4/7/24

இசை ( சிறுகதை)

              

ரமணன்
நேற்று மாலை தியாகராஜ ஆராதனையையொட்டி மியூசிக் அகடமியில் டி,எம். கிருஷ்ணா கச்சேரி. நீண்ட நாளைக்கு பின் கிருஷ்ணா அகடமியில் பாடுவதால் வழக்கமாக வரும் ரசிகர்களை விட இந்த சர்ச்சைக்குரிய கலைஞரை கேட்க வந்த இளைஞர்கள் தான் அதிகம்.நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே செகரட்டரி இந்தக் கச்சேரியில் தியாகய்யரின் பாடல்கள் மட்டும் தான் என்று அறிவித்துவிட்டதால் பெருமாள்முருகனை கிருஷ்ணா துணைக்கு அழைக்க மாட்டார் என்பது ஆடியன்ஸ்க்கு புரிந்து விட்டது..
திவ்யநாம கீர்த்தனை, நாரயணஹரி யமுனா-கல்யாணி,கீதார்த்தமு என்று தியாகராஜரின் கீர்த்தனைகளை கம்பீரமாக துளியும் சேதப்படுத்தாமல் அழகாக ஒரு பிசிரில்லாமல் பாடி ஆடியன்ஸை கட்டிப்போட்டார் கிருஷ்ணா. அதுவும் இரண்டாவதாக எடுத்துக்கொண்ட “ஏடி ஜன்மமிது?” வாராளி ராகத்தில் ஆலாபனை செய்து உச்சஸ்தாயில் அதைச் செதுக்கிக் கொண்டிருந்த போது உணர்ச்சி மேலிட்டு கண்களில் நீர் வழிந்தது. இனி இந்த ராகத்தில் இதுக்குமேலே பாட எதுவுமில்லை என்று நினைக்க வைத்தது. ஒரு நல்ல பாடகனுக்கு மிகச்சரியான பக்கவாத்தியங்கள் அமைவது என்பது வரம். அன்று வயலினில் ஶ்ரீராம் குமாரும்,மிருதங்கத்தில் அருண்பிரகாஷும் கடத்தில் குருபிரசாத்தும் தந்த அனுசரணையான ஒத்துழைப்பு, கிருஷ்ணா அந்த வரத்தைப் பெற்றவர் என்பதைப் புரிய வைத்தது. போன வருடம் இதே போல் அகாடமியில் நடந்த தியாகய்யர் ஆராதனையில் பாடிய பாம்பே ஜெய்ஶ்ரீக்கு சில மாதங்களுக்கு பின்னர் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் கிருஷ்ணாவுக்கு அந்த பாக்கியம் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை..

கட்டுரையை முடித்துவிட்ட ராஜன் மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்து சில திருத்தங்கள் செய்தபின் அதை இ மெயிலில் அனுப்பிவிட்டு லேப்டாப்பை மூடினார்.
ராஜன் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் அறிந்த, நூறாண்டுகளை கடந்து நிற்கும் ஒரு ஆங்கில நாளிதழக்கு இசைவிமர்சனங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். கல்லூரியிலிருந்து வெளிவந்த காலத்திலிருந்து அந்த நாளிதழலில் பணியாற்றி வந்த அவர் அதே நாளிதழில் ஸ்போர்ட்ஸ், ரேஸிங் போன்ற பல பகுதிகளின் ஆசிரியராகயிருந்து ஓய்வுபெற்றவர். இசையில் பெரும் விருப்பம். அவரைப்பொறுத்தவரை இசை தான் வாழ்க்கை. நகரினரின் இன்றைய எல்லா இசைக்கலைஞர்களையும் அவர்களின் சிறுவயது முதலே அறிந்தவர். இசையின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். அதனால் அவர் எழுதும் விமர்சனங்களுக்கு நல்ல வரவேற்பு.
பொதுவாக இசை விமர்சகர்களில் இரண்டு வகையுண்டு. சுப்புடு பாணியில் தன் மேதாவிலாசத்தை காட்டி இசைக்கலைஞர்களை தாக்குவதையும், தூக்குவதையும் செய்பவர்கள் ஒரு வகை. இசையின் அனைத்து நுட்பங்களையும் ராகங்களின் பாரம்பரியத்தையும் அறிந்தவர்கள் மற்றொரு வகை. இதில் ராஜன் இரண்டாவது வகை. அதனால் இசைக்கலைஞர்கள் இவர் விமர்சனங்களைப் படிக்க ஆவலாக காத்திருப்பார்கள். அதைவிட முக்கியமான விஷயம் கச்சேரிகளில் அவர் குறையாக கருதும் விஷயங்களைக் கூட பெரிதாக எழுதி விடமாட்டார்.
அந்த கலைஞரை அழைத்து “அதை கொஞ்சம் சரி செஞ்சுக்கப்பா” என்று அவருக்கும் மட்டும் ஆலோசனை வழங்குவார். இதனால் 2000 கிட்ஸ் என்று இன்று அறியப்படும் இளம் பாடகர்களுக்கும் அவரைப்பிடிக்கும்.
ராஜன் இன்று எழுதியனுப்பியிருக்கும் விமர்சனம் நாளை வெளியானவுடன் சர்ச்சைகளை கிளப்பும் என்று அவருக்கு தெரியும். என்றாலும் அவர் நம்பிக்கையுடன்தான் எழுதியிருக்கிறார். அது அவர் பாணி. தன் ஆபீஸை கூப்பிட்டு கட்டுரை அச்சுக்கு போய்விட்டதை உறுதி செய்து கொண்டு விட்டு தூங்கப்போகிறார். படுக்கைக்கு அருகில் அதிகம் கையாளப்படாத தேனுகா ராகத்தில் பாலமுரளியின் ராகவைய்யா, ராமைய்யா பாலிம்பவையா மெலிதாக சிடியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
வழக்கம்போல அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சிகளை முடித்துவிட்டு ரேடியோவை ஆன் செய்கிறார் ராஜன். ஒரு நாளிதழின் ஆசிரியாராக இருந்தாலும் தினமும் அவரது காலை ஆல் இந்தியா ரேடியோவின் செய்திகளை கேட்காமல் தொடங்காது. எத்தனை டிவி செய்தி சானல்கள் வந்தாலும் ரேடியோவில் செய்திகளைக் கேட்டும் ஒரு சிலரில் ராஜனும் ஒருவர்.
“ என்னாச்சு அப்பா ஏன் இவ்வளவு வால்யூம்? தெருமுழவதுக்கும் நீயூஸ் கேட்கிறது” என்று மாடிக்கு வந்து ரேடியோவின் வால்யூமைக் குறைக்கிறார் ராஜனின் மகள் கீதா.
“குறைக்காதே அம்மா கேட்கல்லை” என்கிறார். ராஜன்.
“என்னாச்சு அப்பா? என்று பதறிய கீதா ரேடியோவின் வால்யூமை மிகவும் குறைத்து வைத்து படிப்படியாக உயர்த்தி இப்போது கேட்கிறதா என்றுகேட்டுக்கொண்டிருக்கிறார்.. முழு வால்யூம் வைத்தபோது“இப்போத்தான் மெள்ள கேட்கிறாப்லே இருக்கு” என்று அவர் சொல்லும் போதே கீதாவிற்கு வீபரிதம் புரிந்தது.
“என்னம்மா இப்படி?” என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் பயமும் கலந்த குரலில் ராஜன்
ஹியரிங்கில் ஏதோ பிராப்ளம் அப்பா டாக்டரை பார்க்கலாம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கறேன் என்று கீதா வேகமாக படியிறங்குகிறார்.
தன்னால் கேட்கமுடியவில்லை என்பதை உணர்ந்துகொண்ட ராஜன் அப்படியே உடைந்துபோகிறார். அழுகை வருகிறது. அவரது சேரிலேயே உறைந்து உட்கார்ந்திருக்கிறார். அவரது வழக்கமான காலை நடவடிக்கைகளான வாக்கிங், தோட்டவேலை பூஜை எதையும் செய்யவில்லை.கீதா பலமுறை அழைத்தும் காலை உணவைச் சாப்பிடவில்லை.
கீதா அருகிலுள்ள ஒரு ENT டாக்டரிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கியிருப்பதைச்சொல்லி ரெடியாக வேண்டும் என்று சொல்லுகிறார்.
ராஜனின் செல் போன் அழைக்கிறது எடுத்துக் காதில்வைத்துகொள்கிறார். மறு முனையில் பாடகி செளமியா. “மாமா அடுத்த வாரம் கிளிவ் லாண்ட் புரோகிராம் டேட்டும் கன்பர்ம் ஆகியிருக்கு. இந்தத் தரம் லைவ்வும் இருக்கு. லிங்க் அனுப்பியிருக்கேன் மறக்காம கேளுங்கோ”. செல்போனில் பேசியது தெளிவாகக் கேட்டாலும் தன் நிலையைச் சொல்ல முடியாமல் கண்களில் நீர் முட்ட குரல் கம்ம "செளமியா" என்று தழதழத்து குரலில் பேச ஆரம்பிப்பதை கவனித்த கீதா ஓடி வந்து செல்போனை வாங்கி “ செளமியா அப்பாவிற்கு உடம்பு சற்று சரியில்லை” நாளைக்கு பேசுவார் என்று சொல்லி போனை ஆப் செய்கிறார்
.
“அப்பா உன் பிராப்ளத்தை இப்போதே எல்லோரிடம் சொல்ல வேண்டாம். அரை மணியில் உலகம் பூரா வாட்ஸ்ப்பில் பரவிடும்” – இப்போ டாக்டரை பார்க்கப்போறோம் அப்புறம் பிரண்டஸ்கிட்ட பேசலாம்”.
அந்த லேடி ENT டாக்டர் கீதா சொன்னதை பொறுமையாக கேட்டபின் ராஜனின் காதுகளைச் சோதிக்கிறார்.
“காதில் ஒன்றும் பிரச்னையில்லை.வயது அதிகமாகிவிட்டதால் கேட்கும் திறன் குறைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் அதைச்சரியாகக் கண்டுபிடிக்க டெஸ்ட் ஒன்று இருக்கிறது. அதை லேப்பில் செய்து ரிப்போர்ட் கொண்டு வாருங்கள் அதன் பின் டிரிட்மென்ட்டை முடிவு செய்யலாம்.” என்கிறார். கீதா அங்கிருந்தே அந்த லேப்பை தொடர்பு கொள்கிறார். மறுநாள் தான் அப்பாய்ண்ட்மென்ட் கிடைக்கிறது. அப்பாவும் மகளும் வீடு திரும்புகிறார்கள்.
காரில் ஏறிய ராஜன் சுரத்திழந்து மிகுந்த கவலையுடன் மகளிடம் “ ஏம்மா எனக்கு இப்படியாயிடுத்து?”
“கவலைப்படாதிங்க அப்பா லேப்லே டெஸ்ட் செய்து பார்க்கலாம்” என்று முகத்தில் கவலையைக் காட்டாமல் கீதா சொன்னாலும் அவர் மனத்துக்குள் கேட்டகுரல் “அப்பாவிற்கு இது சிரீயஸ் பிராப்ளம்”
ராஜனின் மகன் ராகவன் அமெரிக்காவில் ஒரு பெரிய நிதி நிறுவனத்தில் உயர் பதவியிலிருப்பவர். கீதா அவரிடம் செய்தியைச்சொன்னவுடன், “ஏன் உடனே எனக்குச் சொல்லவில்லை? ஏன் இந்தமாதிரி சின்ன டாக்டர்களிடம் கூட்டிப் போனாய்? இது பெரிய விஷயமில்லையா என்று படபடவென்று சீறினார்.
இப்படி படபடப்பது தன் தம்பியின் இயல்பு என்பதால் கீதா” தெரியும்டா. நானும் ஒரு நல்ல எக்ஸ்பர்ட்டை பற்றி விசாரித்துக் கொண்டுதானிருக்கிறேன்” என்றார்.
ராஜனுக்கு செல்போன் தெளிவாக கேட்பதால் அதில் ராகவன் அப்பாவிடம் கவலைப்படாமலிருங்கள் என்று ஆறுதலாகச் சொல்லுகிறார். கண்களில் நீர் வழிய பதில் பேச முடியாமல் ராஜன் போனை வைத்து விடுகிறார்.
தன்னால் நல்ல இசையை கேட்க முடியாமல் போய் விடுமே, நாளிதழுக்கு விமர்சனங்கள் எழுத முடியாது போய்விடுமே என்ற கவலை அவரை பெரிதாக அழுத்த தன் மேஜையை விட்டு அகலாமல் கவலையில் ஆழ்ந்திருந்தார். "எனக்கேன் இப்படி?" சுய பச்சாதாபம் மேலிட செய்வதறியாது அமர்ந்திருந்திருந்தார்.
கடந்த வாரம் அவர் இசையும் தெய்வீகமும் பற்றி எழுதிய கட்டுரையின் வரிகள் அவர் மனதில் ஓடியது. “தெய்வீகமும் இசையும் பிரிக்க முடியாதவை. தெய்வீகம் தன்னை இசையின் மூலம் வெளிப்படுத்துகிறது. நல்ல இசையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பதை இந்தியாவின் அத்துனை மதங்களும் சொல்கின்றன. நல்ல இசையைக் கேட்கத்தான் கடவுள் நமக்கு காதுகளைக் கொடுத்திருக்கிறான் என்பதை பஞ்சாபியமொழியில் பல பக்தி பாடல்களை எழுதியிருக்கும் குரு அமர்தாஸ் தன்னுடைய ஆனந்த் சாஹிப்பில் இப்படி குறிப்பிடுகிறார்.
“ஓ, என் காதுகளே, நீங்கள் உண்மையான நல்ல இசையை கேட்க கடவுளால் அனுப்பப்பட்டீருக்கிறீர்கள், இதனால்தான் உங்களை உடலின் ஒரு பாகமாக ஆக்கியிருக்கிறார். உண்மையான நல்ல இசையை தினமும் கேளுங்கள். இப்படி கேட்பதால் உடலும் மனமும் செழிக்கும், நாக்கு இனிமையில் திளைக்கும்.”
இப்படியொரு கட்டுரை எழுதிய என் காதுகளை ஏன் கடவுள் பறித்துக்கொண்டுவிட்டார்? என்றெண்ணி கலங்கிக் கொண்டிருந்த ராஜனின் சிந்தனையோட்டத்தை “காபி சாப்பிடுங்கஅப்பா” என்ற கீதாவின் குரல் கலைக்கிறது. செல் போன் அழைக்கிறது
போனில் அமெரிக்காவிலிருந்து ராகவன் “ அப்பா போனை ஸ்பீபக்கரில் போடுங்க கீதாவை கூப்பிடுங்க என்கிறார்.
நான் அப்பா பக்கதில்தான் இருக்கிறேன் பேசு என்கிறார் கீதா
“டாக்டர் ஈஸ்வர் கிட்ட பேசியிருக்கிறேன். ஆசியாவின் சிறந்த ENT எக்ஸ்பர்ட்களில் ஒர்த்தர்.. தமிழ்நாட்டு மெடிகல் காலேஜிலும் லண்டன் காலேஜ்களிலும் தங்க மெடல்கள் வாங்கியவர் லண்டனிலும் அமெரிக்காவிலும் கிடைத்த வேலைகளை வேண்டாம் என்று சென்னையிலே பிராக்டிஸ் செய்கிறார். அடிக்கடி சந்திப்பதில்லையே தவிர அவர் எனக்கு நல்ல பிரண்ட். சில நாளைக்கு முன்னால் கூட பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்து காது கேட்கவைத்தவர்ன்னு நீயூஸ்ஸெல்லாம் வந்ததே அவர்தான்.. அவ்வப்போது பேஷண்ட்களை சந்திக்க வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பவர். நம் அதிர்ஷ்டம் இந்தவாரம் சென்னையில் இருக்கிறார். அவரிடம் அப்பாவை அழைத்துப் போ. நாளைக்கு ஈவினிங் 5.30 வரச்சொல்லியிருக்கிறார். போய்விட்டு வந்து போன் செய்”
என்று சொன்ன ராகவனிடம் “நல்லதுப்பா நாளைக்கு போறோம்” என்றார் ராஜன்
50 பேருக்கு மேல் காத்திருக்கும் அந்த ரிசப்ஷன் ஹாலில் ராஜனும் கீதாவும் காத்திருக்கிறார்கள். முதலில் வந்தோருக்கு முன்னுரிமை முறையை பின் பற்றும் அந்த மருத்தவமனையில் 5.30க்கு வரும் டாக்டருக்காக 4 மணிக்கே வந்து சீட் பிடித்த நோயாளிகள் அதிகம். தங்கள் முறைக்காக காத்திருக்கும் கீதாவுக்கு இத்தனை பேருக்கா காது பிரச்னை? நம் முறை எப்போ வருமோ என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்.. ராஜன் கண்மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார். தமிழக அரசின் அமைச்சர் ஒருவர் உதவியாளர் உதவியுடன் மெல்லவந்து நேரடியாக டாக்டர் ஈஸ்வரின் அறைக்குள் நுழைகிறார். நல்லவேளையாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் வெளியே வந்துவிட்டார். அதே மருத்துவ மனையிலிருக்கும் வேறுசில டாக்டர்களும் பரபரப்புடன் அடிக்கடி அவர் அறைக்குள் நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தனர்.
ராஜன் என்ற ஸ்பீக்கரில் அழைக்கப்பட்டவுடன் கீதாவும் ராஜனும் அறையின் உள்ளே நுழைந்தனர். அவரது பெயருடன் உள்ள ஃபைலைப் பார்த்தவுடன். “ஹலோ சார்! ராகவன் யூஸ்ஸிலிருந்து போன் செய்திருந்தார். அவரும் நானும் ஒரே டீமில் டேபிள் டென்னிஸ் ஆடியிருக்கிறோம். நீங்கள் வந்தவுடனேயே ரிசப்ஷனில் சொல்லி உள்ளே வந்திருக்கலாமே சார். உங்கள் ரிவியூக்களை தவறாமல் படிப்பவர் என் அம்மா. அவரும் டாக்டர். மியூசிக்கும் நன்றாகத் தெரியும். நானும் சின்ன வயதில் அவருக்காக பாட்டுக்கற்றுக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது நீங்கள் எழுதியிருப்பதை என்னையும் படிக்கச்சொல்லுவார். நேற்று டிஎம் கிருஷ்ணாவிற்கு விருது கிடைக்குன்னு எழுதியிருக்கீங்களே? ஷ்யூரா கொடுக்கப்போறாங்களா?” என்று படபடவென்று ராஜனுக்கு பிடித்த சப்ஜகெட்டை பேச ஆரம்பித்தார் டாக்டர் ஈஸ்வர். பேஷண்ட்டிடம் சத்தமாகவும் உடன்வந்திருப்பவரிடம் மெதுவாக பேசுபவர் அவர். டாக்டர் தன் விமர்சனத்தை படித்திருக்கிறார். என்பதைக் கேட்டவுடனேயே இறுக்கமாகயிருந்த ராஜன் முகத்தில் சந்தோஷ ரேகை பரவியது.
விபரங்கள் கேட்டு சோதித்தபின்னர் கிழே லேப் இருக்கிறது அங்கு ஒரு ஆடியோ மெட்டிரிக்குன்னு ஒரு டெஸ்ட் செய்து கொண்டு. ஒரு ஸ்கேனும் எடுத்துக்கொண்டு வாருங்கள். வந்து காத்திருக்க வேண்டாம் நேரே இங்கே வாருங்கள் என்றார்.
ஒரு சவுண்ட் ஃபுருப் அரையிருட்டு அறையில் உட்காரவைத்து வெளியே கண்ணாடிக்கு வெளியே இருப்பவரிடம் அவர் எழுப்பும் வெவ்வேறு ஒலிகள் ஹெட்போனில் கேட்கிறதா என்பதை உள்ளேயிருந்தே விரலைஉயர்த்தி காட்ட வேண்டும் அதை அவர் அவர் ஒரு கம்யூட்டரில் பதிந்துகொண்டே வந்தார்.
அடுத்த அறையில் 5 நிமிடத்தில் முகம் மூக்கு இரண்டு காதுகள் ஸ்கேன் எடுக்கப்பட்டு டெஸ்ட்கள் முடிந்தது. நீங்கள் டாக்டரை சந்தியுங்கள் என்ற அந்த நர்ஸிடம், “ரிப்போர்ட்” என்று கேட்ட கீதாவிற்கு கிடைத்த பதில், “டாக்டர் அவர் சிஸ்டத்தில் பார்த்துக்கொள்வார்”.
லிப்ட்டுக்கு காத்திருந்து மேலே வந்த அவர்களை ஈஸ்வர் உதவியாளர் நேரே அவர் அறைக்கு அழைத்துச்சென்றார். ஒரு சின்னப்பெண்ணை சோதித்துக்கொண்டிருந்த டாக்டர் ஈவர் “வாங்க சார் உங்கள் ஸ்கேனை பார்த்துவிட்டேன். நான் சந்தேகப்பட்ட மாதிரியே உங்கள் காதுகளில் இறுகிய சளி கட்டியாக அடைத்திருப்பதால் கேட்க முடியவில்லை. ஒரு சின்ன அறுவை செய்து அதை எடுத்துவிட்டால் சரியாகிவிடும்.
ஹியரிங்அய்டு தேவையிருக்காது.” என்று மெல்ல காதில் விழுந்த அவருடைய இந்த வார்த்தைகள் ராஜனுக்கு தெய்வ வாக்காகவே கேட்டது. கீதா ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
“மேடம் அந்த ஆபரேஷனுக்கு அவரைத் தயார் செய்ய வேண்டும் அதற்கு அவர் ஒரு வாரம் இந்த மாத்திரைகளை/ மருந்துகளை கவனமாக சாப்பிட வேண்டும்.” போன்ற பல விஷயங்களை கீதாவிடம் படபடவென்றுசொல்லிக்கொண்டே போன டாக்டர் ஈஸ்வர். “அடுத்த வாரம் புதன் ஆப்ரேஷன் வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார் . இந்த நிமிடமே கூட ரெடி என்று சொல்லத்தயாராயிருந்த கீதா “ரொம்பத் தாங்கஸ் டாக்டர் அப்படியே வைத்துக்கொள்வோம்” என்றார்,
ஒருநாள் போவது ஒரு யுகமாகயிருந்தது என்று நாவல்களில் படித்திருக்கும் ராஜன் அதை அந்த ஓரு வாரத்தில் உண்மையாக உணர்ந்தார். மருந்துகள் அவரை தூக்கதில் ஆழ்த்தினாலும் விவரித்துச்சொல்லமுடியாத தவிப்புடன் இருந்தார்.
புதன் கிழமை காலை 7.30 மணி.பலவிதமான டெஸ்ட்கள் முஸ்தீபுக்களுக்கு பின் ஆபரேஷன் தியேட்டரில் ராஜன்.
மங்கலான ஓளி சீலிங்கிலிருந்து ஒலிக்கும் மெல்லக்கேட்கும் இசை, மெல்லிய நறுமணம். சில நிமிடங்களில் பச்சைநிற தியேட்டர் கவுன் அணிந்த டாக்டர் ஈஸ்வர் தன் 3 உதவியாளர்களுடன் வருகிறார். “என்ன ராஜன் சார்? நேத்து நல்லா தூங்கினிங்களா? ரெடியா. ஆரம்பிக்கலாமா என்று கேட்டபடி உங்கள் முகம் மரத்துப்போகும் படி ஒரு லோகல் அனஸ்திஷ்யா கொடுக்கப் போரேன் தூக்கம் வரம்மாதிரி இருக்கும் பயப்படாதிங்க” என்று சொல்லிக்கொண்டே ஆபரேஷனை ஆரம்பிக்கிறார்.முதலில் சில ஓசைகள், டாக்டர் பேசுவது எல்லாம் மெதுவாக கேட்ட ராஜனுக்கு பின்னர் வேறு எதுவும் கேட்கவில்லை. அரை மணிக்கு பின்னர் டாக்டரும் நர்ஸும் பேசுவது, மருத்துவக் கருவிகளை வைக்கும் டங்கென்ற ஓலி எல்லாம் ராஜனுக்கு கேட்டது. ஸீலிங் ஸ்பீக்கரில் ஒலிக்கும் பாட்டும் கேட்டது.
“இது பால முரளியின் நகுமோ டாக்டர்”என்கிறார் ராஜன்,
“டிரிட்மென்ட் சக்ஸஸ்! என்று கட்டைவிரலை உயர்த்தி உங்களுக்காகத்தான் இதை இன்னிக்கு போடச்சொன்னேன். யூ ஆர் ஆல்ரைட். ரூமில் ஓய்வெடுங்கள் 2 மணிநேரம் கழித்துவந்து பார்க்கிறேன்” என்ற சொல்லிக்கொண்டே நெக்ஸ்ட் யாருமா? அந்த சின்னக்குழந்தை தானே ரெடி பண்ணிட்டிங்களா என்று நர்ஸிடம் கேடுக்கொண்டே அடுத்த ஆப்ரேஷன் தியேட்டருக்கு விரைகிறார் டாக்டர் ஈஸ்வர்
நர்ஸ்கள் ரூமில் ஸ்ட்ரெட்சரை நுழைக்கும்போதே “கீதாம்மா இப்போ கிளியராக காது கேக்கிறதும்மா. ஈஸ்வர் நிஜமாகவே ஈஸ்வரன் தாம்மா. தாங்ஸ் சொல்லக்கூட தோணலம்மா. ரூமுக்கு வரும்போது சொல்லணும்” என்கிறார் சந்தோஷத்தின் எல்லையில் இருந்த ராஜன்.
.... இன்றைய வளர்ந்த டெக்னாலாஜி தான் எவ்வளவு வசதியாயிருக்கிறது? நேற்று யுஸ்ஸிலில் கிளிவ் லாண்ட் தியாகய்யர் உற்சவத்தில் செளமியா பாடியதை இங்கிருந்தே கேட்டு விமர்சனம் எழுத முடிகிறது. நேற்றைய கச்சேரி அவருடை கேரியரில் ஒரு புதிய லாண்ட் மார்க். 22 வது மேளகர்த்தா ராகம் கரகரப்ரியா கட்டமைப்பில் விளைவதுதான் இனிமையான 'காபி' ராகம்! இதனில் சிறிது மருவி நிற்பது பாகேஸ்வரி ராகம்! இந்த ராகத்தில் ஆரோகணத்தை ஆறு ஸ்வரங்களில் பாடுவது கம்பிமேல் நடக்கும் வித்தை. கரணம் இல்லை கன வினாடி தப்பினால் கூட ராகம் மாறி விடும் ஆபத்திருக்கிறது. . ஆனால் அதை அனாயாசியமாக செய்து சிலம்பம் ஆடிவிட்டார் செளமியா. நம்மூர் சபாக்களில் இதைப்பாட அமெரிக்காவில் ஒத்திகை செய்து பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இன்றைய தலைமுறையினரின் இப்படிப்பட்ட துணிவானசோதனை முயற்சிகள்தான் கர்நாடக இசையை இனி வாழச்செய்யப் போகிறது”…
என்று தன் கட்டுரை முடித்து, ஆபிஸுக்கு இ மெயில் செய்து விட்டு பாகேஸ்வரியில் ஸ்வரத்தை முணுமுணுத்தபடியே தூங்கப்போகிறார் ராஜன்.
May be an image of 2 people, temple and text
All reactions:
You, Vidya Subramaniam, மாலன் நாராயணன் and 77 others

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்