களையும் திறந்து பார்க்கச்சொன்னார். நாங்கள் பார்த்துவிட்டோம் என்று சொன்னவர்களிடம் தான் பார்க்கணும் என்று சொல்லிச் சத்தம் போட்டார். குழந்தைய எங்கும்  காணலே.
 “மேடம் எப்படியாவது கண்டுபிடிச்சுக்கொடுங்க மேடம் என்று முடிப்பதற்குள் சுமிதாவிற்கு அழகை பீரீட்டது
.“கவலைப்படாதீர்கள் சுமிதா வீ வில் டூ தெ பெஸ்ட்,  ஐ ஆம் ஆல்சோ ஏ மதர்” என்று சொல்லிக்கொண்டே அந்த ஐபிஎஸ் அதிகாரி தன் முன்னிருந்த கம்யூட்டரில் ஏதோ டைப்பண்ணி கொண்டிருந்த படியே
“சார் உங்க பெயர் என்ன சொன்னீங்க?
“கோபாலன்.- மேடம்” என்று சொன்ன அவரின் தலை வழுக்கையால் அகலமாகத் தெரியும் நெற்றியில் ஒற்றைச் சிவப்பு கீற்று நாமம். பளிச்சென்று இருந்த முகத்தில் கவலையின் தீவிரம் தெரிந்தது. 
 “உங்களுக்குத் தொழில் ரீதியாக ஏதாவது போட்டியாளர்கள் பிரச்சனை? எதிரிகள்? யாராவது?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதெல்லாம் கிடையாது மேடம். நான் என் தொழிலில் மட்டுமில்லை என்னை அறிந்தவர்களுக்கெல்லாம் பிரண்ட்தான்,  40 வருஷமா எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பதிப்பிக்கும் கம்பெனி என்னுடையது. பிஸினஸில் எந்தப் பிரச்சனையும் கிடையாது”
உங்க டிரைவர் எப்படி?
“ரொம்ப நல்லவன் எங்களிடம் எழு வருடமாக இருக்கிறார். இந்தக் குழந்தையிடம் தனிப்பாசம்”
“குழந்தையை யாராவது கடத்தியிருப்பாங்களா மேடம்?”
என்று பதறிய சுமிதாவிடம். “ரூல் அவுட் பண்ண எல்லா ஆங்கிளிலும் தான் பார்க்க வேண்டும்... ம்ம் பார்க்கலாம் அமைதியாக இருங்கள்” என்ற உதவிக்கமிஷனர் இன்ட்ர்காமில் யாரையோ அழைத்தார்.
வினாடிகளில் உள்ளே நழைந்த அந்த யூனிபாரம் அணியாத அதிகாரி எஸ் மேடம் என சல்யூட் செய்தார்
“ஶ்ரீதர் இவங்களோடு போய் வீட்டில் இருங்க. செல்போன்,லேன்ட் லைன் எல்லாவற்றையும் டிராக்கிங்லே போடுங்க, அப்டேட் கொடுங்க  என் பெர்சன்ல் லயனுக்கு வாங்க. வயர்லெஸ் வேண்டாம்
.
“நீங்க வீட்டில் போய் இருங்க இவர் கூட இருப்பார் அவர் சொல்லுவதை கவனமாக ஃபலோபண்ணுங்க. யாரிடமும் எதுவும் பேச வேண்டாம் மீடியாக்காரங்க கிட்ட எதுவும் பேசாசாதீங்க.. ஸ்கூலிருந்து எதாவது சொன்னா எங்கிட்ட அவங்களை பேசச்சொல்லுங்கள்”. எனப் பட படவெனக் கட்டளை மாதிரி சொல்லிக்கொண்டே போனார். உதவிக் கமிஷனர் இந்துமதி.
“உங்கள் டிரைவர் வந்திருக்கிறாரா? அவர் இங்கேயே இருக்கட்டும். நீங்கள் வீட்டில் இருங்கள் எதாவது போன் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஶ்ரீதர் சொல்லுவார்”.
குழந்தைபேர் என்ன சொன்னீங்க? ம்ம்.. பிரியா இல்லே 5 வயசு. ஒ.கே அவங்க படம் இருக்கா? சுமிதா உடனே தன் செல்போனிலிருந்த கடந்த வாரம் ஸ்கூல் பங்ஷன் டான்ஸில் எடுத்த படத்தைக் காட்டினார்.” இது வேண்டாம் நார்மல் படம் முகம் தெளிவாக இருக்கும் படம் கொடுங்க”
பரவென்று போனில் தேடி ஒரு படத்தைக்காட்டியவுடன். ஓகே இதை எனக்குப் போனில் அனுப்புங்க என்ற சொல்லிவிட்டு அலறிக்கொண்டிருந்த வயர்லெஸ் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தார்.
தாங்கள் கிளம்ப வேண்டும் என்பதை உணர்ந்த அப்பாவும் பெண்ணும் எழுந்தனர்
“மேடம் எப்படியாவது...” என்று மறுபடியும் அழத்துத்வங்கிய சுமிதாவைப்பார்த்தவுடன், வயர்லெஸ்போனில் “ஜஸ்ட் மினிட்” என்று சொல்லிவிட்டு அவர் தோளைத்தட்டி “அண்டர்ஸ்டான்ட். வீ ஹவ் டு வெயிட்.. பீ போல்ட் அன்ட் கோஆப்ரேட்”, என்று சொன்னார் இந்துமதி.
“மேடம் ஒரு விஷயம் இங்கே வர முன்னாடி கிளாஸ் மதர்ஸ் வாட்ஸ் குருப்பில் பிரியா வீட்டுக்கு வரவில்லை என்று போட்டிருக்கிறேன்.”
ஓ குட். அவர்கள் யாரவது மெஸெஜ் அனுப்பினா பாருங்க. ஆனா போனில் பேச வேண்டாம்
அவர்கள் வெளியேபோனதும். உள்ளே நுழைந்த நபரிடம்
“ஷாஜஹான் டிடெட்யல்ஸ் எல்லாம்  கேட்டிங்கிங்க இல்லே?”. என்றார். இந்துமதியிடம் புகார் கொடுக்கவருபவர்கள் பேசுவது பக்கத்து அறையிலிருக்கும் அதிகாரிகளுக்கு ஸ்பீக்கரில் கேட்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.. விஷயங்களை மறுபடி சொல்லும் நேரத்தைத் தவிர்க்கவும், அதேநேரத்தில் விபரங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே  அவர்கள் பார்வையில் அதை அலசவும் இந்துமதி செய்திருக்கும் ஏற்பாடு.இது.

“மேடம் இவங்க பெரிய பப்ளிஷர்ஸ் மேடம். ஜெயகாந்தன் போன்ற பெரிய ஆளுங்கள் புத்தகமெல்லாம் போட்டிருக்காங்க. நம்ப பழைய டிஜிபி அம்மா புத்தகங்கள் கூட போட்டிருக்காங்க.பெரிய வசதியானவங்க. இப்ப பக்தி புத்தகம் நிறைய போடறாங்க.

“ஓ அப்படியா? வந்த காரைப்பார்த்தாலே புரியது ஐ அம் சஸ்பெட்டிங் கிட்நாப்பிங் ஃபொர் கெயின்.. உங்க டீமை இறக்குங்க. டிரைவரைத் தரோவா விசாரிங்க. அவன் வழியா யாராவது ஆப்ரேட் பண்ணற பாசிபிளிட்டி இருக்கிற ஆங்கிளையும் பாருங்க.. ஸ்கூல் ஸ்டாப்,, அப்ப ஸ்கூலுக்கு வந்த கார்களின் வேன்களின் டிரைவரைங்க எல்லாரையும் டிரேஸ் பண்ணுங்க கியூக், கியூக்” என்று சொன்னவடனேயே
“யெஸ் மேடம். நீங்க பேசிட்டிருக்கும்போதே டீமை ரெடிபண்ணிட்டேன். குழந்தையின் படத்தைக் கன்ட்ரோலுக்கு அனுப்பிடேறேன். மீடியா உள்ளே நுழையாம லாக் பண்ணிடலாம்” என்றார் ஷா என்று பலரால் அழைக்கப்படும் ஷாஜஹான்.. கிரைம் இன்டலிஜென்ஸில் அவரது 20 ஆண்டு அனுபவம். மிடுக்குடன் பேசியது
.
****
“குழந்தை 3 மணி அளவில் காணாமப்போயிருக்கு, நார்மலா இந்த மாதிரி கேஸ்கள்ல 3 அல்லது 4 மணி நேரம் கழித்துத்தான் அவங்க பேசுவாங்க. இப்ப மணி 6 ஆகுது. எப்ப வேணா கால் வரலாம்.நீங்க இரண்டுபேரும் தெரிந்தவங்க போன் வந்தாலும் கூட எடுக்கக் கூடாது. எதாவது புது நம்பர் வந்தா எனக்குச் சிக்னல் கொடுங்க நான் சொன்னப்புறம் எடுங்க. நிதானமா பேசுங்க. நான் எழுதிக் காண்பிக்கிறமாதிரி பேசுங்க போதும். கன்ட்ரோல் ரிக்கார்ட் பண்ணிக்கொண்டே போன் வரும்  இடத்தை டிரேஸ்பண்ணுவாங்க. அதுக்கான டைம் கிடைக்கிறவரை நீங்க பேசிக்கிட்டே இருக்கணும். புரியிதுங்களா? “
“மேடம் வேண்டாம்- போன் வந்தா நீங்க பேசுங்க சார்”.
என்று சொன்ன ஶ்ரீதரிடம் “கிட்நாப்பாகத்தான் இருக்குமுன்னு முடிவுசெஞ்சுட்டிங்களா?” என்றார் கோபாலன்
இல்லை அந்த ஆங்கிளீலிலும் பார்க்கிறோம். நார்மல் போலீஸ் செர்ச்சும் ஆரம்பிச்சிட்டாங்க
அந்த ஏர்கண்டிஷன் அறையில் மேஜை மீது இருக்கும் இரண்டு செல் போன்களையும் பார்த்தபடியே மூன்று பேரும் உட்கார்ந்திருக்கின்றனர். கோபாலன் சஸ்ரநாமம் சொல்லஆரம்பித்திருந்தார். சுமிதா அழுகையை அடக்கமுடியாமல் தவிக்கிறார். ஶ்ரீதர் தன் போனில் ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார்.’
***   
“ரகு எங்கேயிருக்கீங்க? எவ்வளவு நேரமா டிரைப் பண்றேன் தெரியுமா? சீக்கிரம் வீட்டுக்கு வாங்க. சம் ஸ்டேரெஞ் திங்கஸ் ஆர் ஹாப்பனிங்” என்று லதா தன் கணவரைப் போனில் அழைத்தார்.
“ஐ ஆம் ஆன் மை வே” வீட்டில் என்ன ஆச்சரியம்?. குழாயில் தண்ணி வந்துவிட்டதா? என்று சிரித்த கணவனிடம். 
“ரகு நோ ஜோக்ஸ் பிளிஸ் பீ சீரியஸ். சீக்கிரம் வாங்க பயமாகயிருக்கு” என்று பதறுகிறார்.     ரகு எப்போதுமே ஜோவியலாகப் பேசும் மனிதர். தினமும் பேஸ்புக்கில் எழுதுபவர். அதை வியாசம் என்று சொல்லுவார்,
“ஓகே.. ஒகே 5 நிமிஷ ட்ரைவில் தான் இருக்கேன். வரேன்”
.
ரகுநாதன் லதா இருவரும் ஆடிட்டர்கள். ரகு மேனேஜ்மென்ட் கன்ஸ்ல்டண்ட் லதா இன்கம் டாக்ஸ் விவகாரங்களில் எக்ஸ்பர்ட். நாள் முழுவதும் பிசி. அண்ணா நகரில் தனி வீடு, ஆளுக்கு ஒரு பெரிய கார் வாங்குமளவுக்கு வருமானம்.
“என்ன விஷயம்? ஏன் மிரண்டமாதிரி இருக்கே? என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த ரகுநாதன் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்த அழகான குழந்தையைப் பார்த்து ஹய் இந்தக் குழந்தை யாரு?”

சாயங்காலம் சாந்தி வேலைக்கு வரும்போது “அம்மா நம்ம காரிலே இந்தக் குழந்தை அழுதுகொண்டிருந்தது”ன்னு சொல்லி உள்ளே தூக்கிக்கொண்டுவந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை, யார் என்ன என்று எதுவும் தெரியல்ல. உள்ளே வந்ததும் “நீங்க அம்மா பிரண்டா? என்று மடியில் உட்கார்ந்து கொண்டுவிட்டது”. ரொம்ப நாள் தெரிந்தமாதிரி ஒட்டிகொண்டுவிட்டது
.
நம்ம வித்தியாவை  20 வருடத்துக்கு முன்னால் குழந்தையாக பார்த்த ஞாபகம் வந்தது. . ஏதாவது சாப்பிடிறியான்னு கேட்டேன் சாக்லேட் காம்பளான் என்றது.  அது நம்மகிட்ட இல்ல.. அதனால் சாந்தியை வாங்கிக் கொண்டு வரச்சொல்லிப் போட்டுக்கொடுத்தேன். மெள்ளக் குடித்துவிட்டு என்னவோ பேசிக்கொண்டேயிருந்தது. இப்பத்தான் தூங்கறது. இன்னும் மழலையே போகல்ல பேசறது புரியவே இல்லை. ஆனா நன்னா பேசுறது. யாருடைய குழந்தையோ?. பேர் ஒரு சமயம் தேவி என்கிறது ஒருசமயம் பிரியா என்கிறது. வேறு எதெல்லாமோ சொல்லுகிறது எனக்குப் புரியவில்லை.
“அதைவிட நான் பயந்து போன விஷயம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருத்தன் நம்ப வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் கேட்டுக்குப் போனவுடன் போய்விட்டான். கொஞ்ச நேரம் முன்னால் மறுபடியும் வந்தான் நான் ஜன்னல் இடுக்காலே பார்த்தேன் கொஞ்ச நாழியிலே போயிட்டான். அவன் கொண்டுவந்து விட்டிருப்பானோன்னு பயமா இருக்கு”,
என்று ஒரே மூச்சில் சொன்ன லதாவிடம் “கூல். காரிலிருந்து இந்தக் குழந்தையை சாந்தி தூக்கியதை நீ பார்த்தையா?”

“இல்லை அவள் உள்ளே கொண்டுவந்தப்புறம் தான் சொன்னாள். வழக்கம் போல கார் கதவைப் பூட்டாமல் வந்து விட்டேன் போலிருக்கிறது.
“அப்போ அந்த மோட்டார் சைக்கிள் ஆள் இருந்தானா?
“நான் பார்க்கல ரகு”
இது சீரியஸ் மேட்டர் போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணி குழந்தையை ஹேண்ட் ஒவர் பண்ணனும்.  இந்த ராத்திரி நேரத்தில் லோகல் ஸ்டேஷனில் குழந்தையை விடுவது சேப் இல்லை யாரவது ஹைர் அப்பிடம் பேசிவிட்டு காலைவரை வைத்திருப்பது தான் பெட்டர் என்று சொல்லியபடியே ரகு தன் போன் காண்டாக்ட்டில் ஒரு நம்பரைத் தேட ஆரம்பித்தார்,

சட்டென்று முழித்துக்கொண்ட குழந்தை ரகுவைப்பார்த்து “ஹலோ அங்கிள்” என்றது. சற்றே திடுக்கிட்ட ரகு ஹலோ என்றார். மிகசுவாதீனமாக அவர் மடியில் உட்கார்ந்து கொண்ட அந்தக் குழந்தை அப்பா எப்ப வருவாங்க? என்றது.

சீக்கிரமா என்று சொல்லியபடி அந்தக் குழந்தையிடம் பேசத்துவங்கினார். ரகு. “நீ எந்தக்கிளாஸ்? உஷா மிஸ்தானே உங்க மிஸ்?
“நோ அவங்க ராதிகாவோட மிஸ். எங்க மிஸ் ..” என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு பெயரை மழலையில் சொல்லியது. இதில் நடுவில் இங்கிலிஷ் வேற.
“வந்ததிலிருந்து நான் கேட்டுப்பார்த்திட்டேன் ஸ்கூல் பேர் டிச்சர் பேர் அப்பா பேர் எதுவும். அது சொல்லறது நமக்குப் புரியல்ல. ஆனா சமத்துக்குழந்தை. புது இடங்கிற பயமே இல்லாமல் பேசுகிறது”. என்றார் லதா
“இன்னும் கொஞ்சம் ட்ரைப்பணலாம். கண்டுபிடிச்சிடலாம். பொறுமையாக இரு”. என்று சொன்ன மேனேஞ்மெண்ட் குருவான ரகுவிற்கு இது ஒரு புதுமாதிரியான சாலென்ஞ்.
.
 ரகு போனில் கூப்பிட்ட போலீஸ் நண்பர் ஒரு அவரசகூட்டத்திலிருப்பதாகவும் முடிந்தவுடன் கூப்பிடுவதாகவும் எஸ்மெஸ் அனுப்பியிருந்தார். நகருக்கு நாளைப் பிரதமர் வரப்போவதும் அதற்கான செக்யூரிட்டிகளுக்கு நண்பர் தான் பொறுப்பு என்பதும் அப்போது தான் ரகுவிற்கு நினைவுக்கு வந்தது
டிவியில நீயூஸ் பார்க்க ஆரம்பித்த ரகுவின் மடியில் உட்கார்ந்து கொண்ட குழந்தை “டாம் அன்ட் ஜெரி போடுங்க அங்கிள்” என்றது.
“நீயூஸ்பார்த்துட்டு பார்க்கலாமா?
“ஓகே” என்றது குழந்தை. தந்திச் சேனலில் 9 மணிச்செய்தியில் சென்னைப் புத்தக கண்காட்சியில்   முதல் நாள் மாலை   விருதுகள் அளிக்கப்பட்ட விழா. ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்டின் சிறந்த பதிப்பாளர் விருது என அறிவிக்கப்பட்டபோது அந்த நடிகரிடம் ஷில்ட் வாங்கியவரைப் பார்த்ததும் குழந்தை “ஹை தாத்தா” என கத்தியது. உடனே ரகுவும், லதாவும் குழந்தையிடம் பேச ஆரம்பித்தனர்.

**லேண்ட் லயன் மூன்று முறை மணியடித்து முடிந்தவுடன் தன் கையிலிருந்த கருவியில் ஒரு பட்டனை அமுக்கி அலர்ட் என்ற சொன்ன ஶ்ரீதர் சில வினாடிகளில் எடுத்துப் பேசுங்க  என்றார்.
சற்றே தயங்கியபடி போனை எடுத்தார் கோபாலன்
“மிஸ்டர் கோபாலனிருக்கிறாரா?”
“நீங்க யார் பேசுறிங்க?”
அண்ணா நகரிலிருந்து பேசறேன், கோபாலனிடம் முக்கியமான ஒரு விஷயம் அவசரமாகப் பேசணும்.
ஶ்ரீதர் கையை உயர்த்திக் காட்டியவுடன்.
“சொல்லுங்க நான்தான் கோபாலன் என்ன விஷயம்.?.”

“சார் உங்க பேத்தி பிரியாவைத்தேடறீங்களா? எங்க கிட்ட பத்திரமா இருக்கா”.. . முடிப்பதற்குள் போனை ஶ்ரீதர்  வாங்கி தொடர்ந்து பேசுகிறார்.
சில நிமிடங்களில் ‘ பேபி பிரியா டிரேஸ்ட் .அன்ட் ஸேப்’ என்ற செய்தி உதவிக்கமிஷனருக்கும் கன்ட்ரோல் ரூமுக்குச் பறக்கிறது
5 நிமிடத்தில் அண்ணா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரகுவின் வீட்டு வாசலில். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உதவிகமிஷனர் இந்துமதியின் பரிவாரத்தின் ஜீப், கார்கள். பின்னாலேயே சுமிதாவின் கார். அந்தச் சின்னத் தெரு போலீஸ் கார்களால் நிறைகிறது. தூங்கப்போய்விட்ட அந்த அமைதியான தெரு பரபரப்பாகிறது
.
தாத்தாவைப் பார்த்தது ஓடிவந்தபிரியாவை வாரித்தூக்கிக்கொண்டார். கோபாலன்
எப்படிம்மா கண்ணு இங்கே வந்தே?
“நான் வரலைத் தாத்தா இந்த ஆன்ட்டிதான்” .என்று தன் மொழியில் எதோ சொல்ல “இல்லை குழந்தை தெரியாமல் சொல்லுகிறது” என்று லதா ஆரம்பித்தபோது இந்துமதி கையை உயர்த்தி “குழந்தை பேசட்டும்” என்றார். அவரது கண்களில் தெரிந்த ‘கவனியுங்கள்’ என்ற கட்டளைக் கவனித்த போலீஸ் குழு அலர்ட்டாக அந்தக் குழந்தை சொல்வதைக் கவனிக்கத்தொடங்கியது
“ஸ்கூல டிரைவர் சோமு அங்களை கார்கிட்ட காணும் தாத்தா சரி வருவார்ன்னு நினைச்சு . நான் உள்ளே ஏறி வாட்டர் குடிச்சுட்டு படுத்துண்டேன் தாத்தா. அப்பறம் இந்த ஆண்ட்டி இல்ல,- அம்மா பிரண்டு. ரொம்ப நல்ல ஆண்ட்டி. 2 கிட்கேட் சாக்லேட், காம்ப்ளான் எல்லாம் கொடுத்தாங்க.. அங்கிள் தான் உன் மாதிரியே டாம் அன்ட் ஜெரி போடாம நியூஸே பார்க்கிறார் “, என்றது

உள்ளே நுழையும் போதே கவனித்த ஒரு விஷயம் மின்னலடிக்க இந்துமதி குழந்தையை வாசலுக்கு அழைத்து இதில் எந்தக் காரில் நீ படுத்துண்டே சொல்லு? என்று கேட்டார்
ஒரே மாடல், ஒரே மாதிரியான பளீர் வெள்ளைகலரில் இருந்த இரண்டு ஆடி கார்களையும் பார்த்து முழித்த பிரியா பிங்கி பாங்கிபோட்டு ஒரு காரைக் காண்பித்து ஒடிச்சென்று பூட்டாமல் இருந்த அதன் பின்கதவைத் திறந்து. காண்பித்தது.
ஒரே மாதிரியாகியிருந்ததால் தெரியாமல் அவர்கள் கார் மாதிரியே இருந்த மற்றொரு காரில் ஏறி தூங்கிவிட்ட குழந்தைத்தான் இவ்வளவு நேரம்  தேடிக் கொண்டிருக்கிறோம் என்று வினாடியில் புரிந்துவிட்டது அந்த ஐபிஎஸ் முளைக்கு.
மத்தியானம் அடையாரிலிருக்கும் அந்தப் பள்ளிக்கு எதிரிலிருக்கும் கிளையண்ட்டைப் பார்க்கப்போனதும், காரை பள்ளிகேட்டின் அருகில் நிறுத்தியதும் லதாவுக்கு நினைவுக்கு வந்தது. வழக்கம்போல காரி லிருந்து சாவியை எடுத்தபின் பட்டனை அழுத்தி காரைப் பூட்ட மறந்திருக்கிறேன்.. திரும்பும் போது பின்சீட்டில் ஒரு குழந்தை இருந்ததைக் கவனிக்காமல் வீட்டுக்கு  ஒட்டிவந்திருக்கிறோம் என உரைத்தது ஆடிட்டர் லதாவிற்கு.

உள்ளே ரகு, லதாவின் அழகான பூஜைரூமில் 6 அடியில் தஞ்சாவூர்படமாக நிற்கும் பட்டாபிஷக ராமர் முன்னால் என் குழந்தையை இந்த நல்ல மனுஷாள் வழியாகக் காப்பாத்திட்டே பெருமாளே“ என்று சாஷ்டாங்கமாக விழுந்துகொண்டிருந்தார் கோபாலன்.
இரவு 10 மணிக்கும் புளு ஜீன்ஸ்,  வொயிட் டாப்ஸில் பிரஷ்ஷாக இருந்த இந்துமதி இந்தக் கேஸ் முடிந்தது என்று சொல்லும் உடல்மொழியுடன் நடந்து கொண்டே “ஶ்ரீதர் அந்த மர்டர் அக்யூஸ்ட் ஏதாவது பேசறானா?” என்று கேட்டபடியே  அவர் காருக்கு வேகமாக நடந்துகொண்டிருந்தார்.  அவர் பின்னே ஒடிவந்து “ தாங்கஸ் மேடம் நாளை ஆபிஸில் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லுகிறார் சுமிதா..
“யூ ஆர் வெல்கம்” என்ற அரைப்புன்னகையுடன் காரில் ஏறுகிறார் இந்துமதி
“நீங்க பெருமாள் ஆசியோடு நன்னா ஷேமமா இருக்கணும்” என்று சொல்லிக்கொண்டே தன் காரின் முன் சீட்டிலிருந்து இன்றைக்கு சயாங்காலம்தான் பைன்டிங் முடிந்து வந்தது. உங்களுக்குத்தான் முதல்காப்பி” என்று ஒரு புத்தகத்தை ரகுவிடம் கொடுக்கிறார் கோபாலன்.. 
அதன் நீலக்கலர் அட்டையில்   ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்பதைப்பார்த்து கண்ணில் ஒத்திக்கொள்கிறார் லதா..
“இந்த டிரைவருக்கு  எத்தனைத் தரம் சொல்லியிருக்கிறேன். கார் பக்கத்திலேயே எப்பவும் இருக்கணும்ன்னு. சே அவனாலே எவ்வளவு பிராபளம் டென்ஷன்” எனச் சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்கிறார் கோபாலன்

எல்லா கார்களும் போனபின் சட்டென்று வெறுமையானது வீடு. நாளை பேஸ்புக்கில் இதை ஒரு வியாசமாக எழுதலாமா? என நினைத்துக்கொண்டே வீட்டின் உள்ளே நுழைகிறார் ரகுநாதன்.

ஆதித்யா (ரமணன்)

 ரமணன்
1A NATURA HARAMONY
12 SRINIVASAPURAM MAIN RD
THIRUVANMIYUR CHENNAI 60041
     944902215 


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்