13/7/13

மோடியின் எதிர்கால கனவுகளும், என்கவுண்ட்டர்களும்


அதிகாரபூர்வமாக அறிவிக்கபடாவிட்டாலும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளாரக அறியபட்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு  கட்சியில் முறைத்து கொள்ளும் மூத்த தலைவர்கள், உதறிவிட்டுபோகும் கூட்டணிகட்சிகள் போன்ற பிரச்சனைகளுடன் இப்போது சேர்ந்திருக்கும் புதிய தலைவலி 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு என்கவுண்ட்டர்.
2004ஆம் ஆண்டு ஜூன் 15ந் தேதி அகமதாபாத்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குஜராத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  இளம்பெண் இஷ்ரத் ஜகானுடன் பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரோனா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு முஸ்லிம்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இதில் இஷ்ரத் ஜகான் 19 வயது கல்லூரி மாணவி. பீகாரை சேர்ந்தவர்.இவர் மும்பையில் உள்ள குருஞானக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார் இவருக்கு தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு என்றும், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இளைஞர்கள் மூவருடன் இஷ்ரத் இணைந்து செயல்பட்டார் என்றும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது. இந்த என்கவுண்ட்டரை நடத்தியது டி.ஐஜி வன்சார என்பவர், இவர் பல என்கவுண்ட்டர்களை நடத்தியிருக்கும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கொல்லபட்ட நால்வரும் ல்ஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்றும் முதல்வரை கொல்ல சதி செய்தற்கான ஆதாரங்களும் இருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால், இஷரத் ஜகான் குடும்பத்தினரும், பிர்னேஷ் பிள்ளையின் தந்தையும் இது என்கவுண்ட்டரே அல்ல. திட்டமிட்ட படுகொலைஎன்றனர். மனித உரிமை அமைப்பினரும் குஜராத் எதிர்க்கட்சியினரும்,பத்திரிகைகளும் இதே குற்றச்சாட்டை எழுப்பின.
 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு 2009ல், “இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் என்கவுண்ட்டரில் கொல்லப்படவில்லை. போலீஸ் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதுன்றார் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட். அவர் தனது நீண்ட 243 பக்க அறிக்கையில்  பதவி உயர்வுக்கும், மெடல்களுக்கும், பாதுகாப்பாற்ற நிலையிலிருக்கும் முதல் அமைச்சரை காப்பாற்றியதைபோல நல்ல பெயரை வாங்கவும் இந்த படுகொலையை போலீஸ் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்று  தீர்ப்பளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத குஜராத் அரசு  தீர்ப்பை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில்.  அப்பீல் செய்தது. கொலை, திட்டத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தீவீரவாதிகளைப்பற்றிய  தகவலை தந்தது மத்திய உளவுத்துறையினர்தான். என்றும் அதை போலீஸ் செயலாக்கியிருக்கிறது.  என்றும் மனுவில் சொல்ல பட்டது.
உண்மை நிலையை அறிய உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது..  குழுவும் விசாரணை தொடர்ந்தது. குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2011ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த மனுவில், “இது முறைப்படி நடந்த என்கவுண்ட்டரே அல்ல. என்கவுண்ட்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்பாகவே இஷ்ரத் ஜகான் உள்பட நால்வரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்என்று தெரிவித்தது. அதாவது, நால்வரும் போலீசாரால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு, போலீசின் கஸ்டடியிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை.இதனை ஏற்றுக்கொண்ட குஜராத் ஐகோர்ட்டு இந்த போலி என்கவுண்ட்டர் பற்றி உரிய விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தகவல்களை கோர்ட்டுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு சி.பி.ஐ. விசாரணையையும் கோர்ட்டு நேரடியாக கண்காணித்து வந்தது.  கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணையில்  எந்த முன்னேற்றமும் இல்லாதை கண்டித்து  இரண்டு வாரத்திற்குள் குற்றபத்திரிகை தாக்கல்செய்யபடவேண்டும் என  சிபிஐக்கு கட்டளையிட்டது. இந்த  நால்வர் கொலை செய்யப்பட்ட என்கவுண்ட்டரிலும் சம்பந்தபட்டிருந்த டிஐஜி வன்சாரா சிறையிலிருக்கிறார். காரணம் 2005ஆம் ஆண்டு ஷொராபுதீன் ஷேக் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், அவரும் மோடியை கொல்லத் திட்டமிட்டார் என்று என்கவுண்ட்டர்பாணியில் குஜராத் போலீஸ்  தீர்த்துக் கட்டியிருந்தது. இந்த என்கவுண்ட்டரை முன்னின்று நடத்தியவரும் டி.ஐ.ஜி வன்சராதான். ஷொராபுதீன் என்கவுண்ட்டர் நடந்த இரண்டாவது நாளில் அவரது மனைவி கவுசர்பீ, டி.ஐ.ஜி.வன்சராவின் சொந்த கிராமத்திற்கு அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் .இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, கவுசர்பீ கொலைதான் செய்யப்பட்டார் என்பதை குஜராத் அரசின் வழக்கறிஞரே சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். ஷொராபுதீன் என்கவுண்ட்டரும் போலியானதே என்பது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் டி.ஐ.ஜி வன்சரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம்  கோர்ட் அனுமதியுடன் ஜெயிலில் விசாரணை நடத்தியபின் சிபிஐ குற்றபத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. சாம்பல் தாடியும் கறுப்பு தாடியும் இந்த என்கவுண்ட்டருக்குஒப்புதல் கொடுத்த பிறகுதான் எங்கள் பிடியில் இருந்த அந்த 4 பேரையும் தீர்த்துக் கட்டினோம்என்று சிபிஐயிடம் சொல்லியிருக்கிறார் டி.ஐ.ஜி. வன்சரா. என்பது சிபிஐ தரப்பிலிருந்து கசியும் செய்தி.  இந்த அடையாளாங்கள்  குஜராத் முதல்வரையும், உள் துறை அமைச்சராகயிருந்த அமித் ஷாவையும் குறிப்பிடுகிறது அத்துடன், இந்த என்கவுண்ட்டர் படுகொலைக்கு முன்பாக இரண்டு முறை அமித் ஷாவிடம் வன்சரா பேசியிருப்பதாகவும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.பதிவு செய்யபட்டிருக்கும் இந்த வாக்குமூலம் கோர்ட்டில் உறுதி செய்யபட்டால் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பிரச்சனை ஏற்படும்.
 ஆனால் பல போலீஸ் அதிகாரிகளை குற்றபத்திரிகையில் பட்டியிலிட்டிருக்கும் சிபிஐ அமைச்சர்களை சேர்க்கவில்லை. தொடர்ந்து சமர்பிக்கபடும் கூடுதல் குற்றபத்திரிகைகளில் அமித் ஷாவின் பெயர் சேர்க்கபடும் வாய்ப்பு இருக்கிறது. இது மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் குற்றபத்திரிகையில் சிபிஐ வெடிகுண்டாக  ஒரு  டேப்பை இணைத்திருக்கிறது, அதில் மாநில கல்வி, சட்ட, உள்துறை அமைச்சர், முதல்வரின் செயலாளர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் அதில் குஜராத் அட்வகேட் ஜெனரல் திரிவேதி   “சிறப்பு புலனாய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில், இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான் என்று சொன்னால், நாம் அரசுக்கோ அதிகாரிக்கோ எந்த சிக்கலும் இல்லாமல் முறியடிக்கவேண்டும் அதுதான் முக்கியம்என்று சொல்லியிருக்கிறார். . தடய அறிவியல் துறையால் பரிசோதிக்கபட்டிருக்கும் இந்த டேப்பை ரகசியமாக பதிவு செய்தவர் அந்த கூட்டத்தில் பங்குகொண்ட ஒரு போலீஸ் அதிகாரி.
மற்றொரு அதிர்ச்சியான தகவல் மத்திய உளவுத்துறையினர் இதில் சம்பந்தபட்டிருப்பது. ஐபி  என்பது மத்திய உள்துறைஅமைச்சகத்தின் ஒரு அமைப்பு. இவர்களுக்கு சட்டரீதியான எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் மிக வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும்   மத்திய அரசின் மூத்த போலீஸ் அதிகாரியின் கீழ் ஒரு சின்னபிரிவு இயங்கும். மாநில போலீஸுக்கு முக்கிய ரகசியங்களையும்   அவர்களைப்பற்றி மத்திய அரசுக்கு தகவல்களையும்  தருவது இவர்கள் பணியில் ஒன்று. குஜராத்தில் அப்படி இருந்த மூத்த ஐபி அதிகாரி ராஜேந்திர குமார். இவர் மோடியுடன் மிக நெருக்கமாகயிருந்த அதிகாரி. இவர் தந்த தவறான தகவலினால்தான் இந்த என்கவுண்ட்டர் என்பதை இப்போது சிபிஐ கண்டுபிடித்திருக்கிறது. இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ முயற்சிக்கிறது. அதற்கான அனுமதியை அரசிடம் கோரியிருக்கிறது.  இப்படி மத்திய உளவுதுறையின் மீது வழக்கபோட முயற்சிப்பது இதுதான் முதல் முறை.  எந்த சட்டபிரிவின் கீழும் வராத அந்த அமைப்பின் மீதுவழக்குபோடமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகயிருந்தாலும், அரசு இயந்திரத்தின் இரு அமைப்புகள் இப்படி மோதிக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்குமா? என்பது தான் இப்போது எழும் முதல் கேள்வி.   உளவுத்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற மேல் நடவடிக்கைகள்  எதுவும் எடுக்காமல் விடப்பட்டால்  பலன் பெறப்போவது மோடிதான். என்பதை உணர்ந்திற்கும் காங்கிரஸ் அரசு இதை எப்படி கையாளாளப்போகிறது என்பதை சிபிஐ, ஐபி இரண்டு அமைப்புகளின் அதிகாரிகளும்  கூர்ந்து கவனித்துகொண்டிருக்கின்றனர்.
சிபிஐக்கு வெற்றி வாய்ப்புள்ள, குஜராத் அரசுக்கு எதிரான  இந்த போலிஎன்கவுண்ட்டர் வழக்கு மோடியின் பிரதமர் கனவு பலிப்பதை பாதிக்குமா?
நிச்சியமாக இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் இமேஜ் சரிகிறது என்பது நிஜம்.   அவர் இமேஜை பாதிக்கும் விஷயங்களாக பட்டியலிடபட்டிருக்கும், கேப்டலிஸ்ட்,தீவிரமதவாதி,சிறுபான்மையினருக்கு எதிரானவர், போன்றவகைளோடு   போலீஸையும் உளவுத்துறையையும் சுயநலத்திற்காக கையாளுபவர் என்ற லேபிலும் சேர்வதை தவிர்க்கமுடியாது

-ஆதித்யா 
கல்கி  21/07/13 இதழலில்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்