25/5/13


உழவுக்கு வந்தனை செய்யும் மன்னர்

பாங்காங் நகரில் தாய்லாந்து மன்னரின் பிரமாண்டமான அரண்மனை வளாகத்தில் கிழக்கு புற மைதானத்தில் மக்கள் கூட்டம் காத்திருக்கிறது. மாலை 3 மணி. பெரிய நீலநிற பென்ஸ் காரில் வந்த இளவரசர் மஹாவஜ்ரலோங்கோன் ( Maha Vajiralongkorn ) தேசீய கிதம் முழங்க மரியாதைகளை ஏற்று மேடையில் அமர்கிறார்.

மேடையின் கீழே பளிச் வெள்ளையில் கம்பீரமாக இரண்டு பெரிய காளை மாடுகள் மஞ்சள்நிற ”பட்டு சட்டை” அணிந்து காத்திருக்கின்றன. அரண்மனையின் தலமை பண்டிட் மண்டியிட்டு  மன்னரிடம் நெல்மணிகள் நிறைந்த தங்க வெள்ளி பாத்திரங்களை நீட்டி ஏதோ சொல்லுகிறார். வாத்தியங்கள் முழங்க சங்கு ஒலிக்க காளை மாடுகளை இணைத்து நுகல் தடியில் ஒர் ஏர் பூட்டபடுகிறது. ஏரின் மேல் விவசாய கடவுள் உருவம் வைத்து பூஜிக்கபடுகிறது.


பின்னர்  சிவப்பு உடையணிந்த விவசாயிகள் அருகில் வர, அரண்மனை அந்தணர்கள் பின் தொடர மாடுகள் மைதானத்தின் மத்திய பகுதியை அடைகிறது

நாட்டின் விவசாயத்துறை முதல் அதிகாரி ஏர்பிடித்து நிலத்தை உழ துவங்குகிறார். நிஜமாகவே ஏர்தடியில் காலை அழுத்தி உழுகிறார். உழுதுகொண்டுபோகும் ஏரின் பின்னே  அரண்மனையில் தினசரி வேதம் சொலும் அந்தணர்கள் மந்திரம் சொல்லி புனிதநீர் தெளித்து வண்ணம் நடக்கிறார்கள். பஞ்சகச்சவேஷ்ட்டியின் மேல் வெள்ளைகோட்டும் கால்களில் சாக்ஸ் ஷூ வுடன் அரண்மனை அந்தஸ்த்தை குறிக்கும் நீண்ட சரிகை அங்கியையும் அணிந்திருக்கிறார்கள். 4கிராமிய பெண்கள் பாடியபடி நெல் மணிகள் நிறைந்த கூடையுடன் உடன் வருகிறார்கள். அதிலிருந்து எடுத்து முதன்மை பண்டிட் விதைகளை வீசித்தெளித்த வண்ணம் நடக்கிறார். அந்த கணத்தில் தாய்லாந்தின் இந்த ஆண்டின் நெல் விதைப்பு துவங்கி விட்டது.

நேரடி ஒளிபரப்பில் இந்த காட்சியை பார்த்தவுடன் நாட்டின் பல பகுதிகளிலும் இதே நேரத்திற்கு விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல்விதைப்பை துவக்குகிறார்கள். சுற்றி சுற்றி 3 முறை நடைபெறும் இந்த உழுவுப் பணியில் மற்ற அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
. ஒவ்வொரு ஆண்டும் அரண்மனை ஜோசியர்களாலால் நல்ல நாள் நேரம் பார்த்து குறிக்கபட்டு  இந்த  ”முதல் ஏர் செலுத்தும் உழவுவிழா” நாள் அறிவிக்கபட்டு அரண்மனை வளாகத்தில் கடந்த 200 வருடங்களாக கொண்டாடபடுகிறது. அன்று  தேசிய விடுமுறையும் அறிவிக்கபடுகிறது. இந்த ஆண்டு இது கடந்த மே மாதம் கொண்டாடபட்டது. பாங்காக் நகர் விழா கோலம் பூண்டிருந்தது. போஸ்ட்டர்கள் பேனர்களுக்கு அனுமதியில்லாத அந்த நகரில் இந்த விழாவினால்ஆங்காங்கே இளவரசரின் பிரமாண்ட சைஸ் படங்கள்

விழாவில் உழவு முடிந்தவுடன் அந்த காளை மாடுகளுக்கு உணவாக அரிசி, மொச்சை, உளுந்து,புல், நீர், அரிசியிலிருந்து தயாரிக்கபட்ட ஒயின் என 6 விதமான உணவுவகைகள் வாழைஇலை தொன்னைகளில் வைத்து காட்ட படுகிறது. முதல் மாடு முதலில் எதை சாப்பிடுகிறதோ அதன் மூலம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று அரண்மனை அந்தணர்களால் கணித்து அறிவிக்கபடுகிறது. இம்முறை முதலில் புல்லை சாப்பிட்டதால் இந்த ஆண்டு  மழை சுமாராக இருந்தாலும் மிக அதிகமான நெல்விளைச்சல் இருக்கும் என கணிக்கபட்டு அறிவிக்கபட்டது. காளைகள் சாப்பிடும் வரை காத்திருந்த இளவரசர் இசை முழங்க அரண்மனைக்கு  திரும்புகிறார். அதுவரை கட்டுபாட்டுடன் இருந்த மக்கள் கயிற்றை  அறுத்துகொண்டு ஒடி வந்து தூவப்பட்ட நெல் மணிகளில் கிடைப்பதை பொறுக்கிஎடுக்கிறார்கள். அரண்மணை புரோகிதர்களால் பூஜிக்கபட்டு மன்னாரல் ஆசிர்வதிக்க பட்ட அந்த நெல் மணிகள் தங்கள் நிலத்தில் இடபட்டால் அல்லது வீட்டில் வைத்திருந்தால் சுபிட்சம் பெருகும் என்பது  அவர்களின் நம்பிக்கை.

உலகின் அரிசி உற்பத்தியில் 4 வது இடத்திலும் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்திலும் இருக்கும் தாய்லாந்து  நாட்டின்  பொருளாதரத்தை நிர்ணயிக்கும் உழவு தொழிலுக்கு உண்மையாகவே வந்தனம் செய்கிறத  
கல்கி 2613

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்