இந்தியாவின் முதல் ஆறுவழி,அதிவேகப்பாதையான மும்பை- புனே எக்ஸ்பிரஸ்
ஹைவேயில் 100கீமி வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் நம் கார் சட்டென்று ஒரு திருப்பத்தில் திரும்பியவுடன் வேகம் குறைகிறது. சரியாகப் பராமரிக்கப்படாத
புழுதிபறக்கும் சாலையில் பயணம் தொடர்கிறது. சாலையின் இருபுறமும், அரைபட்டுசக்கையாகப்போகும் தங்கள் வாழ்வின் அந்தக் கடைசி நொடிக்காகக்
காத்திருக்கும் கரும்பு கட்டுகளுடன் டிராக்டர் டிரையலர்களின் நீண்ட வரிசை..
தொலைவில் புகை கக்கும் சக்கரைஆலைகள்.
மகராஷ்டிர மாநில அரசியலின் அதிரடிகளில் முக்கியப்
பங்குவகிக்கும் ”ஷூகர் லாபி”யின் கிராமங்கள் வழியே பண்டரிபுரத்திலிருக்கும்
பாண்டுரங்க விட்டல் நாதனை தரிசிக்கப் போய்க்கொண்டிருக்கிறோம், மகராஷ்டிர மாநிலத்தின்
ஷோலாப்பூர் மாவட்டத்திலிருக்கும் இந்தச் சின்ன கிராமான ”பண்டர்பூரில்
இருக்கும் இருக்கும் பாண்டுரங்கன் பரப்ரஹ்ம ஸ்வருபம் அவனைப்பாடுங்கள்” எனச்
சொல்லியிருப்பவர்,ஆதிசங்கரர். அதனால் இந்த 13ஆம் நூற்றாண்டு கோவிலில் நாள் முழுவதும் ஜெய் ஜெய் விட்டல, ராமகிருஷ்ண ஹரி என்ற நாமசங்கீர்த்தனம் ஒலித்துக்கொண்டே யிருக்கிறது.
அந்தச் சின்ன நகரின் நடுவே இருக்கும் அந்தச் சின்னக் கோவிலுக்குள் நுழையும்முன்,
‘வாழ்நாளில் ஒருமுறையாவது கங்கையைவிடப் பழமையான சந்திரப்பாக நதியில்
நிராடி ஸ்ரீவிட்டலை தரிசனமும், நாமசங்கீர்த்தனமும் செய்தால்
நம் பிறவிப்பயன் கிடைக்கிறது’ என்று பக்த துக்காராம்
பாடியிருக்கும் சந்திரப்பாக நதியைத் தேடிப்போகிறோம். கிட்டத்தட்ட ஒரு கீமி
அகலமுள்ள அந்த நதி வறண்டு பாலைவனமாகப் பரந்து கிடக்கிறது. ஆற்றின்
நடுப்பகுதியையுன் தாண்டி எங்கோ ஒரு கீற்றாக ஒட்டிக்கொண்டிருக்கும் வாய்க்கலில்
இருக்கும் நீரை கவனமாக எடுத்துத் தலையில் தெளித்துகொள்ளுகிறோம்.
அருகில் வினோதாமாக நீண்ட கோணிப்பையை உடையாக, அணிந்த ஒரு குழுவினர்
கை கால்களை நனைத்துக்கொண்டு உரத்தகுரலில் பிராத்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஹிந்தியோ மராட்டியோ இல்லாத அவர்களின் மொழி புரியவில்லை. அவர்கள் அருகிலிருக்கும்
மலைக்காட்டில் வசிக்கும் ஆதிவாசிகள் என்றும் தங்களிருப்பிடத்திலிருந்து நடந்தே
விட்டலைன காண வந்திருக்கிறார்கள், குளிர் காலமாக இருப்பதால்
அந்த கோணிசாக்கு உடை என அறிகிறோம். நதியின் அகன்ற படிகள் பருவ காலங்களில் அதை அலையலயாகத்
தொட்டுச்செல்லும் அழகிய நதியை கற்பனை செய்யத்தூண்டுகிறது. அலங்கரிக்கப்பட்ட பாண்டுரங்கன்
உருவத்துடன் படம் எடுத்துக்கொள்ள அழைக்கும் சிறுவர்களைக் கடந்து மேலே ஏறிப் போகிறோம்.
கோவிலின் முகப்பு ஒரு சிறிய மண்டபம் போலத்தான் இருக்கிறது.
ஒரு பழைய கோவிலின் கம்பீரத்தை அது காட்டவில்லை. நாமத்தேவர் துவாரம் என்ற வாயிலின்
உள்ளே நுழைந்தால் பண்டரிநாதனின் முகத்தைமட்டுமே தொலைவிலிருந்து பார்க்கலாம், அருகில் சென்று
தொட்டுத்தரிசிக்க வேண்டுமென்றால் பக்கத்திலிருக்கும் கட்டிடத்திற்குள் போங்கள்
என்றார்கள். கோவில் இங்கிருக்கும்போது தரிசனம் மட்டும் எப்படி அங்கே? எனப்புரியாமல் அதனுள் நுழைகிறோம். படிக்கட்டுக்கள் இல்லாமல் சாய்தளமாகவே
அமைக்கப் பட்டிருக்கும் 4 மாடிகட்டிடம் ஒரு க்யூ காம்ளெக்ஸ்
எனப் புரிய சற்றுநேரமாகிறது. அதில் நடந்து கட்டிடத்தின் மேல் தளத்திற்கு வந்த பின்
ஒரு பாலத்தைக் கடந்து கோவிலின் மேல் தளத்தை அடைகிறோம் அங்குக் கோவிலை அதன்
மேல்மாடங்களின் வழியே ஒரு பிரதட்சணம் செய்து பின் சன்னதிகளின் முன்வாசலை
அடைகிறோம். ஒரு நீண்ட க்யூ வரிசையில் நிற்கும் ஆயாசத்தைக்கொடுக்காமல்,
அதே நேரத்தில் இடப்பிரச்சினையையும் தவிர்த்துச் சமோயாசிதமாக இப்படி ஒரு
மாடிகட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள். பக்தர்களில் மஹாராஷ்டிராவின் பல
பகுதிகளிலிருந்து வந்திருக்கும் எளிமையான மக்கள்தான் அதிகம். சந்த ஞானேஸ்வர் முதல்
துக்காரம் வரை பல மஹான்கள் பண்டரிநாதன் குறித்துப் பாடியவைகள் அபங்கங்கள் என்ற
பஜனைப் பாடல்களில் எதையாவது பாடிக்கொண்டே வருகிறார்கள். சன்னதியை நெருங்க நெருங்க
சங்கீர்த்தனத்தின் டெஸிபல் அதிகரிக்கிறது.
கோவிலின் உள்ளே செல்ல செல்ல அழகான சிற்பங்கள் நிறைந்த
கருங்கல் தூண்கள். ஒவ்வொரு சிற்பமும் பேசுகிறது. சன்னதிக்கு அருகில் இருக்கும் ஒரு
தூண் முழுவதும் வெள்ளிக்கவசம்,
நேற்றுதான் சாத்தியதுபோல் பளபளக்கிறது, நாம்தேவர்
மனமுருகி பாடி ஆடியபோது பண்டரிநாதனே அவருடன்நடனமாடிய இடம்எனஅதைப்போற்றி அந்தக்
காட்சியை அதில் வடித்திருக்கிறார்கள் சாட்சி தூண் என அழைக்கப்படும் அந்தத் தூணை
ஆலிங்கனம் செய்து நமது பிராத்தனைகளைக் கண்ணனிடம் சொல்லாம். அந்த இடத்திற்கு
வந்தவுடன் சில பக்தர்கள் நடனமாடுகிறார்கள் அருகிலியே மற்றொரு தூணில் சிறிய ஆனால்
கம்பீரமான ராமதாஸர் ஸ்தாபித்த ஆஞ்னேயர்.. மெல்ல கடந்து வரிசையோடு நகர்கிறோம்.
சன்னதிக்குள் நுழையும் முன் பெரிய கண்ணாடிப் பேழையில்
பிரித்துவைக்கப்பட்டிருக்கும் அச்சுபோன்ற அழகான கையெழுத்தில் சமஸ்கிருத்தில்
எழுதப்பட்டிருக்கும் மஹாபாரதம் புத்தகம்.. வரவேற்கும் வெள்ளிக்கதவுகளைத் தாண்டி
சன்னதிக்குள் நுழைகிறோம். துளசியும் சந்தனமும் மணக்கிறது, சுமார்
4 அடி உயரத்தில் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு
நிற்கும் விட்டலன் மிக அருகில் நிற்கும் நம்மை . ”என்ன
வந்தாச்சா? எப்படி இருக்கிறாய்?” எனக்
கேட்பதுபோலப் பிரமை.. அவ்வளவு நெருக்கத்தில் தெய்வத்தின் திருப்பாதங்களைக் கைகளால்
தொட்டு நம் தலையை வைத்து வணங்குகிறோம்.பல ஆயிரம் ஆண்டுகள் பூஜிக்கப்பட்ட பல
கோடிபக்தர்கள் தொட்ட பாதங்களில் நம் கைகளை வைத்தபோது பரவசத்தில் உடல் சிலிர்த்துப்
போனது நிஜம்.
அதிக நேரம் அனுமதிக்காவிட்டாலும், யாரும் பிடித்துத்
தள்ளவில்லை விரட்டவில்லை. விரைவாக நகருங்கள் என்று கண்ணியமாகச் சொல்லுகிறார்கள்.
அர்ச்னை, பிசாதம் எதுவும் கிடையாது. அர்ச்சகருக்குப் பணம்
கொடுத்தால் சுவாமியின் பாதத்தில் வைக்கச் சொல்லுகிறார்கள். மனநிறைவோடு அடுத்துத்
தனியாக இருக்கும் சன்னதிக்குள் நுழைகிறோம், உடல் முழுவதும்
நகைகளுடன் கம்பீரமாக அரசகுமாரியின் களையில் ருக்மணி. கோவில் வளாகத்தில்
வெங்கடசலபதியும் சிவனுமிருக்கிறார்கள்.
இந்தச் சின்னக் கோவிலுக்கு ஆறு வாசல்கள். எல்லாம் விழாக்
காலங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இரண்டில் மட்டுமே அனுமதி.
கோவிலைச் சுற்றியிருக்கும் வீதிகளில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. பூஜைப்பொருட்கள்
விற்கும் கடைக்கார்களே வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுவைக்கிறார்கள்.
லோகத்தண்டம் என்ற காட்டில் வாழ்ந்தவர் சன்னு முனிவர், அவர்மனைவி சாந்தகி.
புதல்வன் புண்டரீகன். ரிஷியின் மகனாக இருந்தும் கொடியவனாகிவிட்ட மகனுக்காக வருந்தி
காசி செல்லுகிறார்கள் அந்தத் தம்பதியினர். பயணத்திலும் உடன் வந்து தொந்தரவுகள்
செய்யும் புண்டரீகன் வழியில் ஒரிடத்தில் வயதான பெற்றோர்களுக்குத் தவறாமல் பணிவிடை
செய்யும் மற்றொரு முனிவரை சந்திக்கநேர்கிறது. அவரது போதனையால் மனம் திருந்தி
அவரிடம் பாவ மன்னிப்பு பெற்று இந்த இடத்தில்தங்கி தன் பெற்றோர்களுக்கு
மிகச்சிறப்பாகப் பணிவிடைகள் செய்துவருகிறான். மனம் திருந்திய ஒருவன்
தன்பெற்றோர்களுக்குச் சிரத்தையுடன் பணிசெய்வதுதான் உண்மையான பக்தி என்பதை உணர்த்த
கிருஷ்ணர் புண்டரீகனுக்கு காட்சி தர அங்கு வருகிறார். அந்த நேரத்தில் நதியில்
புண்ட்ரீகர். தன் பெற்றோரை கைகளில்தூக்கி
சுமந்து சென்று ஸ்நானம் செய்விப்பதையும் தொடர்ந்து அவன்
அவர்களுக்குச் சிரத்தையுடன் பணிவிடைகள் செய்வதையும் பார்க்கிறார். அழைத்த
கண்ணனிடம் அவர் யாரென்று அறியாமல்”நான் பெற்றோரின் சேவையில் இருக்கிறேன். யாராக இருந்தாலும் அங்கேயே
நில்லுங்கள்” எனச் சொல்லி வந்தவர் வெயிலினால்
சூடேறியிருக்கும் தரையில் நிற்க வேண்டியிருக்குமே என்பதால் ஒருசெங்கலை வீசி
எறிந்து இதன் மீது நில்லுங்கள் என்கிறார். பகவானும் அதன் மீது நின்று
காத்திருக்கிறார்.
”ஆண்டுக்கு இங்கு அதற்கு வருபவர்களின் எண்ணிக்கை 10
லட்சம் . பல ஆயிரம் ஆண்டுகளாக எங்கள் முதாதையர்கள் பூஜித்த கோவில் இது.
என்கிறார்.பரம்பரைதலமை அர்ச்சகர் பாலகிருஷ்ன படவே. விழா நாட்களில் கண்ணனின்
உருவத்தைத் தலையில் தாங்கி நடனம் ஆடும் உரிமை பெற்றவர். நாட்டின் பல பகுதிகளில்
இருக்கும் பாண்டுரங்கன் கோவில் விழாக்களுக்கு அழைக்கப்படும் கெளரவத்தைப்
பெற்றிருக்கும் இவர் தற்போது அரசு அர்ச்சகர்களை நியமிக்கும் முறை அறிமுகமானதற்காக
வருந்துகிறார்.
மும்பை திரும்பும் முன் மீண்டும் ஒரு முறை கண்ணனை
தரிசிக்கச் செல்லுகிறோம்.. இம்முறை மெல்ல அசையும் மயிற்பீலி கீரீடத்துடன்
ராஜதரிசனம். கண்ணில் நிற்கும் அந்தக் காட்சியுடன்,காதில் ஜெய் விட்டல கோஷம் இன்னமும்
ஒலித்துக்கொண்டிருக்கிறது.
படங்கள் ரமணன்
கல்கி 10/05/15 இதழலில் எழுதியது
அருமை..அருமை !! அழகான வைபவம். விரிவான விளக்கம் ! பார்க்கத்தூண்டும் கருத்துடன் கூடிய பதிவு !!
பதிலளிநீக்கு