4/7/15

கிரிஸ்- திவாலாகும் தேசம்



நிதி மேலாண்மையைச் சரியாக நிர்வகிக்காததால் கடன் சுமையால் தனிமனிதர்கள், வியாபார நிறுவனங்கள்ஏன்? பெரிய கார்பெரேட் நிறுவனங்கள் கூடத் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படுவதுண்டுரு தேசத்திற்கே அப்படி நேருமா?- நேர்ந்திருக்கிறது கீரிஸ் நாட்டுக்கு.
பால்கன் தீபகற்பத்தின் தெற்குமுனையில் ஆசிய, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவின் குறுக்கு பாதையில் அமைந்துள்ள குட்டி தேசம் கீரிஸ். மக்கள் தொகையே1.30 கோடிதான் மன்னராட்சியிலிருந்த கீரிஸ் 1970ல்தான்   மக்களாட்சிக்கு மாறியது.
கடந்த வாரம் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஒரு நாள் இரவு டிவியில் தோன்றி நாளை காலை முதல் நாட்டின் எல்லா வங்கிகளும் பங்கு சந்தையும் மூடப்படும். ஏடிஎம் மில்லிருந்து நாள் ஒன்றுக்கு 60 யூரோ மட்டுமே எடுக்க முடியும்என அதிரடியாக அறிவித்துவிட்டார். மாத முதல் வாரத்தில் பென்ஷன்பணம், சம்பளப் பணம் எடுக்கமுடியாத நிலை.ஏடிம்களில் நீள் வரிசை. வங்கிகள் இயங்காதால், வணிக உலகம் திணறுகிறது. தேசம் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.

ஏன் இந்த நெருக்கடி?
கீரிஸின்  முந்தைய கரன்சி டிராஷ்மா.  கடின முயற்சிகளுக்குப் பின்னர்1981லைரோப்பிய கூட்டமைப்பில் இணைந்த நாடு.இது. 2002 முதல் யூரோ கரன்சிக்கு மாறியது. அங்கே ஆரம்பித்தது சிக்கல். வளர்ச்சியில்லாத பொருளாதார நிலையைச் சமாளிக்க அதுவரை டிராஷ்மா பணநோட்டுகளை  அதிகளவில் அச்சிட்டு வெளியிட்டு வந்த நிலையைத் தொடரமுடியவில்லை. கடன் சுமையும், பணவீக்கமும் அதிகரித்துக்கொண்டே போயின. மிகச்சிறிய நாடாக இருந்தாலும் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற முறையில் பன்னாட்டு நிதியம்,ஐரோப்பிய மத்திய வங்கி ஐரோப்பிய ஆணையம் கீரிசுக்கு உதவிக்கரம் நீட்டின.
சிக்கன நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் 2010லிருந்து 2012 வரை  மூன்று தவணைகளில்970 கோடி யூரோ கடனாகத் தந்தது. ஆனால் கீரிஸ் தனது பொருளாதாரச் சீர்திருத்தங்களில் தோல்வியைச் சந்தித்ததுஇந்தக் கடனில் ஒரு தவணையான 160 கோடியூரோவைச் செலுத்த வேண்டிய நாளான ஜுன் 30ல் செலுத்தவில்லைஇதனால் எழுந்த நிலைதான் தேசம் திவாலாகும் மோசமான நிலை. திலிருந்து கிரிஸை காப்பற்ற இன்னும் 2400கோடி யூரோவைக் கடனாக இந்த நிறுவனங்கள் தர ஒரு திட்டத்தைத் தயாரித்தனர்.
ஆனால், அதற்குப் பல நிபந்தனைகளைக் கிரீசுக்கு ஐரோப்பியயூனியன் நாடுகள் விதித்துள்ளன. குறிப்பாக, கிரீஸ் அரசு கடும்சிக்கன நடவடிக்கையாக, மானியக் குறைப்பு, ஓய்வூதிய வயதை அதிகப் படுத்தி, பலனைக் குறைக்க வேண்டும், வரி, மின் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும், பட்ஜெட் தொகையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளாகப் பெரும் நிதி நெருக்கடியில் கிரீஸ் சிக்கித் தவித்து அரசு சிக்கன நடவடிக்கைகளை கடை பிடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கொண்டு சிக்கன நடவடிக்கையை அதிகப் படுத்தினால், மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் என அஞ்சும் கீரிஸ் ஆட்சியாளர்கள்  வாங்கிய கடனை முழுவதுமாக ரத்து செய்துவிட்டுப் புதிய கடன்களை வழங்குமாறு கேட்கிறது 10 சுற்று  பேச்சு வார்த்தை நடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

அரசியல்

கீரிஸில் இப்போது ஆட்சியில் இருப்பதில் பெரும்பான்மையானவர்கள் இடதுசாரியினர். பெரும் போராட்டங்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போது  மக்களிடையே ஏகாதிபத்திய நாடுகளின் நிபந்தனைகளுக்கு  நாம் அடிமையாகிவிடக்கூடாது என்ற குரல் வலுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடும் நிபந்தனைகளுடன் உதவியை ஏற்பதா வேண்டாமா என்பதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு போகிறார். பிரதமர்., ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் அளிக்கும் அவசரக் கால நிதி உதவியை ஏற்பதா என்பது குறித்து முடிவு செய்ய ஜூலை 5-ம் தேதி நாடாளு மன்றத்தைக் கூட்டி விவாதித்துப் பின்பு, 6-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று  நாட்டின் பிரதமர்  அறிவித்துள்ளார்.
  
விளைவுகள்
இந்த நெருக்கடியினால் கிரீஸ் நாடு திவாலாகும் நிலைக்குத் தள்ளப் பட்டு, வலுகட்டாயமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நிலைமைக்கு ஆளாகியுள்ளது. உடனடி விளைவாக ஐரோப்பிய பொருளாதாரம், பாதிக்கப்பட்டது,ஐரோப்பிய பங்கு சந்தை சற்று குலுங்கி முதலீட்டாளர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்திய பின்  நின்றது.
இந்தப் பிரச்சனையில்  ஒரு வேளை கிரீஸ் ஐரோப்பிய கூட்டணியிலிருந்து வெளியேறினால், அது ஐரோப்பிய கூட்டமைப்புக்குப் பெரும் பலவீனமாக அமையும். மேலும், இதே நிதி நெருக்கடியில் இருக்கும் இத்தாலி, போர்ச் சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் வெளியேறினால் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்யும் என ஐரோப்பிய  கூட்டமைப்பின் தலமை கணிக்கிறது. இதனால்எப்படியாவதுசமாளித்துவிட வேண்டுமென்று  அந்த நாடுகள் விரும்புகின்றன. இதைப் புரிந்துகொண்டுவிட்டதால் தான் கீரிஸ் இந்த அளவுக்குத் துணிந்து சவால் விடுகிறது என்றும் சில பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதுகின்றன.
இந்தியா பாதிக்கப்படுமா?
சில அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் கீரிஸில் இருந்தாலும் அவை அமெரிக்க வங்கிகளின் மூலமாக இயங்குவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னரே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராஜன் லண்டனின் பேசும்போது கீரிஸில் பிரச்னை எழுந்தால் அது இந்தியாவைப் பாதிக்காது என அறிவித்திருக்கிறார். நமது அதிகமான  அன்னியச் செலவாணி கையிருப்பும், நிர்வாகத் திறனும் அவரது பேச்சில் எதிரொலித்தது.

மக்களின் தீர்ப்புக்காகக் கழுத்தை  நெருக்கும் கடனலிருக்கும் கிரிஸ் நாடு மட்டுமில்லை கடன்கொடுத்த நாடுகளும் பதற்றத்துடன் காத்திருக்கின்றன.
.
கல்கி 12/7/15ல் எழுதியது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்