6/6/19

நாடுகளுக்கிடையேயான  நட்பூ


இறைவனின் படைப்பில் மிகவும் அழகானவை என்று போற்றப்படுபவை மலர்கள். சில மலர்களுக்கு மகத்தான மருத்துவ குணங்களுண்டு என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம்.    மனித மன  உணர்வுகளைப்  பண்படுத்தும்  மலர்களின் ஆற்றல்களைப் பற்றி,  கூறியிருக்கிறார் அரவிந்த அன்னை.  ஆனால் ஒரு மலர் போரில் ஈடுபட்ட இரு நாடுகளுக்கிடையே அமைதியையும் நட்புறவையும் மலரச்செய்திருக்கிறது என்கிறது வரலாறு.அந்த மலர்தான் செரிபிளாசம்
ஏப்ரல் மே மாதங்களில் அமெரிக்காவின் பல பகுதிகளில் பூத்துக்குலுங்கி வசந்தத்தை வரவேற்கும் மலர்  செரிபிளாசம்.  அடர்ந்த மரங்களில் இலையே தெரியாமல் மலர்கள் நிறைந்து அந்த சூழலையே தன் வண்ணத்தால் நிறைக்கும் இந்த  செரிபிளாசம்  அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட மலர் இல்லை.  100 ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மலர்.  இன்று  அமெரிக்க நாடு முழுவதும் பரவியிருக்கும் இந்த மலர் மலரப்போகும் நாளை முன்னதாகவே அறி வித்து  அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில்  கோலாகலமாக ஒர் மாத விழாவாகவே கொண்டாடுகிறார்கள்.  இசைக்குழுக்களின் கச்சேரி, நடனம், பார்ட்டிகள், பேஷன் ஷோக்கள் என அமர்களப்படும். உள்ளூர்காரர்களைத்தவிர இதற்காகவே வரும் அண்டை மாநில மக்கள்; ஹோட்டல்களில் டிஸ்கவன்ட் எல்லாம்
அமெரிக்க ஐக்கிய நாடு உருவாகி வளர்ந்து கொண்டிருந்த போது உலகின் மிகச்சிறந்த உணவுப்பயிர்களையும் தாவரங்களையும் அமெரிக்காவிற்கு    கொண்டுவரவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த அன்றைய அமெரிக்க அரசு அதற்காகவே  தனித்துறைகளை  உருவாக்கியிருந்தது. அதில் வேளாண்மைத்துறையில் ஒரு பிரிவின்  வேலை  உலகின் நல்ல  உணவுப்பயிர்களைத்தேடி  கண்டுபிடித்து கொண்டுவருவது. 
இயற்கையிலேயே தாவரங்களில் ஆர்வம் கொண்ட  டேவிட் ஃபேர்சைல்ட் (David Fairchild) என்ற இளைஞருக்கு அந்தப்பொறுப்பு தரப்பட்டிருந்தது. இவர்தான் இந்தியாவிலிருந்து மாம்பழம், சீனாவிலிருந்து பீச்,  சிலியிலிருந்து பட்டர் பழம் போன்ற அமெரிக்கா அறிந்திராத  பழவகைகளையும் காய்கறி வகைகளையும் அந்த  நாட்டுக்குக்  கொண்டுவந்தவர்.  அவர் ஒவ்வொரு பயணத்தின் போதும் அந்தந்த  நாடுகளிலிருந்து கொண்டுவரும் மலர்ச்செடிகளை தன் வீட்டுத்தோட்டத்தில்  நட்டுச்  சோதிப்பார். 1902ல்  ஜப்பான் பயணத்தில் இவர் பார்த்தது சக்கூரா  என்ற பூக்களால் நிறைந்த மரங்கள்.  அது பூக்கும் காலத்தை ஜப்பானியர்கள்  அதன் மரத்தடியில்  குடும்பங்களாக  பிக்னிக்  வந்து மகிழ்ச்சியாக கழிப்பதையும் பார்த்த டேவிட் அதை கொண்டுவந்து தன் வீட்டின் முன்  வளர்த்தார். அவரது இளம் மனைவிக்கு இதன் பூக்கள்  மிகவு பிடித்துவிட்டது. அதற்கு “செரிபிளாஸம்” எனப் பெயரிட்டார்.  அந்தப் பூக்கள் பார்ப்பவர்களைக்  கவர்ந்தது. அதற்காகவே அவர் வீட்டுக்கு நிறைய விஸிஸ்டர்கள். பார்ட்டிகள். அந்த மலர்ச்செடிகளை  பெரிய அளவில் அமெரிக்காவிற்கு  இறக்குமதி செய்ய விரும்பினார் டேவிட்.   
அப்போது முன்னாள் அதிபர்களின்  நினைவாலயங்களுடன்  உருவாகிக் கொண்டிருந்த வாஷிங்டன் டிசி   வளாகம் பெரும் பொட்டல் காடாக இருப்பதைக்கண்ட .  அன்றைய அமெரிக்க அதிபர்  ரூஸ்வெல்ட்  (Teddy Roosevelt)  அந்த நினைவு வளாகத்தை அழகான மலர் தோட்டமாக்க  யோசனைகளை  மக்களிடமிருந்து வரவேற்றிருந்தார்.  அவரைத்  தொடர்ந்து 1909ல்  பதவிக்கு வந்த  அதிபர்  ஹாவர்ட் டப்ஃட் ( William Howard Taft)டின்  மனைவி  ஹெலனுக்கு  டேவிடின் வீட்டு செரி மலர் பிடித்துப் போயிற்று. 
அதிபர் இந்த மலர் மரங்களை அந்த வளாகத்தில் நடுவதை ஆதரித்தற்கு  அமெரிக்காவின் முதல் பெண்மணிக்கு பிடித்தது மட்டும் காரணமில்லை.   ஜப்பானுடன் அமெரிக்கா போர் செய்த காலத்தில் அவர் போர் விவகார  செயலராக இருந்தவர் அந்த அதிபர். .  இந்த மரங்களை ஜப்பானிலிருந்து கொண்டுவருவதின் மூலம்  போரினால் எழுந்திருந்த   இரு நாட்டு மக்களிடமிருக்கும் பரஸ்பர வெறுப்பு குறையும் இரு நாடுகளுக்கிடையே  நல்லுறவு தொடங்க நல் வாய்ப்புக்கான ஆயுதமாக இந்த மரங்கள் நடுவதைக் கருதினார்.
ஏற்பாடுகளைச்செய்ய அதிபர்   டேவிட்டுக்கு ஆணையிட்டார். 300 மரங்களின் இறக்குமதிக்காக  ஜப்பானுக்கு ஆர்டர் அனுப்பப்பட்டது.
மகிழ்ந்தது டேவிட் மட்டுமில்லை. ஜப்பானியர்களும்தான். தங்களுடையதை  விடப்பெரிய  நாட்டில் நமது  சக்கூரா மரங்கள் காலத்திற்கும் நமது  கலாச்சார பெருமையைப் பேசப்போகிறது  என மகிழ்ந்தார்கள்.
டோக்கியோ நகர மேயருக்கு  மிகச்சிறந்த சக்கூரா  மரங்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு  அனுப்பும்  பணி  ஒதுக்கப்பட்டது.. ஜப்பானிய அரசு  இதைப்  பெரிய கெளரவமாக கருதியதின் விளைவு   300  மரங்களுக்கும்  பதிலாக 2000  மரங்களைக்  கப்பலேற்றினார்.  அந்த மேயர்.

1909 டிசம்பரில் ஸியாட்டில் துறைமுகம் வந்த அந்த மரங்கள் 13 நாள் ரயில் பயணத்துக்கு பின்  வாஷிங்டன்  வந்து  சேர்ந்தது.  ஒவ்வொரு கட்டத்தையும் மேற்பார்வை செய்து வந்த  டேவிட்டின்  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தான் கனவு கண்டதைப்போலவே  இந்த இடம் ஒருநாள் செரிமலர்கள் பூத்துக்குலுங்கி  மலர்க்காடாகும் என்ற  தன் கனவு நனவாகப் போவதை  எண்ணி  மகிழ்ந்தார்..
ஆனால் அது  நீடிக்க வில்லை. வில்லனாக வந்தது அமெரிக்க அரசின் பூச்சியில் துறை. வெளிநாட்டுத் தாவரங்களை அனுமதித்தால் அதன் மூலம் புதுவகையான பூச்சிகள். நுண்கிருமிகள்  அமெரிக்காவிற்குள் வந்து விடும் அவை தாவரங்களுக்கு மட்டுமில்லை மனித உயிர்களுக்கும் ஆபத்து  விளைவிக்கக்கூடியதாக  இருக்கலாம். அதனால் இந்த மரங்களை நடக்கூடாது. என்று பிரச்சனையைக் கிளப்பினார்கள்.

அமெரிக்க அரசின் தலைமைச்செயலர், செரி மலரினால்  அயல்நாட்டுடன் நல்லுறவு, அமெரிக்க இயற்கை வளத்துக்கு ஆபத்து இதில் எதைத் தவிர்ப்பது  எனத்தீர்மானிக்க முடியாமல் தவித்தார். அதிபரின் கட்டளைக்காக காத்திருந்தனர். அதிபர் இறக்குமதி செய்யபட்டிருக்கும் மரங்களைத் தீவிர பரிசோதனை செய்து அறிக்கை கேட்டார்.  வல்லுநர்களின் அறிக்கை மரங்களில் பூச்சிகளும் நுண்ணுயிர்  உருவாதற்கான  அணுக்களும் இருப்தாகச் சொல்லியது.. 
அதிபர் உடனடியாக அந்த  மரங்களை எரிக்க ஆணையிட்டார்.
  
இதற்கிடையில் முன்னதாக தீர்மானிக்கப்பட்டபடி  முதல் மரத்தை நடும் விழாவிற்காக  டோக்கியோ மேயர்  தன் குழுவுடன்  வாஷிங்டன்  வந்துசேர்ந்துவிட்டார். அவரை வரவேற்கும் பொறுப்பை ஏற்றிருந்த டேவிட்டுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. முதல் மரம் நடும் விழாவிற்கு  தன் மனைவியுடன் வந்திருப்பவரிடம் மரங்கள்  எரிக்கப்படப்  போவதைச்சொல்லி. தன் அரசின் சார்பாக மன்னிப்பைக் கேட்க வேண்டிய அவல நிலை.  
ஆனால் அவருக்கு காத்திருந்தது ஆச்சரியம். உருவத்தில் அமெரிக்கர்களை விட சிறியவர்களாக இருந்த ஜப்பானியரின் உண்மையான உயரம் அந்த  மேயரின்  வார்த்தைகளில் தெரிந்தது.
 “நாங்கள் தவறு செய்து விட்டோம்  மரங்களில் இப்படிப் பட்ட ஆபத்து இருப்பதை நாங்கள் உணர்ந்து அனுப்பும் முன் சரி செய்து பாதுகாத்திருக்க வேண்டும். நல்லவேளை உங்கள் அதிபர் எரிக்க  உத்திரவிட்டிருக்கிறார். நடப்பட்டிருந்தால் காலம் முழுவதும் அமெரிக்கா விற்கு  கிருமிகளையும் பூச்சிகளையும் அனுப்பிய பழிச்சொல்லுக்கு  ஜப்பான் ஆளாகியிருக்கும்”.

மறுநாள் மேயரின்  மனைவி அதிபரின் மனைவியைச் சந்தித்து ஜப்பானின்  தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.. விரைவில் வேறு மரங்கள் அனுப்புவதாகவும் அதை ஏற்க வேண்டும் என்றும் வேண்டினார்.
.
மேயர் ஊர் திரும்பியவுடன் ஜப்பானின் அனைத்து தாவர  வல்லுநர்களும்  டோக்கியோவிற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் மேற்பார்வையில் பூச்சிகள் இல்லாத, நன்கு மருந்திட்டுப் பராமரிக்கப்பட்ட   உடனடியாக பூக்கக்கூடிய 3020 மரங்கள் தயார் செய்யப்பட்டு கப்பலில்  அடுத்த ஆண்டே  ஜப்பானிய மக்களின் பரிசாக அமெரிக்க மக்களுக்கு அனுப்பப்பட்டது

1912ல் அமெரிக்க அதிபரின் மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான  திருமதி  ஹெலன் முதல் செரிமரத்தை நட, ஜப்பானியத் தூதுவரின் மனைவி இரண்டாவது மரத்தை நட்டார். தொடர்ந்து  பொட்டாமாக் நதிக்கரை முழுவதும் மரங்கள் நடப்பட்டன. அடுத்த ஆண்டே பூக்க ஆரம்பித்த அவைகள் இப்போது அந்த வளாகம் முழுவதும்  ஆண்டுதோறும்  தங்கள் மகிழ்ச்சியை மலர்களாக்கிக்  காட்டிக்கொண்டிருக்கிறது.