ஞானத்தை தேடி அலைந்து சாரநாத்திலிருந்து கயா வந்து 7 வாரம் தவமிருந்து மெய்ஞானத்தை கண்ட புத்தருக்கு இங்கு எழுப்பட்டிருக்கும் இந்த கோவிலின் வரலாறு ஆச்சரியமானது. புத்தர் ஞானோதயம் பெற்ற இந்த இடத்தில் மன்னர் அசோகர் 200 ஆண்டுகளுக்குபின்னர் இந்த கோவிலை எழுப்பியிருக்கிறார். தொடர்ந்து வந்த குஷானர்,
கோவில் ஒரு பெரிய வளாகத்தின் நடுவிலிருக்கிறது. ஒரு நீள்சதுரத்தின் மேல் எழுப்பட்ட நான்குபுறமும் பட்டையான கட்டமைப்பின் மீது கூர்மையான விதானத்துடன் கோபுரம். 150 அடி உயரமிருக்கும். வளாகம் முழுவதும் பெரிதும் சிறிதுமாக பல ஸ்தூபிக்கள். நுழையுமிடத்திலிருந்து
படிகளில் இறங்கி நடக்கவேண்டும் கடந்த வருடம் ஜுலை மாதம் இங்கு ஒரு வெடி குண்டு தகர்ப்பு முயற்சி நடைபெற்றது. மிக அதிர்ஷ்ட வசமாக முக்கிய இடங்களில் வெடிகள் வெடிக்காததால் கோவில் தப்பியது இரண்டு புத்த பிட்சுக்களுக்கு படுகாயம். இந்த அழகான அமைதியான இடத்தில் வெடிவைக்க எப்படித்தான் மனம் வந்ததோ.? இந்த நிகழ்ச்சியினால் செக்யூரிட்டி கெடுபிடிகள் மிக அதிகம். கோவில் பணியிலிருக்கும் பிட்சுக்களுக்கும் கூட சோதனை.
கோவில் வளாகம் படு சுத்தமாகயிருக்கிறது. அணிஅணியாக புத்த துறவிகள். காவியாடைகளில் தான் எத்தனை வண்ணங்கள். மஞ்சள், இளம்சிவப்பு, கடும் சிவப்பு தவிட்டின் வண்ணம் என பலவகைகள். அணியும் பாணி ஒன்றாக இருந்தாலும் வண்ணங்கள் வேறு. ஒரு துறவியுடன் பேசியதில் அறிந்தது அது அவர்கள் உட்பிரிவுகளை குறிக்கிறதாம் கடும்சிவப்பு மகாயான பிரிவினராம்,மஞ்சள் தேரவாதிகள் சற்றே மங்கிய சிவப்பு அணிந்திருப்பவர்கள் வஜ்ராயனம் என்று சொல்லிகொண்டே போனார். இங்கு புத்த பிக்குகளுடன் பேசும் முன் பேசலாமா? என கேட்டுகொள்ளவேண்டும். ஏனெனில் அவர் மெளனத்தில் இருக்கலாம் அல்லது ஆங்கிலம் பேசாதவராக இருக்கலாம். உட்கார்ந்திருப்பவர் அருகில் ஏதாவது மலர் இருந்தால் அவர் தொடர்ந்த தவத்திலிருப்பவர் ,
இப்படி வரும் பிக்குகளும் உடன் வருபவர்களும் ஆங்காங்கே அணியாக உட்கார்ந்து மெல்லிய குரலில் ஜபித்து கொண்டிருக்கிறார்கள். பாலிமொழியை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். சிலர் சீன மொழியில் எழுதபட்ட புத்தங்களைலிருந்து வாசிக்கிறார்கள். வளாகத்தில் பல இடங்கள் புனிதமாக்கருதபடுகிறது. கோவிலின் பின் சுவருக்கு அருகில் போதிமரம். புத்தர் அமர்ந்த இடத்தில் வஜ்ராசனம் என்று சொல்லபடும் சிறிய பீடம். மலர்களினாலும் பட்டுதுணியினாலும் அலங்கரித்திருகிறார்கள். மரத்தை சுற்றி கல் பலகைகளினால் வேலி.மரத்தை தொடமுடியாது. நல்லவேளை இல்லாவிட்டால் போதிமரம் இங்கில்லாமல் பலர் வீட்டிற்கு ஞானம் வழங்க போயிருக்கும்
தியானம் செய்ய தூண்டும் அந்தச்சுழலில் நாமும் அமர்கிறோம். நம்மைப்போல உடன்வந்த நண்பர்களும். அமர்கிறார்கள். மூடிய கண்களின் முன்னே புத்தர் வருகிறார். ஒருமணிநேரம் போனதை உணரமுடியவில்லை. வாழ்க்கையில் மிகப்பயனுள்ளதாக செலவிட்ட நேரம்.
இந்த கோவிலின் விதானத்தின் கூர்மையாகயிருக்கும் பகுதியை தங்க மயமாக்க போகிறார்கள். தாய்லாந்து அரசி
நன்கொடையாக 300 கிலோ தங்கம் தந்திருக்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் முதலில் ஏற்பதற்கு தயங்கிய முதல்வர் நித்திஷ் குமார் பின்னர் மத்திய அரசுடன் மிக உயர்ந்த மட்டத்தில் பேச்சுகள் நடத்தியபின் ஒப்புக்கொண்டிருக்கிறார், ஒரு நாள் மிக ரகசியமாக 24 கமோண்டோக்களின் பாதுகாப்புடன் விமானத்தில் 13 பெட்டிகளில் வந்திறங்கிய தங்ககட்டிகள் இப்போதும் அவர்கள் பாதுகாப்பில் தான் இருக்கிறது. 500 பக்தர்களின் சிறப்பு பூஜையுடன் துவக்கி 40 கலைஞர்கள் இரவுபகலாக தங்க்க்கூரை வேலைகள்
செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஒரு தாய்லாந்து அமைச்சர் வந்து பார்வையிடுகிறார். . நீங்கள் அடுத்த முறை வரும்போது தங்கமயமாக மின்னும் கோபுரத்தைப் பார்க்கலாம். கோவில் வளாகத்தின் உள்ளே பல இடங்களில் சிலபுத்த பிக்குகள் தொடர்ந்து சாஷ்ட்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கிறார்கள். உடலின் எட்டு அங்கங்களும் தரையில் படும் அந்த நமஸ்காரங்களை செய்ய ஊஞ்சல் பலகை போல வழவழப்பான நீண்ட பலகை, உள்ளங்கை உரசி புண்ணாகமலிருக்க கையில் கோர்த்து கொண்டிருக்கும் சிறியகுஷன், முழங்கால் அடிபடாமலிருக்க சின்ன மெத்தை இப்படி ஏற்பாடுகள். நிறுத்தாமல் செய்கிறார்களே எவ்வளவு நமஸ்காரம்? என கேட்ட போது அருகிருந்த ஒரு பிக்கு சொன்னது ஒரு லட்சம் !
. நமக்கு சரியாக கேட்கவில்லையோ என மீண்டும் கேட்டபோது துறவியின் அடுத்த நிலைக்கு போக இது அவசியம் எனவும் ஒரு நாள் 1000 அல்லது 500 வீதம் பல நாட்கள் செய்வார்கள் எனவும் சொன்னார். நாம் கேட்கும் முன்னரே அவர் கையிலிருக்கும் விரலால் அமுக்கினால் நகரும் எண்ணை காட்டும் ஒரு சிறிய கவண்ட்டரை காட்டி இங்குள்ள தலமை துறவியிடம் பதிவுசெய்வோம் என்றார். நமது மதங்களில்தான் எத்தனைவித பிரார்த்தனைகள், நியமனங்கள்? என எண்ணிக்கொள்கிறோம். இந்த கோவில் வளாகத்தில் போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றபின்னர் 7 இடங்களில் ஒவ்வொரு வாரம் தவமிருந்து அருள் பெற்றிருக்கிறார். ஒரிடத்தில் ஒருவாரம் கண் இமைக்காமல் எதிரே இருக்கு ஆலமரத்தையே நோக்கியிருக்கிறார். ஒரு இடத்தில் 7 நாட்களும் ஒரே இடத்தில் முன்னும் பின்னுமாக நடந்திருக்கிறார்.. மற்றொரு இடத்தில் அசையாமல் நின்றிருக்கிறார். ஒரிடத்தில் இவர் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தபோது கடும்மழையும் புயலும் தாக்கியிருக்கிறது அப்போது ஒரு நாகம் அவரை நனையாமல் காத்து நின்றிருக்கிறது. அந்த இடங்களெல்லாம் புத்தமத்ததினருக்கு புனிதமான இடங்கள்.
அந்த இடங்களில் சிறிய மேடைகள். வருகிறவர்கள் அதில் அமர்ந்து
தியானிக்கிறார்கள் ஒவ்வொருநாள் தவத்திலும் அவரது உடலில் ஒருவண்ணம்
ஓளிர்ந்திருக்கிறது..அந்த வண்ணங்கள் தான் புத்தமதத்தின்
கொடியாகியிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் புத்த கோவில்களில் பறக்கிறது.
வளாகத்தை சுற்றிப் பார்த்தபின்னர் சன்னதிக்குள் நுழைகிறோம். கோவிலின் கம்பீரத்துக்கு சன்னதி மிகச் சிறியது. பத்தடி உயரமிருக்கும் பொன்வண்ண சிலை. அவர் ஞானம்பெற்ற நிலையை காட்டும் உட்கார்ந்த நிலையில் சிலை. சிவப்பு அங்கி சாத்தியிருந்தார்கள்.அமைதியாக சற்று நேரம் அமர்ந்திருக்கிறோம். மண்டியிட்டு அமரவேண்டும் என மெல்ல காதில் யாரோ கிசுகிசுக்கிறார்கள்:. மெல்லிய மந்திரங்களின் ஒலியில் சந்தன மணம் நாசியை தொட. எழ மனமில்லாமல் மெய்மறந்து கண்மூடி இருக்கிறோம். சற்றே சத்தமாக ஒலிக்கும் தமிழ் குரல்கள் நம்மை தாக்க, எழுந்திருக்கிறோம்.
கோவிலை விட்டு வெளியே வரும்போது “என்னுடைய போதனைகள் கோட்பாடுகள் அல்ல நான் சொல்வதையும் கேள்விகள் கேட்டு ஆராயுங்கள்”
”எவரும் பிறப்பால் உயர்ந்தவர்கள் இல்லை. தன் செயலால் மட்டுமே உயர்ந்தவன் என்ற நிலையை அடைய முடியும்” போன்ற புத்தரின் வாசகங்கள் கண்ணில் படுகிறது. தான் பெற்ற ஞானத்தை தனக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்லாமல் எல்லோரும் அதை அடையும்வழியை சொன்ன இந்த மனிதன் தான் உலகின் முதல் பொதுவுடமைப் புரட்சியாளன் என்று தோன்றிற்று.
சத்குருவின் பதில்கள்
ஞானோதயம் என்பது என்ன? புத்தரைபோல எவரும் அதை அடையமுடியுமா?
உங்களிடம் செல்போன் இருக்கிறதா? காமிரா இருக்கிறதா? இன்றைக்குதான் எல்லாம் ஒன்றாக இருக்கிறதே. அதிலிருக்கும் அத்தனை வசதிகளையும் உங்களுக்கு பயன்படுத்த தெரியுமா? நீஙகள் எந்த கருவியை பயன்படுத்துபவராக இருந்தாலும் அதைப்பற்றி முழுமையாக தெரிந்திருக்கும் பட்சத்தில் அதனை நீங்கள் திறம்பட கையாள இயலும். அதனைப்பற்றி அதிகமாக தெரிந்துகொள்ளும் பட்சத்தில் உங்களால் அந்த கருவியை வைத்துக்கொண்டு என்ன செய்ய இயலுமோ அது பல மடங்கு மேம்படும். நாம் கையாளும் ஒவ்வொருபொருளுக்கும் இது பொருந்துவது போல நம் மனத்தின் முழு சக்தியை முழுமையாக ஆழமாக புரிந்துகொள்ளும்போது அதை நீங்கள் கையாளும் விதமும் பன்மடங்கு மேம்படும்.. ஞானோதயம் என்றால் தன்னை முழுமையாக உணர்தல். இந்த நிலையை அடைந்தவர்கள் நிறைய விஷயங்களை எளிதில் செய்ய முடியும்.. உடலின் செயல்களை கட்டுபடுத்தமுடியும். இருந்த இடத்திலிருந்தே கண்மூடிய தூங்கும் என்ற நிலையில் இருந்தாலும் செய்யவிரும்பியதை செய்ய முடியும். இந்த சக்திகளை பெற்றிருந்த புத்தர் அதனை தன் நலத்திற்கு பயன்படுத்திகொள்ளமல் கண்டூணர்ந்தவகைகளை மற்றவர்களுக்கு போதிக்க துவங்கினார். ஞானோதயம் என்பது ஏதோ இமயமலைகுகைக்களும் காட்டுபகுதிகளில் கடும்தவம் செய்தால் தான் கிடைக்கும் என்பதில்லை. அப்படியும் நிகழந்திருக்கிறது. நிகழ்ந்துகொண்டுமிருக்கிறது. ஞானோதயம் அடைய எவரும் முறையான பயிற்சிகளுடன் முயற்சிக்கலாம். முதலில் உங்களால் உங்களை உணர முடியுமா என சோதித்துக்கொள்ள வேண்டும்.
(கல்கி 16/03/14)
படங்கள் ரமணன்
ரமணன் சார்
பதிலளிநீக்குஇன்று காலையில் எழுந்தவுடன் புத்த கயாவில் புத்தர் தரிசனம். புதிய தகவல்கள். thanks