15/11/14

ஒரு உடைந்த சுவரும் இணைந்த தேசங்களும்


வரையறுக்கபட்ட எல்லைகளை  நிர்ணயக்க நிறுவப்பட்ட சுவர்கள் பாதுகாப்பின் அடையாளம். என்பதை சரித்திரம் நமக்கு சொல்லுகிறது. ஆனால்  உடைக்க பட்ட ஒரு சுவற்றின் வெள்ளி விழாவை ஜெர்மனி  இந்த ஆண்டு  அரசு விழாவாக கொண்டாடுகிறது
இரண்டாம் உலகபோர் முடிந்தபின் வெற்றிபெற்ற நாடுகள் ஜெர்மனியை பங்குபோட்டுபிரித்துகொண்டன. ஒரு பகுதி கம்னியூச சித்தாந்தத்தை நிலைநிறுத்திய ரஷ்யாவும் மற்றொன்று நேசநாடுகள் என்று தங்களை அழைத்துகொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் எடுத்துகொண்டன.  இந்தபகுதி மேற்குஜெர்மனி,என்றும் சோவியத்தின் கட்டுபாட்டிலிருந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்றும் அழைக்கபட்டுவந்தது. ஒரே நாட்டு மக்கள் பிரிக்கபட்டனர். என்பது மட்டுமில்லை, தலைநகரான பெர்லின் நகரத்தையும் பிரித்துகொண்டார்கள். பங்காளிகளின் சண்டையில் தேசமும், நகரமும் நான்கு துண்டுகளாகின. நேச நாடுகள் ஒவ்வொன்றும்  ஒவ்வொரு பகுதியை சொந்தம் கொண்டாடி தங்களது ராணுவத்தை செக்போஸ்ட்களில் நிறுத்தியிருந்தன.  கம்யூனிச கட்டுபாட்டில் இருந்த  ஜெர்மனியார்கள்,  சுதந்திர காற்றை சுவாசிக்க மறுபக்கத்துக்கு  நகர துவங்கினார்கள் ஒரே ஆண்டில் 35 லட்சம்பேர் கட்டுபாடுகளை மீறி தப்பித்துவிட்டார்கள்  ராணுவ கெடுபிடிகளினால் இவர்களை நிறுத்த முடியவிலை. அதன் விளைவாக   அரணாக ஒரு சுவரை எழுப்பியது சோவியத் ரஷ்யா.   பெரிலின் சுவர் என அறியபட்ட இதற்கு கிழக்கு ஜெர்மனி நிர்வாகம் இட்டிருந்த பெயர் பாசிசஸ்ட்களிடமிருந்து மக்களை காக்கும்  ”பாதுகாப்பு அரண்”. . மேற்குஜெர்மனி அரசு  அழைத்த பெயர் ”அவமானத்தின் சின்னம்”

1961ஆம் ஆண்டு ஒரு ஆகஸ்ட் மாத நள்ளிரவில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ரஷ்யா தங்கள் எல்லையாக அறவிக்கபட்டிருந்த பகுதியில் கம்பி முள் வேலிகளை அமைத்து, அடுத்த சில நாட்களிலேயே வலுவான கான்கீர்ட் சுவற்றை எழுப்பினார்கள். இந்த சுவர் ரஷ்ய எல்லைக்கோடு முழுவதிலும் எழுப்பட்டது.  நாட்டின் எல்லையின் ஒருமுனையில்  துவங்கிய சுவர்  பெர்லின் நகரின் நடுவே, வீதிகள்  வீடுகள், பள்ளிகள்  அலுவலகங்கள்  எல்லாவற்றையும் மட்டும் வெட்டிப் பிரிக்கவில்லை  உறவுகளையும் நட்புகளையும் குடும்பங்களையும் பிரித்தது.  நகரின் மறுபகுதியில் வசித்த பெற்றோர், ஒரே இரவில் மகனுக்கு  எட்டிகூட பார்க்கமுடியாத அன்னிய நாட்டினராகி போயினர்..  பெர்லின் நகரின்  அழகான தூண்களுடன் நிற்கும் பிரம்மாண்டமான வாயில் பிராண்டன்பர்க் கேட். அதன் முன்னும் சுவர் எழுந்தது. 

 நாட்டின் எல்லைகோட்டில் 156 கீமிக்கு 13 அடி உயரத்தில் எழுப்பபட்ட அந்த சுவர், பெர்லின் நகரின் வழியே மட்டும் 27 கீமிக்கு சென்றது. அதன் அருகில் நூறு மீட்டர் இடைவெளியில். மற்றுமோர் சுவர். இடைவெளியில் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் தப்ப முயற்சித்தவர்கள் சுடபட்டார்கள்.. பலர் இப்படி இறந்துவிழுந்ததால் அந்த சுவரின் இடைவெளிப்பகுதி   ”மரணபடுகுழி” என அழைக்கபட்டது. இரவுபகலாக காவல். இரவெல்லாம் சுழலும் பெரிய ஒளிவிளக்கு. ஆனாலும் நம்பிக்கையை கைவிடாது சுரங்க வழி, சிறிய விமானம், பலூன்கள் போன்றவைகளில் தப்பிக்க முயன்று தோற்றவர்களின் சோக்கதைகள் ஏராளம்.
 குடும்பத்தினருடன் இணைய, நல்ல வேலைதேடி சுதந்திரமாக வாழ என  இந்த சுவர் எழுப்பும் போது தப்பிக்க முயன்றவர்கள 5000பேர்.  இறந்தவர்கள் 200க்கும் மேல். பலர் சரணடைந்து கைதியாக வாழ்ந்தார்கள்.  இந்த அவலம் 28 ஆண்டுகள். தொடர்ந்தது, சுவரின் மறுபக்கம்  நமக்கு மறுக்கபட்ட சொர்க்கம் என கிழக்கு பகுதி மக்கள் ஏங்கிகொண்டும், நம்முடைய நாட்டை அநியாமாக பிரித்துவிட்டார்கள் அரக்கர்கள் என மேற்குபகுதி மக்கள் பொருமிக்கொண்டுமிருந்தார்கள். 
1980களின் இறுதியில்  சோவியத் யூனியனில் எழுந்த சுதந்திர சூறவளி,, அன்றைய அமெரிக்க பிரதமர் ரீகனின் வெளிப்படையான மேற்கு ஜெர்மனியின் நிலைக்கு ஆதரவு,  உச்சகட்டத்தை அடைந்திருந்த மக்களின் கோபம் எல்லாம் சேர்ந்து கனிந்து கொண்டிருந்தது. , புரட்சி வெடித்துவிடுமோ என்ற நிலையில் கிழக்கு ஜெர்மனி நிர்வாகம்  எல்லைகளை கடக்க மக்களுக்கு தடையில்லை என 1989 நவம்பர் 9ம் தேதி அறிவித்தது.  அறிவிப்பை ரேடியோவில் கேட்ட  அந்த சந்தோஷமான கணத்தில்  மக்கள் செய்ய ஆரம்பித்த காரியம்  அவமான சின்னமான அந்த சுவரை இடித்தது தான். பெரிய இயந்திரங்களை வைத்து அரசாங்க அலுவலர்கள் செய்ய வேண்டிய பணியை அதற்காக காத்திராமல். வீட்டிலிருந்து சுத்தியல் கடப்பாரை எல்லாம்  கொண்டுவந்து இடிக்க ஆரமபித்துவிட்டார்கள். ஆளுக்கு ஒரு சின்ன பகுதியை வீட்டிற்கு கொண்டுபோய்விட்டார்கள்.  இன்றும் பல ஜெர்மானியர்களின் வீட்டில் ”இது பெர்லின் சுவற்றில் நான் உடைத்ததாக்கும்” என  காட்ட ஷோகேஸ்களில் வைத்திருக்கிறார்கள்.
 .
 அந்த நாளைத்தான் 25 ஆண்டுகள் கழித்து  வெள்ளிவிழாவாக கொண்டாடுகிறார்கள்.  மக்கள் உடைத்ததுபோக  பெர்லின் நகரில் ஒருபகுதியில் இருந்த சுவரையும் ஒரு கண்காணிப்பு கோபுரத்தையும் நினைவுச்சின்னமாக அறிவித்து பாதுகாக்கிறார்கள்.  அங்கு நாட்டின் அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்கலும் அவரது அமைச்சர்களும் வெள்ளை ரோஜா மலர் அஞ்சலி செலுத்தினார்கள். நகரின் பெருமையான பிராண்டன்பர்க் கேட் என்ற நுழைவாயிலின் முன்னே  ஒளிவெள்ளத்தில்  ஆராவார விழா..  ஆயிரகணக்கான மக்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த சுவரினால் ஒரு கண்ணீர்கதை இருக்கும்.  நகர் முழுவதும் இடிக்கபட்ட சுவரின் பகுதிகளில்  நிறுத்தபட்டிருந்த ஸ்டீல் குழாயிலிருந்து ஒளியூட்டபட்ட வெள்ளை ஹீலியம் பலூன்கள் ஒவ்வொன்றாக மக்களின் கரகோஷத்துடன் வானில் பறக்க விடப்பட்டது. விழாவில் முன்னாள் ரஷ்ய அதிபர் கோர்ப்சேவ் பங்க்கேற்றார்.
நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல்  பேசும்போது சொன்னது.” இந்த இடிந்த சுவர் சொல்லும் உண்மை - மனிதர்களின் கனவுகள் ஒரு நாள் பலிக்கும்” இவர் தன் இளமைகாலத்தை கிழக்கு ஜெர்மனியில் கழித்தவர்,
அதிகாரத்தை காட்ட அரசினால் எழுப்பட்ட  சுவர் ஒன்று, மக்களிடம். எழுந்த சுதந்திர தாகத்தால் மக்களாலேயே இடிக்கபட்டது
இன்று வலிமையான பெர்லின்  சுவர் இல்லை. ஆனால் அதைவிட மிக வலிமையான ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவாகியிருக்கிறது. 
23/11/14 கல்கியிலிருந்து 
  



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்