29/12/14

அறியாத அழகிய முகங்கள்
கேரள மாநிலத்தின் மலை மாவட்டமான இடுக்கியின் காட்டுப்பகுதியில் இருக்கிறது எடுமலைக்குடி. முதுவர்கள் என்ற பழங்குடியினரின் 25 குடும்பங்கள் மட்டும்  வசிக்கும் ஒரு சின்னஞ்சிறு கிராமம்.  இங்கே போக மூணாறிலிருந்து 18 கீமீ நடக்க வேண்டும். வேறு வசதிகள் கிடையாது.
ஒரு குடிசையின் வாசலில்  ”அக்‌ஷரா ஆர்ட்ஸ் அண்ட் போர்ட்ஸ், லைப்ரரி  எடுமலைக்குடி “ என்று பேப்பரில் எழுதி பின்செய்யப்பட்ட  வெள்ளைப்பேப்பர்.  அந்த குடிசையில்  வசிப்பவர் பி.வி. சின்னதம்பி வயது 73.  அந்தகுக்கிராமத்தில் இருக்கும் ஒரே சாலையில் டீக்கடை வைத்திருகிறார்.  அதோடு அவர் செய்து கொண்டிருக்கும் மற்றொரு வேலையை  நம்மை ஆச்சரியப்பட  வைக்கிறது. அவர் ஒரு நூலகம் நடத்துகிறார்.  அது மட்டுமில்லை, கிராமத்தின் விளையாட்டுகளை நடத்தும் கிளப்பையும் நிறுவி நிர்வகிக்கிறார்.
 நீண்ட ட்ரெக்கிங்க்கு பின் அந்த  கடைக்குப் போன நாம் . லைப்ரரி எங்கே எனக் கேட்டால் குடிசையின் உள்ளே அழைத்துச் சென்று அரிசி கொண்டுவரப்படும் இரண்டு கோணிப்பைகளை எடுத்துவந்து அதிலிருக்கும் புத்தகங்களை அந்த சாக்குகளை விரித்து அதன்மேலேயே பரப்புகிறார். தினசரி நூலகம் இயங்கும் நேரத்தில் இப்படி தான் வைப்பாராம் மொத்தம் 160 புத்தகங்கள்,   வைக்கம் மகமூது பஷீர், எம். டி வாசுதேநாயர், கமலாதாஸ், தோப்பில் காந்தியின் வாழ்க்கை, என்ற அந்தப் புத்தகங்களின் தலைப்பு  நம்மை அசர வைக்கிறது.
.நூலகத்திற்கு ஒருமுறை கட்டணம் 25 ரூபாய். மாத சந்தா 2ரூபாய். எவ்வளவு நாள் வேண்டுமானலும் படிக்கலாம்.  அங்கத்தினர்களுக்கு பால் இல்லாத டீ இலவசம்.  யார் இதை பயன் படுத்துகிறார்கள்? பொருளாதார நிர்பத்தங்களினால் பள்ளிப்படிப்பைக் கூட படிக்க முடியாத எல்லா பழங்குடி மக்களைப் போல தானே இவர்களும் என்ற எண்ணத்தில் எழுந்த நம் கேள்விக்கு பதிலாக அவரது நூலக நோட்டைக் காட்டுகிறார் சின்ன தம்பி.  நூலகத்தின் புத்தகங்கள் வழங்கபட்டிருக்கும்  தேதி, உருப்பினர் பெயர் புத்தக தலைப்பு என தெளிவாக எழுதப்பட்டிருக்கும் அது கடந்த ஆண்டு  37 புத்தகங்கள் வழங்கப்படிருப்பதைச் சொல்லுகிறது.  மொத்த புத்தகங்களில் 25% புத்தகங்கள் வழங்கபட்டிருக்கிறது. இது நகரங்களிலுள்ள பெரிய நூலகங்களில் கூடஇத்தனை% வழங்கப்படுவதில்லை..  அந்த 25 குடும்பத்திலிருப்பவர்கள் தான் படித்திருக்கிறார்கள். அந்த நோட்டில் நம்மை சந்தோஷப்படுத்தும் மற்றொரு ஆச்சரியம் மலையாளத்தில் மொழிபெயர்க்க பட்ட சிலப்பதிகாரம் இரண்டு முறை வழங்கபட்டிருக்கிறது. தமிழின் பெருமைமிக்க காவியம் இந்த  மலைக்கிராமத்தில் படிக்கப் பட்டிருக்கிறது.
உடன் வந்த நண்பர்கள் புத்தகங்களை அலசிகொண்டிருந்ததில் பார்த்தது  கையெழுத்து பக்கங்களூடன்   ஒரு பைண்ட் செய்யபட்ட நோட் புத்தகம். அது சின்ன தம்பியின் சுய சரிதை.“ எழுதிக்கொண்டிருக்கிறேன் இன்னும் முடிக்க வில்லை முடித்தபின் உருப்பினர்களுக்கு வழங்குவேன்” என்று அமைதியாக சொல்லுகிறார்.
 இந்த செய்தியைக்கட்டுரையை படங்களுடன்  www.ruralindiaonline.org.  என்ற தளத்தில் பதிவு செய்திருப்பவர்  பத்திரிகையாளர் திரு சாய் நாத்.
'83.3 கோடி மக்களும், 780 வழக்கு மொழிகளும், பல்வகைக் கலாசாரங்களும், பல்வேறு தரப்பட்ட தொழில்களும் நிறைந்த  நம் நாட்டில்  கிராமங்களில் இது போல செய்திக்கதைகள் கொட்டி கிடக்கின்றன, அந்த  முகங்களை மீடியாக்கள்  நல்ல முறையில் காட்டவில்லை. அவைகளைப் பதிவு செய்ய வில்லை என்று சொல்லும் இவர்  இந்து நாளிதழின் கிராம புற செய்திகளை வெளியிடும் இணைப்புக்கு ஆசிரியாராக இருந்தவர்.  இவர்  எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் ஏழைகளையும் விவசாயிகளையும் கிராமப்புறப் பெண்களையும் மையப்படுத்தியே அமைந்திருந்தன. இந்தியாவின் இருள் படர்ந்த பகுதிகளில் களஆய்வு நடத்தி பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்களுடன் உரையாடி அவர்களுடைய வாழ்வையும் போராட்டத்தையும் நேரடியாகப் பதிவு செய்தவர் சாய்நாத். Everyone Loves a Good Drought என்ற இவரது புத்தகம் 43 பதிப்பு களைக் கண்ட புகழ்பெற்ற புத்தகம். 2007ல் மகசஸே(Magasaysay) விருது பெற்ற இந்த மூத்த பத்திரிகையாளர் இப்போது இந்திய கிராமங்களின் பல் வேறு முகங்களை, கலாசாரங்களை, மொழிகளை, இசைகளை, மக்கள்முகங்கங்களை டிஜிட்டலாக ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு இனைய தளத்தை துவக்கியிருக்கிறார்.  பாரி (PEOPLE ARCHIVE OF RURAL INDIA)PARI என்ற இந்த தளம் வெறும் செய்தி தளமாக இல்லாமல் இந்தியாவின் கிராமங்களைப்பற்றிய ஒரு ஆவண தொகுப்பாக இருக்க திட்டமிட்டு ஒராண்டு உழைப்புக்கு பின்னர்  அறிமுகபடுத்தியிருக்கிறார்,ஆடியோ, வீடியோ, போட்டோக்கள் கட்டுரைகள் மூலம் ஏழை கிராம மக்களின் அன்றாட வாழக்கை முறைகளை பதிவு செய்து ஆவணப்படுத்த லாபநோக்கற்ற நோக்கத்துடன்  துவக்க பட்டிருக்கும்  இந்த  ”கிராம வீக்கிபீடியாவிற்கு”   படைப்புகளை யார் வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். தகுந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்படும்.  பலர் செல்போனில் எடுத்த படத்தை கூட அனுப்பியிருக்கிறார்கள். . இந்தியாவின் பெரும்பகுதி கிராமப்புறமாக இருந்தபோதும் நாம் வாசிக்கும் செய்தித்தாள்களும் பத்திரிகைகளும்  அவைகளின் செய்திகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பதால் இந்த முயற்சி என்கிறார் சாய்நாத்.
 முகங்கள், நாங்கள் செய்வது, நாங்கள் தயாரிப்பது  பிரச்ச்னைகள் என பல பகுதிகளை தளத்தின் முகப்பிலேயே படமாக அறிமுகபடுத்தியிருக்கிறார்கள். அதை கிளிக்கினால் அந்த பகுதிக்கு நம்மை அழைத்துசெல்லும்படி தளம் நேர்த்தியாக அமைக்க பட்டிருக்கிறது. சூனாமியின் சீரழிவால் பெற்றோரை இழந்த மீனவகிராமச் சிறுவன் ஒருவன்  கலா ஷேத்திராவில் நடனம் பயின்று கலைஞரனது போன்ற  பல தகவல்களின்  சுரங்கங்களாக இருக்கின்றன.
 ஒரு வீடியோப்படத்தில்  ஒரு மலைக் கிராமப் பள்ளியில் குழந்தைகள் ”ஐ லவ் பொட்டட்டோ- யூ லவ் பொட்டட்டோ” என்ற ஆங்கில பாடலை சேர்திசையாக பாடுகிறார்கள் 1 முதல் 4 வகுப்புக்கள் இருக்கும் அந்த பள்ளிக்கு ஒரே ஒரு டிச்சர்தான்.  சுற்றுவட்டாரத்தில் எங்கும்  விளம்பர போர்ட்கள் அறிவிப்புகள் எதிலும் ஆங்கிலம் இல்லை. குழந்தைகளைக்  கேட்டால் அவர்கள் விருப்ப பாடம் ஆங்கிலம் என்கிறார்கள். அந்த நல்ல டீச்சர் சொல்லிகொடுத்த ஆங்கில பாட்டு. இந்த பொட்டட்டோ பாட்டு. அந்த பகுதியில் உருளை கிழங்கு விளைவது இல்லை  என்கிறதகவலைச்சொல்லுகிறது இந்த வீடியோவில் வரும் வார்த்தைகள். இப்படி ஓவ்வொரு பகுதியிலும் சுவையான தகவல்கள்  

 ஒரே வலைத்தளத்தில்  இந்திய கிராமங்களின்  அனைத்து முகங்களையும்  ஒன்றுதிரட்டி ஆவணப்படுத்த  பாரியின் மூலம் முயற்சிக்கிறார் சாய் நாத்.   நீங்கள் உங்கள் கிராமப்புற செய்திகளையும் படங்களையும் அனுப்பலாமே.
கல்கி 3/1/15


4/12/14

திருப்பதியில் மொட்டை போட்டுக்கொண்டால் – தேசத்துக்கு டாலரில் வருமானம்

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்றவாறு தலைமுடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ஒருநாளைக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், வார விடுமுறை மற்றும் முக்கிய உற்சவங்களின்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை செலுத்தி வருகின்றனர். இப்படி கழிக்க பட்ட முடிகளை என்ன செய்கிறார்கள்?  சில ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் காண்டிராக்டர்கள் மூலம்  அப்புறப்டுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏற்றுமதியாளர்களுக்கு அதை நல்ல விலையில் விற்கிறார்கள்  என்பதை அறிந்தபின்னர்  திருப்பதி தேவஸ்தானமே  அதை ஏலத்தில் ஏற்றுமதியாளர்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏலம் இ ஆக்‌ஷன் என்று சொல்லப்படும் ஆன் லயன் முறையில் நடக்கிறது. கடந்த ஆண்டு இம்மாதிரி ஏலத்தில் கிடைத்த பணம், 200கோடி..2011ல் இப்படி ஏலமுறை துவங்கியதிலிருந்து இதுவரை விற்கபட்டிருப்பது 1178 டன் முடி, கிடைத்த பணம்  618 கோடிகள்,

ஏலத்தை நடத்துவது திருப்பதி தேவஸ்தானமும், மெட்டிரியல் ஸ்கிராப் டிரெடிங்கார்ப்ரேஷன் என்ற அரசு நிறுவனமும். விலை சர்வ தேச மார்க்கெட் நிலவரத்தின் படி முடிவு செய்கிறார்கள், விற்பனைக்கு தயாராக இருக்கும் முடிகளின் நீளம் கனம் போன்றவிபரங்கள் அதற்கான வெப்சைட்டீல் படங்களுடன் விவரிக்க படுகிறது. நேரில் வந்து தொட்டுபார்த்து வாங்க விரும்புஅவர்களுக்கு சாம்பிளும் காட்ட படுகிறது.
திருப்பதியில்  600 முடிதிருத்தும் பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெண் பக்கதர்களின் வசதிக்காக 50 பெண்பணியாளர்கள். காணிக்கை செலுத்துமிடத்திலிருந்து  சேகரிக்க பட்ட முடிகள், அவற்றின் நீளத்திற்கேற்ப   9 வகைகளாக தரம் பிரிக்கபட்டுகிறது. காயவைக்கப்பட்ட பின் அவைகள் ரசயானங்களின் மூலம் சுத்த படுத்த பட்டு நீண்ட நாள் நிலைக்க பதப்படுத்தபட்டு,  முடிகளின் நீளங்கள் தரங்களுக்கேற்ப ஒரே அளவாக்க படுகிறது.. இவைகள் ஒரு குறிபிட்ட அளவு சேரும் வரை எர்கண்டிஷன் கோடவுண்களில் விசேஷமாக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகளில் வைத்து பாதுகாக்க படுகிறது.

 நல்ல கருப்புகலரிலிருக்கும்  31 அங்குல நீளத்திற்கு மேலிருக்கும் முடிகள்தான் முதல் தரம். அதற்கு சர்வ தேசமார்க்கெட்டில் பெயர் கறுப்பு தங்கம். விலை. கிலோ  ரூபாய் 25000க்கும் மேல். அதைதொடர்ந்து மற்ற ரகங்கள்.  கிலோ ரூபாய் 5000த்திலிருந்து 18000 வரை.   வெள்ளை முடிக்கும்  நல்ல விலை. சிறுசிறு துண்டுகளாகி தூளாகிப் போனதைக் கூட வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கும் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஆண்டுக்கு மூன்றுதரம் ஏலம் விடப்படுகிறது. குறிப்பிட்ட விலைக்கு போகவில்லை என்றால் அடுத்த ஏலத்துக்காக காத்திருக்கிறார்கள்.
வெளிநாட்டில் வாங்கி என்ன செய்கிறார்கள்.?
இந்த தலைமுடிகள் அனைத்தையும் பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பேஷன் டெக்னாலாஜி மற்றும் மருந்து நிறுவனங்கள்  ஆண்டுதோறும் அதிகளவில் வாங்குகின்
றன. ஐரோப்பாவிலும், சில ஆசிய நாடுகளிலும் பேஷன் டிசைனகர்களுக்காக இங்கிருப்போர் வாங்குகிறார்கள். நல்ல தரமான விக் கள் தயாரிக்க மட்டுமில்லாமல், ஜரிகைகள் போல ஆடைவடிவமைப்பில், செருப்பு, கைப்பைகள், கோட்டுக்களில் இதை பயன் படுத்துகிறார்கள்.  சில ஹாலிவுட் நடிகைகள் இந்திய முடிகளில் தயாரிக்க பட்ட விக் களைமட்டுமே அணிவார்கள். மத்தியதர நீளத்தில் இருக்கும் முடிகளை  சீனாவாங்குகிறது. அவர்கள் வண்ணம் தோய்த்து விக் காளாக்கி அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளில் விற்கிறார்கள். சிறிய முடிகளில் பிரஷ்கள் செய்து விற்கிறார்கள். அவர்கள் நாட்டில் இப்படி ஒரே இடத்திலிருந்து பெருமளவு கிடைக்காததும் ஒரு காரணம். இந்த ஆண்டு 200கோடிகள் வியாபாரம் ஆகும் என எதிர்பார்த்து துவங்கிய ஏலத்தில் 64 கோடிகள் மட்டுமே வியாபாரம் ஆயிற்று. காரணம் ஐரோப்பாவில் ஹேர்ஸ்டைல் பேஷன் மாறியிருக்கிறதாம்.  ஐரோப்பிய பேஷன் மார்கெட்டின்   தேவை திருப்பதியிலிருக்கும்  முடிகளின் விலையையும் விற்பனையையும்  தீர்மானிக்கிறது. ”இது ஒன்றும் புதிதில்லை. அடுத்த சீசனில் சரியாகும்” எனகிறார். கோவிலின் நிர்வாக அதிகாரி திரு எம் ஜி கோபாலன்.
அடுத்த முறை திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் போது உங்கள் பிராத்தனை நிறைவேறுவதுடன்  தேசத்துக்கு அன்னிய செலவாணியும் சேருகிறது என்பதையும் நினைத்து சந்தோஷப்படுங்கள்