26/1/14

கங்கைக் கரை ரகசியங்கள் .... 3




உலகில் சில நதிகள்மட்டுமே  பல ஆயிரமாண்டுகளாக வற்றாமல் மிக நீண்ட தூரம் ஒடிக்கொண்டிருக்கின்றன. தேசங்களும்,கலாசாரங்களும் பிறந்த தொட்டில்கள் என வர்ணிக்கப்டும் இந்த நதிகளில் ஒன்று, இந்திய துணைக்கண்டத்தில் ஒடும்  கங்கை.  ஆனால்  இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்கும் இந்த கங்கை மட்டுமே, பயணிக்கும் வழியெங்கும்  தெய்வமாக வழிபடப்படுகிறது.  இதன் கரைகளில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது.  இதிகாசங்களுக்கும் புராணங்களுக்கும் முந்தையதாக கருதப்படும் ரிக்வேத்தில் காசி நகரமும், கங்கைக்கரையும் பேசப்பட்டிருக்கிறது.  அந்த கங்கையில் படகில்  இன்று பயணம் செய்யலாமா?




ஈஷா அமைப்பினர் அழைத்துசென்ற காசி புனிதபயணத்தில் இம்முறை பங்களுருவிலிருந்து காசி செல்லும் சங்கமித்திரா எக்ஸ்பிரஸில்  சென்னை, விஜய்வாடா, நாக்பூர் என அங்கங்கே இணைந்துகொண்டவர்களும் நேரடியாக வாரனாசிக்கு வந்தவர்களுமாக  பங்கேற்றவர்கள் 200க்கும்மேல். பல்கலைகழக பேராசியர்கள், டாக்டர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் வாழ்க்கையை துவக்கியிருக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் படிப்பைதொடர போகும் மாணவர்கள், வயதான பெற்றோர்களை அழைத்துவந்திருக்கும் இல்லத்தரசிகள் வெளிநாட்டவர்கள், என பலதரப்பட்டவர்கள்
நிறைந்த பெரிய குழு அது  இந்த பயணத்தை வழி நடத்த சத்குருவினால் நியமிக்கபட்ட தலைவர்கள் ஸ்வாமி பிரோபதா.(படம்) ”மா” கம்பீரி.(படம்) ஈஷா வில் பெண் துறவிகள் ’மா” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவ 8 பேர் கொண்ட ஒரு தொண்டர்படை அதில் இளம்துறவிகளும் அடக்கம்

 தலைவர்கள் சாமியார்களாக இருந்தாலும் சகலுமும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தேர்ந்த டிராவல் ஏஜெண்ட்கள் போல மிக அழகாக திட்டமிட்டு   செயலாற்றுகின்றனர்.
அன்றைய பகல்பொழுதை குழுவினர் விருப்பம்போல் காசி நகரில்  செலவிடலாம் என்று அறிவிக்கபட்டிருந்தது. தன் கரையெங்கும் கோவில்களாலும் சக்தியாலும்  நிரப்பியிருக்கும்  கங்கையில் படகில்  சில மணிநேரங்கள் பயணம் செய்ய நம்மைப்போல விரும்பிய ஒரு சிறு குழுவோடு நாமும் இணைந்து கொள்கிறோம். நம்விருப்பத்தை சொன்னதும் உடன் வந்து உதவினர் குழுதலைவர்கள் .அமைதியாக காணபட்டாலும் 60 அடிக்குமேல் ஆழமிருக்கும் அந்த நதியில் படகில் செல்லும்போது நாம் செய்யகூடாதை பட்டியிலிடுகிறார். மா.கம்பீரி. ஏதாவது நேர்ந்தால் உங்களுக்காக பிரார்த்திப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற வார்த்தைகள் நம்மை படகில் அசையாமல் உட்காரசெய்கிறது.

கரையிலிருந்து நதிக்குள் செல்வதற்குள் முட்டிகொண்டிருக்கும் காலிப்படகுகளின் நெரிசல். மிக லாகவமாக கைகளால் தள்ளி, படகால் இடித்து  கங்கைக்குள் பிரவேசிக்கிறார் நம் படகுக்காரார்.   இளம்வெய்யிலில் இதமான காற்றில்  தெளிந்தோடிக்கொண்டிருக்கும் கங்கையின் குளுமை, மெல்லிய அலைகளாக நம்மை அழைக்கிறது.  ஆயிராமாயிரமாக ஆண்டுகளாக பிரவாகத்தில் இருக்கும் ஒரு புனித நதியில்,பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக காலம் காலமாக  கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளை மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையில்  இன்று நாமும் பயணிக்க பாக்கியம் செய்திருக்கிறோம் என்ற  எண்ணம்  மனதில் நிறைந்திருக்க  மெல்ல நம் கங்கைபயணம் தொடர்கிறது.

கங்கைகரையின் ஒருபக்கம் முழுவதும்  நெருக்கமாக பல படித்துறைகள். ”காட்” என்று சொல்லுகிறார்கள்.  இவைகள் இந்த புனித அன்னையில் நீராடும் ஸ்நானகட்டங்கள். மிக நெருக்கமாக ஒன்றையொன்று தொட்டுகொண்டிருக்கின்றன. 100 இருந்தனவாம் இன்று 80 இருப்பதாகவும் அதில் 64 பயன்பாட்டில் இருப்பதாகவும் சொன்னார்கள். எல்லா படித்துறைகளுமே நிறையபடிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. கங்கயில் வெள்ளம் அதிகரித்தாலும் நகரை தாக்காமலிருக்க செய்யபட்டிருக்கும் பாதுகாப்பு. கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததேயில்லையாம். முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகரகோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும்  சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது.  மன்னர் அளெரங்சீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க  எழுத்துபூர்வமாக இட்ட கட்டளை இன்றும் பனாரஸ் பல்கலை கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது. ஆனால் காசிநகரம் ஒருமுறை கூட கங்கையின் வெள்ளத்தால் தாக்கபட்டதாக வரலாறு இல்லை. கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட  வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது.  சக்தி நிறைந்த காசியை காக்கும் காவல் தெய்வம் அதைவிட சக்தி வாய்ந்த இந்த கங்கை.  
படகிலிருந்து பார்க்கும்பொது இந்த தீர்த்தகட்டங்களும் அதன்பின்னே உள்ளே கட்டிடங்களும் பல வண்ணங்களில் வடிவங்களில் கம்பீரமாக இருக்கின்றன. இந்தியா பல ஸ்மஸ்தானங்களாக இருந்த காலகட்டத்தில்  மன்னர் குடும்பத்தினரின் வசதிக்காக பனாரஸ் அரசரின் அனுமதியோடு எழுப்பப்பட்டிருக்கும் இந்த கட்டிடங்கள் அந்தந்த பகுதிகளின் கட்டிடகலைகளின் பிரதிபலிப்பாக அழகான சிற்பவேலைப்படுகளுடன், பெரிய தூண்கள், உப்பரிகைகள் என அழகாக  எழுப்ப பட்டிருக்கிறது. சிலவற்றின் அருகில் சென்று கட்டிடத்தின் உள்ளேயேயும்சென்று பார்க்கமுடிகிறது.  பனாரஸ் மன்னரின் படித்துறை அவர்கள் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக கட்டபட்டிருக்கும் ஒரு ஸ்நான அரண்மனை. உள்ளே குளிக்கும் அறைக்குள் கங்கை வருகிறது. சில  கட்டங்களை   குஜராத், ராஜஸ்தான் போன்ற சில மாநில அரசுகளே  பராமரிக்கின்றன.  சில பராமரிப்பின்றி பழாடைந்தும்  இருக்கின்றன. இன்னும் சில ஹோட்டல், புடவைக்கடைகளினால் ஆக்கிரமிப்பு செய்யபட்டுமிருப்பதை அதன் போர்டுகள் சொல்லுகின்றன.                         
நகரில் வர்ணா மற்றும் அஸி என்ற இரு சிறு நதிகள், -கங்கையை பார்த்தபின் இவைகளை நதி என்று சொல்லகூடாது.- சிற்றோடைகள் கங்கையுடன் இணைகிறது, இவைகளுக்கு இடையில் நகரம் இருப்பதால் இது வராணாசி என்றும் அழைக்கபடுகிறது.  

அஸி நதி கங்கையில் கலக்கும் பகுதியில்
அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது.  இந்த நுழைவு வாயிலிருந்து தான் நம் படகு பயணத்தை துவக்கி  ஒவ்வொரு திர்த்தகட்டமாக பார்த்துகொண்டிருக்கிறோம்.  இங்கிருக்கும் 64 படித்துறைகளிலும் தவறாமல் நீராடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால் பலர்  ”பஞ்ச தீர்த்த யாத்திரை” என்று  அஸ், தசாஸ்வமேத, வரண, பஞ்சகங்கா, மனிகர்ணா ஆகிய முக்கிய ஐந்து கட்டங்களில்  நீராடி வழிபடுகிறார்கள்

 ஏன் இவ்வளவு படித்துறைகள்?   இதற்கு காசி நகரின் அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும் பல கோவில்களை உள்ளடக்கிய வட்டவடிவமாக ஒரு சக்தி இயந்திரமாக உருவாக்கபட்டிருப்பது காசி நகரம்.



 மூன்று முக்கிய சிவன்கோவில்கள் ஒரு நேர்கோட்டிலும் சக்தி வளையமாக நிறுவபட்ட மற்ற கோவில்ககளை இணைக்கும் ஆரமாக சிறிய கல்பாவிய நடைபாதைகள். அமைக்க பட்டிருந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் இந்த வாளாகத்திலிருந்த 468 கோவில்களிலும் ஒரே நேரத்தில் சப்தரிஷி பூஜைகள் நடந்திருக்கின்றன. கங்கைநதி  காசிநகருக்கு வெளியே   ஒரு வட்டத்தின் பரிதியைப்போல சற்றே வளைந்து ஒடுகிறது  
 கங்கையில்  நீராடியபின் எளிதாக பக்தர்கள் விரும்பும் கோவில்களுக்கு நேரடியாக போய் வழிபடும் வகையில் இந்த படித்துறைகள். அமைக்கபட்டிருக்கின. இன்றும்  எந்த படித்துறையில்ருந்து நேராக நடந்தால் ஒரு கோவிலுக்கு போகும் பாதை வருகிறது.  இன்று சிறு சந்துகளாகிவிட்ட அந்த பாதைகள் தான் சக்தி வளையத்தின் ஆரங்கள்..   கோவில்களில் பூஜிப்பவர்களை தவிர மற்றவர்கள் வசிக்க அனுமதியில்லாத.  அந்தபுனிதமான பாதைகள் தான் காலசக்கர சுழற்சியில் பலரின் வாழ்விடமாகவும், அவர்களின் வாழ்வாதரத்திற்கான வியாபாரஸ்தல்மாகவும் நிறைந்து ”கல்லி” களாகியிருக்கின்றன.  இந்த செய்தியை அறிந்ததும் காசியின் குறுகிய சந்துகளின்  புனிதமான அகலமும்  அதை  நாசமாக்கிய நம்மவர்களின் குறுகிய மனமும் புரிந்தது.   
ஒவ்வொரு ”காட்”லும் ஒரு கோவில் மூன்று வேளைபூஜை. அதனால் எந்த படித்துறையில்  நீங்கள் குளித்தாலும் முதலில் அங்குள்ள தெய்வத்தை வழிபட்டபின்னரே நகருக்குள் செல்ல வேண்டும்.  , குழந்தை பிறப்பு, கல்வியின் துவக்கம், திருமணம், உடல்நலம், குடும்பத்தினர் நலம் மணவாழ்வுநலம், இறுதியாக மரணம் என்று மனித வாழ்வு சம்பந்தபட்ட ஓவ்வொருவிஷயத்திற்கும் இந்த  கங்கைக்கரையில் ஒரு தெய்வ சன்னதியிருப்பது பார்க்கும்போது எப்படி இந்த கங்கைக்கரை வாழ்வோடு  இணைந்த ஒரு விஷயமாகியிருக்கிறது என்று புரிகிறது. 
 படகில் நம்முடன் வரும் போட்டோகிராபர் படமெடுத்து, உடனே அதை படகிலேயே இருக்கும் பேட்ரியில் இயங்கும் பிரிண்ட்டரில் படமாக்கி தந்துகொண்டிருக்கிறார். டிஜிட்டல் டெக்னாலாஜி உபயம். படகு மனீகர்ணா தீர்த்த கட்டத்தை நெருங்குகிறது.   தொலைவிலிருந்து பார்த்த புகையிம் நெருப்பும் இப்போது பளீரென தெரிகிறது. மிதக்கும் படகிலிருந்து கரையில் நிகழும் மனித மரணத்தின் கடைசிகாட்சிகளை பார்க்கும்போது மனம் கனமாகி  இனம்தெரியாத உனர்வுகள் நம்மை தாக்குகிறது. எரிவது எவரோ என்றாலும் ஐயோ என்ற எண்னம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பார்த்துகொண்டு இருக்கும்போதே  பத்து நிமிடத்தில் வந்த இரண்டு உடலற்ற உடல்கள்,  அவைகளுக்கு இடமில்லாதால் எரிந்துகொண்டிருப்பவைகளை தகனமேடையிலிருந்து கிழே தள்ளப்பட்டது, உடல்களை எரியூட்ட படகுகளில் வந்துகொண்டிருந்த விறகுகள், எல்லாம்  அவர்களுக்கு இது  தினசரி வாடிக்கை என்பதை புரியவைத்தது. ஆனால் நமக்கு மறக்கவிரும்பும் மனதை பிசைந்த காட்சிகள் அவை. சராசரி ஒரு நாளைக்கு 50 உடல்கள் வரும்,  இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறுஆண்டுகளாக அணைப்பதே இல்லை என்று என படகோட்டி சொன்னபோது இந்த உலகில் நிரந்தரமாக நடக்கும் விஷயங்களில் மரணமும் ஒன்று, நமக்கும் ஒரு நாள்  நிகழும் அது வரை அது பார்க்கும்போது  வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும் என்று உரைத்தது. .  உயிரற்ற உடல்கள் உருக்குலைந்த்ததை அத்துணை அருகில் பார்த்ததினால் நம் மனம் கனமாக இருப்பதைப்போல நம்படகும் கனமாகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு படகும் மெல்ல செல்கிறது. நீரின் வேக  ஓட்டம் போதுமானதாக இருப்பதால் துடுப்பு போடவில்லை என்ற படகோட்டி சொல்லுகிறார். 
படகு கரையை அடைந்தாலும் காட்சியின் தாக்கம் கரையவில்லை. சாலையில் நடக்கும்போது காசிநகரின் எல்லாபகுதிகளிலும் கேட்கும் டிரிங், டிரிங் சைக்கிள் ரிக்‌ஷாகளின் மணியோசையும்,பலமொழிகளின் ஓசையும் மெல்ல நம்மை இந்த உலகிற்கு இழுத்துவருகிறது.
நாளைகாலை காலபைரவரை தரிசிக்க 3.30மணிக்கு கிளம்ப வேண்டும். தயாராக இருங்கள் என்ற அறிவித்திருக்கிறார்கள்.  தூங்கிகொண்டிருந்த  நம்மை ஹோட்டல்கார்கள் தவறுதலாக 2.30 மணிக்கு பதிலாக  1.30மணிக்கே வேக்-அப் கால் கொடுத்து எழுப்பியதால் தூக்கம் கலைந்தது. காலபைரவர் நம்மை ஏன் சீக்கிரமாக அழைக்கிறார் என எண்ணி   உட்கார்ந்திருக்கிறோம். இன்னும் பஸ் வரவில்லை
------------------------------------------------------------------------------------------------------------



சத்குருவின் பதில்கள்
காசியில் எங்களை மணிகர்ணிகாவை பார்க்கச்சொன்னீர்கள். அப்போது நாங்கள் என்ன விதமான சாதானா செய்ய வேண்டும் ? காசியில் மரணம் நிகழ்ந்தால் முக்தி கிடைக்கிறது என்பது உண்மையா?
குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் உங்களைப்போன்றவர்கள்  தியானம் எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் சும்மா பார்த்துவந்தால் போதும். உடல்கள் எரிக்கப்படும் இடம் ஒரு பலிபீடம் போன்றது. அங்கிருந்து ஒரு உயிர்பிரியும் போது அபாரமான சக்தி வெளிப்படும் அதை சாதானாவிற்கு பயனபடுத்திக்கொள்ளலாம் என்பது உண்மையானாலும்  நீங்கள் செய்ய கூடாஅது. அது பயிற்சிகள் நிறைய செய்திருக்கும் பிரம்பச்சார்கள் மட்டுமே செய்ய வேண்டியது.  மரணம் என்ற மகா உண்மைய நேருக்கு நேர் நீங்கள் பார்க்க வேண்டும்.  மனத்தளவில்அதற்கான சக்தியை பெறவேண்டும் என்பதற்காக தான் பார்க்க சொன்னேன். காசியில் முக்தி பற்றி கேட்டீர்கள்.  காசியின் மகா மயானத்தில் உயிர் பிரியும்போதும், உடலை எரிக்கும்போதும் காலபைரவர் ‘‘பைரவி யாத்தனா’’ என்னும் செயலை நடத்தி வைப்பதாக கூறப்படுகிறது. யாத்தனா என்றால், ‘தீவிரமான வலி’ என்று பொருள். மரணத்தின் தருவாயில், ஒரு மனிதனின் பற்பல பிறவிகளின் கர்மவினைகளையும் ஒரே ஷணத்தில் வெளிக்கொண்டு வந்து பைரவர் கலைகிறார். எந்தமாதிரியான கர்மவினைகளை ஒரு மனிதன் பல பிறவிகளில் வாழ்ந்து தீர்க்கவேண்டுமோ, அவை எல்லாம் ஒரே ஷணத்திற்குள் தீர்கின்றன. இது யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத அளவிற்கு தீவிரத்துடனும், வலியுடனும் நடக்கிறது. ஆனால், ஒரு ஷணத்திற்குள் முடிந்துவிடுகிறது. ‘‘பைரவி யாத்தனா’’ என்ற இந்த தீவிர செயலை செய்வதற்காகவே சிவன் காலபைரவர் என்ற உக்கிரமான உருவுடன் காசி மகா மயானத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நரகத்தை மிஞ்சிய வலியை இது ஏற்படுத்தினாலும், அதன் பின்னர் அந்த உயிரின் பழைய கர்மத்தினில் எதுவும் மிஞ்சாமல் ஒரு சுதந்திர முக்தி நிலை நிலவுகிறது


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்