31/3/14

கங்கைக் கரை ரகசியங்கள் 12

பாட்னா நகரின் கங்கைக்கரையில் காந்திகாட் டிலிருந்து கிளம்பி சூரியோதம் பார்ப்பதற்காகவே ஒரு ரவுண்ட் வரும் M.V கங்கா விஹார் என்ற இரண்டு அடுக்கு மோட்டர் படகிலிருக்கிறோம். நேற்றிரவு  கங்கையில் எங்கே பாதுகாப்பாக குளிக்கலாம்? என்ற கேட்டபோது பீஹார் டூரிஸ்ட்டின் இந்த படகு சவாரி பற்றி சொல்லி புண்ணியம் கட்டிக்கொண்டவர் அந்த ஹோட்டல் மேனேஜர். கங்கையில் சூரியோதத்தை காசுகொடுத்துபார்க்க வைக்கும் புத்திசாலிகளான பிஹார் டூரிஸம் துறையினரின் இந்த படகில் ஏர்கண்டிஷன் ரெஸ்டோரண்ட்டும் இருக்கிறது.  அந்த விடியற்காலைப்பொழுதில்  நமக்கு வினோதமாகவும் பலருக்கு விருப்பமாகவும் இருக்கும் பிரேக்பாஸ்ட்டாக  ஜிலேபியையும்,  எண்ணை மினுமினுக்கும் ஆலுபரோத்தாவையும்  தருகிறார்கள். படகு கட்டணம் இதற்கும் சேர்த்துதானம். இந்தியாவின் மிகப்பிரமாண்டமான நதிப்பாலங்களில்  ஒன்றான காந்தி சேதுவை ஒரு ரவுண்ட் சுற்றி கரைக்கு திரும்புகிறது படகு.

வாரணஸியிலிருந்து கங்கைக்கரையோடு புத்த தேசத்தில் பயணித்து கொண்டிருந்த நாம் இப்போது பயணத்தின் இறுதிகட்டமாக அந்த புனித நதியின் கரையிலிருக்கும்  பாட்னாவிலிருக்கிறோம். இன்று ஒரு மாநில தலைநகரமாகயிருக்கும் இந்த நகரம் பாடலிபுத்திரமாக இருந்தபோது மகத நாட்டின் தலைநகராக, இன்றைய  இந்தியபரப்பளவின்  முக்கால் பகுதிக்கு தலைநகராகயிருந்திருக்கிறது. வேறு எந்த இந்திய நகரத்துக்கும் இந்த சரித்திர பாரம்பரிய பெருமை கிடையாது.  ஆனால் இன்று அந்த   சரித்திரங்களின் சான்றைச் சொல்ல நகரில் ஒரு பழமையான கட்டிடம் கூட இல்லை.  நகர் முழுவதும்  நவீன கட்டிடங்கள். இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகமுள்ள நகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது இந்த நகரம். கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
 நமது சென்னை பயணம் மாலையில் தான் துவங்க இருப்பதால்  இங்குவேறு என்ன பார்க்கலாம்? என விசாரிக்கிறோம்.  நகரின் மையப்பகுதியிலுள்ள பெரிய காந்தி மைதானத்தின் மேற்கு மூலையில் இருக்கும்  ”கோல்-கர்” என்ற இடத்தை சொன்னார்கள்.  கோள வடிவ இல்லம் என்று சொல்லபட்டாலும் அது உருண்டையாக இல்லை..  ஒரு கோழிமுட்டையின் வடிவில்    கட்டபட்டிருக்கும் சேமிப்பு கிடங்கு.

உலகம் முழுவதும் பேசப்பட்ட 1770 ன் வங்காளப் பஞ்சத்திற்கு பின் அன்றைய  கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்கின் ஆணையின் படி உருவாக்கபட்ட தானிய கிடங்கு இது.  ஒரு லட்சம் டன்களுக்கு மேல் சேமிக்கலாம். ஒரு புத்த ஸ்தூபியின் வடிவில் உட்புறம் காலியாக நிறுவபட்டு,
 அதன் மேல்புறத்திலிருக்கும் வாய்ப்பகுதி வழியாக தானியங்கள் உள்ளே கொட்டப்படும். அதற்கு வசதியாக வளைவாக படிகட்டுகள். கீழே உள்ள கதவுகளின் மூலம் எடுத்து கொள்ளப் படும்.  தானியம் யாருக்காக சேமிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? அன்றைய ராணுவத்தினருக்காக. முழுவதும் பலவிதமான செங்கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டபட்டிருக்கும் இது கட்டிடஇயலில் ஒரு சாதனையாக இன்றும் ஆர்க்கிடெட்களால் வர்ணிக்கப்படுகிறது. இன்று இதில் எதுவும் சேமிக்கபடுவதில்லை. சுற்றுலா வருபவர்கள் பார்க்குமிடமாகியிருகிறது.   குறுகலாக இருக்கும் 145 படிகள்.  மூச்சுவாங்க ஏறிப்போனால் நகரையும், கங்கையும் பார்க்கலாம்.  கங்கை எல்லா இடங்களிலுமிருப்பது போல அழகாக, கம்பீரமாக  இருக்கிறது.  அங்கிருந்து அன்னைக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு இறங்கி நகரை சுற்றிவிட்டு திரும்புகிறோம்.
பரபரக்கும் பாட்னா ஸ்டேஷனில் பத்தாவது பிளாட்பாரத்திலிருந்து சங்க மித்திரா எக்ஸ்பிரஸ் சென்னைக்கு தன் பயணத்தை முன்னோக்கி துவக்கி வேகமெடுக்கிறது.   இந்த இனிய பயணத்தில் பார்த்ததை, அனுபவித்ததை. நினைவுச் சிதறலாகயிருப்பதை,  வீட்டிற்கு போனதும் நம் குடுமபத்தினருடன்  எதை? எப்படி? பகிர்ந்துகொள்வது என்பதை நம் மனம் அலசுகிறது, மனம் பின்னோக்கி காசிநகருக்குக்கு போகிறது. முதல் நாளும், அதற்கு பின்னரும் ஒருமுறை பார்த்த, கண்ணிலேயே நிற்கும் கங்கா ஆர்த்தி காட்சி  படமாக ஓடுகிறது.

 சில்லென்ற கங்கைமாலைக்காற்றின் சுகத்தில் படகுப்பயணத்தை அனுபவித்து கொண்டே ஆர்த்தி கட்டத்தை நெருங்குகிறோம். துவங்க இன்னும் அரைமணி நேரமிருந்தாலும் படித்துறையில்  மக்கள் உட்கார ஆரம்பித்துவிட்டார்கள்.ஓலிபெருக்கியில் பக்தியிசை, அறிவிப்புகள். நிறைய வெளிநாட்டினர் நம்மைப் போல படகில் காத்திருக்கிறார்கள்.வேறு சிலர் படகில் பயணம் செய்யாவிட்டாலும் பார்ப்தற்காக,  படமெடுப்பதற்காக காசு கொடுத்து காலிப்படகுகளில் உட்காருகிறார்கள் . மெல்ல இருள் பரவுகிறது.அதிகமாகிக்கொண்டிருக்கும் கூட்டம், ஆர்வத்தைத்துண்டும் அறிவிப்புகள் ஆர்த்திப் பாடல்பாடும் குழு வந்தமர்கிறது. இந்திய மொழிகள் அனைத்தும் காதில்விழுகிறது. படிகளினிடையே பலகையினால் நிறுவப்பட்ட சிறிய மேடையில் தங்கமாய் மின்னும் ஒரு குட்டி மண்டபம். உள்ளே முகம் மட்டும் தெரியும் கங்காமாதா. அருகில் பூஜை சாதனங்கள்.பக்கவாட்டில் பக்கத்திற்கு இரண்டாக நாலு சிறிய மேடைகள் அதிலும் பூஜை பொருட்கள். மணி 7ஐ நெருங்குகிறது.படிகளில் கூட்டம் வழிகிறது.. மின் விளக்கு வெளிச்சத்தில்  தகதகவென பளபளக்கும் ஆரஞ்சுக் கலர்பட்டாடையில் பூஜைமேடைஅருகே கம்பீரமாக நிற்கும்  இளைஞர்கள். டாண்ணெண்று 7 மணிக்கு சங்கு ஒலி அறிவிப்பபைத் தொடர்ந்து பூஜையை நடுமேடையில் வந்தமரும் தலமைப்பூசாரி துவக்குகிறார். பள்ளியில் காலை வணக்க கூட்டத்தில் சலசலத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் விசிலடித்ததும்  அமைதியாகிவிடுவதுபோல  சட்டென்று கூட்டம் அமைதியாகி கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. மேடையிலிருக்கும் தேவிக்கு முதல் பூஜை முடிந்து  ஒரு சிறிய தீபாரதனை. அந்த தீபத்திலிருந்த எடுத்த அக்கினியில் அருகில் தயாராகயிருக்கும் பெரிய தீபங்கள் ஏற்றபடுகிறது. இசைகுழுவின் ஆர்த்திபாடல் ஒலிக்கிறது. ஓவ்வொன்றாக 7 விதமான தீபங்கள், படியிலிருந்து கங்கையை நோக்கி மூன்று திசைகளுக்கும் காண்பிக்கபடுகிறது. ஒவ்வொருமுறையும் 5 பேரும் இசையுடன் இணைந்து துல்லியமான அசைவுகளைக்கூட ஒரு பிசிரில்லாமல் தேர்ந்த  நடன கலைஞர்களைப் போல நேர்த்தியாக  செய்யும் அந்த காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. கனமான,சூடான அந்த  அடுக்குத்தீபங்களை ஒருகையில் தூக்கிச்சுழற்றிக்கொண்டே மறு கையில் கனமான மணியை ஆட்டி அடித்துக்கொண்டே ஒரு காலில் மண்டியிட்டு  5 பேரும் ஒரே நேரத்தில் வினாடிபிசாகமல் திரும்புகிறார்கள். தொடர்ந்த பயிற்சி,இசைஞானம்,பக்தி இவை யெல்லாம் இல்லாமல் இதைச்செய்யமுடியாது நூற்றுகணக்கான விடியோக்கள் இயங்குகின்றன.ஆயிரக்கணக்கான காமிராக்கள் பதிவுசெய்கின்றன.100 வருடங்களாக ஒருநாள்கூட விடாமல் தொடர்ந்து நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவுமில்லை.பார்ப்பவர்கள் தரும் காணிக்கைகளதான்.
இறுதியில் பல அடுக்கு விளக்குகளுடன் மஹாஆர்த்தி. காத்திருந்த மக்கள் தங்கள் கைகளில் புஷ்பங்களுடன் இலைகளில் வைத்திருக்கும் சிறு தீபங்களை மிதக்க விடுகிறார்கள். சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கில் நம் படகை கடந்து மிதக்கும்
அந்த மின்னும்  நட்சத்திரங்களை ரசித்த வண்ணம் கவனமாக அருகில் நிற்கும் படகுகளில் மாறி மாறி  நடந்து  கரையை அடைகிறோம். உச்சஸ்தாயில்  இசைகுழுவின்  குரலின் பின்ணியில் இறுதியாக மூன்று முறை சுழற்றப்பட்ட அந்த பெரிய தீபம் மக்களை நோக்கிகாட்டபட்டபின் அணைக்படுகிறது. பக்திபரவசத்தில் அங்கிருந்தவர்கள் ஓங்கி ஒரேகுரலில் எழுப்பிய, இப்போதும் நமக்கு கேட்கும் கோஷம்….   “கங்காமாதாகீ ஜே”


. (பயணம் நிறைகிறது)

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முனைவர் ராஜமாணிக்கம்-  தலவர் ஒஷோ பயோடெக் ஆராய்ச்சி கழகம் மதுரை 
எனது மனைவி ஜெயஸ்ரீ ஒரு மருத்துவர். ஈஷா அமைப்பிலும், அதன் தொண்டுபணிகளிலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். எனது ஆராய்ச்சி  மற்றும் பி.ஹெச் டி மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளினாலும் நான் அதில் அதிக நேரம் செலவிட்டதில்லை. ஒரு நாள் தற்செயலாக சத்குரு காசி நகர்  பற்றியும் காலம் என்பது பற்றியும் பேசினதை கேட்டேன்.   காசிநகரம் இவ்வளவு சக்தி வாய்ந்தா? என ஆச்சரியபட்டேன்.அப்போது இங்கு வரவேண்டும் என்று எழுந்த எண்ணம் இன்று நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லார் பாக் லீயாங் & திருமதி டான் பீ கெங் (Mr.Lor bak Liang &Mrs. Tan Bee kheng) சீஙகப்பூர் 

நான் சீங்கபூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன்.  என் மனைவி சீன மொழி மொழிபெயர்ப்பாளர். எங்கள் ஆன்மீக எண்ணங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டது. சத்குருவின் புத்தகம் ஒன்றைபடித்தபின் ஈஷா பால் நாட்டம் ஏற்பட்டது. அவர்களின் யோக பயிற்சிகளை முறையாக கற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவருடன் கைலாஷ் யாத்திரை சென்ற போது ஒருநாள் காலைஉணவின் போது அவருடன் பேசியிருக்கிறேன். அவரிடம் ஒரு தெய்விக சக்தியிருப்பதை உணர்ந்தேன். காசி பற்றிய அவருடைய வீடியோவை பார்த்தபின் நானும் என்மனைவியுடன் இதை கலந்து கொள்ள  முடிவு செய்து வந்திருக்கிறேன். காசி பற்றி முக்தி அடைவது பற்றி இவ்வளவு விபரங்கள் இந்த பயணம் வரும் முன் தெரியாது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நந்தினி  
 நான் பிடெக் முடித்து ஸ்வீடனில் எம்.எஸ் படிக்க போகிறேன். அட்மிஷன் கிடைத்துவிட்டது. விசா தாமதமாகிறது.  சேலத்திலிருக்கும் என் தாய் ஈஷாவில் ஈடுபாடு உள்ளவர். நான் தியானம் கற்றிருந்தாலும் சீரியசாக செய்வதில்லை. இந்த பயணத்துக்கு அம்மாவுடன் வருவதாக இருந்தது. ஒரு சீட் மட்டுமே கிடைத்ததால் ”விசாவைப் பற்றி கவலைப்படாமல் போய்வா. நிச்சியம் கிடைக்கும்” என அம்மா என்னை அனுப்பினார்..  எல்லோரும்  தனியாகவா வந்தாய்? என கேட்கிறார்கள். ஈஷா குழுவில் வர என்ன பயம்? நம் தேசத்தின் பெருமைகளை அறிய, குறிப்பாக காசியை தெரிந்துகொள்ள இந்த பயணம் உதவியது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாண்டியன்  -தொண்டர்.
தென்மவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் எளிய தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவன் நான்.  கோவையில் படிப்பதற்கு உதவி கேட்டு ஈஷாவிற்கு வந்தவன். இப்போது கோவை செண்டரில் முழுநேர தொண்டன். படிப்பிற்கு  பின் இங்கு அக்கெண்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில்  ஆடிட்டிங் பிரிவில் பணி. இந்த பயணத்திற்கு உதவியாளாரக தேர்ந்தெடுக்கபட்டேன். இம்மாதிரி பணிகள் எனக்கு சந்தோஷத்தையும், புதியவைகளை கற்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.என் வாழ் நாள் முழுவதும் ஈஷாவின் பணிகளில் இணைந்திருப்பேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 சத்குருவின் பதில்கள்

சமயம் கடந்த  சாதிகடந்த யோகா என்று ஈஷாவை ஆரம்பித்து இப்போது கோவில் குளம் தேவிவழிபாடு,புனிதப்யணம் என்று சென்றுகொண்டிருக்கிறீர்களே?

 இங்கே எதைச்செய்தாலும் ஜாதியுடனோ மதங்களுடனோ அடையாளபடுத்திப் பாக்கிற  இயலா பழக்கங்களைவைத்தே மதங்களை கற்பித்து விடுவீர்கள். இட்லி சாப்பிடுகிறீர்கள் என்றால் அது இந்துக்களின் உணவு என்பீர்கள் ரொட்டி சாப்பிட்டால் கிறிஸ்த்துவ உணவு என்பீர்கள். பிரியாணி சாப்பிட்டால் இஸ்லாமிய உணவு என்பீர்கள். எப்படி  உடை உடுத்தினாலும் அதை எதாவது ஒரு மதத்தோடு தொடர்புபடுத்தி சொல்லுவீர்கள். மதத்தின் சில அம்சங்கள் மூட நம்பிக்கை சார்ந்ததாகப் போவதால் மதங்கள் என்றாலே உங்களுக்கு எதிர்ப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.யோகா என்பது எப்படி ஒரு விஞ்ஞானமோ, ஒரு தொழில் நுட்பமோ தியானலிங்கமும். லிங்கபைரவியும் ஒரு விஞ்ஞானம். அவை ஒரு தொழில்நுட்பம். ஈஷா யோக மண்டபத்தில் அமைந்திருக்கும் தீர்த்தகுண்டமும் ஒரு விஞ்ஞானம். தீர்த்தகுண்டத்தில் விஞ்ஞான அதிசயம் ஒன்று நிகழந்திருக்கிறது. நவீன விஞ்ஞானத்தில் கூட கெட்டிபடுத்த பட்ட பாதரசம் என்பது யாரும் பார்த்திராத ஒன்று. பொதுவாக பாதரசத்தை திடபடுத்த வேண்டுமென்றால் அதனை உறைய வைக்கும் குளிர் நிலையில் மட்டுமே செய்ய முடியும். ஆனால் 32 டிகிரி சீதோஷணத்தில் தீர்த்தகுண்டத்தில் பாதரசம் அமர்ந்திருக்கிறது. இது சராசரி விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விஞ்ஞானம். அதிசயம். இதை வெறும் குளம் என்று சொல்லிவிட முடியாது. மனிதன் தன் எல்லைகளைத் தாண்டி. உணர்வதற்கு உருவாக்கபட்டுள்ள இந்த கருவிகளை கோவில்கள், குளங்கள் என நினைக்காமல்   பயன்படுத்திகொள்வதே புத்திசாலித்தனம்.
இந்த பயணக்கட்டுரைக்காக விசேஷமாக அளித்த பேட்டிக்கு  வாசகர்கள் சார்பில் நன்றி
சந்தோஷம்.
. படங்கள் ரமணன்
5 கருத்துகள் :

 1. சுதா கண்ணன் IOB மைலாப்பூர்31 மார்ச், 2014 அன்று PM 8:58

  மிகப் பிரமாதமாக நேரில் பார்ப்பதைபோலவே எழுதுகிறீர்கள் படங்களும் அருமை.
  என் அம்மா வாரந்தோறும் கல்கியில் பார்த்த பின் காசிக்கு அழைத்து போக சொல்லுகிறார். வயது 72. ஈஷா பயணத்தில் போக முடியுமா? நீங்கள் அடுத்த டிரிப்பிலும் வருவீர்களா?

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் சார். தீட்சை வழங்கும் ஜெர்மன் சாமியார். தங்க பிள்ளையார் பற்றியெல்லாம் சொன்னீர்களே? எழுதவிலையே

  பதிலளிநீக்கு
 3. விஜய குமார் மதுரை31 மார்ச், 2014 அன்று PM 9:14

  கைலாஷ் பயணமும் போவீர்களா? நானும் வர விரும்புகிறேன். சென்ன வரும்போது சந்திக்கலாமா?

  பதிலளிநீக்கு
 4. ஒரு யாத்திரை குழுவோடு சென்றிருந்தாலும் , வழக்கமான பயண கட்டுரையாய் இல்லாமல், சின்ன சின்ன விஷயைங்களை கூர்மையாய் கவனித்து சொன்னவிதம் பாராட்டுக்குரியது . I really admire your sincere efforts and the research for this article. பல அதிசியங்களான இரகசியங்களை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி. சில இடங்களில் , கட்டுரையைவிட தங்களின் புகைப்படங்கள் பல விஷயங்களை வெளிப்படுத்துகின்றன

  பதிலளிநீக்கு
 5. பயணக் கட்டுரைகள் நன்றாக இருந்தன. ஈஷாவின் சார்பாக நன்றிகள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்