26/9/13

செவ்வாயில் ஒரு சின்ன வீடு


”உங்கள் ஊரில் வீட்டுமனைகளின் விலை ஏறிவிட்தா?  வாங்க முடியாமல் போய்விட்டதே என வருந்துகிறீர்களா? கவலையை விடுங்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு 10 ஏக்கர் வாங்கிப்போடுங்கள். ஒரு ஏக்கர் 69 டாலர்கள் தான் இன்றே  பதிவு செய்யுங்கள்”  என்று அமெரிக்காவின் பல  பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் விளம்பரங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய விளம்பரங்கள் பற்றி பேசபட்டாலும் இப்போது அமெரிக்கா தனது செவ்வாய் கிரக பயண ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ”க்யூராஸிட்டி” கலத்தை அங்கு வெற்றிகரமாக தரையிறக்கியபின்னர் இந்த  மாதிரி விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன.
வேற்று கிரகங்களின் நிலம் யாருக்கு சொந்தம்? முயற்சி செய்து முதலில் இறங்கிய நாட்டிற்கா? அல்லது ஆராயச்சி செய்து கொண்டிருந்த அத்தனை நாடுகளுக்குமா?  1967 லியே ஐக்கிய நாடுகள் சபை இதற்காக ஒருஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறது. 102 நாடுகள் கையெழுத்திடிருக்கும் இந்த சாஸனத்தின் படி வேற்று கிரகங்களின் நிலங்கள் உலக மனித குலத்திற்கே சொந்தம் எந்த ஒரு தனி நாடும் அது அந்த கிரக ஆராயச்சியில் வெற்றிகண்டு முன்னணியில் இருந்தாலும் கூட உரிமை கொண்டாட முடியாது. அப்படியானால் எப்படி இவர்கள் விற்கிறார்கள்?  இந்த வியாபாரத்தை அட்டகாசமான விளமபரங்களுடன் செய்யும்  பை மார்ஸ். காம்(buy mars.com) இந்த ஒப்பந்தம் நாடுகளை தான் கட்டுபடுத்தும், எங்களைபோன்ற நிறுவனங்களை இல்லை என்கிறது. இது தான் எங்கள் தொழில் என்று அமெரிக்க சட்டங்களின் பதிவு செய்திருக்கிறோம். இதுவரை எவரும் எங்களை தடுக்க வில்லை என்று சொல்லிக்கொள்கிறது. இவர்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்று அதை   இந்த மாதிரி விற்பனைகளை பதிவு செய்வதற்காகவே நிறுவியிருக்கும் இன்னொரு நிறுவனத்தில் பதிவு செய்து பத்திரத்தை பிரேம் போட்டு  தருகிறார்கள்  ஸ்டாண்டர்ட், பிரிமியம், டிலெக்ஸ் என்று பேக்கேஜ் கள் வேறு.ஏற்கனவே இது மாதிரி நிலவில் நிலம் விற்று கொண்டிருந்தவர்கள் இப்போது மீண்டும் மார்கெட்டில் குதித்திருக்கிறார்கள். போலி கம்பெனிகளிடம் ஏமாந்துவிடாதீர்கள் என்று அறிவிப்புகள் வேறு.  இவைகள் சட்டபூர்வமானதில்லை என தெரிந்தும் எப்படியும் எதாவது பலன் பின்னால் இருக்கும் என நம்பும் பல அமெரிக்கர்கள் பணம் கட்டிகொண்டிருக்கிறார்கள்.
இந்த விளம்பரங்களை தொடர்ந்து எழுந்திருக்கும் இன்னொரு பிசினஸ் அலை செவ்வாய்கிரகத்திற்கு பயணம். இன்னும்  அங்கு மனிதனை அனுப்புவதில் முதல் நிலையை கூட எட்டாத இந்த கட்டத்திலேயே  முன் பதிவுகளை துவக்கியிருக்கிறது ஒரு டென்மார்க் நாட்டு  நிறுவனம்  பயணமே இரண்டாண்டு காலம் இருக்கும் இந்த பயணத்தில் முதலில் 4 பேர் அனுப்படுவார்களாம். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நான்குபேர் அணிகளாக (இரண்டு பெண் இரண்டு ஆண்) அனுப்புவார்களாம். அங்குபோய் இவர்கள் ஒரு புது உலகத்தை உருவாக்குவார்களாம். அங்கேயே வாழப்போவதால் ஒரு வழி டிக்கெட் தான் வழங்கபோகிறார்களாம். முதல் பயணம் 2023ல் இருக்கும் அதற்கு இப்போதே  முன்பதிவு அடுத்த சில ஆண்டுகளில் தேர்வு செய்யபோகிறார்களாம். இந்த கதைகளை கேட்டு புக் செய்திருப்பவர்களில் இந்தியர்களும் இருக்கிறார்கள்.  நமது ஐஎஸ்ஆர்வோ வின் செவ்வாய் ஆராய்ச்சிகளும் அறிவிப்புகளும் ஒரு காரணம்.
கண்ணில் தெரியும் எவருக்கோ சொந்தமான நிலத்தை மற்றொருவருக்கு விற்கும் நம்மூர் கில்லாடிகளைப்போல கண்ணுக்கே தெரியாத வெற்றுகிரகத்தின் நிலத்தை விற்று கொண்டிருக்கிறார்கள் இந்த சூப்பர் கில்லாடிகள். விரைவில் இவர்களின் எஜெண்ட்கள்  உங்கள் ஊரில் கடைபோட்டாலும் ஆச்சரியமில்லை. ஜாக்கிரதையாக இருங்கள்

ஆதித்தியா (ரமணன்)
கல்கி8/9/13

1 கருத்து :

  1. நம்மூர் multi level marketing விளம்பரங்களை விட ஒரு படி மேலே போய் கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்