12/1/14

உலகளவில் தமிழ் -புதிய பார்வை

இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் தாயகம் கடந்த தமிழ் என்ற அனைத்துலக மாநாடு கோவையில் ஜனவரி 20,21,22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அமைப்புக்குழு தலைவராக எழுத்தாளர் மாலன் உள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து
இந்த மாநாடு எதற்காக?
தமிழ் என்பது இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ள மொழி. தமிழ் என்று பேசும் தருணங்களில் எல்லாம் பெரும்பாலும் நாம் அதன் இலக்கியத்தை குறித்துப் பேசுகிறோம். ஆனால் மொழி என்பது இலக்கியம் மாத்திரம் அல்ல. தமிழர்களின் பாரம்பரியத் தாயகங்களான தமிழகத்திலும்   இலங்கையிலும், அந்தத் தாயகங்களுக்கு அப்பாலும் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அது தளராமல் தாங்கி நிற்பது இலக்கியம், ஊடகம், கல்வி, தொழில்நுட்பம் ஆகிய நான்கு தூண்களே. இந்தத் துறைகளில் கணிசமான பங்களித்தவர்கள் கூடிக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம். இந்தத் துறைகளில் முன்னேறிச் செல்ல இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் பயனளிக்கும் என எண்ணுகிறோம். ஒரு வேளை இதன் காரணமாக இந்தத் துறைகளிடையேஓர் கூட்டாற்றால் (synergy) ஏற்படவும் கூடும் என்றும் நம்புகிறோம்

இந்த மாநாட்டில் நீங்கள் எப்படி ஈடுபட்டுள்ளீர்கள்?
ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் பத்துப் பனிரெண்டு ஆண்டுகளாக தமிழிலக்கியம் என்பது தமிழ்நாட்டில் எழுதப்படும் இலக்கியம் மாத்திரமல்ல என்ற கருத்தைத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். இந்தக் கருத்தை வலுப்படுத்தும் நோக்கில்  திசைகள் என்ற மின்னிதழை ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து வெளியிட்டுள்ளேன். யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ் அது. 2004ல் அயலகத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து சிங்கப்பூர் தேசியப் பலகலைக் கழகத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறேன். 2011ம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம், தேசிய கலைமன்றம் இவற்றின் ஆதரவில் நடத்தப்பெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளேன். இந்த மாநாட்டின் அமைப்புக் குழு தலைவராக உள்ளேன். அயலகத்தில் உள்ள கட்டுரை வாசிப்போரைத் தேர்ந்தெடுப்பது,  கட்டுரை பெறுவது, மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது, கட்டுரைகளுக்கு நூல் வடிவம் அளிப்பது ஆகியவை என் பணிகளாக அமைந்தன

இந்த மாநாட்டினால் என்ன பயன்?
தமிழ் மக்கள் தமிழ் மொழி, இலக்கியம், கல்வி ஆகியவை குறித்த ஓர் புதிய பார்வையும் பெருமிதமும் பெறுவார்கள். மாநாட்டுக் கட்டுரைகள் நூலாக வெளியாகின்றன. அவை ஆய்வு மாணவர்களுக்கும், முதுநிலை மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

சந்திப்பு 

ஆதித்யா

(கல்கி19/01/14)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்