1/3/14

கங்கை கரை ரகசியங்கள் 8





எப்போதும் ஏதோவொரு சப்தம்,  எங்கும் மக்கள், மக்கள்,  குறுகியசந்துகள்,  அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்படாத பழைய கட்டிடங்கள், குப்பைகள் அப்புறப்படுத்தாத தெருக்கள்  போன்ற நகரின் அழகற்ற முகங்கள்,  வழி கேட்டால் பதில்சொல்லாத உள்ளுர்மனிதர்கள்,   சுத்தமில்லாத சூழலை சகித்து கொண்டு நடக்கும் வெளிநாட்டினர்,.     நமக்கே அன்னியமாகதோன்றும் இந்தியர்கள், செல்வந்தர்கள், சன்னியாசிகள், வாழ்வின் லட்சியத்தை அடைந்தவிட்ட மகிழ்வில் தளர் நடையில் முதியவர்கள், மண்குடுவையில்
தேனீர், பளபளக்கும் பித்தளைடம்பளரில் லஸ்ஸி,  மிகப்பெரிய இரும்பு  வாணலியில் எப்போதும் கொதித்துகொண்டிருக்கும்  பால், என  கதம்பக் கலவையாக யிருக்கும் இந்த காசி நகரம் ஏதோ ஒரு இனம் தெரியாத வகையில் வந்தவர்களையெல்லாம் வசீகரிக்கிறது.  பலருக்கு வாழ்நாள் கனவாகயிருக்கும் விஷயம் நமக்கு இன்று கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தையும்,,பல ஜென்மங்களுக்கு முன் இந்த நகரத்தில் நாமும்  வாழ்திருப்போமோ என்ற பந்தத்தை ஏற்படுத்தும்  சக்தி இங்கு இருக்கிறது. அதானால்தான் என்னவோ மார்க் டைவன் என்ற  புகழ் பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் இந்த நகரை ”நமது சரித்திரங்களைவிட, நாம்  அறிந்த  பாரம்பரியங்களைவிட நமக்கு தெரிந்த இதிகாசங்களைவிட இரண்டு மடங்கு பழையது” என்கிறார். கடவுளுக்கும் முக்திதந்த,பலருக்கு ஞானக்கண் திறந்த, உலகின் எந்த இடத்திலும் இல்லாத சக்தி அதிர்வுகள் நிறைந்த இந்த காசிநகரம் ஒரு விஷயத்தை மெனமாக அழுத்திச்சொல்லுகிறது. ”எனக்கு  என்றும் அழிவில்லை”.என்பது தான் அது. அத்தகைய ஒரு பெருமைமிக்க நகருக்கு நாமும் வர ஒரு வாய்ப்பு கிடைத்தற்கு  இறைவனுக்கும் அதை கிடைக்கசெய்த
ஈஷா குழுவினருக்கும்   நன்றி சொல்லி இந்த அதிகாலைப் பொழுதில் புத்ததேசமான புத்தகயாவிற்கு பயணத்தை துவக்கியிருக்கிறோம்.புத்த கயா என்பது காசியிலிருந்து 250கீமி  தூரத்திலிருக்கிறது. இதற்கும் காசி என்ற வார்த்தையுடன் எப்போதும் சொல்லப்படும் கயாவிற்கும் சம்பந்தமில்லை. அது கங்கைநதிக்கரையில் இன்னும் தொலைவிலுள்ள மற்றொரு கிராமம்.. புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் இருக்குமிடம், புத்த கயா என்று அழைக்கப்படுகிறது.  வாரணாசியிலிருந்து கிளம்பி சாரநாத்தில் தன்  கடுந்தவத்தை துவக்கிய சித்தார்த்தன் இங்கு வந்து போதிமரத்தடியில் அமர்ந்து தவமிருந்தபோதுதான் ஞானோதயம் அடைந்து புத்தராகியிருக்கிறார்.
 வெளிப்புறம் பூசப்படாத சுவர்களுடன் வீடுகள். களிமண் குடிசைகள்  என்ற காட்சிகளை காட்டிய குறுகியசாலைகள் நாம் பீஹார் மாநிலத்திற்கு வந்திருக்கிறோம் என்பதைச்சொல்லுகிறது.பிஹார் வரண்டபிரதேசம் என்று சொல்லப்படுவது தவறு எனபதைபோல தலையாட்டி கொண்டிருக்கும்  பசும் பச்சை நெற்பயிர்களுடன் வயல் வெளிகள்.  நம் ஏஸி பஸ் குலுக்கிப் போடுவது நமக்கு கஷ்டமாகயிருக்கிறது.  ஒரிடத்தில் கங்கையை கடக்கும் பாலத்தை.   தாண்டியபின்  ஒரு சின்ன கிராமம் கூட கண்ணில்படவில்லை. ஏதோ ஒரு காட்டை அழித்து உருவாயிருக்கும் குறுக்குப்பாதை அது, பஸ் மெல்ல போவதால், தூரத்தை அதிகமாக உணர்வதால் களைப்பாக  தோன்றுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்  சித்தார்த்தன்   இந்தவழியாகதானே நடந்திருப்பார். கங்கையை எப்படி கடந்திருப்பார்?. எவ்வளவு நாள் பயணம் செய்திருப்பார்? என்ற எண்ணங்கள் எழுகின்றன. அதை விட ஏன் சாரநாத்திலிருந்து  புத்த கயாவிற்கு போனார்?  என்பது இந்த புனிதரின் வாழ்க்கையில் புரியாத கேள்விகளில் ஒன்று.
தலைப்பைச் சேருங்கள்
உடலை வருத்தி ஞானத்தை தேடி அலைவது பயனற்றது. அடைந்த ஞானத்தை அடுத்துவருக்கு போதிக்க நல்ல ஆன்மாவுடன் உடலும் தேவை எனபதை உணர்ந்த சித்தார்த்தன் சாராநாத்தில் கடும் தவத்திலிருந்தபோது உடல் வற்றி வெறும் எலும்பும் தோலுமாக மயக்க முற்ற நிலையில் சுஜாதா என்ற ஆயர்குல சிறுமி  பாலில் சமைக்கப்பட்ட சாதத்தை அளிக்கிறார். இப்போது பயன்பாட்டில் இல்லாத அந்த அரிசி காலா நமக் என்ற கருப்பு வகை.அரிசி. இதன் மாதிரியை ஊளுந்தூர் பேட்டை சாராத ஆஸ்ரமத்தில் பாதுகாக்கிறார்கள்.
பட்டினிகிடப்பவன்  மெய்ஞானத்தை அடையமுடியாது என்பதை சித்தார்த்தன் உணர்ந்த தருணம் அது. அவர் அந்த சாதத்தை சாப்பிட்டதைப் பார்த்ததும்  அவருடன் தவத்திலிருந்தவர்கள் அவரை வெறுத்து  விலகி செல்லுகின்றனர். தனித்துவிடப்பட்ட  சித்தார்த்தன் மீண்டும் நடக்க துவங்குகிறார்.  தீவிரமான தேடியது தான்அடைய வேண்டியதற்கான முயற்சிக்காக ஒரு சரியான இடம்..  அடர்ந்த வனத்தையும் நதிகளையும் தாண்டி அவர் கண்ட இடம் தான் புத்தகயா. அன்று அதன்பெயர்  உருவெல்லா என்ற வனப்பகுதி. அதில் அவர்  தவம் செய்ய தேர்ந்தெடுத்தது ஒரு அரசமரத்தினடி. அந்த மரத்தடியை தேர்ந்தெடுத்தது தற்செயலா? அல்லது அவர் குறிப்பாக தேடிக்கண்டுபிடித்ததா? என்பது இன்றும் விவாதிக்க பட்டுகொண்டிருக்கும் ஒரு விஷயம். அந்த மரத்தையும் அதன் அருகில் எழுப்ப பட்டிருக்கும் மஹாபோதி கோவிலையும்  தரிசிக்க தான் இந்த பயணம்.
 மாலைநேரத்தில் பஸ்ஸுக்கு வெளியே  மாறும் காட்சிகள்  புத்தகயாவிற்குள்  நாம் நுழைந்து விட்டதை உணர்த்துகிறது. மிகச் சிறிய நகரம். பல புத்த விஹார்கள்,  வீடுகளைவிட ஹோட்டல்கள் அதிகம் என தோன்றிற்று. கடைகள், ஹோட்டல்கள், ரெஸ்டோரண்ட்கள் எல்லாவற்றிருக்கும்  சுஜாதா, சித்தார்த், அசோகா  ராகுல் என புத்தமத சமபந்த பட்ட பெயர்கள்.தான். தங்கிய ஹோட்டலிலும் ரிசப்ஷனில் கண்ணாடியில் செதுக்க பட்ட பெரிய புத்தர் படம்.   அன்று மாலையில் லாவோஸ் நாட்டின் பிரதமர் சார்பில்  மஹாபோதியில் பிராத்தனைகள் இருப்பதால்  அதிகாரிகள், லவோஸ்மக்கள் என்று ஒரு பட்டாளமே வந்திருந்தது.  அதனால் மறுநாள் மஹாபோதி புத்தரை பார்க்கலாம்  என முடிவு செய்து நகருக்குள் நடக்கிறோம்.. இருப்பது பாங்காங் அல்லது சீனாவின் ஒரு பகுதியோ என்று தோன்றும் அளவிற்கு புத்தகோவில்கள்.



எங்கு காணினும் புத்தனடா என சொல்லவைக்கிறது. அத்தனை கோவில்கள். அவ்வளவும் அழகாக இருக்கிறது அருமையாகப் பராமரிக்க படுகிறது.  பூட்டான், சீனா,மியாமர்,நேப்பாள், இலங்கை தைவான்,தாய்லாந்து திபேத்,வியட்நாம்.பங்களாதேஷ் என பல நாட்டினர் இங்கு புத்தகோவில்கள் அவரவர் நாட்டின் பாணியில் பகோடா, பாகன் பாணிகளில் அமைத்திருக்கிறார்கள். கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் அந்தந்த தேசங்களின் கலைநுணுக்கங்களைக்  காட்டும் கோவில்கள். ஒவ்வொன்றிலும் புத்தர். பூடான்கோவிலில் வண்ணமயமான் பின்னணியில் தங்க புத்தர்.  
எல்லாகோவிலின் புத்தசபாக்கள் ( மடங்கள் என்று சொல்லக்கூடாதாம்) சில கோவில்கள் பல ஆண்டுகளாக இருக்கிறது. தாய்லாந்து கோவிலின் அருகில்  பிரமாண்டமான  புத்தர் சிலை 80 அடிக்குமேல் உயரம். ஒரு அழகான தோட்டத்தின் நடுவே இருக்கிறது,  இது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.  சிலையின் கம்பீரமும்,புத்தரின் முகத்தில் தெரியும் சாந்தமும் எவரையும் மயக்கும்

 இந்தியாவின் மிக குட்டி காரான நானோவில் இந்தியாவை சுற்றும் ஒரு தம்பதியனர் தங்கள் காரை இந்த பிரமாண்டத்தின்  முன்னே காரை நிறுத்திபடமெடுத்துகொண்டிருந்தார்கள்.  ஏன் இவ்வளவு  புத்தர் கோவில்கள்? இந்த இடம் புத்தமத்தினருக்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு புத்த மத்தினரும் தங்கள் வாழ்க்கையில் நான்கு முக்கிய இடங்களில் வழிபட வேண்டும். அவை நேப்பாளத்தில் இருக்கும் புத்தர் பிறந்த இடம் லூம்பினி,  அவர் ஞானம்பெற்ற புத்தகயா, புத்தர் தன் போதனைகளை துவக்கிய முதல் இடமான சாரநாத்,  அவர் உயிர்நீத்த இடமான குஷி நகர். அதனால் தான்  உலகெங்குமிருக்கும் புத்தமதத்தினர் இங்கு வந்துகொண்டேயிருக்கின்றனர். தங்கள் நாட்டு அரசின் உதவியோடு இங்கு ஒரு கோவிலையும் நிறுவி இங்கு வரும்போது வழிபடவும் வரும் துறவிகள் தங்க சபாக்களையும் நிறுவியிருக்கிறார்கள்.  சில மிக பழமையானவை. இலங்கை கோலில் 18ஆம் நூற்றாண்டிலேயே  நிறுவப்படிருக்கிறது. எந்த புத்தர் சன்னதியிலும் தனியாக ஆராதனை எதுவும் கிடையாது.  நள்ளிரவு வரை திறந்திருக்கும்  நாம் போய் அமர்ந்து பிராத்திக்கொள்ளாலாம்.  கட்டணம் எதுவும் கிடையாது. ஒரே ஒரு கோவிலில் மட்டும்  கோவிலை போட்டோ எடுத்தால் உண்டியலில் 20 ரூபாய் போடுங்கள் என்ற அறிவிப்பு.  மெல்லக்கவியும் இருள், இதமான நிலையிலிருந்து தாக்கும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கும் குளிர், லேசாக வலிக்க  துவங்கியிருக்கும் கால்கள் ஹோட்டலுக்கு திரும்பச் சொல்லுகின்றன.  தொலைவில் ஒளிவெள்ளத்தில் மஹாபோதி கோவில்
. நாளைகாலை நம்மை அருள் பாலிக்க காத்திருக்கும்  புத்தரை தரிசிக்கபோகிறோம்.


சத்குருவின் பதில்கள்
வழிபாடுகளுக்காக ஏற்படுத்த பட்டவை கோவில்கள். எல்லா மதங்களிலும்  இவற்றில் சில பிரமாண்டமாக அல்லது ஆடம்பரமாக இருக்கிறதே ஏன்?
 கோவில்கள் என்பது ஏற்படுத்தபட்டதின் நோக்கம்  மனிதனுக்கு  எளிதில் உதவதற்காக. அவைகள் ஒரு சக்தி வளையமாக உருவாக்கப்பட்டு,பேணபட்டுவந்தது.  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆன்மீக சக்தி இயற்கையாகவே அமைந்திருக்கிறது.  இந்த சக்தி வளையங்கள் அவைகளை தூண்ட, அவனுள் மனிதம் மலர, நல்ல மனிதாக வளர உதவி செய்ய வேண்டி  உருவாக்கபட்டன.  அதனால்தான்  நாம் கோவிலில் சில நேரமாவது உட்காரவேண்டும் என சொல்லுகிறோம். யோகா, கிரிகைகள், பல வேறு சதானாக்கள் இதற்காக இருக்கின்றன. ஆனால் அவை எல்லா மனிதர்களாலும் செய்ய முடியாது என்பதினால்  அவர்களுக்கு எளிதாக இந்த சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கோவில்கள் உருவாயின. சுருக்கமாக சொல்ல வேண்டுமானானால்  கோவில்கள் பப்ளிக் சார்ஜிங் செண்ட்டர் மாதிரி. அங்கு தினசரி வருபவர்கள் மிக எளிதாக தங்கள் சக்தியை புதுபித்துகொண்டு தினப்பணிகளில் ஈடுபடமுடியும்.  அந்த சக்தியை வழங்க நிறுவபட்ட கோவில்களுக்கு  அந்த சக்தி எப்படி வந்தது? அந்த சூட்சமம் தெரிந்தவர்கள் உருவாக்கிய கருவிதான் கோவில். அதில் அத்தகைய சக்தியை பிரதிஷ்ட்டை என்கிறோம். இதை எல்லோராலும் செய்யமுடியாது. இதைசெய்தவர்கள் மிக அற்புதமாக அதைச் செய்திருக்கிறார்கள். அதனால் தான் பல ஆயிரம் வருடங்களாக அவை தொடர்ந்து சக்தி வளையமாக இருந்து வருகிறது.  அந்த சக்தியை பெற மனிதன்  தன் ஆணவங்களை, அகங்காரங்களை மறந்து சமநிலையான மனத்துடன் கோவில்களுக்கு வர வேண்டும்..ஆனால் காலப்போக்கில் இது பிராத்தனைக்கூடமாகி எனக்கு வேண்டியைதையெல்லாம்  நான் கேட்டால் ஆண்டவன் கொடுப்பான். அவனுக்கு நான் இதைக்கொடுத்தால் அவன் எனக்கு அதை கொடுப்பான் என்றாகி விட்டது. அதைபோல கோவிலை சமூகத்துக்காக உருவாக்கி உதவுபவர்கள் தங்கள் செழிப்பையும் அந்தஸ்த்தையும் காட்ட ஆரம்பித்தார்கள். இது சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது. ஒருகோவில் எவ்வளவு பெரிது, எவ்வளவு செல்வ முள்ளது என்பதைவிட  அதன் சக்தி வளையம் எவ்வளவு சக்தி வாய்ந்தது  என்பது தான் முக்கியம். 
கல்கி 8/3/14


3 கருத்துகள் :

  1. கல்பனா ஆனந்த்2 மார்ச், 2014 அன்று 7:28 AM

    மிக அருமையாக எழுதுகிறீர்கள். கூடவே அழைத்துகொண்டுபோனதைபோல இருக்கிறது. எனக்கும் காசியில்இருந்தபோது ஒரு ஜன்மத்தில் அங்கு வாழந்திருப்போம் என தோன்றியது.

    பதிலளிநீக்கு
  2. Supper presentation Ramanan. Our entire group is reading this now and many wanted to go for the next trip. thanks
    Siva Nesan Eppoah Malaysia

    பதிலளிநீக்கு
  3. லஷ்மி கண்ணன்4 மார்ச், 2014 அன்று 12:15 PM

    ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் காசி போயிருந்தேன். ஆனால் உங்கள் கட்டுரை அதை இப்போதுதான் நன்றாக பார்த்தது போல உணர வைக்கிறது. ரொமப தாங்ஸ்
    ரமணன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்