28/11/18

நதியென்னும் கடலிலே ....


கடலென விரிந்திருக்கிறது பிரம்மபுத்திரா.. கண்ணுக்கெட்டியவரை  நீர்பரப்பு.  ஒரு  நதியில் பயணிக்கிறோம் என்ற உணர்வே இல்லை.நாம் போக வேண்டிய  தீவுக்கு ஒரு மணிநேரப்பயணம். என்றும் திரும்பும் போது  நதியை எதிர்த்துப் பயணிப்பதால்   இரண்டு மணிநேரமாகுமாம். என்பதைக்கேட்டபின்னர் தான் நதியின் வேகம் நமக்குத் தெரிகிறது. 


அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. நதியின் நடுவிலிருக்கும் அந்தத் தீவின்  பெயர் மஜோலி.

கெளஹாத்தியிலிருந்து 300 கீமி தொலைவிலிருக்கும் இந்தத்தீவு அஸ்ஸாமின் கலாச்சாரம் பிறந்த தொட்டில் என வர்ணிக்கப்படுகிறது.. 144  சிறிய கிராமங்களைக் கொண்டது  இந்தத் தீவு

நதிக்கரைகள் நாகரிகம் பிறந்த தொட்டில்கள்  எனச்சொல்லப்படுகிறது. அப்படிப் பட்ட தொட்டில்களில் பல காலப்போக்கில்  தொழில் நகரங்களாகி நதிகளையே மாசுபடுத்தி அழித்துக்கொண்டிருக்கின்றன.    விதிவிலக்காக  ஒரு சில இடங்களில் அப்படிப் பிறந்த கலாச்சார நாகரிகங்கள் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. அதில் ஒன்று இந்த மஜோலித் தீவு. அதைக்காணத்தான் இந்தப்பயணம்.  

 குளிர் காற்று முகத்தில்  தாக்கும் அந்தப் படகு பயணத்தில் கடக்கும் நதியின் பிரம்மாண்டம்  அதைப்பற்றி எண்ண வைக்கிறது.  ஆசியாவின் பெரிய நதிகளில் ஒன்றான இந்த பிரம்மபுத்திரா இமயத்தில் 8000 அடிஉயரத்திலிருக்கும் கன்ஜன்சிங்கா  சிகரத்தில் மனோசாவர் ஏரிக்குச்  சற்று மேலே உருகும் பனிப்பாறைகளிலிருந்து பிறந்து திபேத்,   பங்களாதேஷ்  இந்தியா  என்று மூன்று நாடுகளின் வழியே பாய்ந்து பெருகி இறுதியில் வங்காளத்தில் கடலில் சேருகிறது.  இமயத்தில் துவங்கும் இதன் பயணம் பல நதிகளைப் போல ஒரே திசையில் வளைந்து நெளிந்து ஓடாமல்  அருணாசலபிரதேசத்தில் ஒரு யூ  வளவு எடுத்து எதிர்த் திசையில் பாய்வது இயற்கை விடுக்கும் புரியாத புதிர்களில் ஒன்று. இந்த ஒரு நதிக்கு ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பெயர். திபேத்தில் ஸாங் போ( TASNG PO))   என்றும் பங்களா தேஷில் ஜமுனா (யமுனா இல்லை) அருணாச்சலபிரதேசத்தில் திஹாங் என்றும் அழைக்கப்படுகிறது. பெயர் எதுவாக யிருந்தால்  என்ன?  புனிதமான கைலாசத்திலிருந்து வரும் ஒரு மகா நதியில் பயணத்துக்கொண்டிருகிறோம் என்ற எண்ணம் சிலிர்க்கவைக்கிறது. உண்மையிலேயே இது மகா நதி. மொத்தம் 2900 கீமி ஓடுகிறது. இதில் திபேத் பகுதி உயர்ந்த மலைகளிலிருந்து கணவாய்களில் விழும் பிரம்மாண்டமான அருவியாகவும், காடுகளை உடைத்தெறிந்து கோபமாய்  ஒடி அருணாச்சல பிரதேச  சமவெளியில்  சாந்தமாகி  அங்குள்ள திபாங், லோகித் நதிகளை இணைத்துக்கொண்டு  பிரம்புத்திராவாக அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைகிறது. பல இடங்களில் இந்த நதி அகலமாக மட்டுமில்லை மிக ஆழமாகவும் இருக்கிறது.  சராசரி ஆழம் 124 அடி என்ற தகவலை மெல்ல நம் படகைக்  கடந்து போகும்  அஸ்ஸாம் சுற்றுலாத்துறையின் எம்.வி மஹாபானு.  என்ற பெரிய சொகுசுக் கப்பல். உறுதி செய்கிறது  டாலரில் கட்டணம் வசூலிக்கும் இந்தக் கப்பல் மஜோலியைப் பார்க்கவரும் வெளிநாட்டினருக்காக. கெளகுவாத்தியிலிருந்து வருகிறது.

தீவை அடைந்தவுடன்  நமக்குச் சற்று அதிர்சியாகயிருக்கிறது. ஒருகாலத்தில் கலைகளையும், கலைஞர்களையும் போற்ற மட்டுமே உருவாக்கப் பட்ட இந்தத் தீவு இன்று அதன் அடையாளங்களை இழந்து ஒரு சராசரி இந்திய நகரமாகிவிட்டதைப்பார்த்ததும் .  நாம் போகப்போவது பாரம்பரிய மிக்க இடத்துக்குத்தானா? என்ற சந்தேகம் கூடத் தலைதூக்கியது.  நாம் போக வேண்டிய கிராமம் சற்று தொலைவிலிருக்கிறது என்று அழைத்துப்போனார்கள்   மணல் மேடுகளான பாதையில் கிராமத்தை நோக்கிச்செல்லும் நம்மை நிறுத்துகிறது ஒரு அசத்தலான சின்ன ஏரி. பிக்சர் போஸ்ட் கார்ட் போல அழகான தோற்றம் ஒருமணி நேரப்யணத்துக்கு பின் சட்டென்று ஒரு அசலான கிராமத்துக்குள் நுழைகிறோம்

15ஆம் நூற்றாண்டில் அன்றைய மன்னர்களின் ஆசியுடன்  ஶ்ரீமத் சங்கரதேவும் அவரது சீடர் மஹாதேவ்வும் புதிய வைஷ்ணவ சம்பிரதாயங்களை பரப்ப இங்கு ஸத்ரா என்ற அமைப்புகளை நிறுவினர். கலைகளை முறையாகக் கற்று அதில் ஒரு முகமாக மனத்தைச் செலுத்துவது உயர்ந்த பக்தி என்பதைக் கற்பிக்க  இந்த ஸத்ராக்கள் இயங்கின. இதில்   இசை, நடனம் , நாடகம், உபன்யாசம்,ஓவியம், கைவினைக்கலைகள்  கற்பிக்க தனித்தனி ஸத்தராக்கள் நிறுவப்பட்டு .   அவற்றில் குரு பரம்ரையில் கலைகள் கற்பிக்கப்பட்டன அவற்றில்  சில இன்றும் இயங்குகின்றன.

இந்தக் கிராமத்தில் தான் அஸ்ஸாமின் மரபுக் கலைகளில் ஒன்றான முகமூடிகள் தயாரிக்கும் கலை 5000 ஆண்டுகளாகக்  கற்பிக்கப்பட்டு, போற்றப்படும் சாமகுரி ஸத்ரா (Samaguri Satra)  இருக்கிறது. இதன் பரம்பரையில் வந்த  இன்றைய ஸத்திரதிகார் (தலைவர்). குஷ்கந்தா தேவ் கோஸ்வாமியை சந்திக்கிறோம்

“முகமூடி என்பது சரியான சொல் இல்லை. ஆங்கில மாஸ்க் என்ற பதம் முகம் அடையாளம் தெரியாமல் மூடிக்கொள்வதைக் குறிப்பது,.  நாங்கள் செய்வது முகங்கள்.. இதில் முக்கியமான விஷயம்  அந்தக் கலைஞர்களே அதைத்தயாரிக்கிறார்கள். ஆங்கிலத்தில் தெளிவாக பேசும்  இவர் இந்தக்கலைஞர்களின் பரம்பரையில் வந்தவர். நாடகலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சங்கீத நாடக அகதமியின் விருது பெற்ற கலைஞர்.. . முதலில் மூங்கில் இழைகளால் உருவாக்கப்பட்ட முக அவுட்லைன். அந்த இழைகள் ஈரமாகியிருக்கும்போது செய்யப்படுவதால் அது நல்ல வெயிலில் உலர்ந்த பின் அதன்மீது மிக மெல்லியதாக நெய்யப்பட்ட கைத்தறி துணி போர்த்தப்பட்டு அதன்மீது  ஒரு கலவை பூசப்படுகிறது. இந்தக்கலவை பிரம்மபுத்திராவின் வண்டலிருந்து சலித்தெடுத்த மென்மையான மண், பசுவின் சாணி, வாழைமட்டைச்சாறு, மரப்பட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட பசை இவை கலந்து உருவாக்கப்பட்ட  ஒரு கலவை. இதை அந்தத் துணியின் மீது பூசி விரல்களால் அழுத்தி அந்த கதா பாத்திரத்தின் முகத்தை உருவாக்க வேண்டும். இதை  நிழலில் 3அல்லது 4 நாள் உலர வைக்கவேண்டும். பின்னர்  அவற்றில் கண் உதடு போன்ற இடங்களை மெல்லிய கத்தியால் செதுக்கி சீராக்க வேண்டும். பின்னர் அதற்குப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் வண்ணங்கள் பூச வேண்டும். இந்த வண்ணங்களும் இயற்கைப்பொருட்களான, பச்சை இலை, மஞ்சள், எலுமிச்சை சாறு, வாழைப்பூ கடுக்காய் போன்றவற்றால்  தயாரிக்கப்படுகிறது. இத்தனையும் கலைஞர்களாலும், அவரது குடும்பத்தாராலும் மட்டுமே செய்யப்படுகிறது

அணிந்து கொள்ளும் முகம் அதிக எடையில்லாமல் ஆடையைப்போல எளிதாக அணியக்கூடியதாக இருக்கவேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தும் நிலையிலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை மெனக்கிடல். ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாடக கலைஞர்கள் இங்கு வந்து தங்கி இதைக்கற்கிறார்கள். அவர்களின் காதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்

 இந்தக்கலையைப்போல் அருகிலிருக்கும் கிராமங்களில் இசை, நடனம் மட்பாண்டங்கள், ஓவியம்  கற்பிக்கும் ஸத்ராக்கள்  இருக்கின்றன. இந்த ஸத்ராக்களின் முகப்பு ஒரு கோவில் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  அதன்   பெரிய கூடத்தில் நடன,இசைப்பயிற்சிகள் வகுப்புகள் நடக்கின்றன எல்லாம் குருகுல முறையில்தான். . மாணவர்களில் அதிகமானவர்கள் 7,அல்லது 8  வயது மதிக்கக்கூடிய வருங்கால நடன கலைஞர்கள்.  சின்ன பஞ்சகச்சம் மாதிரியான உடை,அழுத்தமான ஆரஞ்ச் கலர் ஜிப்பாவில் பயிற்சி பெற்றுகொண்டிருக்கிறார்கள். 

ஆனால்  வைஷண கலாச்சாரம் பிறந்த இடம் என்று சொல்லுப்படும் இந்த தீவில்  ஒரு கோவில் கூட இல்லாதது ஆச்சரியமாகியிருக்கிறது.

மஜோலியைப்போல மணல் திட்டாக பிரம்மபுதிரா நதியின் நடுவே எழுந்த மேலும் சில தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் ஒரு தனி மனிதர் உருவாக்கிய காடு கூட இருக்கிறது. மேலும் சிலவற்றில் பழங்குடிகள் வாழ்வதால் அனுமதியில்லை. அவற்றை தொலைவிலிருந்து பார்த்துவிட்டுக் கரை திரும்புகிறோம்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா  பாயுமிடங்களில் கரைகளின் இரு புறமும் எல்லாக்  கிராமங்களிலும் கோவில்கள். பல கோவில்களில் நதி கோவிலினுள்ள குளத்தில் நீரை நிரப்பும் முறை.   சிலகோவில்களின் வயது  2000 ஆண்டு என்ற செய்தி நம்மை நதியின் வயதை யோசிக்க வைக்கிறது.

இவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கும் இந்த நதி ஏன் வெள்ளம் வரும்போது  நதிக்கரைக்கிராமங்களையும் தீவுகளையும் கடுமையாக தாக்குகிறது.?

 மற்ற நதிகளைப்போலப்  பெண்ணாக இல்லாமல் ஒரு ஆண் பெயரில்  நதியாக இருப்பதால் அவ்வப்போது தன் ஆண்மையின் லட்சணங்களில் ஒன்றான ருத்திரத்தை காட்டிவிடுகிறதோ என்ற எண்ணத்துடன்  மாநிலப்  பயணத்தைத் தொடர்கிறோம்.  

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்