26/6/13

அழகிய காதலிக்காக ஒரு ஆழ்கிணறு

 2

 குஜராத் பயணம் 2 


குஜராத் மொழியில் வாவ் என்று சொன்னால் படிக்கட்டுகளுடன் உள்ள ஆழ் கிணறு என்று அர்த்தம். அஹமதாபாத் நகருக்கு அருகில் 18 கீமீ தொலைவில் இருக்கும் அடலாஜி என்ற கிராமத்தில் இருக்கும் இந்த கிணற்றை பார்ப்பவர்கள் பிரமித்துபோய் ஆச்சரியத்தில் சொல்லுவது “ "வாவ்”. கலைநயம் மிளிரும் தூண்களுடன் நிற்கும் ஐந்து பெரிய தளங்கள். மலர்கள், பறவைகள் யானைகள் என்று அழகான சிற்பங்களுடன் அதன் பக்க சுவர்கள், வழவழப்பான அதன் தரைகள்,. இவ்வளவும் பூமிக்கு அடியில். 300 அடிகள் ஆழத்திற்கு அமைக்கபட்டிருக்கிறது. எண்கோண வடிவில் பிரமாண்டமாக அமைக்க பட்டிருக்கும் இதன் மூன்று பக்கங்களிலும் இருக்கும் அகலமான படிகள் கிழே முதல் தளத்திற்கு இட்டு செல்லுகிறது. அங்கிருந்து கிழே தண்ணீர் இருக்கும் பகுதிக்கு இறங்க வசதியாக  அமைக்கபட்டிருக்கும் 344 படிக்கட்டுகளின் பக்க சுவர்களை இணைத்து வட்டவடிவில் தளங்கள். எளிதாக நூறுபேர் அமரலாம். அவற்றிலிருந்து கிழே கிணற்று நீரை பாதுகாப்புடன் பார்க்க சுற்று சுவர்கள், மாடங்கள். தள சுவர்களில் சமஸ்கிருத எழுத்துக்களில் ஸ்லோகங்கள், சிற்பங்கள் இந்த கிணற்றின் கதை எல்லாம். இதை ஒரு கிணறாக மட்டுமில்லாமல் மக்கள் கூடும் பலவகை பயன்பாட்டிருக்கு உதவும் ஒரு சமூதாய கூடமாக அமைக்கபட்டிருப்பது புரிகிறது  இதைஎல்லாம் விட ஆச்சரியம். 300 அடை ஆழத்தில் அண்டர்கிரவுண்ட்டில் இருக்கிறோம் என்பதை மறக்க செய்யும் வெளிச்சமும் காற்றும்.வெளியே அனலாக கொதிக்கும் ஏப்பரல் மாத அஹமதாபாத்தின் தாக்கமே இல்லாமல் இதமான சுழல்.


கட்டிட கலையில் மிக சவலானது நிலத்தடியில் கட்டிடம் எழுப்பவது. அதுவும் சரியான இடத்தில் ஒரு வற்றாத ஆழ்கிணற்றின் நீர் நிலையை கண்டுபிடித்து (இன்றும் அதில் தண்ணீர் இருக்கிறது) அதில் பருவகாலத்தில் அதிகபட்ச நீர் நிறையும்இடத்தைகணக்கிட்டு  மேல் நோக்கி கலைநுணுக்கத்துடன் தளங்களைஎழுப்பி இணைத்திருப்பது ஒரு சாதனை.. 15ஆம் நூற்றாண்டிலேயேஇதை இந்திய கட்டிடகலைஞர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக நிற்கும் இது,  தாஜ்மஹாலைப்போல ஒரு காதல் சின்னம் என்பதை அதன் சுவர்களிலிருக்கும் கல்வெட்டுக்கள் சொல்வது  நம் ஆச்சரியத்தை இன்னும் அதிகமாக்குகிறது.
15ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட மன்னன் ராணா வீர்சிங். அவரது காதலித்து மணம் புரிந்த கொண்டது ரூபா என்ற அழகிய கிராமப் பெண்ணை..தன்னைப்போல தன் ஊர் மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்க தங்கள் காதலின் நினைவு பரிசாக தன் கிராம மக்களுக்கு ஒரு அழகான கிணற்றை நிர்மாணிக்க வேண்டினார் ருபா. மகிழ்ச்சியுடன் சம்மதித்த மன்னர் உடனே செய்ய துவங்கினார். ஆனால் 3 வது மாட பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த காலகட்டத்தில் வேகமாக பரவி வந்த முகமதியர் படைஎடுப்பினால் பக்கத்து நாட்டு முகமதிய மன்னன் தொடுத்த போரில் ராணா வீர்சிங்  கொல்லபட்டு நாடு முகமதியர் வசமாகிறது. முகமதிய மன்னர் ராணி ரூபாவின் அழகில் மயங்கி தன் காதலை அவரிடம் சொல்ல,ராணி ரூபா சொன்ன ஒரே நிபந்தனை இந்த கிணற்றின் பணியை முடித்து மக்களுக்கு கொடுங்கள் நான் உங்கள் மனைவியாகிறேன் என்பது தான்.
கட்டிட பணி தொடர்கிறது. ரஜபுத்திர கட்டிடகலைபாணியில் துவக்கபட்ட கிணற்றின் கடைசி இரு மாடங்கள் முகமதியர் பாணியில் முடிக்கபடுகிறது. மக்களுக்கு அர்பணிக்கும் விழாவின் மறுநாள் திருமணம் என்ற நிலையில் ரஜபுத்திர பெண் ரூபா அந்த கிணற்றை வலம் வந்து அதில் விழுந்து தன் உயிரை போக்கி கொள்ளுகிறார். அதற்கு சில நாட்கள் முன்பு அருகிலிருக்கு ஸ்வாமி நாராயணன் கோவிலின் தலமையிடம் தான் செய்ய போகும் காரியத்தையும் தன் மரணத்திற்கு பின் கிணற்று நீரை புனிதபடுத்த வேண்டிய சடங்குகளைசெய்யது மக்கள் பயன்படுத்தஉதவ வேண்டும் என்று வேண்டியிருக்கிறார். (இது அந்த கோவிலிலும் பதிவு செய்யபட்டிருக்கிறது). தான் ஏமாற்றபட்டவிட்ட கோபத்தில் முகம்மதிய மன்னன் இதை இடித்து தள்ளாமல் விட்டதைவிட ஆச்சரியம் தகுந்த பாதுகாப்புடன் மக்கள் அதை பயன்படுத்த அனுமதித்ததுதான். அவரின் ஒருதலைகாதலின் சின்னமாக இருக்கட்டும் என விட்டிருக்கலாம் என சில சரித்திர ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.
அழகான, ஆழமான இந்த கிணறு இரண்டு மன்னர்களும் காதலித்தது ஒரு பெண்ணை மட்டுமில்லை கட்டிடகலையையும் தான் எனபதை நமக்கு சொல்லுகிறது.
படங்களை ஸ்லைட் ஷோவில் பார்க்கலாம் கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்