19/2/13

மனித உரிமைகளை காக்க போராடும் அமெரிக்காவின் மறுபக்கம்உலக  அளவில் மனித உரிமைமீறல்கள், சமூக அநீதிகள் சர்வதேச விதிகள்மீறல்கள் குற்றவியல் சட்டங்களை தவறாக பயன்படுத்தல்  போன்றவைகள் நிகழும் நாடுகளில் அவற்றை ஆராய்ந்து  கண்டறிந்து  வெளிச்சதிற்கு கொண்டுவந்து நீதி கேட்டு போராடும்  ஒரு அமைப்பு ஓப்பன் சொஸைட்டிஸ் ஃபவுண்டேஷன் (OPEN SOCIETY FOUNDATION). 14 நாடுகளில் அலுவலகங்களுடன் இயங்கும் இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கிறது.

ஜார்ஜ் ஸொரோஸ்(GEROGE SOROS) என்ற செல்வந்தரால் அரசாங்களின் ஆதிக்கத்தினால் மனித உரிமைகள் அழிக்கபடாமல் காப்பற்ற பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1979ல்  துவக்கபட்ட  ஒரு அறகட்டளை இது. இன்று  ஒரு மிகப்பெரிய  சர்வ தேச அமைப்பாக  உயர்ந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கிறது. இந்த அமைப்பின்   நீதி மற்றும் சட்டபிரிவு சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான அறிக்கையை வெளியிட்டிருகிறது.. அமெரிக்க அரசின் வலிமைமிகுந்த உளவுத்துறையான சிஐஏ விசாரணை என்ற பெயரில் பல இஸ்லாமியர்களை வழக்குகள், கோர்ட் ஆணைகள் எதுவுமில்லாமல்  பிடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்துகொண்டிருக்கிறது.. பல கொலைகளும் அடங்கிய இந்த மிருகத்தனமான சித்தரவதைகள் செய்யபட்டது  அமெரிக்காவில் இல்லை. உலகின் மற்ற பல நாடுகளில், சிஐஏ நடத்தும் அதிகார பூர்வமற்ற ”கறுப்பு சிறை”களில். இந்த மாதிரி சித்திரவதைகளை அமெரிக்க அரசு செய்ய ஆரம்பித்ததின் நோக்கம்,  இந்த சிறைகள் இருக்கும் நாடுகள், இதுவரை கொடுமைபடுத்தபட்டவர்களின்  எண்ணிக்கை ஆகியவைகளை மிக தெளிவாக விரிவாக பதிவு செய்திருக்கிறார் இந்த அறிக்கையை தயாரித்தவர்.216
பக்கங்களில்1600 க்கும் மேற்பட்ட ஆவணங்களின் சான்றுகளுடன் புத்தகமாக வெளிவந்திருக்கும்  இந்த அறிக்கையின் சிலபகுதிகளை அதுவும் சித்தரவதைகள் செயப்பட்ட முறைகளை அனுபவித்தவர்களின் வார்த்தைகளில் பதிவு செய்யபட்டிருப்பதுபடிப்பவரின் மனதில் வலியை உண்டாக்கும்..அறிக்கையில் பாக்கிஸ்தான் உள்பட இம்மாதிரி கறுப்பு சிறைகள் இருக்கும் 54 நாடுகள் பட்டியிலிடப் பட்டிருக்கிறது.  ஆப்கானில் துவங்கி அகரவரிசையில் பட்டியலிடபட்டிருக்கும் நாடுகளில் அதிகம் அறிமுகம் இல்லாத குட்டி நாடுகளிலிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி டென்மார்க் போன்ற பெரிய ஐரோப்பிய நாடுகளும் அடக்கம். அதில் இந்தியாவின் பெயர் இல்லாததில் ஒரு நிம்மதி.  இல்லாதிருப்பதின் காரணம் நமது அரசின் ராஜதந்திரமா அல்லது நம்நாட்டின் மீது அமெரிக்காவிற்கு நமபிக்கையில்லையா? என்பது தெரியவில்லை.
 இந்த சிறைகளில் சித்தரவதைக்குள்ளான 136 பேர்களின் பெயர்,பின்னணி, எங்கே எப்படி கைது செய்யபட்டு, எந்த சிறைக்கு என்று கொண்டு செல்லபட்டார்கள் போன்ற விபரங்களையும் அவர்கள் அனுபவித்த தண்டனைகளையும்  இந்த அறிக்கை விவரிக்கிறது..  
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த அதிபயங்கர தீவிர வாத தாக்குதலின் பின்விளைவாக  அமெரிக்க அரசு எடுத்த முடிவுகளில் ஒன்று சிஐஏக்கு வழங்கபட்ட  சில சிறப்பு அதிகாரங்கள்.  உலகம் முழுவதும் இருக்கும் தீவீரவாதிகளை அந்த நாட்டு அரசுகளின் உதவியுடன் சிஐஏ தேடிகண்டுபிடித்து விசாரணை குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களை  ஒரு ரகசிய சிறையில் சிஐஏ  தீர விசாரித்து யார் அந்த தீவிர வாதி,யார் அந்த குழுவின் மூளை எனபதை கண்டறிந்து தண்டிக்கும். இதற்காக சிஐஏ மேன்மைபடுத்த பட்ட சில விசாரணை டெக்னிக்களை கையாளாலாம். என்பது தான் அந்த ரகசியமாக வழங்கபட்ட  சிறப்பு அதிகாரம். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆல் வழங்கபட்டது. கடந்த ஆண்டோடு முடிவுக்கு வந்த இந்த விசேஷ அதிகாரத்தை மேலும்  நீட்டிப்பு செய்திருப்பவர் ஒபாமா.
இதைப் பயன் படுத்தி உலகின்  பல பகுதிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இயங்கும் தீவீரவாத அமைப்புகளுக்கு உதவுபவர்களை கண்காணித்து அவர்களை குண்டுகட்டாக  தூக்கி இரவோடு இரவாக ஒரு தனிவிமானத்தில் ஏதேனும் ஒரு நாட்டிலிருக்கும் கறுப்பு சிறைக்கு “விசாரணைக்கு” கொண்டு போய்விடுவார்கள். இந்தமாதிரி சிறைகள் அந்த நாடுகளில் அடர்ந்த காட்டு பகுதிக்குள்ளாகவோ, அல்லது ஆளரவமற்ற ஒரு தீவுபகுதியிலோ இருக்கும். அந்நாட்டினருக்கே இப்படி பட்ட  சிறைகள்  தங்கல் நாட்டில் இயங்குவது தெரியாது.    தான் எங்கே கொண்டுவரபட்டிருக்கிறோம்  என்பது அப்படி கொண்டுவரப்பட்டவருக்கு தெரியாதது மட்டுமில்லை, அந்த கருப்பு சிறை இருக்கும் நாட்டின் அரசுக்கு கூடகொண்டுவரபட்டிருப்பவர்கள் யார் என்று தெரியாது. காரணம் எங்கும் இவர்களின் பயணம் பதிவு செய்யபடுவதில்லை.  இரவு நேரங்களில் விசேஷ அனுமதியுடன் தரையிறங்கும் சிஐஏயின் விமானம் அங்கிருந்து ”சிலசரக்குகளுடன்” திரும்பியதாக விமான நிலையங்களில் பதிவு செய்யப்படும். தேச பாதுகாப்பை காரணம் காட்டி அந்த  விபரங்கள் கூட வெளியே அறிவிக்கபடுவதில்லை. அரசாங்கள் செய்யும் பயங்கரமான ஆள் கடத்தல்கள் இது என சொல்லுகிறார் புத்தக ஆசிரியர்.  கறுப்பு சிறையில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளும்.சிஐஏ அதிகாரிகளும் விசாரணைய தொடர்வார்கள். மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள். சித்திரவதைகள் இங்கே அரங்கேறும். நிர்வாணமாக நிற்க வைத்து அடிப்பது, நாய்களை கடிக்க விடுவது,   உடலில் வயர்களை இணைத்து தொடர்ந்து மெல்லிய மின்சாரம் செலுத்தி நீண்ட நேரம் நிற்க செய்வது போன்ற பல தண்டனைகள். சிலர் இத்தகைய கொடுமைகளுக்கு பின்னர் தவறாக கொண்டுவரபட்டவர்கள் என முடிவு செய்யபட்டு  விடுதலையும் செய்யபட்டு கொண்டு வரப்பட்டதைபோலவே திருப்பி கொண்டுவிடபட்டும் இருக்கிறார்கள்
தீவிர வாதிகளை கண்டுபிடிக்க அமெரிக்க அரசு செய்யும்  இந்த சட்ட விரோதமான மனித உரிமை மீறல் கொடுமைகளுக்கு  எப்படி பல நாடுகள் -கிட்டதட்ட உலகின் கால்பங்கு நாடுகள்= ஆதரவளிக்கின்றன் என்பது ஒரு ஆச்சரியம். செப் 11 நிகழ்விற்கு பின்னர் உலகம் முழுவதும் தீவிர வாதம்  மிகவேகமாக தலையெடுத்து கொண்டிருக்கிறது. அடுத்த இலக்கு உங்கள் நாடாகவே இருக்கலாம்  என்று  பெரிய நாடுகளை நம்ப வைத்திருக்கும்,    உலக அமைதியை காக்கும்  போலீஸ்காரனாக தன்னை சித்தரித்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் ராஜதந்திர டெக்னிக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. சிறிய நாடுகள் பொருளாதார ரீதியில் அச்சுறுத்தபடுகின்றன. அண்டை நாடுகளுடன் போரிடும் நாடுகளுக்கு ஆயூதங்கள் வழங்கி  அமெரிக்கா தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது.. சட்டம் நீதி ஆகியவைகளின் வரம்புகளை தாண்டி அமெரிக்க அரசு  இப்படி செய்வதை அந்த மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?  மாற்றம் வரும் என் முழங்கி முதல் முறை ஆட்சிக்கு வந்த ஒபாமா ஆப்கானிஸ்தானலிருந்து, ஈராக்கிலிருந்து போர்ப்டைகளை வாபஸ் பெறுவேன் என அறிவித்ததற்காக உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.  ஆனால் அதைமுழுவதுமாக இன்னும் செய்யவில்லை. இரண்டாம் முறை வெற்றிக்கு பின் உலக அமைதிக்காக அமெரிக்கா செய்யவேண்டியவை இன்னும் நிறைய இருக்கிறது என்று தன் நன்றி அறிவிப்பில் சொல்லியது, -தங்கள் பாதுகாப்புக்காக தங்கள் அரசாங்கம் என்ன செய்தாலும் பரவயில்லை- என்ற பெரும்பாலான அமெரிக்க மக்களின் எண்ணங்களின்  பிரதிபலிப்பு தான்
அதனால் இப்படி உலகம்முழுவதும் அமெரிக்கா தன் சித்தரவதைடெக்னிகளை பரப்பிகொண்டிருக்கிறது என்பதால் தன் புத்தகத்திற்கு ”உலகமயமாகும்  சித்திரவதைகள் என பெயரிட்டிருக்கிறார் அதன் ஆசிரியர். முழு அறிக்கையியும்XXXX இணைய தளத்தில் படிக்கலாம்
  2009ல் வெளிவந்து உலகையே உலுக்கிய இராக்கின் போர்கைதிகள் அபு கரீஹி(Abu ghraih)  என்ற சிறையில்  மிக மோசமாக சித்தரவதை செய்யப்பட்ட போர்க்கைதிகளின் படங்களும் வீடியோக்களும் நினைவிருக்கிறதா? அதையும் அது சம்பந்தபட்ட அத்தனை ஆவணங்களையும்  அமெரிக்க அரசின் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  பல கோர்ட்களில் போரடி அதிகாரபூர்வமாக பெற்று  வழக்கு தொடர்ந்து அந்த சிறை அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கிகொடுத்த வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர்.  அதன் தொடர் விளவாக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுந்ததுதான்  இந்த புத்தகம்.. உண்மையை வரவழைப்பதற்காக ஒரு நபரை சித்தரவதை செய்வது என்பது அமெரிக்காவில் மட்டுமிலை எந்த நாட்டிலும்  சட்டபடி குற்றம். கடந்த 10 ஆண்டுகளாக அதை பயன்படுத்தி பெரிய உண்மைகளை  எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை என்பதையும், மாறாக இத்தகைய சித்திரவதைகளினால் தீவிரவாதம் உலகம் முழுவதும் வேகமாக வளர்கிறது என்பதையும்  முன்னாள் சிஐஏ அதிகாரிகளின், செனட்டர்களின் பேட்டிகள் மூலம் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒரு  இந்திய பெண். பெயர் திருமதி அம்ரித் சிங். அடே! சபாஷ் என நீங்கள் சொல்லி முடிப்பதற்குள் ஆச்சரியமான அடுத்த செய்தி அவர் நம் பிரதமர் மன்மோஹன் சிங்கின்  இளைய மகள்.

தன் தந்தையைபோல, தன் மூத்த இரண்டு சகோதரிகள் போல(ஒருவர் பேராசியர்) நிறைய படித்தவர் கேம்பிரிட்ஜிலும், ஆக்ஸ்போர்டிலும் பொருளாதாரம் படித்த இவர்  சர்வ தேச நிதி ஆணையத்தில் எக்கானமிஸ்டாக பணிபுரிந்த பின் யேல் பல்கலைகழகத்தில் சட்டம் படித்து நியூயார்க் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். 2009ல் இந்த அமைப்பில் நாடுகளின் பாதுகாப்பு, மற்றும் தீவீரவாத தடுப்பு பற்றி ஆராயும் பிரிவில் மூத்த சட்ட வல்லுனராக பணியாற்றுகிறார்.
பின்விளைவுகளை எதிர் நோக்கும் துணிவுடன் அமெரிக்காவின் அருவருப்பான மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியிருக்கும் திருமதி அம்ரித் சிங் தான் உண்மையான சமூக நீதி காக்கும் விராங்கனை.

புதிய தலைமுறை 14/2/13 


2 கருத்துகள் :

  1. ஆச்சரியம். இதுவரை பிரதம்ரின் மகளை பற்றிய செய்திகள் வந்ததில்லை. ராஜப்க்‌ஷேயின் அரக்கத்தனத்திற்கு ஏதாவது செய்வாரா?

    பதிலளிநீக்கு
  2. ரமணன் சார். எங்கிருந்து படிக்றீர்கள் இதையெல்லாம்? கேப்டலிஸ்ட்டான மன்மோனுக்கு இப்படி ஒரு கம்னியூஸ்ட் பெண்ணா? தாங்க்யூ. பிராஞ்சில் எலோருக்கும் காட்டினேன்
    ஜி பிரகாஷ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்