12/2/18

நல்ல புத்தகங்களும் நான்கு நண்பர்களும்.



“இப்போது சரியாக 6.மணி 30 நிமிடங்கள்” என்ற வார்த்தைகளூடன் வாசகர்களை வரவேற்கிறார் திரு ரவிதமிழ்வாணன். நிகழ்ச்சி நிரலில்

அட்டவணைபிட்டபடி வினாடி தவறாமல் நிகழ்ச்சிகளை நடத்தி சரியாக 8                   
மணிக்கு நன்றி அறிவிப்போடு முடிகிறது புத்தக நண்பர்கள் என்ற அமைப்பின் மாதந்திர கூட்டம். ஓவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை மாலை ஒரு தமிழ் புத்தகம் அறிமுகம் செய்யப்படுகிறது
.
கூட்டத்தின் துவக்கத்தில் ஒலிக்குப்போகும் இறைவணக்கப்பாடல் எத்தனை நிமிடம், எத்தனை வினாடிகள் என்பதைக்கூட அறிவிக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு எழுத்தாளார்/ அல்லது பத்திரிகையாளர்பற்றி நினைவேந்தலாக ஒரு சிறு குறிப்பைச்சொல்லுகிறார்கள். பின்னர் அன்றைய ஆய்வாளாரின் அறிமுகத்துக்குபின் அவர் பேச அழைக்கபடுகிறார்
.
(TAG)(டேக் மையத்தின் தலைவரான தொழிலதிபர் திரு ஆர். டி சாரி. விளம்பரத்துரை வல்லுனர் திரு ஆர். வி ராஜன், மூத்தபத்திரிகையாளார் ‘சாருகேசி” புத்தக பதிப்பாளார் திரு ரவி தமிழ்வாணன் ஆகிய நால்வர் இணைந்து உருவாக்கியது தான் இந்தப் புத்தக நண்பர்கள் அமைப்பு திரு ஆர். டி சாரியின் குடும்ப அறக்கட்டளை இதற்குத் துணை நிற்கிறது   
 இந்த அமைப்பு 2014 பிப்ரவரியிலிருந்து மாதந்தோறும் ஒரு கூட்டத்தை நடத்துகிறது. தேர்ந்த்தெடுக்கபட்ட ஒரு புத்தகம் அதில் திறனாய்வு செய்யபட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. புத்தக அறிமுகம் அலங்கார வார்த்தகளில் அறிமுகமாகவும் இல்லாமல் மிகக்கடுமையான விமர்சனங்களும் இல்லாமல் நேர்மையான திறனாய்வாகயிருக்கிறது. புத்தகத்தைபோலவே திறனாய்வாளரும் இந்த நண்பர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். . சில ஆய்வுகள் பல்கலைகழக ஆய்வுகளைப் போல மிகச்சிறப்பாகயிருக்கிறது. புத்தக ஆசிரியர்களூடையதைப்போலவே அவர்களது உழைப்பையும் உணரமுடிகிறது.

அறிமுகத்துக்குப் பின் புத்தக ஆசிரியர் பேச அழைக்கப்படுகிறார். நூலாசிரியரின் உரைக்குப் பின் கூட்டத்தில் பார்வையாளரின் கேள்விகளுக்குப் பதில் அவர் பதிலளிக்கிறார். இந்தக் கேள்விகள் பார்வையாளர்களிடமிருந்து எழுத்துவடிவில் பெறப்பட்டு அதை நெறியாளர் ரவி தமிழ்வாணன் மேடையில் அவர்கள் சார்பில்  கேட்கிறார். பார்வையாளார்கள் நேரடியாகக் கேட்க    அனுமதியில்லை.

இதுவரை 43 கூட்டங்களை நடத்தியிருக்கும் இந்த அமைப்பில் ஆய்வு செய்யப்பட்டிருக்கும் புத்தங்களின் பட்டியல் மிக நீண்டது. அசோகமித்திரனின் புத்தகத்துடன் துவங்கிய முதல் கூட்டம் இந்திரா பார்த்தசாரதி போன்ற உலகம் அறிந்த ஆசிரியர்களிலிருந்து, புதிதாக எழுதத்துவங்கியிருக்கும் எழுத்தாளார் வரை பலரின் படைப்பை அறிமுகம் செய்திருக்கிறது.

சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கும்  பல அமைப்புகளை நமக்குத்தெரியும். இந்தப் புத்தக நண்பர்கள் அமைப்பு ஆண்டின் 12 மாதங்களில் செய்யப்பட்ட திறானாய்வுகளில் சிறந்ததைத் தேர்நெடுத்து திறானாய்வு செய்தவருக்குப் பணப்பரிசு வழங்குகிறார்கள். 2016ம் ஆண்டுக்கான சிறந்த திறானாய்வுக்கு  ரூ 25000 பரிசு அளிக்கபட்டிருக்கிறது. இதைத்தவிர தமிழின் சிறந்த படைப்பாளிகளுக்கு வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கிக் கெளரவித்திருக்கிறார்கள்.

ஆய்வுக்குப் புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்? வாசிப்பதை நேசிக்கும் நால்வரும் வாசித்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நண்பர்கள் பரிந்துரை செய்பவற்றையும்  வாசித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள் நூலாசிரியர், ஆய்வாளார்கள் தொடர்பு கொள்வதை திரு சாருகேசி கவனிக்கிறார்.

“குறைந்தது 100 பார்வையாளர்களையாவது ஒவ்வொரு மாதமும்  வரவேற்க வேண்டும் என்பது. எங்கள் இலக்கு. இந்த ஆண்டு எல்லா மாதங்களிலும் அந்த எண்ணிக்கையைக் கடந்து பார்வையாளார்கள் வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்” என்கிறார் அமைப்பாளர் திரு ரவி தமிழ்வாணன். “அதைவிட தொடர்ந்து வரும் பார்வையாளார்கள் நல்ல நண்பர்களாகியிருப்பதும் கூட்டங்கள் ஒரு குடும்பநிகழ்ச்சி போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பதும்தான்  மிக மகிழ்ச்சித்தரக்கூடிய விஷயமாகயிருக்கிறது என்கிறார் இவர்.

 கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு ஓவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் இனிப்புடன் கூடிய இனிய சிற்றுண்டியும் வழங்கிறார்கள் ஆம்! வயிற்றுக்கு நல்லுணவுவிட்ட பின்னர்தான் இலக்கியத்திற்கு செவி சாய்க்க அழைக்கிறார்கள


24/1/18

யானைக்குட்டியை தூக்கிய பாகுபலி




தான் விரும்பும் பணியைச் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வேலையை பொருளாதரா அழுத்தங்களினால் தொடர்பவர்கள் பலர். ஆனால் கோவையைச் சேர்ந்த சரத்குமார் இவர்களிலிருந்து மாறுபட்ட இளைஞர். பட்டபடிப்பு முடித்த இவருக்கு கிடைத்த வேலை ஒருதொழில் நிறுவனத்தின் விற்பனை அதிகாரி. காடுகளையும் யானைகளையும் நேசிக்கும் சரத்குமாருக்கு அந்த வேலையில அவ்வளவு பிடிப்பில்லை. தனது மாவட்ட எல்லையில் ஒரு நாள் யானை ஒன்று புகுந்து அட்டகாசகம் செய்து கொண்டிருந்தது. அதை விரட்ட வனத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்த சரத் குமாருக்கு தெரிந்த ஒரு விஷயம் வனத்துறையில் யானைகளை தந்தங்களுக்க கொல்வதை தடுப்பதற்கும், மனிதர்கள் வாழும் பகுதியில் வரும்யானைகளை விரட்டித் திரும்ப காட்டுக்குள் அனுப்ப தனியாக ஒரு ஸ்குவாட் இருப்பது. உடனேயே பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வனத்துறையில் அந்தப் பணியில் சேர்ந்தார். சம்பளம் குறைவுதான். ஆனால் அவர் நேசிக்கும் யானைகளை தினசரி பார்க்கலாம் என்ற நிறைவு.

கடந்த மாதம் இவர் செய்த ஒரு துணிவான செயலால் இன்று இவர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் வனவிலங்குகளின் நல ஆர்வலார்களால் பாராட்டப்படுகிறார்.

பாவனி ஆற்றில் நீர் அருந்த வந்த பெரிய யானை ஒன்று நதிக்கரையிலிருக்கும் கிராமமான சமயபுரத்தின் உள்ளே புகுந்து இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் கடைகளையும் உடைத்து நொறுக்கி துவம்சம் செய்து கொண்டிருக்கிறதாக செய்தி வந்தவுடன் சரத்குமார் தன் குழுவுடன் அங்கு விரைந்தார்.
பணியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கும் சரத்குமாருக்கு பலயானைகளையும் அதன் குணங்களையும் பற்றி நன்கு தெரியம். வந்திருப்பது வயதான ஒரு பெண்யானை. 3 மணி நேரம் போராடி அதைக்காட்டுக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர் குழுவினர். ஆனால் அரைமனிக்குள் திரும்பவும் வந்து கண்ணில் பட்டதையெல்லாம் மிதித்து நொறுக்க ஆரம்பித்தவிட்டது அந்த யானை. அப்போது சரத்குமார் கவனித்த விஷயம் அந்த யானை ஏதோ ஒரு கோபத்திலிருக்கிறது என்பதைத்தான். மறுபடியும் அதை விரட்டிவிட்டு அதன் கோபத்துக்கு காரணம் என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டே நடந்த போது அவர் பார்த்தது.

 காட்டில் உபரிநீர் வழிந்தோட அமைக்கப்பட்ட கால்வாயில் சிலாப் திறாந்து கிடந்த்தையும் அதன் உள்ளே   பள்ளத்தில் விழுந்திருந்த சின்ன சிறு யானைக்குட்டியையும். . பிங்க் வண்ண துதிக்கையுடன் சின்னஞ்சிறு பிறந்து 10 அல்லது 15 நாளே இருக்கும்  அந்த யானைக்குட்டி. சரியாக நிற்க, நடக்க்க் கூட தெரியாத அந்த குட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டிருக்கிறது. வெளியில் வரத்தெரியவில்லை. தாய் யானை பள்ளத்தின் ஒருபுறம் அது வெளிவர மண்னைத்தள்ளி மேடாக்கி முயற்சித்திருக்கிறது. ஆனாலும் அதற்கு வெளியே வரத்தெரிய வில்லை. தன் அருமைக்குழந்தையை மீட்க முடியாமல் தவித்த தாயின் கோபம் தான் தாக்குதலுக்கு காரணம்.

பள்ளத்தில் தவிக்கும் குட்டியைப் பார்த்தவுடன் விஷயத்தைப் புரிந்த கொண்ட சரத் குமார் குழுவினர் பள்ளத்தினுள்ளே இறங்கி பயந்து மிரண்டு போயிருந்த அந்தக்குட்டியை வெளியே கொண்டுவந்தனர். தாயின் பாலைத்தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாத அந்த பச்சைக்குழந்தையை காட்டுக்குள் விரட்டமுடியாது. அதன் தாய்வரும் வரை காத்திருக்கவும் முடியாது. மேலும் மனிதர்களுடன் குட்டியைப் பார்த்தால் அவர்கள் செய்யும் உதவியைப்புரிந்து கொள்ளாமல் பயங்கரமாகத்தாக்கும் அபாயாமும் உண்டு
.
அப்போது அவர் செய்ததுதான் வீடியோவில் வைரலாகப் பரவி உலகை ஆச்சரியபடுத்திக்கொண்டிருகிறது 
அந்த குட்டி யானையை தன் தோள்களில்., பாகுபலி கனமான லிங்கத்தை தூக்கியதைப் போல 50 மீட்டர் தூரத்திலிருக்கும் ஜீப்புக்கு ஒட்டமும் நடையுமாக வேகமாக கொண்டுசென்றார். உள்ளூர் போட்டோகிராபர் எடுத்த அந்த வீடியோவை பிபிசி  செய்தியில் காட்டியது

100 கிலோ கனமிருக்கும் அதை எப்படி ஒருவராகத்தூக்கினீர்கள்? என்ற கேள்விக்கு சரத் சொன்னபதில். “எனக்கே தெரிய வில்லை. அந்த வினாடியில் அதை உடனடியாக ஜீப்புக்குகொண்டு போய்விடவேண்டும் என்ற எண்ணம் தான் மனதிலிருந்தது”. மேலும், இரண்டு மூன்றுபேர் ஒரு குட்டியைத்தூக்குவது என்பதும் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று எனக்குத்தெரியும்
காட்டுக்குள் 12 யானைகள் கூட்டமாக இருக்கும் ஒரு குழுவில் அதன் தாய் யானையை அடையாளம் கண்டு அதனருகில் குட்டியைவிட்டு பாதுகாப்பான தூரத்தில் காத்திருந்தோம். அப்போது காலை 3 மணி என்பதால் தாய்யானை அதை அழைத்துசென்றதைப்பார்க்க முடியவில்லை. ஆனால் அப்போது  காடே அதிரும்படியான அதன் சந்தோஷப் பிளிரலில் எனக்கு செய்தி கிடைத்துவிட்டது என்கிறார் சரத்குமார்
கல்கி 28/01/18ல் எழுதியது
 https://youtu.be/XufMeIFn4A8

16/1/18

குடகு மலைக் காற்றினிலே 7



தலக்காவிரி, பாகமண்டலாவிலிருந்து திரும்பும்போது கவனித்த விஷயம் பல இடங்களில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஓடிப் பின் இணைந்து தீவுக் கிராமங்களை உருவாக்கியிருக்கிறது என்பதையும் அதனால் பல இடங்களில் அந்தக் கிராமங்கள் ஒரு தொங்கு பாலங்களால் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும். வெள்ளக்காலங்களில் பரிசல் விபத்துக்க:ளைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஒரு பாலத்தில் நடந்து மறுகரையிலிருக்கும் கிராமத்துக்குப் போகிறோம். நடைப்பாதைப் பாலத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்ற போர்டை கடந்து வரும் அவைகள் நம்மைப் பயமுறுத்தாமல் மெல்ல உரசி செல்லுகின்றன. கரும்பு செழித்து வளர்ந்து வெட்டுப்பட உடலை வளைத்து நிற்கின்றன. 

 குஷால்பூர் மெடிக்கேரி மலையடிவாரத்திலிருக்கும் சின்ன நகரம். பல எஸ்டேட் உரிமையாளார்களீன் வீடுகளும் அலுவலகங்களும் இருப்பதால் நகரம் பெரிய வீடுகள் ஆடம்பர அலுவலக கட்டிடங்கள் என்று மெல்ல பணக்கார சாயலைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒரு திபேத்தியர்களின் பெளத்த மடத்தைப் பார்க்க விரும்பி நாம்டொரிலிங் மானஸ்ட்ரிக்கு (Namdroling Monastery) வழி கேட்கிறோம். ஓ; தங்க புத்தர் கோவிலா? எனக்கேட்டு வழி சொல்லுகிறார்கள். எளிமைப்போதித்த புத்தரை அடையாளம் காட்டுவது அவர் மீதிருக்கும் தங்கம்
,
புத்தர் நிர்வாணம் அடைந்தபின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் ஏற்பட்ட மாறு பட்ட கருத்துக்களினால் புத்தமதத்தில். 20க்கும் மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும் மேல் திபெத்தில் பிறந்தவை. அதில் ஒன்று தான் நாம்டொரிலிங் பிரிவு. சீன ராணுவத் தாக்குதலால் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு அகதிகள் அந்தஸத்தை அளித்து இந்தியாவின் சிலபகுதிகளில் இடமும் வாழும் வசதியையும், கொடுத்தது அன்றைய அரசு. அப்படி இங்கு வந்துசேர்ந்த அகதிகளில் ஒரு புத்த பிட்சு இந்த மடத்தின் 11 வது தலைவர். அவருடன் வந்த 10 பேருடன் ஒதுக்கபட்ட காட்டுப்பகுதியில் முதலில் மூங்கிலால் உருவாக்கபட்ட கோவில் இன்று தங்கபுத்தர் கோவிலாக வளர்ந்திருக்கிறது.


உள்லே நுழைந்தால் எல்லாமே பிரம்மாண்டமாகயிருக்கிறது. பெரிய முற்றத்தை சுற்றி ப வடிவில் கல்லூரி ஹாஸ்டல் மாதிரி 3 மாடி கட்டங்கள். உள்ளே பசுமையான புல்வெளீயின் நுனியில் கோயில்கள். முதல் கோயிலின் முகப்பில் நிறுவியவரின் பெரிய ஸைஸ் படம். அவர் தெய்வ நிலையை அடைந்துவிட்டதால் வழிபடத் தக்கவாராம். அதன் அருகே ஒரு. பெரியதியட்டர் சைசில் இருப்பது தான் புத்தர் கோவில்.அதில் அவரும் அவரது குருவும் தங்கமயமாக இருக்கிறார்களாம். வரும் பிப்பரவரி திருவிழாவிற்காகப் புத்தர் புதிய தங்க மூலாம்பூச்சில் குளித்துக்கொண்டிருப்பதால் பார்க்க முடியாது என்றார்கள்.
அங்குள்ள கட்டடங்களின் உள்ளும் புறமும், ஜன்னல், தூண்கள் கதவு மேற்கூரை எல்லாம் ஒரு அங்குலம் விடாமல் அழுத்தமான வண்ணங்களில் திபேத்திய- சீனப்பாணி படங்கள் கலை வடிவங்கள், மிக அழகாக நம்மைக்கவர்கிறது. சுவர்களில் பெரிய அளவுப் படங்கள். அவை ராமாயணத்தின் அடையாளம் காட்டுவது போல இருந்தாலும் பெளத்தில் ஏது இராவணன்? எனக் குழம்புகிறோம். கண்ணில் படும் துறவிகளும் நமக்குப் பதில் சொல்லுவதில்லை, மெளன விரதமோ, மடத்துவிதியோ, ஆங்கிலம் தெரியதோ என நினைத்துக்கொள்கிறோம்.
1963ல் துவக்கப்பட்ட மடம் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்க உள்பட 10 நாடுகளில் கிளைகளுள்ள மடத்தின் தலமையகம் இது. அவர்களின் மதக்கல்வி பெற உலகின் பல இடங்களிலிருந்து துறவிகள் வருகிறார்கள். சுமாராக 3000 பேர் 800 பெண் துறவிகள் உள்பட இங்கே இருக்கிறார்கள். புத்த மதத்துறவி பயிற்சிக் கல்லூரி, துறவியாகப் போகும் மாணவர்களுக்கான பள்ளிக்கூடம், மருத்துவமனை எல்லாம். என்று ஒரு வசதியான ஹை டெக் கிராமே இந்தக் கோட்டைக்குள் இயங்குகிறது
.
செலவுகளை எப்படிச் சமாளிக்கிறார்கள்? நன்கொடைகள் என்கிறார்கள், மேலும் இங்கு பயிற்சி பேரும் துறவிகளுக்கான கட்டணத்தை அந்தந்த நாட்டிலிருக்கும் செல்வந்தர்கள் ஏற்கிறார்கள் என்கிறார்கள். நூலகம்-- மருந்துக்கூட ஒர் ஆங்கிலப்புத்தகம் இல்லை. எல்லாம் திபேத்திய சீனப்புத்தகங்கள். வளாகத்தினுள்ளே திபெத்தில் இவர்கள் மடம் இருந்த இடமான இமயமலைக் கிராமம் இருந்த இடத்தின் மாடலை வைத்திருக்கிறார்கள்
.
நாட்டுமக்களின் எல்லா மதங்களும் சமமானவை என்ற சார்பற்ற கொள்கைக் கொண்டிருப்பது நமது அரசியல் அமைப்புச் சட்டம். அந்தக் கெளரவத்தை வந்த அகதிகளின் மத்த்துக்கும் வழங்கி அதையும் வளர்க்க வழி செய்திருப்பதைப் பார்க்கும்போது, பெருமையாகவும், இதைப்புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்யப்படுவதைக் குறித்து வருத்தமாகவும் இருந்தது.
வளாகத்தின் ஒரு முனையில் பிரார்த்தனை, கலைப்பொருட்கள், புத்தர் வடிவங்கள் விற்கும் கடை. சிக்கிம் பூடானில் கிடைக்கும் பொருட்கள் கூடக் கிடைக்கிறது. விற்பவர்கள் துறவிகள். ஆங்கிலம் பேசுகிறார்கள். பேரம் பேசமுடிகிறது.கார்ட் ஏற்கும் வசதியில்லை.       வாங்கிய பொருளுக்கு எவ்வளவ ஜிஎஸ்டி என்று கேட்டேன். எங்களுக்கு விலக்கு இருக்கிறது ஆனால் பில் கிடையாது என்றார் துறவி.   வரி விலக்கு    உண்மைதானா?- அந்தப் புத்தருக்குதான் வெளிச்சம்.
மறுநாள் மைசூரிலிருந்து திரும்பும் பயணம். சதாப்தி மதியம் தான் என்பதால் 'சுக- வனம்' என்ற கிளிகள் காப்பகத்துக்குப் போனோம். சத்திதானந்த ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்திலிருக்கிறது அது. அழகான தோட்டம் முழுவதும் மிகப்பெரிய கொசுவலைக்குள். உள்ளே சிறிதும் பெரிதுமாகக் கூண்டுகள். அவற்றினுள்ளும் , வெளியிலும் உலகின் பல நாட்டு வண்ணக் கிளிகள். நாம் தபால்தலைகளில் பார்க்கும் அழகான வண்ணக்கிளிகள். பல சைஸ்களில். சில கிளிகள் என்று நம்பமுடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஒரே இடத்தில் பல இனக்கிளிகள்: இருக்குமிடம்  என  கின்னஸ்  இதைச் சாதனையாகச்சொல்லுகிறது.
அழகாக இருந்தாலும், ஆசாபசங்களை கடந்து விடுதலைப்பெற மனிதர்களுக்கு வழி சொல்லும் ஆசிரமத்தில் ஏன் இவைகளை இப்படி சிறையிட்டுவைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இறைவனிடமிருந்து ஸ்வாமிகளுக்கு என்ன கட்டளையோ நமக்குத் தெரியாது. என்று எண்ணிக்கொள்கிறோம்.
சதாப்தி கிளம்பிவிட்டது. 
இன்று இரவிலிருந்து குடகுமலைக்காற்றை மறந்து “நம்ம’ சென்னைக்காற்றுதான்.