10/7/15

மத்தியபிரதேசத்தில் தொடரும் மர்ம மரணங்கள்


இந்த தேசம் கடந்த பல ஆண்டுகளில் பல பூதாகாரமான ஊழல்களை தொடர்ந்து  சந்தித்திருக்கிறது.. அவைகள் விசாரணைகள்,அதிரடி கைதுகள், என பரபரப்பாக முதல் பக்க செய்தியாகவுமிருந்திருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஒரு  ஊழல் வெளிச்சதிற்கு வந்தபின்னர்  தொடராக அதில் சம்பந்தபட்ட 44 பேர்களின் அடுத்தடுத்த மர்ம மரணங்கள் நிகழ்ந்திருப்பது  பாரதீய ஜனதா கட்சி ஆட்சியிலிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் இப்போது வெடித்திருக்கும் “ வியாபம்” மெகா ஊழலில்தான் 
மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அரசுத் துறை வேலைகளுக்கான போட்டித்தேர்வைநடத்துவது ’மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம்’ (Madhya Pradesh Professional Examination Board – MPPEB) அதன் இந்தி மொழி பெயர்ப்பு– வ்யாவ்சாயிக் பரிக்ஷா மண்டல் சுருக்கமாக – "வியாபம்".
மாநில அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இதை நாட்டிலேயே நேர்மையாக நியாமாக நடக்கும் சுயாட்சி அமைப்பு இது என மத்தியபிரதேச அரசு மார் தட்டிக்கொண்டிருந்த ஒரு விஷயம்.  இதில்  நடந்த ஊழல் தான் இப்போது வெளிச்சதிற்கு வந்திருக்கிறது. அதன் தொடர்விளைவாகதான்  நடந்துகொண்டிருக்கும் மர்ம மரணங்கள்.
வேறெந்த வழக்கிலும் நடந்திராத வகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கின் சாட்சிகள் உள்ளிட்ட 44 பேர் மர்மமான முறைகளில் இறந்துள்ளனர் – அதாவது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் ஒருவர்.. இந்த பட்டியலில் கடைசியாக இடம் பெற்றிருப்பவர் ஊழலால் பாதிக்கப் பட்ட ஒரு குடும்பத்தினரை பேட்டிகண்ட டிவி செய்தியாளர்அக்‌ஷய் சிங் என்ற செய்தி வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே  வியாபம் ஊழல் விசாரணைக்கு தகவல்களை அளித்து உதவி வந்த மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் அருண் சர்மா, டெல்லி ஹோட்டல் ஒன்றில்  மர்மமமான முறையில் இறந்து கிடந்தார் இந்த  தொடர் மரணங்களினால்  தெரிந்த விஷயங்களைக்கூட போலீசில் சொல்ல மக்கள் அஞ்சுகின்றனர்..  மாநில போலிஸால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்களும் மீடியாக்காரர்களும் நம்ப மறுக்கிறார்கள். 
உலகிலேயே மிக எளிதாக  டாக்டராகவோ எஞ்னியாராகவோ மத்தியபிரதேசத்தில் தான் முடியும். பணம். – பணம், மட்டுமே இருந்தால் போதும். 
மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு உயர் கல்விப் பிரிவு அல்லது அரசுத் துறை ஒன்றில் வேலைக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் ஒருவர், அதற்காக சிரமப்பட்டு படிக்கத் தேவையில்லை –பணக்கட்டுகள் போதும் அவர்களைத் தேடி இடைத் தரகர்கள் வருவார்கள். நீங்களே தேர்வை எழுதுவதானால், உங்களுக்கு முன்னோ பின்னோ ஒருவர் அமர்ந்து உங்களுக்குத் தேவையான பதில்களைத் தருவார்கள்.
இல்லையென்றால், உங்கள் பெயரில் வேறு ஒருவர் தேர்வை எழுதிக் கொடுப்பார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட துறையின் தேர்வாணையத்தை சரிக்கட்டுவது, தேர்வு நிலைய கண்காணிப்பாளர்களைச் சரிகட்டுவது, விடைத்தாள் திருத்துபவர்களைச் சரிகட்டுவது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அல்லது கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வரை கவனித்துகொள்லும் வேலையை  இடைத்தரகர்கள் கவனித்துகொள்ளுவார்கள்.
நடந்துகொண்டிருக்கும் மரணங்கள் திகில் படங்களில் வரும் காட்சிகளாக இருப்பதைப்போல  நடந்த ஊழல்களும் சினிமா பாணீயில் . சயிண்டிபிக்காக பல வழிவகைகளில் செய்திருக்கிறார்கள். இந்த வசூல் ராஜாக்கள் வடிவமைத்திருக்கும்   விஞ்ஞான பூர்வமான தேர்வு ஊழல்களில் தான் எத்தனை வகை? 
1)   ஆள்மாறாட்டம் : தேர்வு எழுத வேண்டியவருக்கு பதிலாக, தேர்வு எழுதுவதையே தொழிலாக கொண்ட வேறு ஒரு ‘திறமைசாலி’ தேர்வை எழுதுவது. தேர்வுமைய நுழைவுச் சீட்டை போர்ஜரி செய்வது, 
2)   ரயில் இன்ஜின் / ரயில் பெட்டி (Engine Bogie System): தேர்வு மையத்தில் உண்மையாகவே தேர்வு எழுத வந்திருப்பவர்களுக்கு இடையில் சம்பந்தமில்லாத (ஆனால், அந்த துறை பற்றி நன்கு அறிந்த ஒருவரை)  நுழைத்து அவர் எழுத (இன்ஜின்) மற்றவர்கள் காப்பி அடிக்க (இன்ஜினைத் தொடரும் பெட்டிகள்) செய்வது. – உதாரணமாக, ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு என்றால், தேர்வு எழுத வந்த ஒருவர் 4 அல்லது 5 லட்சம் கொடுத்து இன்னொருவரை இன்ஜினாக அமர்த்திக் கொள்ளலாம்
3)   காலி விடைத்தாள்கள் : அதாவது தேர்வு எழுத வந்தவர் விடைத்தாளை காலியாக வைத்து விட வேண்டும். தேர்வு நேரம் முடிந்து தேவையான மதிப்பெண்களை முதலில் வழங்கி விடுவார்கள் – பின்னர் அரசின் பாதுகாப்பில் உள்ள அந்த காலித் தாள்களில் கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல் விடை எழுதி, அதைத் திருத்துவது போல் திருத்தி, மதிப்பெண் போடுவது போல் போட்டுவிடிவார்கள். இதெல்லாம் சாத்தியாமா? என தோன்றுகிறதல்லவா?   ஆனால், இப்படித் தான் நடந்துள்ளது. சம்பந்தபட்டவர்கள் சாட்சியம்  அளித்திருக்கிறார்கள். 
2009-ம் ஆண்டு வியாபம் முறைகேடுகள் குறித்து முதன் முறையாக பொது நல வழக்கைத் தொடர்ந்த வினோத் ராய், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 கோடியை இருக்கை ஒதுக்கீடுகளின் மூலம் குவிக்கிறது என்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 42 சதவீத இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 43 சதவீத இடங்களுக்கு ஏராளமான தொகை கணக்கில் காட்டாமல் வசூலிக்கப்படுகிறது. 15 சதவீத இடங்கள் (அதாவது 300) தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றது –  இந்த 300 இடங்களில்தான்  லஞ்ச ஊழல் ஆக மொத்தம் மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பில் 100 சதவீத இடங்களும் காசு கொடுப்பவர்களுக்கே என்று நிலை நிலவுகிறது.
இதைத்தவிர 1.40 லட்சம் பேர் ஒவ்வொருவரும் 25 லட்சம் கொடுத்து பல அரசு வேலைகளை பெற்றிருக்கிறார்கள். இந்த பொதுவழக்குகள் போடும் முன் அரசுக்கு கடிதம் , பத்திரிகைகளில் கட்டுரைகள் என போராடியவர் வினோத் ராய்.  அதற்காக விலைபேசபட்டு அதை ஏற்காததால் கொலை மிரட்டலகளையும் சந்தித்துகொண்டிருப்பவர். இறுதியில் கோர்ட் ஆணைப்படி ,விசாராணை  சிறப்புபோலீஸ் புலானய்வு குழு விசாரணையை துவங்கியது.
இப்போது 28 பேர் மீது பல வழக்குகளை பதிவு செய்பட்டிருக்கிறது..  இவர் கள் 3292 வித மான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் கண்டு பிடிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பிரிவுகளில் வழக்குகள் பதிவாயிருக்கின்றன. இதுவரை இவ்வளவு பிரிவுகளில் வழக்குகள் போடபட்டதில்லை. . ஊழலுக்கு காரணமான குற்றவாளிகள் மீது குற்றங்களை நிரூபிக்கும் வகையில் 92,176 ஆவணங்கள் கோர்ட்டில் ஒப்படைக் கப்பட்டிருக்கின்றன. இதுவரை சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது பட்டியலில் உள்ள சுமார் 300 பேர் தலைமறைவாக உள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி சுதர்ஷன், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா உள்ளிட்டோர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளாதாக சொல்லப்படுகிறது. 
அமைச்சர்களே தமக்கு வேண்டியவர்கள், தாம் கைநீட்டி லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களை தேர்வுகளில் வெற்றி பெற இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே ஷிவாரே, புகழ்பெற்ற மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுரங்க அதிபர்  சுதீர் ஷர்மா ஆகியரோம் அடக்கம்.. இந்த ஆப்ரேஷனின் முளையாக செயல் பட்ட வினோத் பண்டாரி என்பவர்  தப்பி மொரீஷியல் தீவுக்கு சென்று விட்டார்
தவிர்க்கவே இயலாத வகையில் பல்வேறு பொதுநல வழக்குகளுக்கும், எதிர்கட்சிகளின் அழுத்தங்களுக்கும், நீதி மன்றங்களின் உத்தரவுகளுக்கும் பின் மத்திய பிரதேசத்தின் சிறப்புக் காவல் துறையின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள இந்த ஊழல் மிகத்  தவறான திசையை நோக்கிச் செல்கிறது. குற்றம் இழைத்த ஒரு சிலரோடு சேர்த்து குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக  வட இந்திய ஊடகங்கள்  எழுதுகின்றன. . மேற்கொண்டு மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் ஏதும் எழாமலிருக்க, அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே கைதுகள் செய்யப்படுகின்றன. என்றும் குற்றம் சாட்டுகின்றன.  அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கல்வித்துறை வல்லுனர்கள் எனப்பல துறைகளினரின் ஒருங்கிணைப்போடு மிகந்த தொழில்நேர்த்தியோடு நடந்திருக்கிறது இந்த போலி டாக்டர்களை உருவாக்கும் ஊழல். 
வெளியாகியிருப்பது  மருத்துவத்துறையில் மட்டும் தான். இன்னும் பிற உயர் கல்வி நிலையங்களின்  இருக்கை ஒதுக்கீடுகள், போட்டித் தேர்வுகள் மூலம்  செய்யப்படும் பணி நியமனங்கள் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துகொண்டால் , ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடிகள்  2ஜி ஊழலைவிட அதிகமான அளவில்   இருக்கும்  என மதிப்பிடப்பிடபடுகிறது.  இதில் இன்னுமொரு ஆச்சரியம் இத்தனைக்கு பிறகும், வியாபம் தான் இன்னும்  இந்த ஆண்டுக்கான அட்மிஷன், வேலைகளுக்கான தேர்வை செய்துகொண்டிருக்கிறது. 
.இந்த விஷயத்தில்  மாநில அரசு மெத்தனமாக இருக்கிறது. சுஷ்மா, வசுந்திரா ராஜி ஊழல் அலைகளை விட  பிரமாண்டமாக எழுந்திருக்கும் இந்த ஊழல் அலை பற்றியும் வழக்கம்போல பிரதமர் மோடி மெளனம் காக்கிறார். உச்ச நீதிமன்ற தலையிட்டு சிபிஐ விசாரணையும்,  சிறப்பு குழுவும்  அமைக்க வேண்டுகிறது காங்கிரஸ்.. முதல்வரின் ராஜினாமாவை கோருகிறது எதிர்கட்சிகள்.
மத்திய பிரதே மக்கள் இந்த   தொடர் மரணங்களை உடனே  நிறுத்த யாராவது ஏதாவது செய்யமாட்டர்களா? எனத்   துடித்துகொண்டிருக்கிறார்கள்  


============================================================================  
ஊழலில் வந்த டாப் 10
கடந்த 2011 ல் மருத்துவ நுழைவு தேர்வு முடிந்ததும் டாப் 10 மாணவர்கள் அழைக்கப் பட்டனர். அவர்களில் யாரும் உண்மையாக எழுதி சாதிக்கவில்லை. பல லட்சம் லஞ்சம் தந்து, ஆள் மாறாட்ட முறையில் தான் அதிக மதிப்பெண் பெற்றனர்.
இவர்களுக்காக தேர்வு எழுதிய 145 பேரை கண்டு பிடிக்க போலீஸ் தீவிரமாக இறங்கியது. முதலில் சிக்கியது உபி மாநில கான்பூர் நகரை சேர்ந்த சத்யேந்திர வர்மா. இவர் 4 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு அஷிஷ் யாதவ் என்ற மாணவனுக்காக தேர்வு எழுதியுள்ளார்.
இவரில் ஆரம்பித்து தான் இந்த ஊழலின் வெளிப்பாடு. பின்னர் 145 பேர் சிக்கினர். ஆள் மாறாட்டம் செய்த மாணவர் களுக்காக தேர்வு எழுதிய இவர்களுக்கு பல லட்சம் ரூபாய் தந்துள்ளனர் இடைத் தரகர்கள். இவர்கள் பெரும்பாலோர் உபியை சேர்ந்தவர்கள்.
==========================================================================
கல்கி 19/07/15 ல் எழுதியது


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்