அறிவியல் அற்புதம்!
கடந்த சில வாரங்களுக்குமுன் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு அறிவிக்கப் பட்டிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளில் மிகவும் முக் கியமானதாகக் கருதப்படும் “ஈர்ப்பு விசை அலைகள்” பற்றி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பு நிலை கோட்பாடு எனும் இயற்பியல் தத்துவத்தில் விளக்கி இருந்தார். ஈர்ப்பு விசைபற்றி ஐன்ஸ் டீன் விளக்கம் அளித்து இருந்தாலும், சில சந்தேகங்களையும் தனது ஆய்வு கட்டுரையில் எழுப்பி இருந்தார். விண்வெளியில் உள்ள கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது வெளிப்படும் அதிர்வலைகள் தான் “ ஈர்ப்பலை” எனப்படுகி றது.
இந்த ”ஈர்ப்பலை” ஒளியின் வேகத்துக்கு இணையாகச் செல்லக் கூடியது. இதன் ஆற்றலை எதைக் கொண்டும் தடுக்க முடியாது.இந்த அலைகள் வெளிப்படுவது வெறும் கண்ணுக்குத் தெரியாது. இதைப்பார்க்க முடியுமா என்பதும் அதன் வேகத்தை அளக்க முடியுமா என்பதும் சந்தேகமே இதை நிரூபிக்க இயலாது என்றும், அத்தகைய அலைகள் மிகவும் நுட்பமானவை என்றும் அவர் கட்டுரையில் கூறியிருந்தார்.
.அணுவைத் துளைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் அறிவியல் ஆய்வுகள்மூலம் இந்த ஈர்ப்பாற்றல் அலையையும் அதன் வேகம் போன்றவைகளைத் தான் இப்போது கண்டறிந்துள்ளனர் லிகோ விஞ்ஞானிகள். லிகோ என்பது ஒரு சர்வ தேச விஞ்ஞான ஆய்வகம்.(. Laser
Interferometer Gravitational Wave Observatory (LIGO) —
அமெரிக்காவில் ஹான்போர்ட் என்ற இடத்தில் திறந்த வெளியில் பெரும் செலவில் உருவாக்கிப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி லிகோஆய்வு மையங்களை உலகின் பல பகுதிகளில் நிறுவத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்காக அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
4 கீமி நீளத்தில் ல் L வடிவத்தில் அமைக்கப் பட்ட நீண்ட கான்கீரிட் குகைகளில் வெற்றிடத்தை உருவாக்கி அதில் ஈர்ப்பு சக்தியின் கூறுகளை ஆராய்ந்தார்கள். 2010 வரை ஈர்ப்பு சக்தி என்பது ஒரு அலையாக இருக்கிறதை அவர்களின் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்க முடியவில்லை, ஆனால் நம்பிக்கையுடன் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார்கள். இந்த ஆண்டு ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற லீகோ அறிவியல் அறிஞர்கள். . ஈர்ப்பாற்றல் அலைகளை ஒலி வடிவமாக்கி ஏற்றத் தாழ்வுகளுடன் ஒலிக்கும் இசையைப்போல அதைக் கணினியில் காட்டியிருக்கிறார்கள்.
அந்த ஈர்ப்பு அலைகளில் வேறு பொருட்கள் மோதினால் உண்டாக்கும் தாக்கத்தையும் கணினியில் காட்டினார்கள்.
இந்த வரலாற்றுப் பெருமை மிக்க வெற்றி சாதனையில் இந்தியர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. . லிகோவிற்காக உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வு மேற் கொண்டு வந்தனர். இந்தியாவிலிருந்து 37 விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். புனேவில் உள்ள வானியல் மற்றும் விண் வெளி இயற்பியல் பல்கலைக் கழக மையத்தில் பணி யாற்றும் சஞ்சீவ் துரந்தர் மற்றும் சத்ய பிரகாஷ் எனும் விஞ்ஞானிகள் நவீன தொழில் நுட் பத்தின் மூலம் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவது பற்றிக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றனர். .அதன் அடிப்படையில் தொடர்ந்த அனைத்து விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளினால்தான் தற்போது ஈர்ப்பு விசை என்பது அலைவடிவிலிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அளவிட முடியாது எனக் கருதப்பட்ட ஈர்ப்பு விசை ஒலியைப் போல அலையாகப் பரவும் தன்மை கொண்டது என்பதை அந்த விசையை ஒலி வடிவமாக்கிக் காட்டியிருக்கின்றனர் லிகோ விஞ்ஞானிகள்.
இந்தக் கண்டுபிடிப்பால் என்ன பயன்?
வானொலி அலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இயற்பியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தகவல் தொழில்நுட்பத்தில் மெல்ல, மெல்லப் பல மாற்றங்கள் ஏற்பட்டு இன்று உலகம் முழுவதும் இணைய வலைக்குள் பின்னிக்கிடக்கிறது. அதே போன்று, ஈர்ப்பாற்றல் அலைகளின் அடுத்தகட்ட ஆய்வுகள் பயனுறும் அறிவியலாக மாறும்போது வானவியலில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். நாம் கனவிலும் கூட நினைத்திராத, அல்லது சில அறிவியல் புதினங்களில் நாம் படித்து வியந்த பல விஷயங்கள் நடைமுறை வாழ்வில் வரக்கூடும். ஆய்வு படிப்படியாக நகர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்த உலகம் எப்படி உருவானது? என்ற கேள்விக் கூட விடை கண்டுபிடிக்க உதவப்போகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்தப் பேரண்டத்தில் உள்ள கோள்கள் எப்படித் தடம் மாறாமல் அந்தரத்தில் சுழலுகின்றன?.என்ற கேள்விகளுக்கு ஈர்ப்பாற்றல் அலைகள் ஒரு புதிய பதிலைக் கொடுக்கக்கூடும்.
.8 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கத் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் ஒரு லிகோ ஆய்வு மையம் 1000கோடி செலவில் அமைக்கும் அறிவிக்கப்பட்ட திட்டம் அமைச்சகங்களில் சிவப்பு நாடாக்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்தது. இப்போது ஆராய்ச்சியின் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி கொள்கையளவில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார். ஆனால் செயலாகக் குறைந்த பட்சம் 8 ஆண்டுகள் ஆகும் என இந்து பத்திரிகை எழுதியிருக்கிறது.
.சர்வதேச அளவிலான இது போன்ற ஆராய்ச்சிகளில் இந்திய விஞ்ஞானிகள் பங்கேற்று பெரும் பங்களித்திருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை தரும் விஷயமாக இருந்தாலும். , இந்தியாவிலேயே இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள இதுவரை நமது அரசு நம் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.