10/2/14

கங்கை கரை ரகசியங்கள் ...5


புதிதாக பிறக்கும்ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துணர்ச்சியும் சக்தியும்  தரும் எம். எஸ் அவர்களின் கணீர் குரலில் ஒலிக்கும் சுப்ர பாதத்தில் வரும்  ”வாரணாஸீ குலபதே மம சுப்ரபாதம் “ என்ற  வார்த்தைகள் நினைவிருக்கிறதா?   இந்த வாரணாஸீ  என்பது தான் பிறை வடிவில் கங்கை
வளைந்து ஒடும் , இப்போது படித்துறைகளால் நிரம்பிக்கிடக்கும் கங்கையின் கரைப்பகுதி  ஏன்  இங்கு மட்டும் இவ்வளவு படித்துறைகள்?  என்ற நமது கேள்விக்கு  இதற்கு காசி நகரின் அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும் என்று பதில் சொல்லபட்டிருந்தது.
பல கோவில்களை உள்ளடக்கிய வட்டவடிவமாக ஒரு சக்தி இயந்திரமாக உருவாக்கபட்டிருப்பது காசி நகரம்.  மூன்று முக்கிய சிவன்கோவில்கள் ஒரு நேர்கோட்டிலும் சக்தி வளையமாக நிறுவபட்ட மற்ற கோவில்ககளை இணைக்கும் ஆரமாக சிறிய கல்பாவிய நடைபாதைகள். அமைக்க பட்டிருந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் இந்த வாளாகத்திலிருந்த 468 கோவில்களிலும் ஒரே நேரத்தில் சப்தரிஷி பூஜைகள் நடந்திருக்கின்றன. கங்கைநதி  காசிநகருக்கு வெளியே   ஒரு வட்டத்தின் பரிதியைப்போல சற்றே வளைந்து ஒடுகிறது   கங்கையில்  நீராடியபின் எளிதாக பக்தர்கள் விரும்பும் கோவில்களுக்கு நேரடியாக போய் வழிபடும் வகையில் இந்த படித்துறைகள். அமைக்கபட்டிருக்கின. இன்றும்  எந்த படித்துறையிலிருந்து நேராக நடந்தாலும் ஒரு கோவிலுக்கு போகும் பாதை வருகிறது.  இன்று சிறு சந்துகளாகிவிட்ட அந்த பாதைகள் தான் சக்தி வளையத்தின் ஆரங்கள்..   கோவில்களில் பூஜிப்பவர்களை தவிர மற்றவர்கள் வசிக்க அனுமதியில்லாத.  அந்தபுனிதமான பாதைகள் தான் காலசக்கர சுழற்சியில் பலரின் வாழ்விடமாகவும், அவர்களின் வாழ்வாதரத்திற்கான வியாபாரஸ்தல்மாகவும் நிறைந்து ”கல்லி” களாகியிருக்கின்றன.  இந்த செய்தியை அறிந்ததும் காசியின் குறுகிய சந்துகளின்  புனிதமான அகலமும்  அதை  நாசமாக்கிய நம்மவர்களின் குறுகிய மனமும் புரிந்தது.   


பயண குழுவிலிருந்த ஒரு நண்பர் தான் கங்கையில் குளிக்க ஒரு நல்ல இடத்தை கண்டுபிடித்திருப்பதாகவும் விரும்புகிறவர்களை அழைத்து போவதாகவும் சொன்னார்.   200 பேர் கொண்ட ஈஷாவின்  இந்த பயணத்தில் இரண்டாம் நாளே புதிய நட்பு வட்டங்கள் சிறு குழுக்களாக உருவாகியிருந்தது.வெளிநாட்டவர்கள்,பிறமாநிலத்தவர் என்று பலரை இந்த பயணம் இணைக்கிறது அதனால் எங்குபோனாலும் ஒரு சின்ன டீம்தான்.  காலை உணவு முடிந்ததும் கங்கைக்கு போகும் ஒரு குழுவுடன் போகிறோம். காசியில்  இயங்கும் சைக்கிள் ரிக்‌ஷா  சிஸ்டம் மிக பிரமாதமாக இருக்கிறது.. பஸ்களில் வரும் பெரிய பயணகுழுக்களுக்கு  தேவையான அதிக ரிக்‌ஷாகளை ஏற்பாடு செய்ய ஒரு குருப் லீடர். நிர்ணயக்கபட்ட கட்டணத்தை அவரிடம் மொத்தமாக செலுத்த வேண்டும். அவர் விசில் கொடுத்தால் தெருவில் போகும் காலி ரிக்‌ஷாக்கள் அணிவகுத்து வந்து நிற்கிறது. ஒரே எண் எழுதிய இரண்டு சீட்டு நம்மிடம் தருகிறார்கள். இறங்கும் இடத்தில் அதில் ஒன்றை கொடுத்தால் போதும்.  பேரம் பணம் எதுமில்லை.. திரும்பும் பயணத்திற்கு நம்மிடமுள்ள அடுத்த சீட்டை பயன்படுத்திகொள்ள வேண்டும். எந்த ரிக்‌ஷாவிலும் பயணிக்கலாம்.
அந்த ரிக்‌ஷாகாரர் இதுபோல் சேரும் சீட்டுகளை மாலையில் கொடுத்து பணம் வாங்கிகொள்கிறார் இந்த பீரிபெய்ட் முறையினால்  மொழிப்பிரச்னை, கட்டணபேரம், சரியான இடத்துக்குதான் போகிறோமா என்ற பயம் என்பதெல்லாம் இல்லை 
கங்கையின் நடுவில் சில இடங்களில் மண்மேடிட்டு திட்டுகள் உருவாகியிருக்கிறது.  காலை 10-11 மணிக்கு அங்கு நீரின் மட்டம் சற்று குறைந்திருக்கிறது, படகுகாரர் அப்படி ஒரிடத்திற்கு நம்மை அழைத்து செல்லுகிறார். தெளிவான கங்கை, அதிக ஆழாமில்லாமல் காலடியில் மணல்.ஆனந்தமான குளியல்.நதிக்குளியல் சுகமான இதமான அனுபவம், எத்தனையோ நதிகளில் குளித்திருந்தாலும் கங்கை குளியல் சர்வ நிச்சியமாக சிலிர்ப்பை கொடுக்கும் விஷயம். கங்கைத்தாய் அனபுடன் தன் மெல்லிய அலைகளால் தொடர்ந்து நிராடச்சொல்லி அழைத்தாலும் படகுக்காரின் அழைப்பு முக்கியமாக பட்டது. நடுகங்கையில் நம்மை விட்டுவிட்டு அவர் போய்விட்டால் நம் கதி என்ன ஆவது?  மெல்ல படகில் கரை திரும்பும் போது கண்ணில் பட்ட  சிவப்பு வெள்ளை  வண்ணகளில் பட்டையிட்ட கோவில் சுவர்களுடனும் தமிழகபாணி கோபுர முகப்புகளுடன் ஒரு படித்துறை. அது கேதார் படித்துறை என்றும் உள்ளே ஜோதிர் லிங்கமான ராமேஸ்வரத்தின் ராமநாதஸ்வாமி   என்றும் அதற்கு போனால் ராமேஸ்வரம் போக வேண்டாம் என்றும் படகுகாரர் சொன்னார். அதன் அருகில் படகை நிறுத்த சொல்லி இறங்குகிறோம்.

நிறைய படிகளுடன் மிக உயரத்தில் இருக்கும் அதன் முன்னே ஒரு சின்ன குளம் கட்டியிருக்கிறார்கள். கண்ணெதிரே, கால் அடியில் கங்கை இருக்க எதற்கு குளம்? ராமேஸ்வரம் இல்லையா தீர்த்த குண்டம் அமைத்திருக்கிறார்கள். கோவில் வெளிப்புற சுவர் முழுவதும் சலவைகற்களில் தமிழ் பாடல்கள் யார் எழுதியது என்றவிபரம் இல்லை. சிலபுரியவும் இல்லை. பழுப்பேறி, மங்கிய அதன் வண்ணம்  வயதை சொல்லியது. உள்ளே கோவில் முகப்புக்கு துளியும் சம்பந்தமிலாமல் வடநாட்டு கோவிலின் சாயலில் பளபளப்பான தரை. மற்ற கோவில்களைபோல கூட்டம் இல்லாதால் அர்ச்சகரும் இல்லை. தரிசித்தபின்னர் படித்துறையிலிருந்து காசிநகர வீதிக்கு வருகிறோம்  மூன்று நாட்களில் நகர வீதிகள் பழகிபோயிருந்தன.  ஷாப்பிங், மற்ற கோவில்களைப் பார்க்க என குழு பிரிகிறது. ”நல்ல தமிழ் நாட்டு சாப்பாடு சாப்பிட வருகிரீர்களா? என ஒரு நண்பர் கேட்டவுடன் நதியில் குளித்திருந்தனால் வாயை திறப்பதற்கு முன்னதாகவே வயிறு ”ஓ யெஸ்” என்று  பதில் சொல்லியது. சிலர் உலகின் எந்த முலையிலும் நம் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்பதை கண்டு பிடித்துவிடுவார்கள்  சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறியதும் ”நாட்கோட் சட்டர்” என்றார். ஏதோ குஜராத்தி ரெஸ்டோரண்ட் என நினைத்த நமக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நண்பர் அழைத்து சென்றது  காசி நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு.  காசியின் எல்லா பிரதான இடங்களைபோல்  நடந்து மட்டுமே போகக்கூடிய ஒரு சிறிய சந்தில்
செட்டிநாட்டு பாணி வீட்டின் முகப்புடன் இருக்கும் இந்த சத்திரம் காசிக்கு வரும் பயணிகளுக்கு உதவுவதற்காகவே 1863ல் உருவாக்க பட்ட  ஒரு அறக்கட்டளை. என்பதை  அன்றைய தமிழிலில் தெரிவிக்கும் கல்வெட்டு. வரவேற்கிறது. மிக அழகாக நிர்வகிக்கிறார்கள். சுத்தமான அறைகள் 100க்கு மேல் இருக்கிறது, கட்டணம் நம்ம முடியாத ஒர் அதிசயம். நிறைய பணியாட்கள். சாப்பாடும் அதை போடுவர்களின் அன்பான சேவையும் அன் லிமிட்டெட்,  விலை? நம்ம ஊரில் ஹோடல்களின் இரண்டு காபியை விட குறைவு!  காலையில் 8 மணிக்குள் கூப்பன் வாங்கிவிட வேண்டும்.  அங்கு தங்கியிருப்பவர் நமக்காக வாங்கிவைத்திருந்தார்.
சுத்தமான அறைகள். நவீன கிச்சன், லிப்ட் என சுற்றி காட்டிய  மனேஜர் குழுவாக வருபவர்கள் மண்டபத்தில் தங்கினால் இலவசம் படுக்க ஜமுக்காளம் தலயணை தருகிறோம். என்று சொல்லி ஆச்சரியத்தில் ஆழத்தினார். எவரும் வரலாம். சிபார்சு கடிதம் எல்லாம் வேண்டாம் முன்பதிவு செய்தால் எமாற்றத்தை  தவிர்க்கலாம். இதைப்போல வசதி கயா, அலகாபாத் அயோத்தியா, நாஸிக்  நகரங்களிலும் இருக்கிறதாம். கல்கியில் எழுதுங்கள் என்றார். எழுதிவிட்டோம்.  
மகா கவி பாரதியார் காசியில் சில காலம் வாழந்திருக்கிறார். அவர் வாழ்ந்த இடத்தில்   ஒரு சிலை இருப்பதை பற்றி படித்திருப்பதால் அது எங்கே இருக்கிறது? என்று கடந்த இரண்டுநாட்களாக விசாரித்துகொண்டிருந்த நாம் அதை இவர்களிடமும் கேட்க, சந்துகளின் வழியே எளிதாக  அங்கே போக ஒரு டெக்னிக்கைச்சொன்னார்கள்.. சந்துகளில் தரையில் பாவியிருக்கும் கற்கள் ஒரேமாதிரி டிசையினில் இருக்கிறதா? எனறு கவனித்து கொள்ளுங்கள். திருப்பங்கள் இருந்தாலும் டிசைன் ஒரே மாதிரியா இருந்தால் நீங்கள் திசை மாறாமல் போகிறீர்கள் என்று அர்த்தம். வழியை தவறவிட வாய்ப்பில்லை. என்றார். சூப்பர் டெக்னிக், இதையும் காசியின் பெருமையாக அரசின் டூரிஸம் விளம்பரபடுத்தலாம்.  அதிகம் பேர் அறியாத அந்த சிலை இருக்கும் இடத்தை அடைந்த நமக்கு அதிர்ச்சி.
ஒரு தெருவின் துவக்கத்தில் நன்கொடையாக பெறபட்ட மனையில் சிலையை நிறுவி அதற்கு காம்பெண்ட் சுவரும் கதவும் இட்டிருக்கிறார்கள். ஆனால் அதன் எதிரே பகலில் லஸ்ஸியும் இரவில் பாலும் விற்கும் ஒரு நடைபாதை கடைகாரர் தன் பாத்திரங்களை கழுவி கவுத்தும் இடமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.  அசலான ஆக்ரமிப்பு.  ”நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்”  என்று புலம்பவதை தவிர வேறு வழியில்லை நமக்கு. 
காசிநகரின் வீதிகளில் நடந்து கொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த நகரில் தான் எத்தனை விதமான சக்திகளின் வெளிப்பாடு?  உலகிற்கு பூஜ்யத்தின் மகிமையை சொன்ன ஆர்யபட்டாவிலிருந்து  எல்லாம் இந்த நகரில் பிறந்தவை. ஆயுர்வேதம் காசியில் எழுதப்பட்டிருக்கிறது. யோக அறிவியலின் தந்தையான பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை இங்கிருந்தான் படைத்திருக்கிறார். துளசிதாசரின் ராம சரிதம் மானஸம் உருவானதும் இங்கே தான். நம் தலமுறையில் அறிந்த இசை மேதைகளான சித்தார் பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசை மேதை உஸ்ஸாத் பிஸ்மிலாகான் ஆகியோர்களை தந்ததும் இந்த புண்ணிய நகர் தான். இப்படி இசை, கலை, அறிவியல் போன்ற பல விஷயங்களை தந்த இந்த நகரில் நாம் இன்று நாமும் நடந்துகொண்டிருக்கிறோம்  என்ற எண்ணமே நம்மை பெருமை கொள்ளசெய்கிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னது போல எந்த ஒரு இந்தியனும் தனியே நடப்பதில்லை. ஐந்தாயிரம் ஆண்டுப் பாரம்பரியமும் கலாசாரமும் விழுமியமும் இந்தியாவின் பொக்கிஷமாக அவ்னோடு கூட நடக்கின்றன.
தெருக்களின் சந்திப்பில் ஒரு லஸ்ஸி கடை என்பது பார்த்ததும் தெரிகிறது. போர்டு வித்தியாசமான மொழியில் இருப்பதை பார்த்து கேட்டபோது அது கொரியன் மொழி.  எனக்குஅந்த மொழி தெரியாது. வந்த சாப்பிட்ட ஒரு கொரியாகாரர் எழுதி கொடுத்தது. அதனால் நிறைய கொரியர்கள் அங்கே வருகிறார்கள் என்று அவர்களுக்காக தயாரிக்க பட்ட மெனுகார்டையே காட்டுகிறார். இங்கு கொரியர்கள்மட்டுமில்லை,  சீனர்கள் ஜப்பானியர், தாய்லாந்தினர், மியாமரினர் எல்லோரையும் காசியில் பார்க்கலாம். புத்த மதத்தினருக்கும் காசிக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறதல்லவா? ரம்மியமான இந்த கங்கைக்கரை சொல்லும் பல ரகசியங்களில்  சித்தார்த்தனை புத்தனாக்க வழிகாட்டியதும் ஒன்று. அவன் தன் போதனைகளைத் துவக்கி, வாழ்ந்த அருகிலிருக்கும் புத்த தேசத்திற்கு நாளை போகப்போகிறோம்சத்குரு எல்லா நதிகளும்  நாம் வழிபடவேண்டிய புனிதமானவைகள்தானே? அப்படியானால் கங்கை மட்டும் எந்தவகையில் உயர்ந்தது?

இப்போ நீங்க ஒரு கிளாஸ்லே தண்ணீர் எடுத்து  என் கையில் தந்தால் ஒரு நிமிஷத்தில் அதனுடைய அதிர்வை மாத்தி கொடுத்திடுவேன், நீங்க அதை ஆன்மிக பலம் அப்படின்னு சொல்லிடுவிங்க.  ஆனா இதையெல்லாம் இப்போ  விஞ்ஞான பூர்வமாக நீருபித்திருக்கிறார்கள். நீரில் பாசிட்டிவ், நெகட்டிவ் எனஜர்ஜிக்களை பாய்ச்சலாம்., சதா தண்ணீரை ஹெவி வாட்டராக மாற்றமுடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம்ம ஆட்கள் நமக்கு இதை சொல்லிட்டு போயிருக்காங்க. உங்கள் பாட்டி, அம்மா சொல்லியிருப்பாங்களே. தாமிரப் பாத்திரத்தில் வைத்த தண்ணியை  மறுநாள் குடித்தால் சக்தி என்று. சாதாரண தண்ணிரை  தீர்த்தமாக மாற்றும் ஆன்மீக ரசாயனம் இயற்கையாகவே அமைந்த ஒன்று. இந்த கங்கை ஹிமாலய பர்வதத்திலிருந்து ஒடிவருது. வரும்போது  அதன் வழியில் சேர்த்துகொள்ளும் சக்தி அதிர்வு எல்லாம் இந்த இடத்தில் அதிகமாக இருக்கிறது. அந்த உணர்வு நமக்கு அதில் குளிக்கும்போது முக்தியை நோக்கி தள்ளுதுன்னு முன்னாடி சொன்னாங்க. இப்போ விஞ்ஞான பூர்வ்மாக ஒரு இம்பாக்ட் இருக்குன்னு சொல்லுறாங்க. முக்தியோ இல்லையோ நிச்சியமாக நமக்கு நன்மை செய்யும் ஒரு சக்தி.   ஒரு நதியில் இயற்கையின்  சக்தி அதிர்வுகள் இணைந்தால் தான் அது தீர்த்தம். இப்போது ஒரு குளத்தை கட்டி அதை தீர்த்தம் என்கிறார்கள் அதுவியபாரம்.

காசி கங்கை கரையில் வசதியாக நிம்மதியாக குளிக்க ஈஷா எதாவது செய்ய முடியாதா?
நாம் எல்லோரும் சுத்தமாக இருக்கவேண்டும் என விருபுகிறோம். ஆனால் அதை யாராவது செய்துவைக்க வேண்டும் என நினைக்கிறோம் அதுதான் பிரச்னையே. மாசற்ற சுழலை உருவாக்க ஈஷாவின் முயற்சிகளை அறிந்திருப்பீர்கள். அதன் ஒரு பகுதியாக காசியிலும் ஒரு தீர்த்தகட்டத்தை தேர்ந்தெத்து ”நிர்மல் கங்காவாக” பராமரிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு  உள்ளூர் நிர்வாகம், அரசாங்கம், அங்குள்ள கடைக்கார்கள் அரசியல்வாதிகள் என பலரின்  ஆதரவு அதிகம் தேவையாக இருக்கிறது. முயற்சிகளை துவக்கியிருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் நீங்கள் வந்து நீராடலாம். 
கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்