6/6/10

வரப்போகும் லாமாவிற்காக காத்திருக்கும் பறக்கும் தொப்பி



மாநிலத் தலைநகரின் பிராதான சலையான அது மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பளிச்சென்று படுசுத்தமாக இருக்கிறது அந்த சாலையில் எந்த வாகனத்திற்கும்  அனுமதியில்லாதால்ஹாரன் ஒலியே இல்லை.நடைபாதையில் செல்பவர்களும் மெல்லப்பேசிக்கொள்வதினாலும் எதோ வெளிநாட்டின் நகர் ஒன்றிலிருக்கும்  உணர்வைத்தோற்றுவிக்கிறது அந்த இந்திய நகரம். அந்த சாலையில் துப்பவோ, சுத்தமான சூழ்நிலையை பாதிக்கும் வகையில் எதாவது செய்தாலோ தண்டனை என அறிவிக்கப்பட்டநம் நாட்டின் முதல் தூய்மைப்பிரேதேசம் காண்டாக் நகரம்.
8000மீட்டர் உயரத்தில் இமயத்தின் மடியிலிருக்கும் மாநிலம் சிக்கிம்.மூன்று அயல் நாடுகளின் எல்லையை மாநில எல்லையாக கொண்டிருக்கும் இந்த  குட்டி மாநிலத்தின்(மாநில பரப்பளவே7000 சதுர கீமிதான்)  குட்டி தலைநகர் காண்டாக்.  தலைநகரை இணைக்கும் ரயில் பாதையோ, விமானநிலயமோ கிடையாது.  மாநிலத்தின் பிற பகுதிகளை இணைக்கும் சாலையும்,பஸ் நிலையமும் நகருக்கு வெளியே தான். நகருக்குள் மாருதி வேன்கள் தான் டாக்ஸிகளாக அனுமதிக்கபட்டிருக்கின்றன
பளிங்குவெள்ளையாய் பனி மூடிய  கஞ்சன் ஜிங்கா சிகரத்தின் பின்னணியில்  பரவிக்கிடக்கும் பசுமையை ரசித்தபடி அந்த  மலைநகரத்தில் இதமான குளிரில் நடப்பது சுகமாகயிருக்கிறது வெள்ளை மாளிகையென அழைக்கப்படும் சட்டமன்ற கட்டிடத்தை தவிர சில.சின்ன சின்ன சத்தமில்லாத அரசாங்க கட்டிடங்கள்,ஆடம்பரமில்லாத கடைகள் மலைச்சரிவின் நடுவே ஒருபெரிய கட்டிடத்தினுள்ளே அமைந்திருக்கும்  அழகான ஆர்கிட் வகை பூக்களுக்காகவே (பலநாட்கள் வாடமிலிருக்கும் வகை) நிறுவப்பட்டிருக்கும் தோட்டம், அருகிலேயே நகரைப்பெருமைப்படுத்திய ஒரு நேப்பாள கவிஞரின் சிலையுடன் அழகிய பூங்காமக்கள் மாலைப்பொழுதை  நகர போலீஸ் பேண்டின் இசையுடன் அனுபவிக்க காலரிகள் அமைக்கபட்ட பெரிய சதுக்கம். இப்படி எல்லாவற்றையும்  நடந்தே  4 மணி நேரத்தில் சுற்றிப்பார்த்த பின் நாளை என்ன செய்யலாம் என்பதை பற்றி  அந்த புத்தக கடையில் சுற்றிக் கொண்டிருந்தபோது  பேசிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்ட அந்த  கடையின்(100ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது] இன்றைய தலைமுறை உரிமையாளர்   ரூம்டெக் என்ற வரலாற்று சிறப்புமிக்க மிகப் பெரிய புத்த மாடத்தையும் அங்கு நடைபெறும் திருவிழாவையும் பற்றிச் சொல்லி மறுநாள் அதைபார்க்க ஏற்பாடு செய்துகொடுக்கிறார்.
மறு நாள் அழைத்து செல்ல வந்த டாக்ஸிக்கரார் திபெத்தியர்.அந்த மாருதி வேனில் பெரிய அளவில் தலைலாமா படம்,பிரார்த்தனை வாசகங்கள். இங்கு அனேகமாக எல்லா கடைகளிலுமே தலைலாமாவின் படங்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபடுகிறார்கள்.திபேத் ஒருநாள் சுதந்திர நாடகிவிடும் என்ற நம்பிக்கயை கைவிடாதிருக்கிறார்கள். அதேபோல சீன கலாசாரத்தின் சாயல் பல இடங்களில் தெரிகிறது.டிரைவர் தனக்கு  உள்ளுர் மொழி தவிர நேபாளிமட்டும் தான் தெரியும் என்பதால் நமக்கு உதவ ஆங்கிலம் தெரிந்த உதவியாளரை அழைத்துவந்திருந்தார்.
நகருக்கு 23கிமீவெளியேஒரு மலைச்சரிவிலில் வனப்பகுதியில்அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவின் அருகிலிருக்கும் அந்த புத்தமடத்திற்கு சென்ற மோசமான பாதை  நாம் இருப்பது இந்தியா தான், பார்க்கபோவது ஒரு இந்திய கிராமத்தைதான் என்பதை உறுதிப்படுத்தியது.போகும் வழியெல்லாம் பல வண்ணங்களில் கொடிகள். அவைகட்சிக்கொடிகள் இல்லை,அத்துனையும் பிராத்தனைகளுக்காக என்பதையும்,திருமணம், செல்வம் கல்வி உடல்நலம் போன்ற ஒவ்வொன்றிருக்கும் ஒரு வண்ணக்கொடி நடுவார்கள் என்பதையும் கைடு மூலம் அறிகிறோம்

நீங்கள் பார்க்கப்போவது  புத்தமத்தினரின் மிகமுக்கியமானஇடம். புண்ணியம் செய்த புத்தமத்தினருக்கே கிடைக்கும் அறிய வாய்ப்பு.பல நூறு ஆண்டுகளுக்கு முன் கடுந்தவம் செய்து அந்த மடத்தலைவர் தேவதைகளின் ஆசியுடன் பெற்ற இறகு தொப்பி அங்கேயிருக்கிறது. அணிந்துகொண்டவர் எந்த இடத்திற்கும் பறக்கும் சக்தியைப் பெறுவார். மன்னரைவிட உயர்ந்த மடத்தலைவரான லாமா மட்டுமே அதை அணிய முடியும்.  இந்த மடத்தின்  இன்றைய  தலவர் திபெத்திலிருக்கிறார்.அவரோ அல்லது அவரது அடுத்த வாரிசோ வந்து அணிந்துகொள்வார்கள்.”  அங்குள்ள தர்மசக்கரா புத்தமாடத்தில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் கடும் பயிற்சிக்கு பின்னர் தான் பிட்சுக்களாக அறிவிக்கபடுவார்கள்.என்ற  அந்த உதவியாளாரின் பில்டப் நம் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.ஓரு மலைப்பதையின் அருகே இறக்கிவிட்ட அவர் இங்கிருந்து நடந்து செல்லுங்கள் நான் புத்த மடங்களுக்குள் வருவதில்லை என்கிறார். மெல்ல நடக்கும் நாம் 10 நிமிடத்தில்  மடத்தின் நுழைவாயிலைப்பார்க்கிறோம். கேரள கோவில்கலின் முகப்பை நினைவுபடுத்தும் பக்கங்களலில் நீண்ட இரண்டு திண்னைகளுக்கு நடுவே உயர்ந்து  சீனப்பாணி வண்ண ஒவியங்களுடன்  நிற்கும் திறந்த மரக்கதவுகள்.நுழைந்தவுடன் நான்குபுறமும் மரக்கூறையுடனும் திண்ணையுடனும் தாழ்வாரம் நடுவில் மிகப்பெரிய முற்றம். முற்றத்தின் நடுவே உச்சியில் விளக்குடன்  உயர்ந்து நிற்கும்  ஒருகல் தூண். மறுகோடியில்   திபெத்திய கட்டிடகலையில் எழுப்பபட்ட நான்கு  அடுக்கு மண்டபம். அடிக்கும் ஆரஞ்சு சிவப்பு, மஞ்சள் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.. தாழ்வாரத்தில் காத்திருக்கும் கூட்டத்தில் பல வெளிநாட்டவர்கள்.சில டூரிஸ்ட்கள்,உள்ளுர் மக்கள்.பூஜை துவங்க காத்திருக்கிறார்கள். நடிகர் விஜய் படத்தின்  குருப் நடனகாட்சிக்கு போட்ட செட் மாதிரி இருக்கும் இந்த திறந்த வெளியில் என்ன பூஜை  எப்போது செய்யப்போகிறார்களோ என்று நாம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அருகிலிருந்த வெளிநாட்டுகாரார் அப்படியெல்லாம் கமெண்ட் அடிக்காதீர்கள்.இது உலகத்தை தூர் தேவதிகளிடமிருந்து காப்பற்ற அவர்கள் செய்யும் மிக முக்கிய பூஜை.குருவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். கிடைத்தவுடன் துவக்குவார்கள் என்கிறார். உங்களுக்கு எப்படித்தெரியும் என்ற தொனிதெரிந்த நம் பார்வையை புரிந்துகொண்டு நான் இரண்டு வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருப்பது இவர்களைப் பற்றிதான் என்று அடக்கத்துடன் சொன்ன அந்த அமெரிக்கரை கண்டு ஆச்சரியப்பட்டு. மரியாதையுடன் அறிமுகப்படுத்திகொண்டு  அவர்அருகில் அமர்ந்துகொள்கிறோம். அமெரிக்காவில் அயவோ பல்கலைகழக பேராசிரியாரான எரிக் ரிச்சர்ட் புத்த மதத்தின் பிரிவுகளைப் பற்றி ஆராய்ந்து எழுத வந்திருப்பவர் என அறிந்துகொள்கிறோம்
புத்தர் நிர்வாணம் அடைந்த பின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் எற்பட்ட மாறுபட்ட கருத்துக்களினால் புத்தமத்தில் 20க்கு மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும்மேல் திபெத்தில் பிறந்தவை. அவைகளில் அழிந்ததுபோக இருக்கும் சிலவற்றில் ஒரு முக்கிய பிரிவு  கார்க்யூப்பா பிரிவு புத்தமதம். மாந்திரிகம், தந்திரம் எந்திரம் போன்றவற்றை போற்றுபவர்கள்.உலகில் எதையும் மந்திரத்தால் சாதிக்கலாம் என நம்புவர்கள்.  தலமைப்பீடம் திபெத்திலிருக்கிறது. சீன ராணுவம் அதை அழித்துவிடக்கூடும் என கருதி அங்கிருந்து கொண்டுவந்திருக்கும் பல பூஜை, தந்திர ரகசியங்களுடன் தலமைப்பீடத்தின் அச்அசலான மாதிரியில் அன்றைய சிக்கிம் அரசரின் ஆசியுடன் இந்த மடத்தை  இங்கு நிறுவியிருக்கிறார்கள்.இது வெறும் மடம் மட்டுமில்லை.புத்தமதத்தின் தத்துவங்களை கற்பிக்கும் கல்விக்கூடம். குருகுல பாணியைப் பின்பற்றி 11ம் நூற்றாண்டிலிருருந்து பாடங்களை வாய்மொழியாகவே கற்பிக்கிறார்கள்.அவசியமானபோது  மடத்தின்  தலைவர் லாமா வருவார்.என பல தவகல்களை பேராசிரியர்  எரிக் தந்தபோது  சந்தோஷமாகவும் வெட்கமாகவும் இருந்தது. சந்தோஷம் தெரிந்துகொண்ட பல விபரங்களுக்காக வெட்கம் புத்தமதத்தை உலகிற்கு தந்தவர்கள் நாம், ஆனால் அதன்  பல விபரங்களை ஒரு அமெரிக்கர் மூலம் அறிந்து கொள்ள நேர்ந்தற்காக.
திடுமென  உரத்து சங்கு ஒலிக்கிறது.  மஞ்சள் ஆடை அணிந்த ஓரு மூத்த பிட்சு கையில் கொண்டுவந்திருக்கும் நீரை முற்றம் முழுவதும்  மந்திர உச்சாடனங்களுடன் இரைக்கிறார். நடுவில் நிறுவப்பட்டிருக்கும் மேடைக்கு மாலை அணிவிக்கிறார். சில வினாடிகளில் பிராதான மண்டபத்திலிருந்து  முற்றத்திற்கு நீல பட்டாடை அணிந்த குழு ஒடி வந்து நடனத்தை துவக்குகிறது. இவர்கள் புத்த பிட்சுக்கள் இது அவர்கள் வழிபாட்டுமுறை. இந்த இசையும் நடனமும் அவர்களுக்கு கற்பிக்கபடுகிறது.என்று விளக்குகிறார் எரிக். குழுவில் சிலர் விதவிதமான முகமூடிகள் அணிந்திருக்கின்றனர்.அவை துர்தேவதைகளாம். இசையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் நடனம் உக்கிரமாகிறது. மண்டபத்திலுருந்து வினோதமான வடிவில் தங்க வண்ண தொப்பியும் சிவப்பு ஆடையும் அணிந்த பிட்சுக்கள் கைகளில் பலவிதமான சரவிளக்குகளுடனும், சாம்பிராணி புகை கக்கும் குப்பிகளுடனும் அவர்களில் சிலர் ஷனாய் போன்ற கருவியை இசைத்தவண்ணம் ஊர்வலமாக வருகிறார்கள். அவர்களுக்கு காவலாக பெரிய தடிகளுடன் புத்தபிட்சுக்கள்! ருத்திர தாண்டவம் ஆடும் துர்தேவதைகளின் முன் கூடிநிண்று மந்திர உச்சாடனம் செய்து பின் அவை ஒவ்வொன்றாக மயங்கி விழுகிறது.இசையின் வேகம் குறைகிறது. பிராத்தனைக்குபின்னர் புத்தபிட்சுக்கள் மண்டபத்தின் உள்ளே செல்லுகிறார்கள். இசை நிற்கிறது,முதலில் வந்த பிட்சு மீண்டும் வந்து நீர் தெளிக்கிறார்.பூஜைமுடிகிறது, தூண் உச்சியில் எறிந்துகொண்டிருந்த விளக்கு, கிழே ஒரு கவணிலிருந்து இருந்து லாகவகமாக வீசப்படும் கவண் கல்லால் அணைக்கப்படுகிறது.
பிராதான மண்டபத்தினுள் நுழைந்ததும் நம்மை கவர்வது அழகான டிசைன்களுடன் தொங்கும் கண்ணைப் பறிக்கும் பல பட்டு திரைச்சீலைகள் தான். அந்த மடத்தின் கடந்த தலைமுறை மடத்தலைவர்களின் ஒவியங்கள் வண்ண கண்ணாடி விளக்குகள் எனஆடம்பரமாக இருக்கிறது. 1001 குட்டி தங்க புத்தர்கள். நடுவில் பிரம்மாண்டமாக புத்தரின் சன்னதி. அருகில் பிராத்தனை சக்கரங்களை உருட்டிக்கொண்டு பிட்சுகள், இளம் மாணவர்கள்.சுவர்களில் திபெத்திய எழுத்துக்கள். பறக்கும் தொப்பி பற்றி விசாரிக்கிறோம்.அடுத்தஅறையை காட்டுகிறார் ஒரு துறவி. உள்ளே, பட்டு துணியால் மூடப்படிருக்கும் ஒரு அழகான மரபெட்டி.' “தொப்பியை பார்க்கமுடியாதா?” என்ற நமது கேள்விக்கு எடுத்தவுடன் தலைவர் அணிந்துகொள்ள வேண்டிய அதை அவர் இல்லாதபோது எடுத்தால் பறந்துபோய் விடும் என்பதால் திறப்பதில்லை என்ற அந்த இளம் துறவியின் பதிலை கேட்டு நமக்கு சிரிப்பு எழுகிறது.தெய்வ சன்னிதானமாக் போற்றப்படும் அந்த இடத்தின் சூழ்நிலை நம்மைக்கட்டுப்படுத்துகிறது.
மெல்ல இரவு பரவும் அந்த பொழுதில் காண்டக் நகருக்கு திரும்புகிறோம்.  பறக்கும்தொப்பியை பார்க்கமுடியாததைப்பற்றி அந்த கைடு இடம் சொன்னபோது .  தொப்பி இருக்கும் விபரத்தைதான் சொன்னே தவிர  பார்க்க முடியம் என்று    சொல்லவில்லையே   என்ற அசத்தலான பதிலைச்சொன்னவர்  கவலைப் படாதீர்கள் இன்று இரவு கனவில் அதைப் பார்ப்பீர்கள் என்றார்.
நம்புங்கள் அன்று கனவில் அந்த தொப்பி வந்தது.
(கல்கி 06.062010)

பார்த்ததை படங்களுடன் பகிர்ந்து கொள்பவர்
                                                     ரமணன்



                                                                     


                                                                      

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்