5/1/14

ஒரே இரவில் 85000 ரூபாய் !

மனதில் பதிந்த பதிவுகள்

 


இ.ரா மணிகண்டன் என்பவரின் வலைப்பூ(BLOG)  ”நிசப்தம்” பார்த்தது, படித்தது,.கேட்டது,ஆபிஸ்,  அடுத்தவீட்டுகாரன்,  சினிமா, புத்தகம், வம்பு அரசியல், பயணங்கள்  என்று எதைப்பற்றியாவது   படிக்க ஆர்வம் மூட்டும் வகையில் தினமும் எழுதி தள்ளிக்கொண்டிருப்பவர். கொங்குநாட்டு வாழக்கைமுறை, சாப்ட்வேர்துறை ஆகியவைகளின்  தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். சிறந்த வலைப்புக்கான சுஜாதா விருதை 2013ம் ஆண்டில் பெற்ற இவர் தளத்தில் தன் படத்தை கூட போட்டுகொள்ளாத எளிய மனிதர். பங்களூரில் வசிக்கிறார்.
பாலாஜி சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் முழுஸ்காலர்ஷிப்பில் ரோப்டிக்ஸில் ஏம் டெக் படிக்கும் ஒரு மாணவர்.  மிக எளிய குடும்ப பின்னணியுள்ள இவருக்கு  ரோபோவின் மீது வெறும் ஆர்வம் மட்டுமில்லை. வெறி, காதல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். வெறும் ஆர்வத்தோடு நின்றுவிடாமல் தனது ஆர்வத்தை செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் ஏகப்பட்ட ரோபோக்களை சுயமாக வடிவமைத்திருக்கிறார். இவரது லிஸ்ட்டில் பறக்கும் ரோபோட், விவசாய ரோபோட் என்று பலவகைகள் அடங்கும்.
இவருக்கு ஜப்பானில் நடைபெறும் ஒரு சர்வதேச ரோபோட்டிக்ஸ் கருத்தரங்கிறகுற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் போவதற்கு முயற்சி எடுக்க கூட  முடியவில்லை காரணம் டிக்கெட்டுகான பணம். தன்னுடைய பிளாக்கில் மணிகண்டன் இதை எழுதி உதவி செய்யமுடியுமா? என கேட்டிருந்தார். முதல் நாள் இரவில் எழுதிய பதிவிற்கு மறுநாள் மாலைக்குள் வந்த பணம்  85000 ரூபாய்கள்.! அமெரிக்காவிலிருந்து 50000, கத்தாரிலிருந்து 30000 என்று சிலமணிநேரங்களில் பணம் வங்கி கணக்கில் சேர்ந்தது.. இவர்களில் யாரையுமே இதுவரை மணிகண்டன் நேரில் பார்த்ததில்லை என்பது  ஒரு முக்கியமான விஷயம்.


 இதற்காக தன் நன்றியை  சொல்லும் மணிகண்டன் “இத்தனை பெரிய தொகையை ஒரே இரவில் புரட்டிவிட முடியும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நேற்று இந்தப் பதிவை எழுதும் போது கூட பத்தாயிரம் ரூபாய் புரட்டினாலே பெரிய விஷயம் என்றுதான் தோன்றியது. ஆனால் நல்ல காரியத்திற்காகச் செய்யும் போது எல்லாமே சரியாக நடக்கின்றன. கடவுள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த மாதிரியான கணங்களில் நம்பிக்கையை இன்னும் சற்று உறுதிப்படுத்திக் கொள்கிறேன்என்று தன் பதிவில் எழுதுகிறார்.  உதவிக்கு நன்றி சொல்லும் பாலாஜி இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிடுங்க சார்.இப்போதைக்கு இந்தப் பணம் போதும் சார். என்னை மாதிரி வேற யாராச்சும் வந்தாங்கன்னா அவங்களுக்கு தேவைப்படும்ல. அப்போ தந்துடச் சொல்லுங்கஎன்று மணிகண்டனுக்கு சொல்லியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தபடும் அவலம், ஆபத்துகள் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகின்ற நேரத்தில் இம்மாதிரி மாறுதலான செய்திகள் ஆறுதலாக இருக்கிறது.  சமூக பொறுப்புடன், மனித நேயத்தோடு எழுதும் பதிவர்களும், அதை மதிக்கும் வலைப்பூ வாசகர்களும்  உலகில் எங்கோ ஒரு மூலையிலும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷத்தை தருகிறது.
ஆதித்யா (ரமணன்)

மணிகண்டனின் நிசப்தம் லிங்க்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்