5/7/14

சர்வாதிகாரியின் சாபம்


நீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடு ஈராக். இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள செழிப்பான நிலப்பரப்பை கொண்டது. ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் இருந்த ஈராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால், 1958ல் நடந்த ராணுவ புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் ஈராக் அதிபராக பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக கூறி 2003ல் ஈராக்கை தனது ஆளுகையின் கீழ் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகள் படை கொண்டு வந்தது.  இந்த போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்க பட்டார். அப்போது, ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ஆம் ஆண்டு தேசத்துரோகத்திற்காக தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர்.  ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர்.. இப்படி ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். அப்போது தொடங்கிய கலவரம், 2011ல் அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறியதும் தீவிரமடைந்தது.
ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தி வந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டு போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த போரை நடத்துவது சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு இப்போது, ஷியாக்களுக்கு எதிராக நடத்தும் இந்த யுத்தத்துக்கு சிரியாவின் ஆசி உள்ளது. சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துவிட்டனர். பல நகரங்களை அடுத்தடுத்து பிடித்த தீவிரவாதிகள் இப்போது, தலைநகர் பாக்தாத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளனர். எங்கிருந்து இந்த தீவிர வாதிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வருகிறது ? விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்க உளவுத்துறை

 ISIS என்ற இந்த அமைப்பின் தலைவர்  அப் பக்கர் அல் பாக்தாதி. அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.
2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, "உங்களை நியூ யார்க்கில் சந்திக்கிறேன்!" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி ISISஐ     உருவாக்கியிருக்கிறார். .

2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் "தேடப்படும் பயங்கரவாதி" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் அறிவிக்கபட்டது..  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக நம்பபட்டது.


. தீவிர வாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் ஈராக் இரண்டாக உடையும் அபாயமிருக்கிறது. ஈராக்கின் இந்த நிலைக்கு ஒரு வகையில் காரணமான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இப்போது இந்த பிரச்னையில் தலையிட தயங்குகின்றன.. அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை காக்க 275 வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பபெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலை சந்தித்த ஒபமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்துவிருக்கிறார்.
ஆனால் தன்னை ”உலக போலீசாக” வர்ணித்துகொள்லும் அமெரிக்கா ஈராக்கின்  நிரந்தர பகையாளியான ஈரான் நாட்டின்மூலம் உதவி இன்னொரு போரை உருவக்கும் என்றும் சில ஐரோப்பிய பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
ஈராக்கில் தீவிர வாத தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது.,  நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. ஈராக்கின் உள்நாட்டு போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது, கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி உள்ள நமது பொருளாதாரத்தை  பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நம் பர்சை பாதிக்கும், உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர்.  அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம்.. ஏராளமான இந்தியர்கள்  ஈராக்கில் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிருவனங்களில் காண்ட்டிராக்டில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பரிக்கபட்டு  அகதிகளாக வெளியேற்ற படலாம்.


8 ஆண்டுகளுக்கு முன் சதாம் உசேன் தூக்கிலிடப்படும் முன் நடந்த வழக்கில் சதாம் சொன்னது என்னை அமெரிக்க ஆதரவுடன் நீங்கள் தூக்கில் கூட போடலாம். ஆனால் நான் இறந்தாலும்  என் ஆவி என் மக்களை வழி நடத்தும்.  நடக்கபோகும் போரில் நீங்கள் தோற்பீர்கள் என்றார்.

.... இப்போது போர் நடக்கிறது.


ஆதித்யா (ரமணன்)
கல்கி07/0714 இதழில் எழுதியது

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்