5/10/13

ஒபாமாவின் அதிரடியினால் ஆடிப்போன அமெரிக்கா !

அமெரிக்க அதிபர் ஒபமா அறிவித்திருக்கும்ஷட்-ட்வுன்”  மூலம் 8 லட்சம் பேர் ஒரேநாளில் வேலையிழந்திருக்கின்றனர்  அமெரிக்கபொருளாதாரம் ஆடிப்போயிருக்கிறது ஏன்?
 --ஒரு அலசல்

உலக பொருளாதாரத்தையே மாற்றியமைக்ககூடிய சர்வ வல்லமை வாய்ந்த அமெரிக்க நாட்டின் அரசாங்கம் ஒரே இரவில் செயலிழந்து நிற்கிறது. வழக்கம் போல் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த பலர்  வேலை போன செய்தியை காலையில் டிவியில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்., காரணம்.  அதிபர் ஒபாமாவினால் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறமுடியவில்லை. அரசின் கஜானாவிலிருந்து அரசாங்கத்தினால் பணம் எடுக்க முடியாத நிலையில் அரசின் பலதுறைகள்  இழுத்து  மூடபட்டு    8 லட்சம் நேரடிஊழியர்களுக்கும் 10 லட்சம் பகுதிநேர ஊழியர்களுக்கும் அடுத்த 6 மாதம் வரை சம்பளம் இல்லாத விடுமுறை அறிவிக்கபட்டிருக்கிறது. முதியோர் பென்ஷன்கள் நிறுத்திவைக்கபட்டிருக்கிறது.

ஏன் பட்ஜெட் நிறைவேறவில்லை?                    

அமெரிக்க நாடளுமன்றத்தில் இரண்டுசபைகள். ஓன்று நமது மக்களவைக்கு நிகரான பிரதிநிதிகளின் சபை. இதில் குடியரசு கட்சிதான் மெஜாரிட்டி. மற்றொன்று நமது மேலவைக்கு நிகரான செனட், இதில் ஒபாமாவின் கட்சியான ஜனநாயக கட்சிக்குதான் மெஜாரிட்டி.  கடந்த அதிபர் தேதலில் ஒபாமா முன்வைத்த ஒரு விஷயம். நமது அரசு காப்பீட்டு வசதி.போல  ”ஒபாமா ஹெல்த்கேர்” என்ற சாமானியனுக்கு மருத்துவ இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.  மருத்துவ செலவு மிகமிக அதிகமாகயிருக்கும் அமெரிக்காவில் இந்த இன்ஷ்யூரன்ஸ் அரசு, தனியார்பணியிலிருப்பவர்கள் மற்றும்  வேலையில்லாத, எளிய மக்களுக்கு உதவப்போகும் என்பதினால்  மக்களிடம் ஆதரவு இருந்தது ஒமாபா வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.   ஆனால்  வரி பணத்தை வரியே செலுத்தாதவர்களுக்கு சமூகநலதிட்டங்கள் என்ற பெயரில் செலவழிப்பதை  குடியரசு கட்சி எதிர்த்தது. அதிபர் தேர்தலில் அதன் கட்சி வேட்பாளார்  வெற்றிபெறாதாதால் இந்த திட்ட்த்திற்கு தங்கள் எதிர்ப்பை காட்ட ஒரு  சந்தர்ப்பதிற்காக காத்திருந்தது. அதனால் பட்ஜெட்டை நிறைவேற்றாமல் இழு பறி செய்தது கொண்டிருந்தது.
நிதிமசோதா நிறைவேறவேண்டுமானால் ”ஒபாமாகேர்” திட்டத்தில் திருத்தங்கள் அல்லது ஒராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை  எதிர்கட்சியான குடியரசு கட்சி கொண்டுவந்து தன் மெஜாரிட்டி பலத்தால் நிறைவேற்றியும் விட்டது.
 ஆனால்   ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி தாங்கல் மெஜாரிட்டியாக உள்ள செனட் சபையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்தது..  நிதியாண்டின் கடைசி நாளான செப் 30ல். வருடாந்திர பட்ஜெட் நிறைவேறாவிட்டால், குறுகிய கால அவசர செலவிற்காக அரசுக்கு நிதிதர நாடாளுமன்றம் அனுமதி தரவேண்டும். தங்கள் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதில் கடுப்பாகிபோன குடியரசு கட்சி இந்த தீர்மானத்தை கொண்டுவரவேண்டுமானால் காப்பீட்டு திட்ட செலவை  குறையுங்கள்  அல்லது ஒராண்டு தள்ளிப்போடுங்கள் என மிரட்டியது   ஒபாமா பணிய மறுத்து நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனையை மக்களிடம் கொண்டுபோவேன் என பதிலுக்கு மிரட்டினார்.
  . செப் 30ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை நீடித்த இந்த போராட்டம் முடிவுக்கு வருவதற்குள் நிதியாண்டு முடிவுக்குவந்துவிட்டது. ஆளும் கட்சி காலியான கஜானாவுடன் ஆட்சியை தொடரவேண்டிய நிர்பந்தம். அதன் விளைவுதான் இந்த ஷட்-டவுன்”அறிவிப்பு. சுருக்கமாக சொன்னால் இரண்டுகட்சிகளும் தங்கள் கொள்கையை விட்டுகொடுக்க மறுத்த அகம்பாவத்தின் விளைவு இது.

 மக்கள் வேலையிழப்பு ஏன்?

அமெரிக்க நாடாளமன்ற நடைமுறைப்படி பட்ஜெட் நிறைவேறாதுபோனால் உடனே அரசு ராஜினாமா செய்யவேண்டியதில்லை. 6 மாதத்திற்குள் எப்படியாவது சமாளித்து பட்ஜெட்டை நிறைவேற்றவேண்டும், அதுவரை செலவினங்களை குறைக்கவேண்டும். எளிதான வழி அரசு பணியாளார்களுக்கு சம்பளமில்லாத விடுமுறை. அதைத்தான் இப்போது ஒபாமாவின் அரசு செய்திருக்கிறது. தொழிற்சங்கங்கள் கொதித்து எழதோ?  அமெரிக்க அரசுபணியில் இருப்பவர்கள் அரசாங்கம் பொருளாதார, மற்றும் போர் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தால் இம்மாதிரியான நிர்பந்தளை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பணியமர்த்தபடுகிறார்கள்.  இம்மாதிரி நெருக்கடிகளில் அரசாங்கபணிகளை அவசியமானவை, அவசியமில்லாதவை என வகைப்படுத்தி அதை அறிவித்துவிடுவார்கள். நள்ளிரவுக்கு பின் எடுக்கபட்ட பல அதிரடி முடிவுகள் அதிகாலையில் அமுல்படுத்தபட்டன,  பல அரசு அலுவலகங்கள்,தேசியபூங்காக்கள்,மியூசியங்கள்,  நியூயாரக் சுதந்திர தேவி சிலை, வாஷிங்டனிலுள்ள ஸ்மித்ஸன்யன் மீயூசியம், நினைவு சின்னங்கள் எல்லாம் மூடபட்டன.
இவைகள் ஈட்டும் வருவாயை விட இதன் நிர்வாக செலவு அதிகமாம்.  நாஸாவில் மட்டும் 97 % (18000க்கும்மேல்) பணியாளர்களுக்கு லீவு. வருமானவரி துறையில் பணீயாளர்கள்  இல்லாததினால் வரி வருமானம் குறையும். அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும்,பங்குசந்தை தடுமாறும். அதன் தாக்கம் மற்றநாடுகளின் பங்கு சந்தைகளில் எதிரொலிக்கும்.

இது புதிதில்லை

அமெரிக்க அரசியலில்  இப்படி அரசை முடக்குவது என்பது இதற்கு முன்பே 17 முறை நிகழந்திருக்கிறது. ரீகன், புஷ், கார்ட்டர் காலங்களிலும் ” அரசு மூடல்” நடந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் சில நாட்களிலேயே சரியான விஷயம், 17 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா சந்திக்கும் இந்த அதிர்ச்சி சில வாரங்களாவது நீடிக்கும் என்பது வல்லுனர்களின் மதிப்பிடு. அதுவரை அமெரிக்க பொருளாதாரம் இழக்கபோவது வாரத்துக்கு நூறுகோடி டாலர்கள்!

 அரசியல் நாடகமா?

அடுத்த சில மாதங்களில் பிரநிதிகள் சபை தேர்தல் வருகிறது. அதிலும் தன் கட்சி மெஜாரிட்டியை பிடிக்க,  இம்மாதிரி ஒரு சூழ்நிலைக்கு பொறுப்பில்லாத, மக்கள் நலம் விரும்பாத குடியரசு கட்சிதான் காரணம் என்பதை மக்கள் உணர்ந்து அவர்கள் மீது வெறுப்பு அதிகரித்து அவர்களுக்கு ஓட்டு அளிக்கமாட்டார்கள் என்பதற்காக  ஒபமா நடத்தும் அரசியல் நாடகம் இது. இந்த நாடகத்தில்  அரசு ஊழியர்களை பகடைக்காயாக்கிவிட்டார். ஒபாமா கேர் திட்டத்தை எதிர்க்கபோய் எதிர்பாராதவிதமாக குடியரசு கட்சி சிக்கிகொண்டு திண்டாடுகிறது என்றும் சில அமெரிக்க தினசரிகள் எழுதிகின்றன.

இந்தியா பாதிக்கபடுமா?

இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அமெரிக்க பெடரல் அரசின் பணிகளை அதிகம் செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் நிலமை நிடித்தால் அரசாங்க பணிகளை செய்யும் நிறுவனங்களுக்கு உதவும் இந்திய நிறுவனங்கள் பாதிக்கபடும். என்கிறார். சோம் மிட்டல் இவர்  இந்திய கம்ப்யூட்டர் தொழில் கூட்மைப்பின் தலைவர். அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கு அதிகம் மருந்து ஏற்றுமதி செய்வது நாம் தான். பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனால்  மிக பாதிப்புக்குள்ளாகும்..  
எப்போது நிலமை சரியாகும்?
இரண்டு கட்சிகளும் கூடிப் பேசி நிலைமை சரி செய்து பட்ஜெட்  நிறைவேற்றவேண்டும். அதற்கு எவ்வளவு நாளாகும்? என்பது எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி. ஆனால் 1996ல் கிளிண்ட்னை  மண்டியிட குடியரசுகட்சி இதே முறையை கையாண்டதில் மக்கள் வெறுப்புற்று கிளிண்டனை ஆதரித்தார்கள். அதேபோல் பல முனைகளில் தோல்வியை சந்தித்து மக்களின் செல்வாக்கை இழந்துவரும் ஒபாமா விற்கு அதை மீட்க குடியரசு கட்சியின் இந்த பிடிவாதம் உதவபோகிறா?  உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.
கல்கி 13/10/13


1 கருத்து :

  1. மாதங்கி வெங்கடேசன் (IOB)5 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:23

    செய்தியை டிவியி கேட்டபோது புரியவில்லை. உங்கள் கட்டுரையை படித்தபின்னர்தான் விஷயம். விளங்குகிறது. பிரச்சினை தீர்ந்தவுடனும் எப்படி என்றும் எழுதுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்