மலேசியாவில் பிறந்த. சுபாஷிணி ஜெர்மனியில்வசித்து வரும் ஒரு தமிழ் எழுத்தாளர்-ஆய்வாளர். கணையாழி இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பை டாக்டர் கண்ணன் அவர்களோடு இணைந்து நிறுவியவர். அதன் துணைத்தலைவராக இருப்பதோடு அதன் வலைகுரு (webmaster) ஆகவும் செயல்பட்டு வருகிறார்.
அரிய, பழைய ஓலைச்சுவடிகள் தற்போது புழக்கத்தில் இல்லாத நூல்கள் இவற்றை மின்பதிப்பாக்கி வைப்பதை முக்கியக் கடமையாக ஏற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருகிறார். இதையன்றி கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி, மானுடவியல் போன்ற துறைகளில் ஈடுபாடு உண்டு.
இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் சொந்தச் செலவில் தமிழகம் வந்து களப்பணிகளை மேற்கொள்கிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஆனால் அசட்டை செய்யப்பட்ட கலாசாரச் செழுமை நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தல், அவற்றை வலையகத்தில் வெளியிடுவது, அறிஞர்களைச் சந்திப்பது, தமிழ்க் கணினி பற்றிய பட்டறைகள் நடத்துவது என்று அந்தப் பயணத்தை செயல்நிரம்பியதாகஆக்கிக் கொள்கிறார்.
மலேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் படித்த இவர் ஹ்யூலெட் பெக்கார்ட் நிறுவனத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளுக்கான வர்த்தக சேவையை அளிக்கும் Chief IT Architect, ஆகப் பணி செய்கிறார். ஜெர்மானியரான திரு. ட்ரெம்மலை மணந்து ஜெர்மனியில் வசிக்கிறார்.
படித்தது மலாய் மொழியிலும், ஆங்கிலத்திலும். பேசுவது வீட்டில் ஜெர்மன், அலுவலகத்தில் ஆங்கிலம்... ஆனால் நேசிப்பது தமிழ் மொழியை. தமிழ் மரபுகளை. தமிழ் மரபுகளை பாதுகாக்க இவர் தேர்ந்தெடுத்திருக்கும் வழி டிஜிட்டலில் சேமிப்பு
. இலக்கிய படைப்புகள் மட்டுமின்றி மருத்துவம்,கணிதம் வானசாஸ்திரம், கோவில்கட்டும் முறைகள், நாவாய் சாஸ்திரம், வான சாஸ்திரம் என சகலத்தையும் டிஜிட்டலாக்கி சேமித்து பட்டியிலிட்டிருக்கிறார்.. இம்முறை வந்த பயணத்தில் தினமணியின் இலக்கிய திருவிழாவிலும் சாகித்திய அகதமியின் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தன் பணிகளைப்பற்றியும் அதில் சந்திக்கும் சவால்களை பற்றி பேசினார்..
தமிழிலும் அதன் மரபுகளிலும் எப்படி இத்தனை ஆர்வம்?
தமிழ்வம்சாவளி மலேசிய குடும்பம் எங்களுடையது. என் தாய் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ் பேச எழுத ஆர்வத்துடன் சொல்லிகொடுப்பவர். என் பள்ளிக்கூட காலங்களில் அவர்களுடன் நானும் தமிழ் கற்றேன். அம்மா சொல்வதற்காக தமிழில் கட்டுரை பேச்சு எல்லாம் எழுதியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இந்த ஆர்வம் இல்லை.
ஜெர்மனிக்கு வந்த பின் 90 களின் துவக்கத்தில் இணைத்தில் தமிழை பயன்படுத்த யூனிகோர்ட் முறையில் எழுத்துருக்களை தமிழகம், மலேசியா சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து ஒத்த சிந்தனை கொண்டவர்கள் இணைந்து செய்த பணிகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழோடு நெருக்கமானேன். இந்த வளமான மொழி நம்முடையதல்லவா? நாமும் ஏதாவதுசெய்ய வேண்டும் என எண்ணினேன். தமிழ் வாசிப்பும் தொடர்புகளும் அதிகமாகியிற்று. அப்போது அறிமுகமானவர் முனைவர் நாராயணன் கண்ணன்
நா.கண்ணன் தொழில்முறையில் ஒரு அறிவியல் விஞ்ஞானி. மதுரைப் பல்கலைக் கழகத்திலும், ஜப்பானிலுள்ள எகிமே பல்கலைக் கழகத்திலும் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் போன்ற துறைகளில் தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் முக்கிய இந்திய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். இவர் 10 வருடங்கள் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராக இருந்துவிட்டு கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர். இப்போது புத்ர மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக உள்ளார். இருபதாண்டுகளுக்கு மேலாக அயலகத்திலிருந்து தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்து வருபவர். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம (digital) வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவரான இவருடன் இணைந்து உருவாக்க பட்டது தான் தமிழ் மரபு அறகட்டளை இந்த டிஜிட்டல் சேமிப்புகளை துவக்கியபின்னர் இந்த பணி தந்த ஆச்சரியங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றன. நம் முன்னோர்கள் செப்பேடுகளிலும், சுவடிகளிலும், பாதுகாத்து கொடுத்ததை தவிர எண்ணற்ற பல விஷயங்கள் இன்னும் சுவடிகளிலேயே கிராமங்களில் இருக்கிறது. திருவாடுதுறை போன்ற ஆதினங்களில் பல் அரிய சுவடிகள் இருக்கிறது. அதை இப்போது இருப்பதுபோல் நீண்ட நாள் பாதுகாப்பது கடினம். அவற்றை அடுத்த தலமுறைக்கு கொண்டு செல்வதுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் அடிப்படை நோக்கம். தமிழ் நாட்டில் மாலன், நராசாய்யா தஞ்சை தமிழ்பல்கலைகழக முனைவர் ராஜேந்திரன் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்து உதவுகிறார்கள். என்று சொல்லும் சுபாஷினி ஆங்கில கலப்பில்லாத, மலேசிய தமிழ் வாசனைகள் இல்லாமல் நல்ல தமிழில் சரளமாக் பேசுகிறார். இவருடைய தளத்தில் பேட்டிகள், பாடல்களையும் பதிவுகளையும் சேமிக்கிறார், அடுத்து ஒரு பதிப்பு வர வாய்ப்பு இல்லாத புத்தகங்களை மின் நூலாக மாற்றி சேமித்திருக்கிறார். ஆவணங்களை பாதுகாக்க இணைய ஊடகம் மிக சிறந்த வாய்ப்பு. -வளரும் தொழில்நுட்பத்தை முழுவீச்சில் பயன்படுத்தினால் பலபணிகளை செய்யலாம் என்கிறார். மலேசியாவில் வந்த முதல் தமிழ் பத்திரிகையின் பிரதி இப்போது அங்கில்லை. ஆனால் மலேசியா அன்றைய பிரிடிட்டிஷ் காலனியாக இருந்த காரணத்தினால் பதிவு செய்யபட்ட பத்திரிகைகளின் பிரதி ஒன்று பிரிட்டிஷ் அர்சாங்காத்திற்கு லண்டனுக்கு அனுப்ப பட வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்திருக்கிறது. அதன்மூலம் ஆராய்ந்ததில் அந்த முதல் பத்திரிகையின் முதல் இதழ் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கபட்டிருப்பது தெரிந்தது. இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்து அதை தமிழ் மரபு தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த பெண்.
ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோவிலை விட பழையது திருவிடை மருதூர் மஹாலிங்கேஸ்ரவர் கோவில். இந்த கோவிலுக்கு அருகில் ஒரு போர் நடந்து இருப்பது, அதன் பின்னர் கோவில் மூன்று கட்டமாக விரிவாக்க பட்டிருப்பதை எல்லாம் அங்குள்ள கல்வெட்டுகளில் கண்டு அதை படமெடுத்து டிஜிட்டலாக ஆவணபடுத்திதை சொல்லும் இவர் அந்த கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளில் அந்த கல்வெட்டுகள் சிதைக்கபட்டிருப்தையும் சன்னதிகள் இடமாற்றம் செய்யபட்டிருப்பதும் கண்டு வருந்துகிறார். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் 200 ஆண்டு பழமையான விஷயங்களை கூட பிரமாதமான விஷயமாக ஆவணப்படுத்தி பாதுகாத்து காட்சியாக்கி விளம்பரபடுத்துகிறார்கள். பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட நாமும் இது போல் செய்து உலகை கவர வேண்டும் என்கிறார்.
இந்த பயணத்தில் மதுரை மேலூர் ஆனைமலை அருகிலிருக்கும் குகைகோவில்களை ஆராய்ந்திருக்கிறார். உள்ளுர் பேஸ்புக் நண்பர்கள் உதவியிருக்கின்றனர். உங்கள் ஊரில் ஏதாவது தமிழ் மரபு தொடர்பான செய்திகள் இருந்தால் இவரை தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த இந்திய பயணத்தில் உங்கள் ஊருக்கே வருவார்.
ரமணன்
kalki 13/07/14 இதழ்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்