15/3/14

கங்கைக் கரை ரகசியங்கள் 10புத்தகயாவில் போதிமரத்தினடியில்  மெய்ஞானம் பெற்ற புத்தர், கடல் அலைகளைப்போல விழுந்து, எழுந்து. மீண்டும் விழுவது போன்றது தான்  மனித உயிர்களின் பிறப்பும் இறப்பும். இதனால் வாழும்போது மனிதன் செய்ய வேண்டியவைகளை அவன் சரியாக புரிந்துகொண்டால் வாழ்க்கை இனியதாக அமையும் என்று தான் தெளிவாக புரிந்து கொண்டிருந்ததை மக்களுக்கு, குறிப்பாக எளிய மக்களுக்கு சொல்ல,   சீடர்களை உருவாக்க சாரநாத் சென்று ஒரு ”பள்ளி”யை நிறுவுகிறார். அது மிகப்பெரிய பள்ளியாகி அதிலிருந்து  சீடர்கள் நாடெங்கும், நாட்டுக்கு வெளியேயும் பயணிக்கிறார்கள். இதுபோல பள்ளிகளையும் நிறுவுகிறார்கள்,  பின்னாளில் இதனுடன் புத்தரின் உருவத்துடன் கோவில்களைம் ஏற்படுத்துகிறார்கள்.  அவைகள் விஹார்கள் என அழைக்கப்பட்டது.
மிக அதிக அளவில் இத்தகைய விஹார்கள் இருந்ததால் தான் அந்தப் பகுதியே அப்பெயரால் அழைக்கபட்டு பின்னாளில் ”பீஹார்” ஆகியிருக்கிறது என்று ஒரு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.. இப்போது நாம் புத்த தேசமான பிஹாரில் புத்தகயாவிலிருந்து சென்றுகொண்டிருப்பது “ராஜ்கீர்”  என்ற இடத்திற்கு. கயாவிலிருந்து  80 கீமி தூரத்திலிருக்கும் இது  ஏழு சிறிய மலைகள் சூழந்த  கிராமம். மிகமிகப்பழமையான கிராமம்.  நாளந்தா மாவட்டத்திலிருக்கிறது. முதல் நூற்றாண்டின் கால  சாட்சியங்கள் கிடைக்கப்பட்டிருக்கும் இடம். இது மகத மன்னர்களின் தலைநகராக 4 ஆம் நூற்றாண்டுவரை இருந்திற்கிறது.. கிபி  5 நூற்றாண்டில் தான் மன்னர் அஜாதசத்ரு தலைநகரை பாடாலிபுத்திரத்திற்கு மாற்றியிருக்கிறார் என்கிறது வரலாறு. அப்போது இந்த இடம் “ராஜகிருஹம்” என அழைக்கப்பட்டிருக்கிறது  ஜிவகன் செட்டி என்பவர் அன்பளித்த மாமரதோப்பில் தன்பணிகளை துவக்கினார் என்கிறது இங்குள்ள குறிப்பு. பாலிமொழியின்  ஆங்கில மொழிபெயர்ப்பு செட்டி என்று சொல்லுகிறது. செட்டியாராக இருப்போரோ?. என்ற எண்ணம் எழுகிறது.

இந்த இடத்தில்  இருக்கும் மலைக்குகைகளில் புத்தர் தவம் இருந்திருக்கிறார். அடர்ந்த மாமரங்களின் காடாக இருந்த பகுதியில் வாழந்திருக்கிறார். அருகிலுள்ள மலைஉச்சியில் துறவிகளுக்காக ஒரு மாநாட்டை நடத்தியிருக்கிறார்.  இங்கிருந்து நிகழத்த பட்ட உரைகளில் புதிய போதனைகளை அறிவித்திருக்கிறார். இவைகளினால் இந்த இடம் புத்தமதத்தினருக்கு மிக புனிதமான இடம். அந்த குகைகளையும் அதில் சிதலமாகியிருக்கும் புத்தர் உருவங்களையும் பார்க்கலாம். மகத மன்னர் பிம்பிசாரன் இந்த இடத்தில்தான் புத்தமதத்தில் இணைந்திருகிறார். அவருடன் அவரது நாட்டு மக்களும் மதம் மாறியிருக்கிறார்கள். புத்த மதத்தினருக்கு மட்டுமில்லை சமணர்களுக்கும் இது முக்கியமான இடம். இந்த காட்டு பகுதிகளில் 14 ஆண்டு வாழ்ந்த மாஹாவீர்ர்  இந்த ராஜ்கீரில் ஒரு மலையில் சில ஆண்டுகள் தங்கியிருக்கிறார். இப்போது அங்கு ஒரு ஜெயின் கோவில் இருக்கிறது, இது ஒரு இந்துக்கள் இன்றும் வழிபடும் தலமாகவும் இருக்கிறது. ஒரு மலையில் பாறைகளுக்கிடையில் பிரம்மதீர்த்தம் என்ற  வற்றாத  சுடு நீர்ச்சுனை இருக்கிறது. அருகில் ஒரு சிறிய சிவன், காளி கோவில்கள்
 புத்தர் மாநாடு நடத்திய மலைஉச்சியில்  இப்போது   வெள்ளை சலவைகற்களால்  எழுப்பபட்ட  ஒரு ஸ்தூபி பளீரென்று நிற்கிறது. பல கீமி க்களுக்கு   தெரிகிறது.  இந்த பிரமாண்ட ஸ்தூபியின் பெயர் ”விஜய சாந்த ஸ்தூபி.” இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் உலகில் அமைதி நிலவ ஜப்பானிய புத்தமதசொசையிட்டியினர் உலகில்  80 இடங்களில் இத்தகைய ஸ்தூபிகளை நிறுவியிருக்கின்றனர்.  அதில் ஒன்று இது. அசோகரும் மற்ற மன்னர்களும் எப்படி புத்தர் சம்பந்த பட்ட இடங்களில் ஸ்தூபிகள் எழுப்பினார்களோ அதைப்போல இந்த  சொஸையிட்டினர் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் ’பகோடா’ என அழைக்கின்றனர்.
இதைப்பார்க்க மலைமேல் போக பாதை படிக்கட்டுகள் இருக்கின்றன. துறவிகள் அதில் தான் போகிறார்கள்.
நம்மாதிரி ஆட்களுக்கு ஒரு சேர் லிப்ட் இருக்கிறது. ஒருவர் அமரக்கூடிய அந்த  தொங்கும் ஒற்றைச்சேர்கள்  இணைக்கப்பட்ட   ரோப் கார் மாதிரியான ஒரு அமைப்பு.  மெதுவாக நிற்காமல்  சுற்றி கொண்டே இருக்கிறது. . ஏறும் இடத்திற்கு அது வரும்போது அதில் சட்டென்று உட்கார்ந்துகொள்ளூங்கள். பயப்படாதீர்கள்  நாங்கள் உதவுவோம் என்றார்கள்., நகர்ந்துகொண்டிருந்த அதற்குள் நம்மை அவசரஅவசரமாக தள்ளித் திணித்த போதுதான் இது தான் அவர்கள்  சொன்ன உதவி என்பது என்று தெரிந்தது. நகர ஆரம்பித்தபின்தான் நமது சேருக்கு மற்ற எல்லாவற்றுக்குள்ளும் இருக்கும் பாதுகாப்பு கம்பியை மாட்டிகொள்ளும் வளையம்  இல்லை என தெரிந்தது.  அந்த கம்பியையும் , உயிரையும் கையில் பிடித்துகொண்டு புத்தரை வேண்டிக்கொண்டு மேலே போகிறாம்.
 மிகபிரம்மாண்டமாக இருக்கும் அந்த ஸ்தூபியின். வட்ட வடிவ அடுக்குகள் மேல்  ஒரு டோம் ஆகவும் அதன் மேல் கூர்மையான விதானமும் அதன் உச்சியில் தங்கத்தில் ஜொலிக்கும் புத்த முத்திரையும். பார்த்து பிரமித்துப்போகிறாம். முழுவதும் வெண்சலவைக்கலால் இருக்கும் அதனை சுற்றி வந்து அதன் வாயிலை தேடுகிறோம். எதுமில்லை. அப்போது இது பகோடா என்று சொன்னது நினைவு வருகிறது. அவைகள் உள்ளே நுழையும்படி அமைக்கபட்டுவதில்லை. ஒரு நினைவுச்சின்னம் மட்டுமே. மேலே நான்கு திசைகளைப்பார்த்து நான்கு வெவ்வேறு வடிவில் புத்தர் சிலைகள். அவை தங்கத்தினாலனது என்பதை அறிந்தபோது ஆச்சரியம்.  அவைகள் பிறப்பு, ஞானோதயம்,போதனை, இறப்பு என்ற புத்தரின் வாழ்க்கையை குறிக்கிறதாம். அருகில் ஒரு பிரமாண்டமான மணி அலங்காரமான வளைவிலிருந்து தொங்கிறது  எழுத்துக்கள் பாலிமொழியில்


வட்ட வடிவிலிருக்கும் அதன் பாதையில் நம் குழுவினர் அமர்ந்து தியானிக்கின்றனர். ஒரு முறை சுற்றி வெளியே வந்த பின், புத்த விஹாரங்களையும், ஸ்தூபிகளையும் வலது புறத்திலிருந்துதான் வலம் வரவேண்டும் என்று சொல்லபட்டது நினைவிற்கு வந்ததால் மீண்டும் ஒரு முறை சரியாக சுற்றி வருகிறோம்.
அங்கிருந்து பார்க்கும்போது 7 மலைகளும் தெரிகிறது. ஸ்தூபிக்கு வெளியே அருகில் ஜப்பானியர்கள் அமைத்திருக்கும் கோவில்.  அதில் மிக ஆடம்பர பின்னணியில் புத்தர். அதுவும் தங்கச்சிலை என்கிறார்கள். எளிமையைப் போதித்த புத்தர் எல்லா இடங்களிலும் தங்கமாகத்தான் மின்னுவார் போலிருக்கிறது என எண்ணிக்கொள்கிறோம். கோவிலின் உள்ளே ஒரு மெகா ஸைசில் மத்தளம் தொங்குகிறது.

அருகிலுள்ள மற்றொரு மலைஉச்சியில்,  புத்தர் அருளுரை  வழங்கிய இடத்தில் ஒரு குழு பிராத்தனை செய்து கொண்டிருக்கிறது.
இந்த கோவிலையும் ஸ்தூபியையும் அன்றைய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்திருக்கிறார். அவர் கையெழுத்தில் ஜப்பானியர்களின் முயற்சியை பாராட்டி எழுதியிருப்பதைப் பார்க்கிறோம்.
கோவில் முகப்பு, போகும் பாதை, பெயர்கள், மைல்கல்  பாத்ரூம் இருக்குமிடம் வரை (நல்ல வேளையாக உருவம் வரைந்திருந்தது.) அனைத்து அறிவிப்புகளும் ஜப்பானிய அல்லது பாலிமொழியில். இருக்கிறது.


கிழே வர சேர்லிப்டில் பாதுகாப்பான சேரை கண்டுபித்து அதனுள் தாவி
ஏறி தரையிறங்குகிறோம். இந்த இடத்திலிருந்து புத்தர் ஒரு நாள் இரவு  எங்கும் நிற்காமல்  நடந்து ஒரு இடத்துக்கு போயிருக்கிறார்.  அந்த இடத்திற்கு தான் இப்போது நாம் பயணித்தை தொடர்கிறோம். அது எந்த இடம்? ஒருவாரம் பொறுங்களேன்.
-----------------------------------------------------------------------------------
சத்குரு பதில்கள்
நீங்கள் “ அனைத்துக்கும் ஆசைப்படு என்கிறீர்கள் புத்தர்  ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்று சொல்லியிருக்கிறாரே ?
 உங்களுக்கு உயிர்வாழ ஆசையிருக்கிறதா? உங்கள் குடும்பம் நன்றாக வாழவேண்டும் என்ற ஆசையிருக்கிறதா?  இல்லாமல் இருக்கமுடியாது. உலகில் மனிதனுக்கு  எதன்மீதும் ஆசையில்லாவிட்டால்  அது எப்படி இயங்கும்? புத்தரின் ஆசை என்னவென்று நீங்கள் நினைத்து பார்த்துண்டா?  தான் பெற்ற மெய்ஞானத்தை எல்லோருக்கும் போதிக்க வேண்டும் என்ற ஆசையினால் தானே கிராமம் கிராமாக 40 வருட காலம் அலைந்தார். அதனால் அவர் ஆசை என்று எதனைச்சொல்லியிருப்பார்- என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் குறிப்பிட்டது தனிமனிதனின் மண். பொருள் போன்ற சுயநல ஆசைகளை.  அது பேராசையாக மாறும். எது பேராசை என்பதற்கு அளவுகோல் கிடையாது. எது கிடைத்தாலும் அதைவிட மேலானதுக்கு மனம் ஏங்கும். அதனால் மனித உயிருக்கும் உடமைக்கும் சேதம் நிகழும். அதைத் தவிற்க சொன்ன வார்த்தைகளாக இருக்கலாம்.  நான் சொல்லுவது அதுதானே. அனைத்துக்கும் என்று நான் சொல்லுவதை தாங்கள் விரும்பும் பொன் பொருள்,மண்  போன்றவைகளுக்கு மட்டும் என புரிந்துகொண்டால் அது தவறு. நான்  சொல்லும் அனைத்தும் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்த உலகம் உங்களுடையதா? இந்தபிரபஞ்சத்தின் சக்திகளில் உங்களுக்கு பங்கு உண்டா. ஆம் என்றால் அவைகளை அடைய, அனைத்துக்கும், சகலமும் இந்த கல் செடி கொடி எல்லாம் நன்றாக இருக்கவேண்டும். அதனால் என் வாழ்க்கை அடுத்தவருக்கு இடையூறு இல்லாதிருக்க வேண்டும் என்று அனைத்துக்கும் ஆசைப்பட சொல்லுகிறேன்.  நகை, கார் போன்ற பொருளாசையை மட்டுமில்லை. கூர்ந்து கவனித்தால் புத்தனும் இதைத்தான் சொல்லியிருப்பது புரியும். வெறும் வார்த்தைகளை மட்டும் தெரிந்து கொள்ளாமல்  அது தரும் பொருளை சரியாக புரிந்துகொள்ளுங்கள். அப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் ஆசைப்படுங்கள்
கல்கி 23/03/14
1 கருத்து :

  1. லஷ்மி கண்ணன்15 மார்ச், 2014 அன்று PM 4:12

    ரமணன் சார். சூப்பர் நான் காசிபோனபோது ஏன் இதையெல்லாம் பார்க்காமல் வந்தோம்? என தோன்றினாலும்பார்தாலும் இவ்வளவு விபரம் தெரிந்து கொண்டிருப்பேனா
    சந்தேகமே!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்