1/8/19



கருணை

    ஆதித்யா.

 

அந்தக் கம்பீரமான சிவப்புவண்ண சென்னை ஹைகோர்ட்  கட்டிடத்தைப் படங்களிலும், டிவி செய்திகளில் மட்டுமே பார்த்திருந்த சீதா இன்று அதனுள் நுழைவோம் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.  அகன்ற  படிகள் ஏறி  நீதிபதிகளின் பெரிய  படங்கள் மாட்டப்பட்டிருக்கும்  அந்த நீண்ட வராந்தாவைக் கடந்து ஆறாம் எண் அறையின் முன் உடன் வந்த தோழி சரோஜாவுடன் தயங்கி நிற்கும் அவளிடம்  விபரங்கள் கேட்டு அட்மிஷன் பாஸை  பார்த்தபின் பாதுகாவர் அனுமதிக்க, உள்ளே சென்று  உட்கார்கிறார்கள் சீதாவும்  அவள் தோழி சரோஜாவும்.
ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின்  பெயர் அழைக்கப்பட்டவுடன்  உள்ளே சென்ற சீதாவிற்கு  . அந்த ஏசியிலும் வேர்த்தது. உயரமான மேஜையில் நீதிபதியையும் சுற்றிலும் சில வக்கில்களும் இருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் கோர்ட்டைப் பார்த்ததும் சீதாவிற்குப் படபடப்பு அதிகமாகியிருந்தது, வாய் உலர்ந்திருந்தது. தன்னால் பேச முடியாமல் போய்விடுமோ  என்ற அச்சமும் எழுந்தது.
நீதிபதியைப் பார்த்தவுடன் தன்னிச்சையாகக் கையெடுத்து கும்பிட்டாள்.
உங்கள் மனுவை நீங்களே வாதிடப்போவதாக அனுமதி கேட்டிருக்கிறீர்களே ஏன்?. இதில் உங்களுக்கு எதாவது முன் அனுபவம் உண்டா? அல்லது யாரவது உதவினார்களா?
அனுபவம் எதுவும் இல்லை. சார் ஆனால் நம்பிக்கையிருக்கிறது என்று மெல்லிய குரலில்.  சொன்ன சீதா தொடர்ந்து  வக்கீல் வைத்துப் பேச எனக்கு பண வசதியும் இல்லை. என்றாள். என் தோழி சரோஜா ஒரு சமுக சேவகி அவர்தான் இந்தமாதிரி நாமே நேராகவே கேட்கலாம் என்று சொன்னார்”.
உங்கள் மனுவை இந்த கோர்ட் ஏன் ஏற்க வேண்டும்? என்பதையும் உங்களுக்கு  எதற்கு அனுமதி வேண்டும் என்பதையும் சுருக்கமாகச் சொல்லுங்கள். அது ஏற்கப்பட்டால் உங்கள் மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படும்.
 என் மகளைக் கருணைக்கொலை செய்ய என்னை நீங்கள்  அனுமதிக்க வேண்டும்என்ற அவளது  தெளிவான  வார்த்தைகளைத் கேட்ட  நீதிபதி திடுக்கிட்டு தலையை உயர்த்தினார். கண்களில் ஆச்சரியம். அந்த ஹாலில் இருந்த பலரது புருவங்கள் உயர்ந்தன. பலர் சீதா பேசப்போவதைக் கூர்ந்து கவனிக்கக் காத்திருந்தனர்.
பல கொலை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை உள்படப் பல வித தண்டனைகள் வழங்கிய அந்த நீதிபதியின் முன் ஒரு கொலையைச் செய்ய அனுமதி வேண்டி ஒரு வழக்கு.
விபரமாகச்சொல்லுங்கள்
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு வயது  ஒன்பதாகிறது பெயர் மகேஸ்வரி. பிறந்த நாளிலிருந்து பல விதமான உடல் உபாதைகளால் அவதிப்படுகிறாள். அவளது முளைக்கு போதிய அளவில் ஆக்கிஸிஜன் செல்லாதால் அவளால்  எல்லோரையும் போல் நடமாட முடியாது. படுக்கையிலிருக்கும் அவளுக்கு உணவு டியூபின் மூலம் செலுத்த வேண்டும் அடிக்கடி வலிப்பு வந்து பலமாகக் கத்துவாள். வேதனையில் அவள் அலறுவது என் வீட்டிலிருப்பவர்களுக்கு மட்டுமில்லை அருகிலிருப்பவர்களுக்கும் அவஸ்த்தையாகயிருக்கிறது. சிலர் போலீஸில் புகார் கூட  செய்துமிருக்கிறார்கள். இந்தக் கோரத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை..  இவள் நிலை என் அடுத்த 5 வயது குழந்தையைப் பாதித்துவிடும் என பயப்படுகிறேன்.  மாதம் மருந்துச்செலவுக்கு மட்டுமே 10,000 வரை ஆகிறது.  குணமாகும் வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்த நிலையில் பெண்குழதை வளர்க்க முடியாது. என் வாழ்நாளுக்குப் பின் அவளை யார் கவனிப்பார்கள்? இப்படிப் பட்ட குழந்தைகளுக்கான ஹோம் எதுவுமில்லை என்கிறார்கள்.  அதனால் அவளுக்குக் கொடுக்கும் உணவு, மருந்து, ஊசி,  சத்துணவு அனைத்தையும் நிறுத்தி அவளை மரணமடைச் செய்ய விரும்புகிறேன் அதற்கு  உங்கள் அனுமதி வேண்டும் என் பெட்டிஷனில்  எல்லா விபரங்களையும்  மருத்துவ ரிப்போர்ட்கள் போட்டோக்கள் எல்லாம்  இணைத்திருக்கிறேன்.
சீதா  அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு இதைச்சொல்லி முடித்தவுடன் அந்த ஹாலின் அமைதியின் கனம் கூடியது. கேட்ட அனைவருக்கும் ஐயோ என்ற உர்வு எழுந்தது நிஜம்
 உங்கள் கணவர் வந்திருக்கிறாரா?”
இல்லை சார்.  இந்தக்குழந்தையின் நிலை மோசமாகிக்கொண்டே போவதனால் சிலஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டார். நான் ஒரு வங்கியில் பணி புரிந்து  கொண்டிருந்தேன். இந்தக் குழந்தைக்காக விருப்ப  ஓய்வு பெற்று அந்த பென்ஷனில் குழந்தைகளை வளர்த்து வருகிறேன்
.இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதை நீதிபதியின் உடல் மொழி சொல்லிற்று.
உங்கள் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. ஆனால் சட்டச் சிக்கல் நிறைந்த இதை ஒரு வழக்கறிஞர் மூலம் அணுகுவதுதான்  உங்களுக்கு நல்லது. உங்களுக்கான வழக்கறிஞரை இந்தக் கோர்ட் நியமிக்கும். அவருக்கு நீங்க பீஸ் எதுவும் தர வேண்டாம். அவரே உங்களை விரைவில் தொடர்பு கொள்வார். என்று சொன்ன நீதிபதி அரசின் கருத்துகளை அறிய  அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப ஆணையிட்டார், வழக்கை இரண்டு வாரம் ஒத்தி வைத்தார்.
கோர்ட்டின் நடை முறைகளை அதிகம் அறியாத  சீதா நீதிபதியைப் பார்த்து உடனே நீங்கள் அனுமதிக்க முடியாதா? எனக்கேட்டார்.
சீதாவைப் பரிதாமாகப் பார்த்த அவர் அதெல்லாம் முடியாது. நிறைய நடைமுறைகள் இருக்கிறது. எல்லாம் உங்கள் வக்கீல் சொல்லுவார் என்று சொல்லி அடுத்த கேஸை அழைக்கச் சொன்னார்.
பரவாயில்லை. நான் எதிர் பார்த்ததைவிட நீ நல்லா தைரியமாகத்தான் பேசினே என்று சொன்ன தோழியிடம் , “சரி சரி சீக்கிரம் போவோம் 3 மணிக்கு  மகேஸ்வரிக்கு  மருந்து கொடுக்கணும்  என்ற சீதாவை ஆழ்ந்து பார்த்தாள் சரோஜா. பத்து நிமிடம் முன் அவளைக் கொலை செய்ய அனுமதிகேட்டவள் இப்போது சரியான நேரத்துக்கு மருந்து கொடுக்கத் துடிக்கிறாள்
&&&
வழக்கறிஞர் தினகரனை சீதாவிற்காக நியமிக்கிறது உயர்நீதிமன்றம். நகரின் சீனியர் வழக்கறிஞரான  அவருக்கு நீதிபதி பதவி வந்த போது நிராகரித்தவர். பெரிய ஜுனியர் பட்டாளம்  சட்டபிரிவுகளை,அதில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். அவர் சீதாவுடன் பேசி  பல விபரங்களைச் சேகரிக்கிறார். சில  டாக்டர்களிடமும் பேசுகிறார்.
வழக்கு விசாரணைக்கு வந்த நாளில்  அண்மையில்  சுப்ரீம் போர்ட் வழங்கிய ஒரு  தீர்ப்பில் இம்மாதிரி விஷயங்களில் அந்த நோயாளி விரும்பினால்  கருணைக்கொலையை (passive euthanasia)  அனுமதிக்கலாம். அல்லது  குழந்தையாகியிருந்தால் அவர்களது பெற்றோர்  மருந்து கொடுப்பதை நிறுத்துவதையும், அல்லது அதுபோல் உயிரை மட்டும் தொடர வழங்கப்பட்டிருக்கும் வசதிகளை நிறுத்தவதும் குற்றமில்லை என்று சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி, ஒரு தாயின் மனஉளைச்சலையும்  அந்த நோயாளி ஒரு பெண்குழந்தை என்பதையும். அந்தப்பெண்ணால் அந்தக் குடும்பம் சமுகத்தில் சந்திக்கும்  கஷ்டங்களையும் தனக்கே உரிய பாணியில், சட்டம், சமூகம், மருத்துவம்  போன்ற விஷயங்களை உணர்ச்சி வசப்படாமல் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால்  தன் வாதத்தை முன்வைத்தார்.  
இப்படிச்செய்ய அனுமதிக்க அந்த நோயாளி ஒரு வெஜிடபள் போன்ற நிலையிலிருக்க வேண்டும் என்கிறது சட்டம். அதாவது மூளைச்சாவு அடைந்திருக்க வேண்டும்.  இந்த  கேஸில் அந்தக் குழந்தைக்கு திரவ உணவு வெளியிலிருந்து  செலுத்தப்பட்டாலும் அதை அவர் உடல்  ஏற்கிறது .ஜீரணமாகிறது. சுவாசம் இயல்பாகியிருக்கிறது. சில வார்த்தைகளேனும் பேசமுடிகிறது. அதனால் அந்தக் குழந்தை முளைச்சாவு அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. அதனால் மனுதாரரின் வேண்டுகோளை அனுமதிக்கக்கூடாது. அப்படிச் செய்தால்   கோர்ட் ஒரு கொலையைச்செய்வதற்கு அனுமதிப்பதற்கான  முன்னூதாரணமாகிவிடும். என்றார் அரசின் வழக்கறிஞர். ஆதாரமாக பல  தீர்ப்புகளைப் பட்டியிலிடுகிறார்.
கோர்ட்டிலிருந்த சீதாவிற்கு தலை சுற்றியது. என்ன பேசுகிறார் இவர்?. எதோ கோர்ட்டில் கேட்டால் அனுமதி தருவார்கள் என்றார்கள் இப்படியெல்லாம் பேசுவார்களா? என்று எண்ணினாள்.
மதியம் தொடர்ந்த விசாரணையில்  நீதிபதி. இந்த கோர்ட் இந்த விஷயத்தில்  முடிவெடுக்க மேலும் சில விபரங்கள்  தேவைப்படுவதால்  நகரிலுள்ள  சிறந்த மூத்த  குழந்தை நல மருத்துவர்களை இரண்டுபேரையும் ஒரு  மூளைநரம்பியல் நிபுணரையும்   கொண்ட குழுவை நியமிக்கிறது. அந்த குழந்தையை அரசு மருத்தமனையில் சேர்த்து இந்தக் குழு சோதித்துப் பார்த்த பின்னர்  குழந்தையின் உண்மையான உடல் நிலை என்ன என்பதை அறிக்கையாக 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என  கோர்ட் உத்தரவிடுகிறது.  என்றார்.
ஐயோ மறுபடியும் ஆஸ்பத்திரியா?” என  தலையில் அடித்துக்கொண்டாள் சீதா. தானே வரவழைத்துக்கொண்ட  தலைவலி என்று நொந்துகொண்டாள்.  அடுத்த வாரம் கோர்ட்டின் கட்டளையின்படி  அரசு மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வந்து அழைத்துப் போனது.. புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஸ்பட்லான அது மிக வசதியாகியிருப்பது அவளுக்கு  ஆச்சரியம். ஆனால் கேள்விகள், கேள்விகள் பத்து நாட்கள் டாக்டர்களின் கேள்விகளினால் வெறுத்துப்போனாள் சீதா.
ஒரு வழியாக 12 நாட்கள் கழித்து ஒரு நாள் மாலை  டிஸ்சார்ஜ் செய்தபின் வீட்டிற்கு ஆம்புலனஸில் அனுப்பினார்கள். . ஆம்புலன்ஸ் புறப்படும் போது தூறலாகத்துவங்கிய மழை வீடு சேரும் போது  பெரும் மழையாகக் கொட்ட ஆரம்பித்தது.
இரவு முழுவதும் பெய்த மழை அடுத்த இரண்டு நாளும் தொடர்ந்தது.
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் வழக்கறிஞர் தினகரனிமிருந்து போன் “ “மேடம் மெடிகல் டீம் ரிபோர்ட்டை கோர்ட்டில் கொடுத்துவிட்டார்கள். நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது  என்று நினைக்கிறேன். தீர்ப்பு சொல்லும் நாளைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்திருக்கிறார்கள். நான் சீக்கிரம் தீர்ப்பு வேண்டும் என்று வேண்டியிருக்கிறேன் அனேகமாக இரண்டு வாரத்தில் வரலாம். நான் சொல்லுகிறேன். முடிந்தால் நீங்கள் அன்று கோர்ட்டுக்கு வரலாம்
எதிர்பாராமல் இந்த விஷயத்தில் வந்து சேர்ந்த அந்த நல்ல மனிதருக்கு மனப்பூர்வமாக தன் நன்றியைச் சொன்னாள் சீதா. . 
பத்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் மழை. விடாமல் மூன்று நாள் பெய்த பேய் மழை. மின்சாரம் போன், இன்ட்ர்னெட் துமில்லாமல் சென்னை நகரத்தயையே ஸ்தம்பித்த வைத்த மழை. ஏதோ ஓரு ஏரியைத்தவறாக திறந்துவிட்டதனால்  நகரமே வெள்ளக்காடாகியிருந்தது.
அன்று காலை மகேஸ்வரி வலிப்பு அதிகமாகி மிகவும் வேதனையுடன் கத்திக்கொண்டிருந்தாள் ஒரு கட்டத்தில் கட்டிலில் முட்டிக்கொண்டதால் தலையில் காயம்.  சீதா அதைப் பார்ப்பதற்குள் உடல் தூக்கிப்போட்டது. வெளியில் சுழற்றி அடித்த காற்றினால் ஜன்னல் கதவு பாடாலென்று மூடியதில் கட்டிலருகிலிருந்த   சத்துணவு செல்லும் டுயூப் பொருத்தியிருக்கும் ஸ்டாண்ட் சரிந்து விழுந்து அதில் தொங்கிக்கொண்டிருக்கும் பாட்டில் தரையில் மோதி உடைந்து சிதறியது .அதிலிருக்கும் திரவம் சிதறிய கண்ணாடிச் சில்லுகளிடையே  தரையெங்கும் ஓடியது.
ஐய்யோ என்று கதறினாள் சீதா. அது உணவு மட்டுமில்லை..உடல் நிலையைச் சீராக வைக்கவும் உதவும் மருந்தும் கூட. ஜெர்மனியிலிருந்து வரும் அது ஒரேஒரு கடையில்தான் கிடைக்கும். விலை அதிகம். ஒரு பாட்டில் 800  ரூபாய். ஒன்று ஒரு  வாரம் வரும். இப்போது கைவசம் வேறு பாட்டில் இல்லை.
சீதா அழ ஆரம்பித்துவிட்டாள்  இந்த  மருந்து இல்லாவிட்டால்  முளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு இன்னும் குறைந்துவிடும் என்பது அவளுக்குத் தெரியும்.  உடனடியாக அந்த மருந்து பாட்டில் தேவை. பெரும் வெள்ளத்தில்  சிக்கி எல்லோரும் தவித்துக்கொண்டிருந்த  அந்த நேரத்தில் யாருக்கும் சீதாவின் பிரச்னையைக் கேட்க நேரமோ மனமோ இல்லை. போன் இல்லாததால் சரோஜாவைத்தொடர்பு கொள்ள முடியவில்லை. பக்கத்து ஃபிளாட் பாட்டியை  கெஞ்சிக் கேட்டு மகளின் அருகில்  உட்காரவைத்துவிட்டு  சரோஜாவிடம் போய் சொல்லி மருந்துக்கு ஏற்பாடு செய்யத் தீர்மானித்தாள்.
வீட்ற்கு வெளியில் வெள்ளம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. வாசலிலிருந்த  ஆர்மி போட்டில் ஏற்கனவே பலர். கெஞ்சி அதில் இடம் பிடித்து சற்று மேடான இடத்திற்குப் போனவுடன் நனைந்து கொண்டே  ஒட்டமும் நடையுமாக நடக்க ஆரம்பித்தாள்.நல்ல வேளையாக சரோஜா இருக்கும் பகுதியில் வெள்ளம் இல்லை. விபரங்களைக்கேட்ட  வினாடியில் நீ போய் குழந்தையுடன் இரு. நான் எப்படியாவது மருந்தை வாங்கிக் கொண்டு சேர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே சரோஜா தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். அந்தக்குழந்தைக்கு தேவையான அந்த மருந்தின் அவசியம் அவளுக்குத்தெரியும் பல முறை அதை வாங்கியிருக்கிறாள்.
மழை சற்று குறைந்திருந்தது. வீட்டிற்கு ஒடி வந்த சீதா மகேஸ்வரி தூங்குவதை பார்த்து சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டு பாட்டிக்கு தாங்கஸ் சொல்லி கட்டில் அருகே அமர்ந்தாள்.
மதியம் இரண்டு மணி வரை சரோஜா வரவில்லை. எங்கே அலைகிறாளோ? என நினைத்துக்கொண்டாள் சீதா. . மழை சுத்தமாக நின்று விட்டது. நாலு நாளைக்குப் பின்  பளிச்சென்று வெயில். ஆனால் காற்று சுழட்டி அடித்துக்கொண்டிருந்தது.
அன்று 3 மணிக்குத் தீர்ப்பு சொல்லப்போகும் விஷயத்தைப் போன்கள் வேலைசெய்யாத  நிலையால் வழக்கறிஞர் தினகரனால்  சீதாவுக்குச் சொல்ல முடியவில்லை.
எங்கெல்லாமோ போராடிக் கடைசியாக ஒரு தனியார் மருத்துவ மனையில் தன் சொந்த செல்வாக்கால் 2 பாட்டில்களை வாங்கிக் கொண்டு சரோஜா சீதாவின் வீட்டுக்கு   வந்து கொண்டிருக்கிறாள்.  கொல்ல அனுமதி கேட்டுப் கோர்ட்டில் போராடும் இவள் இப்படி அந்தக்குழந்தை காப்பாற்றவும் போராடுகிறாளே என்று நினைத்துக்கொண்டே வண்டியின் வேகத்தைக்கூட்டினாள்.
 இது இந்த கோர்ட் சந்திக்கும் மிக முக்கிய வழக்கு. இதுவரை  மரணம் அடையமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் உடல்நிலையைக் காரணம் காட்டி உறவினர்கள் கருணைக்கொலைக்கு அனுமதிகோரி 15  வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. எதற்கும் இதுவரை அனுமதி தரப்படவில்லை. சமீபத்தில் உச்சநீதி மன்றம்  அளித்த தீர்ப்புக்கு பின் வந்திருக்கும் முதல் வழக்கு இது என்று தன்னுடைய நீண்ட தீர்ப்பை நிதானமாகப் படிக்கஆரம்பிதிருக்கிறார் நிதிபதி. தினகரன் ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து கவனிக்கிறார். அவருடைய உதவியாளர்கள் நீதிபதி சொல்வதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஹாலில் ஊசி விழுந்தால் ஒசை கேட்கும் அமைதி.
தூங்கிக்கொண்டிருக்கும் மகேஸ்வரியின்  உடல் தூக்கிபோடுகிறது. வலிப்பு வரப்போகிறதோ என்று நினைத்து எழுந்து அருகில் போன சீதாவிற்கு ஈன ஸ்வரத்தில் அம்மா என அவள்  அழைப்பது கேட்டது. அம்மாவைப் பார்த்ததும் உதடுகளில் ஒரு சின்ன முறுவல்.  சில வினாடிகளில்  மெல்ல சீராகியிருந்த மூச்சு பட்டென்று  நின்று விட்டது.
அசைவற்ற அந்த உடலைப் பார்த்து அழக்கூடத் தோன்றாமல் அதிர்ந்து நிற்கிறாள் சீதா,
சரோஜா மருந்துடன் வந்து கொண்டிருக்கிறாள். 
கோர்ட்டில் என்ன தீர்ப்பு வப்போகிறதோ?
ஆனால் கருணையேயில்லாமல் சென்னை நகரை அழித்த பெரும் மழை அவள் மீது கருணை காட்டிவிட்டது.