31/1/25

 


காசி

ரமணன்.

 

கண்ணெதிரே கடலாக விரிந்து பரந்திருக்கிறது கங்கை. சில்லிடும் காற்று கடந்து போகிறது.  பார்க்கப் பார்க்கப் பிரமிப்பாகயிருக்கிறது. அப்பா ஆசைப்பட்டபடி   அவரை இன்று இந்தக் காசிக்கு அழைத்து வந்தது ஒரு  கனவு மாதிரி இருக்கிறது. அப்பா கிழே படித்துறையில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் நின்று கைகூப்பி ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒரு வருடமாக அப்பா கேட்டுக்கொண்டிருந்தார், சாப்ட்வேரிலிருக்கும் கூலிக்காரனுக்கு எப்படி 10 நாள் லீவு கிடைக்கும் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. பிராணன் போறதுக்கு முன்னால் அழைச்சுண்டு போடா என்று புலம்ப ஆரம்பித்தவுடன் ஒரு மாதிரியாக ஆபிசில் சமாளித்து லீவு எடுத்து அவரை காசிக்கு இன்று காலை அழைத்து வந்தாகிவிட்டது. முதலில் கங்கையில் ஸ்நானம் செய்யணும் அப்புறம் தான் கோவில், சாப்பாடு எல்லாம் என்று டிரெயினை விட்டு இறங்கியவுடனேயே சொல்லியிருந்தால்  ரூமில் பெட்டிகளை வைத்தவுடனேயே  இங்கே வந்தாகிவிட்டது. எனக்கு அப்போது குளிப்பதில் ஆர்வம் இல்லாதால் அப்பாவைக் கங்கைக்கு இறங்கிப் போகச்சொல்லிவிட்டுப் படித்துறையில் காத்திருக்கிறேன். நம் நாட்டின் எல்லா பாஷைகளும் கேட்கிறது.  தங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயத்தைச் சாதித்த சந்தோஷம் பலரின் முகத்தில் தெரிகிறது..

 

திடீரென்று “ஹர ஹர மகாதேவ்” என்ற  உரத்த குரலில் கோஷமிட்டுக்கொண்டு  ஜாடமுடியுடனிருக்கும்  சாமியார்கள் கூட்டம் சிலரின் கையில் சூலாயுதம். உடுக்கின் ஒலி ஓங்கி ஒலிக்கிறது. அந்தக் கூட்டம் அப்படியே கங்கையில் இறங்குகிறது. அய்யோ அப்பாவை இந்தக் கூட்டம் நசுக்கிவிடப்போகிறதே என்று பயந்த நான் பாய்ந்து ஓடி அந்தக் கூட்டத்தில் நுழைந்து, அந்தப்படித்துறைப் படிகளில் இறங்குகிறேன். அப்போது ஒரு சாதுவின் மீது என் கைப்பட்டுவிட்டது.  நெருப்பு பட்டது போல்  பதறிய அந்தச் சாது  கையிலிருக்கும் கம்பால் முரட்டுத்தனமாக  என்னைத் தள்ளிவிட்டார். நான் படிகளில் விழுந்ததேன் சுதாரித்துக்கொண்டு எழுதுவதற்குள் திமுதிமு எனக் கூட்டம் என்னை மிதிக்காத குறையாகக் கடந்து போனது. அந்தச் சாதுக்களை நாம் தொடக்கூடாதாம். தொட்டுவிட்டால் சபிப்பார்களாம். அதனால் தான் அவர்கள் வரும்போது யாரும் எதிரில் நிற்க மாட்டார்களாம். இதெல்லாம் பின்னால் நான் அறிந்த விஷயம். ஓங்கி ஒலித்த கோஷங்களுடன் அந்தக் கூட்டம் நீராடி விட்டுக் கரையேறி அதே கோஷங்களுடன் நடக்க ஆரம்பித்தது. நான் படிகளில் இறங்கி அப்பா குளித்துக்கொண்டிருந்த இடத்தில் அவரைத் தேடினேன்.

அவரை அங்கே காணவில்லை. பதறிப்போய் “அப்பா அப்பா  என்று கத்தினேன். கோபம் அழுகை எல்லாம் பீறிட்டது. அப்பா எங்கே போய்விட்டீர்கள்? என்று கத்தினேன்.  அருகிலிருந்த படித்துறையில் இருந்தவர்களுக்கு  என் பாஷை புரியாவிட்டாலும் என் பதற்றம் புரிந்தது.

மறுபடியும் அப்பா குளித்த படித்துறையில் தேடிப்பார்த்துவிட்டு தங்கியிருந்த இடத்துக்கு வந்தேன். மேனேஜரிடம் விபரம் சொன்னவுடன் பதறிப்போன அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துசென்று சப் இன்ஸ்பெக்டரிடம் விபரம் சொன்னார். என் செல்போனிலிருந்த  அப்பாவின் போட்டோவை வாங்கிக்கொண்ட அவர் எல்லா ஸ்டேஷனுக்கும் அனுப்புகிறேன் பார்க்கலாம். என்றார். எனக்கு நம்பிக்கை தரும் தொனியில் இல்லை அந்த வார்த்தைகள்..

. இப்படிக் காசிக்கு வந்து அப்பாவைத் தொலைத்த முட்டாள் நானாகத்தானிருப்பேன் என்று  நினைக்க நினைக்க அழுகை முட்டிக்கொண்டுவந்தது.

சாதுக்கள் படித்துறையிலிருந்து  திரும்பிப்போகும் போது அவர்கள் பின்னாடியே போன அவர்களுடைய பக்தர்கள் கூட்டம் மஹாதேவய்யரையும் நெட்டி தள்ளி வீதிக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. அந்தப்பெரிய சாலையில் எந்தப்பக்கம் போனால் கங்கை வரும் என்று தெரியாமல், யாரிடமும் கேட்கத்தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறார். பசி, சோர்வு எல்லாம் அழுத்த நடை தளர்கிறது.அப்போது எதிரில் வந்த ஒரு குழுவினர் தமிழில் பேசிக்கொள்வது கேட்டு அவர்களைச்  “சார்  ஒரு ஹெல்ப்” என்று சொல்லி நிறுத்துகிறார்.

“என்னது? பிள்ளையோட வந்து அவரைக் காணுமா? என்ன சொல்றீங்க? என்று  கேட்ட அந்த  மின்னும் தங்கப் பிரேமில் கண்ணாடி அணிந்திருந்தவரிடம் மிகச் சோர்வாகயிருக்கும் சரியாகப் பேசமுடியாமல் மெல்லிய குரலில் விபரங்களைச் சொல்லுகிறார்.  விஸ்வநாதன் தமிழ் நாட்டில் போலீஸில் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். ஆண்டுதோறும் 10 குடும்பங்களைத் தன் செலவில் காசிக்கும் கயாவிற்கும் அழைத்து வந்து தரிசனம் செய்வித்துப் புண்ணியம் சேர்த்துகொண்டிருப்பவர். மஹாதேவய்யர்.  பசியினாலும் நடையினாலும் களைப்பாகயிருப்பதைக் கவனித்த அவர் மஹாதேவய்யரை  தன்னுடன் வந்திருக்கும் குழுவினருடன்  சாப்பிடவைக்கிறார்.

 

 

அப்பா எங்கே திண்டாடுகிறாரோ? என்ற கவலையுடன் கங்கையைப்பார்த்து நின்று கொண்டிருந்த சங்கரன் தன் அண்ணனுக்கு போன் செய்ய நினைத்த போதுதான் போன் ரூமிலிருப்பதை உணர்ந்து அறைக்கு திரும்பி அங்கு பையில் அப்பாவிற்காக வாங்கிக்கொடுத்த புது போனைப் பார்த்த போது அவன் துக்கம் இன்னும் அதிகமாயிற்று

 

 

விஸ்வநாதன் மஹாதேவ அய்யரிடம் பேச்சுக்கொடுத்து  அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். பிள்ளை சங்கரன் சென்னையில்  டிசிஎஸ் ஸில் வேலை. 10 ஆண்டுகளுக்கு முன் காலமான தன் மனைவிக்குக்  கங்கையில் ஸ்ரார்த்தம் செய்ய வந்தது, கூட்டம் தள்ளியதில் தெருவுக்கு வந்தது எல்லாம் தெரிந்து கொள்கிறார். பின்னர் எவருக்கோ போன் செய்கிறார். 15 நிமிடத்தில் கம்பீரமான ஒரு ஆசாமி வந்து அட்டென்ஷனில் நிற்கிறார். “சண்முகம் என்று அவரை அழைத்துச்  சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி இவரைக் கவனித்து மகனிடம் சேருங்கள்.  நாங்கள் நாளை கயா போகிறோம்.அங்கிருந்து ஊர் திரும்புகிறோம்..

 

சண்முகம் மஹாதேவ் அய்யரை தனியே அழைத்து கனிவுடன் பேசுகிறார். பேசியதில் தங்கியிருக்கும் இடத்தின் பெயர்,மகனின் போன் நம்பர் எதுவும் நினைவில் இல்லையென்பதையும் அவருக்கென்று மகன் கொடுத்த போனும் ரூமிலிருப்பதையும் அறிந்துகொள்கிறார்..

 

“சரி மகன் போட்டோ இருக்கிறதா?

“இல்லை இருப்பதெல்லாம் இதுதான்” என்று ஜோல்னா பையில் கைவிட்டுத் தன் பர்ஸைக்கொடுக்கிறார். அதில்  காஞ்சிபெரியவரின் படம்  மடித்த சில பேப்பர்பொட்டலங்களில்  விபூதி பிரசாதம்.  இரண்டு 200 ரூபாய்கள் அவருடைய ஆதார் கார்ட். சற்று நேரம்  அதை உற்றுப் பார்த்த சண்முகம்  விஸ்வநாதனிடம் ஏதோ பேசுகிறார்.  நல்லது டிரை பண்ணுங்கள் என்கிறார்  அவர்.

 

 

 

 

 

சண்முகம் மஹாதேவ் அய்யரை அழைத்துச் சென்ற இடம் மூன்று மாவட்டங்களின் போலீஸ் சென்ட்ரல் டேட்டா சென்டர். 24 மணி நேரமும் இயங்கும். போலீஸ் அதிகாரிகள்  கேட்கும் தகவல்களைத் உடனடியாகத் தேடிக்கொடுக்கும்  ஒரு ஹைடெக்  அலுவலகம்.

 

 

சண்முகம் தமிழ்நாடு போலீஸில் சப் இன்ஸ்பெக்டர். தலைமறைவாகயிருக்கும் ஒரு தாதாவைத்தேடி காசிக்கு வந்திருக்கும் தனிப்படை டீமில் முக்கியமானவர்.. இப்போது இந்த  அலுவலகத்துக்கு அடிக்கடி வந்துகொண்டிருப்பவர். வேகமாக மாடியேறிச் சென்ற அவர் அங்குக் கம்ப்யூட்டர் முன்னால் இருந்தவரிடம் மஹாதேவ் அய்யரின் ஆதார் கார்டைக்  காட்டி இந்த ஆதார் நம்பரில்  மொபைல் லிங்காகியிருக்கிறதா? என்று பார்த்துச்  சொல்லுங்கள் என்கிறார்.  எந்த ஆதார் கார்டிலும் இணைக்கப்பட்டிருக்கும் போன், வங்கிக்கணக்கு எண் போன்ற கார்டில் அச்சிடப்படாத விபரங்களை  டேட்டாபேஸிலிருந்து பார்க்கும் அதிகாரம் பெற்ற அதிகாரி அவர் .

 

“ஆதார் சைட் காலையிலிருந்து சரியாக இல்லை சார்.. இப்போது பார்க்கிறேன் கொஞ்சம் வெயிட்பண்ணனும்” என்றவரிடம். “பரவாயில்லை. அதற்குள் நான் எஸ்பியை பார்த்துவிட்டு  வருகிறேன்” என்று அடுத்த மாடிக்குப் போகிறார் சண்முகம்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் “சண்முகம் சார்  வீ ஆர் லக்கி ஆதார் சைட் சரியாகிவிட்டது. அந்தக் கார்டில் லிங்கச் செய்யப்பட்டிருக்கும் போன் நம்பர் கிடைத்திருக்கிறது” என்று போனில் சொல்லுகிறார் அந்த அதிகாரி. .  விரைந்து வந்த சண்முகத்திடம்.  தான் கண்டுபிடித்திருக்கும் மொபையில் நம்பரைக் கொடுக்கிறார். ஒரு தமிழ் நாட்டு டானைப்பிடிக்க நாமும் உதவி செய்து கொண்டிருக்கிறோம் என்ற சந்தோஷம் அந்த அதிகாரியின் முகத்தில். சண்முகம் முயற்சி செய்துகொண்டிருப்பது  வேறு விஷயம் என்பது அவருக்குத் தெரியாது.

சண்முகம் அந்த நம்பரைத் தன் போனிலிருந்து கூப்பிடுகிறார் .ரிங் போகவில்லை. சற்று யோசித்துவிட்டு ஆப் செய்திருக்கிறது என்று நினைக்கிறேன். இதை “டிரேசர் அண்டு டிராக்கிங்கில் போடுங்கள். போன் ஆன் ஆகும் சிக்னல் வந்தவுடன்  என்னைப் போனில் கூப்பிடுங்கள்” என்று சொல்லி விட்டு மீண்டும் தன் பணியைத்தொடர மாடிக்குப் போகிறார்.

****

அண்ணாவுக்குப் போன் செய்ய முடிவு செய்த சங்கரன் போனை எடுத்தபோது அதில் சார்ஜ் இல்லை என்பதைக் கவனிக்கிறான். அதைச் சார்ஜில் போட்டுவிட்டு அப்பாவின் போனிலிருந்து கூப்பிடலாமே என அதை எடுக்கிறான் அதிலும் சார்ஜ் இல்லை.  அவருடைய  சார்ஜரைத் தேடி எடுத்து அந்தப் போனையும்  சார்ஜில் போடுகிறான்.

                          ***

 “சண்முகம் சார் போன் இஸ் ஆன் நவ் என்ற செய்தியைத் தன் செல்போனில் கேட்டவுடன்  வேகமாகக கிழே இறங்கி வந்து “டிராக் தி லொக்கேஷன் என்று சொல்லி விட்டு  அந்த நம்பருக்குப் போன் செய்கிறார்.

                            ****

சார்ஜில் போட்ட 5 நிமிடத்தில் அப்பா போனில்  ஒரு கால் வருகிறதே என்று ஆச்சரியப்பட்ட சங்கரனிடம்  போலீஸ் சென்ட்ரல் டேட்டா சென்டரிலிருந்து பேசுகிறோம் என்பதோடு  விபரங்கள் சொன்ன சண்முகம் உடனே இங்கே வாருங்கள் என்கிறார்.

 

 வாசலுக்குப் போய்க் கவலையுடன் அழுது கொண்டிருந்த மஹாதேவ  அய்யரிடம் “உங்கள் மகனைக் கண்டுபிடித்துச்  சொல்லியிருக்கிறேன்  இங்கே வந்துவிடுவார்” என்கிறார்.

நிஜமாவா?   ரொம்பத் தாங்க்ஸ் சார் என்று உரக்கச் சொல்லியபடி  அந்தக் கட்டிடத்தின் வாசலை நோக்கி ஓடுகிறார் அவர்..

 

“சார்  சார்  அவர் இருக்குமிடத்திலிருந்து இங்கே வர அரை மணியாகும். அதுவரை அமைதியாக இங்கே உட்காருங்கள் என்று உள்ளே அழைத்து உட்காரவைக்கிறார். சண்முகத்தோடு அவருக்கும் இப்போது காபி வருகிறது, மறுக்காமல்  வாங்கிக் குடிக்கிறார். முகத்தில் நிம்மதி.  ஆனால் அவர் பார்வை கேட்டை விட்டு அகலவில்லை.

 

“ஜல்தி சலோ பகுத் அர்ஜெண்ட் ஹே!  ஜல்தி சலோ”  எனத் தான் உட்கார்ந்திருந்த சைக்கிள்  ரிக்ஷாக்காரரை விரட்டுகிறான், சங்கரன்..

 

 குமுதம் இதழில் வெளியானது
.


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்