25/12/18

நீலக்கடலுக்கடியிலும்... வெண்மேகங்களுக்கு மேலும் .


நீலக்கடலுக்கடியில்...
 
சோலார் பேனல் தொப்பிகள் அணிந்திருக்கும் உயர்ந்த தெருவிளக்குகள் அணிவகுத்து நிற்கும்  விசாகபட்டின கடற்கரைச் சாலையில்  செல்லும் நம்மை நிறுத்துவது கடற்கரையிலிருக்கும் அந்தப் பிரம்மாண்டமான கறுப்பு சப் மெரின். ஆம். ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கரையில் நிற்கிறது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குர்சுரா என்ற நீர்முழ்கிகப்பலை தரையில் நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.



  சதாரணமாக ஒரு நீர் மூழ்கிக் கப்பலை  உள்ளே சென்று பார்க்க முடியாது என்பதால்,1969லிருந்து 2001 வரை  இந்திய கடற்படையில் ஒரு லட்சம் கிமீக்கும் அதிகம் பயணித்து  ஓய்வு பெற்ற இந்த ரஷ்ய நீர்முழ்கிகப்பலை  ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.
படிகள் ஏறி 300 அடி நீளமுள்ள அந்த நீர் மூழ்கிகப்பலுக்குள் நுழையும் நம்மை வரவேற்று  அந்தக் கப்பலின் கதையை விவரிக்கிறார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். 1971 பாக்கிஸ்தான் போரில்  அரபிக்கடலில் ரோந்து பணியிலிருந்தபோது அங்கு நுழைய முயன்ற பாக்கிஸ்தான் கப்பல்களை அடையாளம் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது.
இரண்டு பேர் மட்டுமே நடக்கக்கூடிய  சிறிய பாதை. இரண்டு பக்கமும் பலவகை குட்டி இயந்திரங்கள், கருவிகள். குழாய்கள், வயர்கள் எல்லாம். சற்று வேகமாகத் திரும்பினால் எதாவது ஒரு கருவியில் முட்டிக்கொண்டுவிடுவோம்.  இந்தக்கப்பலில் 67 கடற்படை வீரர்களும் 8 அதிகாரிகளும் மாதக்கணக்கில் வசித்திருக்கிறார்கள். எந்தக் கருவிகளை இயக்கினால் கப்பல்  எந்த வேகத்தில் எவ்வளவு ஆழம் கடலில்  மூழ்கும், எந்த வேகத்தில் வெளியே வரும் என்பதை விளக்குகிறார்கள். பிரமிப்பாகியிருக்கிறது.  நீண்ட நாட்கள் கடலில் மூழ்கியே யிருக்கும் இந்தக் கப்பலில் குறுகலான இடத்தில் அடுக்குப் படுக்கைகள்.  உணவு வேளையில் அதில் ஒன்று  டைனிங்டேபிளாக மாற்றப்படும். இரண்டே டாய்லெட், இரண்டு வாஷ் பேசின்கள் மட்டுமே.  டெலிபோன்பூத் சைஸில்  ஒரு  சின்ன கிச்சன். இவற்றில் நம் வீரர்கள் எப்படி இயங்கினார்கள் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரியவைக்க அந்தந்த இடங்களில்  வீரர்களின் பைபர்  உருவங்களை  அமைத்திருக்கிறார்கள்.  நமது பாதுகாப்புக்காக இந்தக் கடற்படை வீரர்கள் எத்தனைக் கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எளிதாக உணரவைக்கும் காட்சிகள்


ஒரே நேரத்தில் கடலுக்கடியிலிருந்து  ஆறு டார்பிடோக்களை  செலுத்தித்  தாக்கும்  வசதி கொண்ட இந்தக் கப்பலில் அது எப்படி இயங்கும் என்பதை விளக்குகிறார்கள். அந்த டார்பிடோக்களில் ஒன்றும் கப்பலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கிறது. 
ஆசியாவிலேயே இப்படி ஒரு  கப்பலையே அருங்காட்சியகமாக்கியிருப்பது  இங்குத்தானாம், எழுந்த எண்ணத்தைச் செயலாக்கியவர் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதை இப்படி கரையில் இழுத்து  நிறுத்தப் பல பெரிய இயந்திரங்களை  நிறுவி 18 மாதங்கள் உழைத்திருக்கிறார்கள்.  செலவு    14 கோடி ரூபாய்கள். 
மறு முனையிலிருந்து படிகளிலிறங்கி கீழே வரும்போது அந்தக்  கம்பீரமான கப்பலை ப்போலவே  நமது கடற்படையின் கம்பீரமும் நம் மனதில் அழியா காட்சிகளாகத் தங்குகிறது.     
  

வெண் மேகங்களுக்கு மேலே ...
 ஒரு நீர்மூழ்கி கப்பலைப்பார்த்த பிரமிப்புடன் வெளியே வரும் நம்மை ஆச்சரியப்படுத்துவது  சாலையின் ,மறுபக்கத்தில்  நிற்கும் ஒரு போர் விமானம்.  அது  TU142 என்று அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் விமானம். அதன் பணி கடலுக்கடியில் நகரும் சப்மெரின்களை  ஒலியின் மூலம் கண்காணித்து அறிந்து அதிரடி வேகத்தில் தாக்குவது. ரஷ்யத்தயாரிப்பான  இது இந்திய வான் படையில்  30000 மைல்கள் பறந்து 29 ஆண்டுகளுக்குப்பின் ஓய்வு பெற்றிருக்கிறது.
இதை இங்கு நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கவேண்டும் என்ற யோசனையும் அன்றைய முதல்வர்  திரு சந்திரபாபுவுடையது தான். கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். திறந்துவைத்திருக்கிறார்.
  ஒரு விமானத்தின் உள் பகுதியைப் போலவே ஒரு காட்சிகூடத்தை அமைத்திருக்கிறார்கள். ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும் அந்தக்கூடத்தில் விளக்கப் படங்கள், காணொளி காட்சிகள் போர் விமானத்திலிருந்து வீசும் குண்டுகள் பாரசூட், உடைகள்  எல்லாம்  காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். விமானியின் காக்பிட் சீட்டில்  அறையில் நாமே உட்கார்ந்து பார்க்கலாம்.
.  பாரசூட்டுகளை  திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அது இங்கு தொட்டுப் பார்க்கும் அளவில் பெரிய கூடாரம்  விரித்துவைக்கப்பட்டிருக்கிறது..விமானம் நீரில் மூழ்கிவிட்டால் அல்லது எங்காவது மோதி தரையிறங்கிவிட்டால் காப்பற்றிக்கொள்ள கருவிகள் அடங்கிய அலமாரி,மருந்துபெட்டகம் இப்படி பல.

விமான விபத்து ஏற்படும் போதெல்லாம் செய்திகளில் அடிபடும் “பிளாக் பாக்ஸ்”  இருக்கிறது. பெயர்தான் கருப்பு பெட்டியே தவிர அது ஒளிரும் ஆரஞ்சு வண்ணத்திலிருக்கிறது. எளிதில் எங்கிருந்தும் அடையாளம் காணமுடியும் என்பதற்கான வண்ணமாம் அது 
பார்ப்பவற்றை எளிதில் புரிந்துகொள்ள நுழைந்தவுடன் ஒரு ஸ்மார்ட் போன் தருகிறார்கள்  அதன் ஹெட்போன்களை  காதில் பொருத்திக்கொண்டு பார்க்கும் படங்களிலிருக்கும் எண்ணைப் போனில் அழுத்தினால்  தெளிவான ஆங்கிலத்தில் அழகான குரலில் விபரம் கேட்கிறது..  சுந்தரத் தெலுங்கும் பேசுகிறது
ஆல்பட்ராஸ்(ALBATROSS) என்பது ஒரு கடல் வாழ்பறவை. மிக அதிக உயரத்தில் மிக வேகமாகப் பறக்கக்கூடிய பறவை. ஒரு நாளைக்கு 1000 கிமீக்கள் கூட பறக்கும் சக்திகொண்டது. அந்த பறவையின் வடிவில்  இந்த விமானம் அமைக்கபட்டிருப்பது என்பதை விளக்க  அதன் வடிவத்தின் நிழல் இந்த விமானம்போல் விழுவதைக்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.
அந்த விமானம் தன் பணிக்காலத்தில் செய்த சாதனைகளையும் அதைச்செய்த வீரர்களின் படங்களையும் விமான வால் பகுதியைப்போலவே வடிவமைத்து  வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட் செய்துவிட்டு  வெளியே வந்தால் நாம் இத்தனை நேரம் பார்த்து விவரங்கள்  அறிந்த விமானமே நிற்கிறது. அதன் உள்ளே சென்று பார்க்கிறோம். இத்தனை சின்ன  இடத்திலா இவ்வளவு விஷயங்களையும் அடக்கியிருக்கிறார்கள் என்று எழும் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

விமானத்தைச்  சுற்றி  நடந்து வரும்போது  திறந்திருக்கும் அதன் அடிவயிற்றுப் பகுதியிலிருந்து தான்  எதிரியின் இலக்கைத் தாக்கும் குண்டுகள் பாயும் என்பது புரிகிறது.  வயதானாலும் விமானத்தைப் புத்தம் புதிது போல சீராக்கி பாரமரிக்கிறார்கள். விமானத்தைப்  பல பகுதிகளாகப் பிரித்து இங்குக் கொண்டுவந்து  இணைத்து உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சி அமைக்கச் செலவு 14 கோடி என்கிறது தகவல் பலகை. 
நம் வான்படையின் வலிமையை  நாமும் நமது மாணவர்களும் தெளிவாகப் புரிந்துகொண்டு  பெருமிதம் அடைய இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது இது ஒரு  நல்ல முதலீடுதானே  என்று தோன்றிற்று.
ஒரே நாளில் நமது கடற்படை, வான் படையின் வலிமையை,  பெருமைகளை அறிய  ஒரு  வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் திரும்புகிறோம்.

2/12/18

தவறாமல் வாருங்கள். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன் ரமணனிடமிருந்து

தவறாமல் வாருங்கள். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
இந்த வார இறுதி நாட்களைப் பாரதிக்காக ஒதுக்குங்கள் 8, 9 கலைவாணர் அரங்கம். 10. 11 பாரதி இல்லம்.
கலை வாணர் அரங்கத்தின் உள்ளே (இரண்டு அரங்கங்கள்) கலை நிகழ்ச்சிகள். பள்ளி,கல்லூரி அணிகள், திரைக்கலைஞர்கள், இசை, நடனக் கலைஞர்களின் தொடர் நிகழ்ச்சிகள். குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி எல்லாம்.
ஒரு பள்ளியின் அணியில் 100க்கும மேற்பட்ட “பாரதிகள்” பங்கேற்க வருகிறார்கள்
வெளி அரங்கத்தில் வீர சுதந்திரம் கலைக்காட்சி.
இது வெறும் கண்காட்சியில்லை. ஒலி, ஒளி (5.1) 2D 3D அனிமேஷன் காட்சிகள் ஒலி ஒளி காட்சிகள் ஒலியுடன்கூடிய படக்காட்சிகள். திரைப்பட காட்சிகள் எனப் பலவிதமான காட்சிகள் தனி அரங்குகளில் அமைக்கப் பட்டிருக்கிறது.
அனைத்தும் நம் சுதந்தர போராட்ட வரலாற்றுக் காட்சிகள். இந்த திருவிழாவிற்குத் தான் கலைஞர்கள். எழுத்தாளார்கள், அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் போன்ற பலர் தினமும் உங்களை அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கண்காட்சிக்காகவும், கலை நிகழ்ச்சிகளுக்காகவும் பல குழுக்கள் கடந்த 2 மாதமாக உழைத்துக்கொண்டிருக்கின்றன.
கலை நிகழ்ச்சிகளில் முன்னணி நடனமணிகள், இசைவல்லுனர்களின் பங்களிப்பும் இருக்கிறது.
முன்னிரவு காட்சியாக பாரதியாகவே வாழும் இசைக்கவி ரமணனின் “பாரதி யார்?” நாடகம், சாலமன் பாப்பையா நடுவராகவிருக்கும் பட்டி மன்றம் இருக்கிறது'
ஒரு வரியில் சொன்னால் கலக்கப் போகிறார்கள்
நீங்கள் வரும் போது மறக்காமல் குழந்தைகளை அழைத்து வாருங்கள். இளைஞர்களுக்கு நிகழ்ச்சிக்கு வர வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள். இந்த கலைகாட்சிகள் நிச்சியம் அவர்களைக் கவரும். நான்கு நாட்கள் நிகழ்ச்சிகளின் நேர விபரங்கள் அடங்கிய அழைப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது.
உங்கள் மின் அஞ்சலைப் பெயருடன் என் உள் பெட்டிக்கு அனுப்பினால் அன்பான அழைப்பு உங்களைத்தேடி வரும்
தேரின் அலங்காரம் இன்று காலம் தொடங்கிவிட்டது. இன்று(2/12?18) காலை விழாக்குழுவின் முன்னணி உறுப்பினர்களின் பங்களிப்புடன் எளிய முகூர்த்தக்கால் பூஜையுடனும் விழா சிறப்பாக நடக்க பிர்ரத்தனைகளுடனும் தொடங்கியிருக்கிறது. 8 ஆம் தேதி காலையில் நீங்கள் வடம் பிடிக்க வாரீர் வாரீர் என அழைக்கிறோம்.
எங்கள் ஊர் பாஷையில் சொன்னால் “ மக்கா இது நம்ம குலசாமி திருவிழாலே ! . நம்ம கூட்டத்தோட போகணும்டே. சரியா விளங்கிட்டாயலே “
அரைமணி நேர நோட்டிஸில் அன்புடன் வந்து படங்களும் வீடியோவும் எடுத்த நண்பர் Nana Shaam Marina க்கு நன்றி
https://www.facebook.com/nana.shaam.9/videos/10212547431708188/?t=0




you are welcome to visit சுவடுகள்

MailtrackSender notified by
Mailtrack 12/02/18, 4:40:41 PM