28/4/19


எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும், வரலாற்று ஆய்வாளருமான எஸ்.முத்தையா அண்மையில் அவரது 89ஆம் வயதில் காலமானார்  


சென்னையின்  காதலர்
ஹிந்து நாளிதழலில்  ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவரும் ஒரு தொடர் பகுதி  “மெட்ராஸ் மிஸ்லேனி”. சென்னை நகரின் மிகப் பழைமையான  கட்டிடங்கள்,  நிகழ்வுகள், மனிதர்கள் புத்தகங்கள் போன்ற பாரம்பரியச் சின்னங்களைப்பற்றிய  சுவராஸ்யமான கட்டுரைகளை நகைச்சுவையோடும் அரிய புகைப்படங்களுடனும் எழுதிவந்தவர் திரு. எஸ் முத்தையா. 1999 ஆம் ஆண்டு துவக்கிய இந்தச்  செய்திகட்டுரைகளின் தொடர்  அண்மைக்காலம் வரை  தொடர்ந்தது   ஒருவாரம் கூட இடைவெளியில்லாமல் 20 ஆண்டுகளுக்குமேலாகத்  தொடர்ந்து ஒரேவிஷயத்தை பற்றித் தனிப்பகுதி எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் உலகிலேயே இவராகத்தான் இருக்க முடியும்.


இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு  “பீப்பிள்-பிளேஸஸ்-பாட்பூரி என்ற பெயரில்  புத்தகமாகவே வெளிவந்திருக்கிறது.  சில ஆண்டுகளுக்கு முன்.. மேற்கு வங்க முன்னாள் கவர்னர் திரு கோபாலகிருஷ்ண காந்தி  இந்தப்புத்தகத்தை வெளியிட்டபோது   “வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் சில பத்திரிகையாளர்கள் தினசரியில் இடத்தை நிரப்ப உதவுவார்கள். சில பத்திரிகையாளர்கள் தங்கள்  எழுதும் பகுதியினால் தினசரிக்குப் பெருமை சேர்ப்பார்கள். முத்தையா இரண்டாவது ரகம். சென்னையின் பெருமைமிக்க பழைய கட்டிடங்களின் மீது முத்தையா கொண்டிருக்கும் அலாதி காதலினால், அவர் தொடர்ந்து அதுபற்றி எழுதி வந்ததால்தான் பல கட்டிடங்கள் இடிக்கப்படாமல் காப்பற்றப்பட்டிருக்கின்றன. அதற்குச் சென்னை நகரம் அவருக்கு  நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது” “. என்றார்திரு முத்தையாவின் கட்டுரைகள் வெளியான உடனேயே  அது தொடர்பான பிறசெய்திகள், சமந்தபட்டவர்களின் வாரிசுகள் இப்போது இருக்குமிடம், எழுதியதிலிருக்கும் தவறு, புதிய தகவல்கள் பற்றி வாசகர்களிடமிருந்து  வெளிநாட்டு வாசகர்களிடமிருந்தும்  வாரந்தவறாமல் வரும்   தகவல்களையும் வெளியிடுவதற்காகவே “தபால்காரர் கதவைத் தட்டியபோது” என்று தன் பத்தியில் ஒரு  பகுதியைச் சேர்த்தார். இப்படி தான்   எழுதிய   விஷயத்தையே முழுமையாக்கியதனால் இவரின் இந்தப் பகுதி ஹிந்து நாளிதழில் வாசகர்களிடையே  பெறும் வரவேற்பை  பெற்றிருந்தது.  


“நீண்ட ஆராய்ச்சிகளுக்குப்பின்னர்,  ஆனால் அந்த ஆராயச்சிகளின் வாசனை சிறிதுமில்லாமல், சிக்கனமானவார்த்தைகளில், அழகான ஆங்கிலத்தில் சுவராஸ்யமான  கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் சரியான நேரத்திற்கு அனுப்பிவைப்பவர் முத்தையா”  என்கிறார் ஹிந்து பதிப்புகளின் குழும தலைவர்   திரு என்.  ராம்.


 அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருந்த  இந்த எழுத்தாளாரின் ஆய்வுகளினால் தான் சென்னை நகரம் பிறந்த தினம் கண்டுபிடிக்கப்பட்டு  இப்போது அந்த நாள் மெட்ராஸ்டே  என்று ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில்  பெரும்   விழாவாக   கொண்டாடப்படுகிறது.  ஒரு நாள் விழாவாகத் துவங்கிய இது இப்போது பல வடிவங்களில் நகரின் பலபகுதிகளில் மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 


செட்டிநாட்டின் பள்ளத்தூர் கிராமத்தில் பிறந்த முத்தையா மிகச் சிறுவயதிலியே இலங்கை சென்று அங்கு வளர்ந்தவர். அங்கு பத்திரிகையாளராக வாழ்க்கையை துவக்கி டைம்ஸ் ஆப் சிலோன் என்ற நாளிதழில் முதல் நிலை ஆசிரியராகத் தன் 38 வயதில் உயந்தவர். பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக ஒரு சிங்களரே இருக்க முடியும் என்பது விதி என்பதால்  இவரை ஆசிரியராக்குமுன்  இவருக்குக் கெளரவக் குடிமகன் உரிமைக்குச் சிபார்சு செய்யபட்டிருந்தது. ஆனால் அப்போது நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் அது கிடைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் இரண்டாம் நிலை ஆசிரியராக இருக்க விரும்பாத முத்தையா மனம் வெறுத்து போய்ச் சென்னை திரும்பிப்  பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில்  வேலைக்காக முயற்சித்துகொண்டிருந்தார். கிடைத்தது டி டி கே குழுமத்தின் மேப்புகள் அச்சிடும் புதிய நிறுவனத்தின் பொறுப்பு. அதன் ஒரு பதிப்பாகச்  சென்னையைப் பற்றிய புத்தகம் தயாரிக்கத் துவங்கியதில் ஏற்பட்ட ஆர்வத்தில்  இவருக்கு இந்த நகரத்தின் மீது பிறந்த காதல் வாழ்நாள் முழுவதும்  தொடர்ந்தது.  சென்னைக்கு அடுத்து இவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த விஷயம் செட்டிநாட்டு கலாசாரம். அங்குள்ள கட்டிடங்களின் வரலாறு குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு முத்தையாவின்    பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாப்பு பணிக்காக  இங்கிலாந்து  அரசு  அரசியின்  MBE  விருது அளித்துக் கெளரவித்திருக்கிறது.


“தொடர்ந்து  வேலைகள் செய்து கொண்டிருப்பதால்  வாழ்க்கை இனிமையாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டிருந்த இந்த எழுத்தாளர் இன்றைய  ஈமெயில், வாட்ஸப் யுகத்திலும் தன் கட்டுரைகளைத் தானே டைப்ரைட்டரில் , டைப் செய்துதான் அனுப்புவார். சரளமாக தமிழ் பேசிய     இவருக்குத் தமிழ் எழுதத்தெரியாது என்பது ஒர் ஆச்சரியம்.


மதுரையைப் போல்,தஞ்சையைப் போல் இல்லை என்றாலும் இந்தச் சென்னைக்கும் ஒரு வரலாறு உண்டு என்பதைத் தனது எழுத்துகள் மூலம் அடையாளம்  காட்டிய இவரும் இன்று   சென்னை வரலாற்றின்  ஒரு  அழியாத அடையாளமாகியிருக்கிறார். 
(கல்கி 5/5/19)
கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்