24/8/13

நிழலின் இசையை ரசித்த மரங்கள்.”நிழல்”இயற்கையின் கொடையான மரங்களின்,தாவரங்களின், சிறப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்லி அவைகளை சேசிக்க சொல்லிகொடுக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். மரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு விரும்பும் ஆர்வலர்களை அழைத்து சென்று அவைகளை அறிமுகபடுத்தும் “டீரி வாக்” (Tree walk) நடைப்பயணங்களை அவ்வப்போது நடத்துபவர்கள். இந்த ஆண்டு சென்னைநகரின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக இவர்கள் அழைத்து சென்ற இடம் கலாஷேத்திரா.


இசையையும் நடனத்தையும் மரபு வழுவாத பாரம்பரியத்துடன் கற்பிக்க திருமதி ருக்மணி அருண்டேல் உருவாக்கிய கலாஷேத்திரத்தாவில் நுண்கலைகளுடன் மரங்களையும் செடிகளையும் நேசித்து வளர்த்தார். அவைகள் இன்று அழகான ஒரு காடாகவும்,பூஞ்சோலையாகவும் மலர்ந்திருக்கிறது. மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத இந்த அழகான அமைதி சொர்க்கத்திற்கு சிறப்பு அனுமதியுடன் இசைக்கலைஞர் செளமியாவுடன் அங்குள்ள மரங்களை சந்திக்க. அழைத்து போனார்கள் நிழல் அமைப்பினர். இந்த பயணத்தில் ஒவ்வொரு மரத்தின் கீழும் அதன் அருமை பெருமைகளை அதன் மருத்துவ குணங்களை, இயற்கையை காக்க அவைகள் செய்யும் பணிகளை,நமது வழி பாடுகளில் அவற்றிற்கு இருக்கும் முக்கியத்துவம பற்றி எல்லாம் சொல்லபட்டபின்னர் செளமியா அந்த மரம் குறித்த, அல்லது அதன் பெயர் இடம் பெற்ற பாடல்களின் சில வரிகளை பாடிகாட்டினார். ஒவ்வொரு மரத்திற்கும் அது அந்த பாடலில் இடம் பெற்றிருப்பதற்கான சிறப்பான காரணம், அந்த பாடலை எழுதியவர் ராகம் எல்லாவற்றையும் பிரமாதமாக விளக்கி சொல்லிவிட்டு பாடலை பாடினார். சிறிய தம்பூராவை ஒருகையில் வைத்து மீட்டியவண்ணம் பாடலின் சிலவரிகளை பாடினார். ”மைக் வேண்டாம்அமைதியாக கவனமாக இருந்தால்கேட்கும்” என்று சொல்லி  சிலப்பதிகாரம், தியாகையர், தீட்சதர்பாடல்கள்,தேவாரம், திருவாசம் என  பலவற்றிலிருந்து  தேர்ந்தெடுக்கபட்ட வரிகளை அந்தந்த மரத்தின் கீழ் பாடினார்.  முழுவதும் பாடமாட்டாரா? என எண்ணவைத்த 
செளமியா  டாக்டர் பட்டம் பெற்றிருப்பது இசையிலா?  பாட்டினி பாடத்திலா? என ஆச்சரியப்படும் அளவிற்கு இதற்காக ஹோம் ஒர்க் செய்திருந்தார்.. தன்கைப்பட எழுதிய பேப்பரிலிருந்து பார்த்து பாடும் செளமியா ஐ பேடில் பாடலைத்தேடி கண்டுபிடித்து பாடும் அடுத்த தலைமுறைகலைஞர்களான சீடர்களையும் உடன் அழைத்து ஊக்கபடுத்தியது   ஒரு மகிழ்ச்சியான காட்சி.
வம்சம்தழைக்க உதவும் மருத்துவ சக்தி வாய்ந்ததால்தான் கல்யாணமுருங்கை திருமணங்களில் மூஹூர்த்தகால் மரங்களாக நடப்படுகிறது, மலர்ந்து உதிர்ந்த மகிழம்பூக்கள் சருகானாலும் மணம் பரப்புவதை நிறுத்துவதில்லை. ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் கட்டி ஆடினால் அதற்கு மிகவும்வலிக்கும். மரங்களில் வண்ணவிளக்குகள் போட்டால் அதிலிருக்கும் பறவைகள் அன்று தங்கஇடமில்லமல் தவிக்கும் போன்ற பல செய்திகளை செளமியாவின் இசையுடன் நமக்கு சொன்னவர்கள் நிழல் உறுப்பினர்களான திரு பாபுவும், திருமதி லதா நாதனும்.
கலாஷேத்திராவில் ஒரு மரத்தில் வண்ணத்து பூச்சிகள் தேனடையில் தேனிக்கள் இருப்பது போல மொய்த்துகொண்டிருந்தன. அது ”டீரி ஆப் லைப்” என்றும் தென் அமெரிக்க காடுகளில் காணப்படும்வகை என்றும் சொன்னார்கள். ஒரே மரத்தில் இத்தனை வண்ணத்துபூச்சிகளை பார்த்ததைவிட ஆச்சரியம் அவை அனைத்தும் பறக்காமல் அங்ககேயே இருந்தது தான். ஒரு வேளை அவைகளும் செளமியாவின் பாடல்களினால் மெய்மறந்து பறக்க மறந்துவிட்டனவோ ?
கல்கி 01/09/13

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்