புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/11/16

ஒன்ஸ்மோர்


தினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை  அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி அவர்களுக்கும் , ஆசிரியருக்கும் நன்றி


அடையாற்றின் கரையில் உள்ள கோட்டூர்புரம் ஓர் அமைதியான பகுதி. நுங்கம்பாக்கத்திலிருந்து மாறி இந்த அதிகம் சந்தடியில்லாத இடத்திலிருந்த "சுபம்சிவம்இல்லத்தில்தான் சதாசிவமும் எம்.எஸ்ஸும் வசித்து வந்தனர். சிறிய அந்த அழகான வீடு எப்போதும் இசையால் நிரம்பியிருக்கும். நுழையும்போதே தம்பூரா ஒலி பூஜை அறையிலிருந்து பரவிக் கொண்டிருக்கும்.
கல்கி தோட்டம்போல பரபரப்பாக இல்லாவிட்டாலும், தினசரி சந்திக்க வருபவர்களுக்குக் குறைவில்லை. வருபவர்களை அவருக்கே உரிய இயல்பான இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பார் எம்.எஸ். வருபவர்களை இளையவர்களானால் வாஞ்சையோடு, "பாட்டு கற்றுக் கொள்கிறீயா?'' எனக் கேட்டு பாடச் சொல்லிக் கேட்பார்.
ராதாவின் துணையில்லாததால் மனம் சோர்ந்திருந்தவருக்கு உடல் நலமும் குன்ற ஆரம்பித்தது. சர்க்கரை நோய், மூட்டு வலி போன்ற உபாதைகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கச்சேரிகள் செய்வதற்கான அழைப்புகளை ஏற்காதிருந்தார். இந்தக் கட்டத்தில்தான் எதிர்பாராமல் நிகழ்ந்தது சதாசிவத்தின் மரணம். இது அவரை மிகவும் தாக்கியது. வாழ்க்கையே இருண்டு போனதுபோல் உணர்ந்தார். எப்போதும் அவரின் நினைப்பில் தனிமையில் இருந்தார். பூஜை அறையில் மட்டும் பாடிக் கொண்டிருந்தார். மகள் ராதா, பேத்தி கௌரி, விஜயா வந்தால் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது பாடுவார்.
கனத்த மனத்துடன் வாழ்க்கையில் பற்று குறைந்துகொண்டு வந்த நிலையில்தான் "பாரத ரத்னா' அறிவிக்கப்பட்டது. ஆத்மா போன்றவர்களின் வற்புறுத்தலால் தில்லி சென்றாரே தவிர, முழு மனமகிழ்வுடன் அதை அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து தில்லி அரசு அறிவித்த வாழ்நாள் சாதனை விருதைப் போய் வாங்கவில்லை. அவரது அன்புப் பேத்தி சீதா ரவி (கல்கி இதழின் ஆசிரியர்) தான் அவர் சார்பில் பெற்றார். அதில் கிடைத்த பரிசுத் தொகை 11 லட்சத்தையும் உருவாகிக் கொண்டிருந்த காஞ்சி முனிவரின் நினைவு மண்டபப் பணிக்குத் தரச் சொல்லிவிட்டார்.
நாட்கள் செல்லச் செல்ல உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. பல நாட்கள் அமைதியாகி, பூஜை அறையில் பாடிக் கொண்டிருந்ததையும் நிறுத்தியிருந்தார். ஒருநாள் ராதாவின் வீட்டுக்குப்போன இடத்தில் விழுந்து இடுப்பில் அடிபட்டது. எலும்பு முறிவு இல்லையென்றாலும் அதற்கான சிகிச்சை பல மாதங்கள் தொடர்ந்தது. அது முழுவதும் சரியானபோது மறுபடியும் அதேபோன்று விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து நீண்ட நாள் சிகிச்சை என்று துன்பங்கள் தொடர்கதையாயின. சிகிச்சைகள் மெல்ல  பலன் அளித்துக் கொண்டிருந்தாலும், மனம் அமைதியாக இல்லாமல் தவித்தார். அந்தக் கட்டத்தில் அவரைத் தாக்கியது மறதி நோய். இரண்டாயிரம் பாடல்களையும் ராகங்களையும் நினைவிலிருந்து எதையும் பார்க்காமல் பாடும் பாடகிக்கு மறதி நோய் வந்திருந்ததை ஆத்மா மிகுந்த வருத்தத்துடன் சொல்லக் கேட்டபோது மனம் உடைந்து போனது நிஜம்.
அதைவிடச் சோகம் வானொலி, தொலைக்காட்சியில் ஏதாவது கர்நாடக இசையைக் கேட்டால், "அதை நிறுத்து'' என ஆத்மாவிடம் சொல்லியிருந்ததுதான்.
 
உடல் நிலை மோசமானதால் 2004, டிசம்பர் 2-ஆம் தேதி இஸபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் எம்.எஸ். பத்து நாள் போராட்டத்தில் மருத்துவர்கள் தோற்றார்கள். விதி வென்றது. மல்லிகை தேசத்தில் பிறந்து மலர்ந்த அந்த தாமரை கடைசி விநாடியில் ஆத்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே வாடி விழுந்தது.
புனேவிலிருக்கும் திலிப் ராய் என்ற ஆன்மிக குருவின் ஆசிரமத்தில் எம்.எஸ். தங்கிப் பாடியபோது ஒரு நிகழ்ச்சியில் அவர் எம்.எஸ்ஸுக்காக எழுதிப் பாடிய கவிதை இது.
 
"இடையறாது பாடிக் கொண்டே
  
எங்களை அழகிலிருந்து
 
ஆனந்தத்திற்கு இட்டுச் செல்
 
ராதா கிருஷ்ண ஜோதியின்
 
நிரந்தர தீபமாய்
 
சுடர்விட்டுக் கொண்டே இரு''

எவ்வளவு அருமையான வார்த்தைகள். ஆசிரியர் கல்கி, வீணை பவானி என்ற கதையில்,  "பவானியை மற்ற மனிதர்களைப் படைத்ததைப்போல பிரம்மா படைக்கவில்லை. மோகனத்தையும் செஞ்சுருட்டியையும் சேர்த்துப் படைத்திருக்கிறார். பவானி செத்துப் போகும்போது அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி ராகங்களாகக் காற்றில் போகும்
 என்று வர்ணித்திருப்பார்அமரர் கல்கியின் இந்த வரிகள் எம்.எஸ்ஸுக்கானது என்றால் தவறில்லை.
 
பல்வேறு ராகங்களாகக் காற்றில் கரைந்து போன எம்.எஸ்., நமக்காகத் தினமும் காற்றிலே வரும் கீதமாக ஒலித்துக் கொண்டுதானேயிருக்கிறார்?

"காற்றினிலேவரும்கீதம்: இசையரசியின் வாழ்க்கைப் பயணம்'          என்ற நூலில் ரமணன்.

தொகுப்பு: கேசி


10/10/16

காற்றினிலே வரும் கீதம்




கவிதா பதிப்பகம் அவர்களது 40ஆம் ஆன்டுவிழாவை சிறப்பான விழாவாகக்  24/09/16 அன்று கொண்டாடினார்கள். அதில் எனது காற்றினிலே வரும் கீதம் புத்தகம் வெளியிடப்பட்டது.   எழுத்தும் எடுத்த முயற்சிகளும்  நல்ல முறையில் கெளரவிக்கப்பட்டது சந்தோஷமாக இருந்தது.  நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களிள் சில இங்கே வீடியோ வாக பார்க்கலாம்   கீழே வலது மூலையிலிருக்கும் சதுரத்தைக் கிளிக்கினால்  படங்களைப் பெரிதாகப் பார்க்கலாம்.

 காணொளிகள்  அனுப்பவதாகச் சொல்லியிருக்கிறார்கள்..