8/2/14

தாயகம் கடந்த தமிழ்க் காதல்”




தமிழ்  இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ள மொழி. தமிழர்கள் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் கங்காரு தன் குட்டியை தூக்கிசெல்வது போல தங்கள் மொழியை கொண்டுசென்றார்கள். அதற்கு காரணம் அவர்கள்  மொழியை கலாச்சாரத்தின் அடையாளமாக, பண்பாட்டின் சின்னமாகப் போற்றியதுதான். . அதனால் தான் எங்கு சென்றாலும் அங்கு  . தன் மொழிக்கான இலக்கியங்களை படைக்கிறார்கள்.  இன்று கடல் கடந்து நிற்கும் தமிழ் மொழியை அதிவேகமாக மாறிவரும் இன்றைய உலகின் தேவைக்கேற்ப படைப்பிலக்கியங்களையும் தாண்டி ஊடகம், தொழில்நுட்பம்,  கல்வி போன்றவைகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் அரும் பணியை  உலகெங்கும் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் முதல் கலிபோர்னியா வரை விரவி, பரவி நிற்கிற அவர்களில் முன்னணியில் இருப்பவர்களை அழைத்து “ தாயகம் கடந்த தமிழ்” என்ற உலக தமிழ் எழுத்தாளார்கள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது கோவையிலுள்ள தமிழ் பண்பாட்டு மையம்.
 தமிழ்மொழி, தமிழர்பண்பாடு,கலைகள்வளர்ச்சி மேம்பாட்டுக்கென்று இந்த மையத்தைஉருவாக்கியிருப்பவர். டாக்டர் நல்ல பழனிசாமி. கோவை மெடிகல் சென்டர் என்ற பல்துறை மருத்துவ மனையின் தலைவர். இவர் என்.ஜி பி என்ற கல்விகுழுமத்தின் தலைவரும் கூட.(படம்-அவசியம்)  தமிழின் மீது அளவற்ற பற்று கொண்டவர்.  கருத்தரங்கில் பங்கேற்றவர்களை வரவேற்பதிலிருந்து வழியனுப்புவது வரை  கொங்குநாட்டுக்கே உரிய  பாங்குடன் ஒரு பெரும் தொண்டர் படையுடன் முன்நின்று செய்தவர்
. கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மாலன். இம்மாதிரி மாநாடுகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் புத்தக்கமாக வெளிவர சிலகாலம் ஆகும். ஆனால் இங்கு பதிவு செய்து பங்கேற்க வந்தவர்களுக்கு கருத்தரங்கு துவங்கும் முன்னரே  அந்த புத்தகம்  இலவசமாக வழங்கபட்டது. அந்த அளவிற்கு எல்லா ஏற்பாடுகளும் கச்சிதம். 

 சிறப்பாக நடைபெற்ற துவக்க விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பரமணியம்  துவக்கி வைத்த இந்த கருத்தரங்கம் இரண்டு நாள்  7 அமர்வுகளாக  7 வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளார்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில்  கலந்துகொண்ட பார்வையாளார்கள் 500க்கும் மேல். கே எம் சி யின் ஹைடெக் அரங்கம் நிறைந்து வழிந்ததால் மற்றொரு அரங்கத்தில் வீடியோகாட்சியாக ஒளிபரப்பினார்கள்.   பேசபட்ட விஷயங்களும், பேச்சாளர்களின் ஆற்றலும்  நேரகட்டுபாட்டை  நிர்வகித்த அமர்வுகளின் தலைவர்களின் கண்டிப்பும் பார்வையாளர்களை கட்டிபோட்ட விஷயங்கள்.  கருத்தரங்குக்கு வந்திருந்தவர்களில் சிலரின் அறிமுகமும், அவர்களின் பேச்சுகளிலிருந்து சில துளிகளும். 
சீனா ரேடியோ இண்டெர்நேஷனல் (CRI) என்பது சீன அரசு வெளிநாட்டினருக்காக பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் வானொலிநிலையம். 70 ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கும் இந்த நிலையம் இப்போது 60  நாடுகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளில் நிகழச்சிகளை வழங்குகிறது. இந்திய மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கும். இதன் தமிழ் ஒலிபரப்பு மிகவும் பிரபலம். 25000 க்கும்மேல் பதிவு செய்து கொண்ட நேயர்கள் இருக்கிறார்கள். 150 நேயர் மன்றங்களும் செயல்பட்டுவருகின்றன. ஆண்டுக்கு 5 லட்சம்  தமிழ் நேயர் கடிதங்கள் வருகின்றன. இது சீன வானொலிக்கு வரும் கடித எண்ணிக்கையில் முதலிடம். இந்த நிலையத்தின் தலைவர்  செல்வி சாவ்சியாங்.(ZHAO JIANG) சீனத் தகவல் தொடர்பு பல்கலைகழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றவர். இரண்டு தமிழ் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
கலைமகள் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கும் இவர் “தமிழ் கூறும் ஊடக உலகம்” அமர்வில் கட்டுரை வாசித்தார்.  உச்சரிப்பு பிழையின்றி அழகான தமிழில் பேசும் இவரைப்போலவே இவருடன் வந்திருந்த உதவியாளர்கள் செல்வி ஈஸ்வரி. செல்வி இலக்கியா வும் பேசுகின்றனர்.  தனது உரையில் ”எங்களது பல தமிழ் நிகழ்ச்சிகளுடன் சீனாவில் வாழும் தமிழர்கள் என்ற பகுதியில் சீனாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள்,  எங்கள் நாட்டிற்கு வருகைதரும் தமிழ் பிரமுகர்களையும் அறிமுகப்படுத்துகிறோம்   இந்த சிறப்பு நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  இதன் மூலம் தமிழர் பார்வையில் பிற தமிழர்களுக்கு சீனாவை அறிமுகபடுத்துகிறோம்.
நிலையத்தின் தமிழ் பகுதியில் பணிசெய்யும் 18 பேரும் தமிழ் அறிந்த சீனர்கள். இப்போது மொபைல் போனில் தமிழில் எங்கள் நிகழ்ச்சி குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது  தேன் மதுர தமிழோசை உலகெங்கும் பரவ எங்கள் வானொலியும் உதவுகிறது என்றார்.. உண்மைதான். கருத்தரங்கு நிகழ்ச்சிகளை அவ்வப்போது  பார்வையாளர்களின் பேட்டிகளுடன் இவரது உதவியாளர்கள்  சீன நிலையத்துக்கு அனுப்பிகொண்டிருந்தார்கள்.   அவர்கள் நல்ல தமிழில்  கேள்விகள் கேட்க நம்மவர்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இன்று உலகெங்கும்  உள்ள தமிழர்கள் கணனியில்  தமிழ் எழுத பயன் படுத்தும் முரசு அஞ்சல் செயலியை உருவாக்கியவர் திரு முத்து நெடுமாறன்.(படம்)  கணனி தொழில் நுட்பத்தில் 25 ஆண்டு அனுபவம் உள்ள இவர் மலேசியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலமை நிர்வாக அதிகாரி.  இவருடைய படைப்புகள் சீங்கப்பூர் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சுகளினால் ஆதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன.  அண்மையில் ஆப்பிளின் மெக்கிண்டாஷ் கணனியிலும் ஐபோனிலும் பயன்படுத்தபடும் இந்திய, இந்தோ சீன மொழிகளுக்கான எழுத்துகளையும் உருவாக்கியவர் இவர்.  தொழில் நுட்பம் தரும் வாய்ப்புகள் என்ற அமர்வில் ”கைபேசியில் தமிழ்”  பற்றி உரையாற்றினார்.




இந்தியாவில் ஆங்கிலப் புழக்கம் அதிகமாக இருந்தாலும், கணனி வாங்கக்கூடிய வசதி உள்ளவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததாலும் இந்திய மொழிகளை கணனியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எந்த கணனி நிறுவனத்திற்கும் ஏற்பட்டதில்லை. மேலும் சீனா, ஜப்பான் போல இந்திய மொழிகளின் தேவையை கட்டாயப்படுத்தும் சட்டங்களும் இல்லை. இதனால் ஜெர்மன். பிரஞ்சு, இத்தாலி,கொரியா, அரபு மொழிகள் போல இந்திய மொழிகள் கணனியில் முதலில் சேர்க்க படவில்லை. மிகத் தமாதமாக 2000 ஆண்டிலேயே இது முடிந்தது.  இந்த நிலை இப்போது வெகுவேகமாக பரவும் கையடக்க கருவிகளான செல்போன், ஐபேட், டேப் போன்றவைகளிலும் நேர்ந்துவிடக்கூடாது என பாடுபடுகிறோம் நாங்கள்.   இந்த முயற்சிகளினால் தான் இன்று ஆப்பிள் நிருவன தயாரிப்புகளிலும், பல ஸ்மார்ட் போன்களிலும் தமிழை உள்ளிடமுடிகிறது. செல்லினம் என்ற செயலி ஐபோனில் தமிழ் எழுதுவதை எளிமைப்படுத்தியது.  இது தமிழ் உலகிற்கு மலேசியா தந்த கொடை. பயணிகள் இருந்தால் தான் பயணம் தொடரும். அதுபோல தொழில்நுட்ப உலகில் பயனர் இருந்தால் தான் புதியன பிறக்கும்.  தமிழ் மொழியை தொழில்நுட்ப உலகில்மேலோங்கி நிற்க செய்வதில் நம் அனைவருக்கும் பங்குண்டு. தமிழை ஆங்கிலத்தை போல இயல்பாக இந்த கருவிகளில்  அதிகமாக பயன்படுத்த பழக வேண்டும்.
      

 அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு முறையாக தமிழ் கற்பிக்க கலிபோனியா தமிழ்க்கழகம் என்ற அமைப்பை நிறுவி 1998ல் துவங்கியவர் திருமதி வெற்றிச் செல்வி.(படம்) 13 குழந்தைகளுடன்  துவங்கிய இது இன்று   லண்டன், துபாய் போன்ற உலகின் பிற பகுதிகளுக்கும் பரவி இன்று 4000 மாணவர்களுடனும் 840 ஆசிரியர்களுடனும்   ”அனைத்துலக தமிழ் கழகமாக” மாறி  வேருன்யிருக்கிறது.   நேரிடையாகவும்,  அங்கீகரிக்க பட்ட பள்ளிகளின் மூலம்  தமிழ் மொழி பேச, எழுத கற்பிக்கிறது. புலம்பெயர்ந்து வாழம் குழந்தைகளுக்கு ஏற்ப பாடதிட்டத்தை  வகுத்து இந்த  அமைப்பு தமிழ் கற்பிக்கிறது. அமெரிக்க நகரங்களிலுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் வார இறுதியில் வகுப்புகளை நடத்தும் இவர்கள் ஆசிரியர்களாக பணீயாற்றுவர்களையும் தன்னார்வ தொண்டர்களையும்  தேர்ந்தெடுத்து பயிற்சியும் கொடுக்கிறார்கள்  சீங்கப்பூர் பள்ளிகளின் பாடபுத்தகங்களை, தமிழ் இணையபல்கலைகழக ஆலோசனைகலையின் படி பயன் படுத்துகிறார்கள்.  இப்போது வெளிநாட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்தகங்களை தயாரிக்க துவங்கியிருக்கிறார்கள்.  ”தமிழகத்திற்கு அப்பால் தமிழ் கல்வி” என்ற அமர்வில் இவர்   ஒரு பேச்சாளர்.
”பாலர் வகுப்புகளில் ஆர்வமாக வரும் குழந்தைகள் பெரிய வகுப்புகளுக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை கவர்வதற்காக இங்குள்ள கல்வி முறைப்படி  5 ஆண்டுகள் மற்ற மொழி கற்றால்  ஆண்டுக்கு 10 பாயிண்ட் கிரீடிட் கிடைக்கும் வகையில் கலிபோர்னியா பல்கலைகழகத்தில்  எங்கள் பாட திட்டத்திற்கு  அனுமதிபெற்றோம். இது மிகப்பெரிய விஷயம். பல்கலைகழக தர கட்டுப்பாடும் வகுப்பு நடத்தும் விதிகளும் கடினமானவை.  ஆனாலும் எங்கள் முன் இருக்கும் சவால் ”இங்கு வாழப்போகும் நான் தமிழ் படித்து என்ன செய்யபோகிறேன்? என்று  மாணவர்கள் எழுப்பும் கேள்விதான்,  இந்த கருத்தரங்கு சரியான பதிலை நாங்கள் அவர்களுக்கு சொல்ல உதவ வேண்டும்.   கற்பிக்கும் பணியில் தமிழகத்திலிருந்து கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கி உதவுகிறார்கள். ஆனாலும் கடினமான இலக்கணம், சூழ்நலைக்கு ஏற்ப இல்லாத தன்மையில் பாடங்கள்  மாணவர்களை சோர்வடையச் செய்கிறது.  தமிழை  ஒரு பாடமாககூட படிக்காத தலைமுறை இப்போது  தமிழ் நாட்டிலிருந்து அமெரிக்காகவிற்கு வந்துகொண்டிருக்கிறது. பெற்றோர்களுக்கு மொழியின் அருமையும் அவசியமும் தெரிந்தால் தானே அவர்களின் குழந்தைகள் தமிழ் படிப்பதை பற்றி யோசிப்பார்கள்?  என்று தான் சந்திக்கும் சவால்களை சொல்லும் இவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன் முயற்சியை தொடர்கிறார். வெளிநாட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப குழந்தைகளை கவரும் வகையில் பாடபுத்தகங்களை, கற்பிக்கும் கருவிகளை. யுக்திகளை தமிழ் நாட்டு கல்வியாளார்களிடம் இருந்து வரவேற்கிறார். 

கடல் கடந்து வாழந்தாலும் தமிழின் மீது இவர்கள் வைத்திருக்கும் அபரிமதமான அன்பைப்பார்க்கும் போது மாநாட்டின் தலைப்பை இப்படி மாற்ரிவைதிருக்கலாம் என்று தோன்றியது
 “ தாயகம் கடந்த தமிழ்க் காதல்”

 - ஆதித்தியா

கல்கி 16/02/14 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்