உலகம்
போற்றும் நாடகஆசிரியர் ஷேக்ஸ்பியரின் 400வது நினைவு நாள் கடந்த மாதம் இங்கிலாந்தில்
தேசிய விழாவாக நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஷேக்ஸ்பியர் பிறந்த கிராமத்தில்
அந்த விழாக்கள் துவங்கியது. அதைப் பார்ப்பதற்காகவே அங்குச் சென்ற திருமதி சந்திரா திலீப்
தனது அனுபவங்களைப் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
சிறுவயதில்,
பள்ளிக்காலத்திலிருந்தே நான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை படித்துப் பிரமித்தவள் நான்.
தொடர்ந்து கல்லூரி, வங்கி வேலை என்று வாழ்க்கை தொடர்ந்த போதும் ஷேக்ஸ்பியரின் எழுத்துகளைத்
தேடி தேடிப் படித்தேன். அவர் பிறந்த வீட்டையும் வாழ்ந்த ஊரையும் பார்க்க வேண்டும் என்பது
என் கனவுகளில் ஒன்று. சில முறை வெளிநாடுகள் சென்றிருந்தாலும் இந்த வாய்ப்பு கிட்டவில்லை.
ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவுநாளை இந்கிலாந்தில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப் போகிறார்கள்
என அறிந்ததும் அதைப் பார்க்க, அதில் கலந்துகொள்ள, ஆவல் கொண்டு என் விருப்பத்தை என்
கணவர் திலீப்பிடம் தெரிவித்தபோது, அவரும் உடன் வரச் சம்மதித்தது ஆச்சரியம். காரணம்
அவருக்கும் ஆங்கில இலக்கியத்தில் மிகவிருப்பம் என்றாலும் என்னளவு ஷேக்ஸ்பியரின் பயங்கர
ரசிகரில்லை.
ஸ்டார்ட்போர்ட்
அப் ஆன் ஆவோன்(Stratford-upon-Avon) என்பது இங்கிலாந்தில். லண்டனிலிருந்து 163 கிமீ
தூர ரயில் பயணத்தில் இருக்கும். ஒரு சின்ன கிராமம். ஸ்டார்ட்போர்ட் பெயரில் வேறு நகரங்கள்
இருந்ததால் ஆவோன் நதிக்கரையிலிருக்கும் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இது இன்றும்
போன நூற்றாண்டின் சாயல் மாறாமல் மிக அழகாக இருக்கிறது.
இது
தான் ஷேக்ஸ்பியர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த(1564-1616) கிராமம். இங்குள்ள அரங்கத்தில்
தான் அவரது நாடகம் முதலில் அரங்கேயிருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளையொட்டி
(ஏப்23)வரும் வார இறுதியில் இசை நாடக நிகழ்ச்சிகளை விழாவாகக் கொண்டாடுவார்கள்.
25000 பேர் மட்டுமே மக்கள்தொகை கொண்ட இந்தக் கிராமத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் சுற்றாலா
பயணிகள் வருகிறார்கள்.
இந்த
வருடம் அவரது 400 வது நினைவு நாளை மிகப்பெரிய அளவில் இங்கிலாந்து நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது.
அதன் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த இடத்திலிருந்து துவங்கியது. இதற்காகத் தனி இணைய தளம்,
கமிட்டிகள், அரசாங்க அறிவிப்புகள் என ஆறு மாதமாக அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அங்கு இரண்டுநாள் தங்கி நடைபெறும் நாடக/ இசை விழாக்களில் பங்குபெறக் கட்டணம், ஹோட்டல்
எல்லாவற்றிருக்கும் முன்பதிவு செய்து உதவப் பல டிராவல் கம்பெனிகள் அறிவித்துக் கொண்டிருந்தன.
இந்தச்
சின்ன நகரத்தில் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இருக்கின்றன.
அவர் பிறந்த விடு, படித்த கிங் எட்வர்ட் பள்ளி, அவர் மனைவியின் குடும்ப வீடு, மகள்
வசித்த வீடு, அவரது பெற்றோர்கள் வீடு அவர் வாங்கி வாழ்ந்து பின் இறந்த வீடு முதல் நாடகம்
அரங்கேறிய தியட்டர், அவருக்கு ஞானஸ்தானம் செய்விக்கப் பட்ட சர்ச், அதில் அவரது உடல்
அடக்கம் செய்யப்பட்ட பகுதி இப்படி எல்லாம்,
அவரும்
ஒரு பங்குதாராரக இருந்து இங்குத் துவக்கிய ராயல் ஷேக்ஸ்பியர் தியட்டர் என்ற நாடக அரங்கம்
கடந்த சில ஆண்டுகளில்;புதுப்பிக்கப்பட்டு அதிநவீனமாக இருக்கிறது.
இந்த
இடங்களுக்குக் குழுக்களாக அழைத்துச்சென்று கைடு விளக்குகிறார். மறு நாள் 400வது நினைவுநாள்
விழாவிற்கான எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த நகரம் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக
இருந்தது.
38
நாடகங்களும், 154 14 வரிப் பாடல்களும், இரண்டு நீண்ட கவிதைகளும் எழுதியிருக்கும் ஷேக்ஸ்பியரின்
படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளோ. அவரைப் பற்றி அவர் எழுதிய குறிப்புகளோ எதுவுமே
இன்று இல்லை. அவருடைய போட்டோ கூடக் கடையாது. அவர் புத்தகத்தின் முதல் பதிப்பில் இருக்கும்
ஒரு கோட்டுஒவியத்தின் அடிப்படையில்தான் பின்னாளில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
அவர்
மறைந்த 7 ஆண்டுகளுக்குப் பின் அவரது நண்பர்கள் ஜானும் ஹென்றியும் 1623ல் வெளியிட்ட
“முதல் பக்கம்”
என்ற தொகுப்பின் முலம்தான் ஷேக்ஸ்பியரை எழுத்துவடிவில் இந்த உலகம் அறிந்துகொண்டது.
. இந்தப் புத்தகத்தைக் கண்ணாடிப்பேழையில் அவர் வாழ்ந்த வீட்டில் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
இன்று
ஷேக்ஸ்பியரைப் பற்றி நாம் அறியும் பலவிஷயங்கள் நீண்ட ஆராய்சிகளுக்கும் அலசலுகளுக்கும்
பின்னர் கிடைத்தவை., இதைச்செய்தவர்கள் இங்குள்ள ஷேக்ஸ்பியர் சொஸைட்டி. இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இன்று ஆராய்ச்சி நிலையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இதில் பலர் ஷேக்ஸ்பியர் எழுதியவற்றை
ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்
.
முதல்
நாள் இந்த இடங்களைப் பார்த்தபின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் நாடகங்களில் ஒன்றைத்தேர்ந்தெடுத்துப்
பார்த்தோம். மறுநாள் காலையில் நகர மேயர் ஆட்சிமன்ற குழுவினருடன் முன்னணியில் செல்ல,
பள்ளி மாணவர்கள் சீருடையில் அணிவகுக்க, நகர இசைக்குழுவின் இசையில் “ஷேக்ஸ்பியர் வாக்” என்ற நடைப்பயணம்.
அந்தக் கிராமத்தின் குறுகிய வளைந்த தெருக்களில் சென்றது. அவர் இந்த வீதிகளிலேதானே நடந்திருப்பார்,
இந்தப்பள்ளியில்தானே படித்திருப்பார், இந்த வீட்டில்தானே மனைவியைச்சந்திருப்பார், என்ற
எண்ணஓட்டங்களுடன், எங்களைப்போலக் கடல்கடந்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், இங்கிலாந்தின்
பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள். பக்கத்து ஊர்கார்கள் எனப் பலர் அதில் இணைந்தனர்
.
தெருமுனைகளில்
உள்ளூர் இசைக்குழுவினரின் வரவேற்பு, ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களின் வேடமணிந்து உற்சாகமூட்டம்
நண்பர்கள் என விழாக்கோலம். ஆங்காங்கே பள்ளிகளிலும் பொது மண்டபங்களிலும் நாடகங்கள்.
பெரிய மேடை செட்டுக்கள் எல்லாம் கிடையாது. தரைதளத்தில் தொட்டுவிடும் தூரத்தில் நடிகர்கள்
சற்று தள்ளி இசைக்கலைஞர்கள்.
விழாவின்
இறுதியில் பவனியின் பங்கு பெற்றோரும் அதைப், பார்த்துக்கொண்டிருந்தோரும், இந்த விழாவிற்காகத்
தயாரிக்கப்பட்டிருந்த ஷேக்ஸ்பியரின் முகம் பதிக்கப்பட்ட ஒரு முகமூடியை அணிந்து கொண்டு
அந்த மேதைக்கு 3 முறை வாழ்த்தொலி எழுப்பினார்கள். மிக அற்புதமாக உணர்ந்த நிமிடங்கள்
அவை.
பவனியின்
இறுதியில் ஷேக்ஸ்பியரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஹோலி டிரினிடி சர்ச். இங்கு
அவருக்கும் அவரது மனை.விக்கும் அருகருகே சமாதிகள். அவைகள் மீது எங்களுக்கு முன் வந்தவர்கள்
வைத்திருந்த அழகான மலர்கொத்து. கல்லறை வாசகம் லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
அதன் அருகே
“இந்த தூசிபடிந்த இடத்தில் தோண்டும் அன்பான நண்பரே
யேசுபெருமான் மன்னிப்பாராக,
கல்பலகைகளை விட்டுவைப்பவர்களை வாழ்த்துகிறேன்,
என் எலும்புகளை எடுப்பவர்களை சபிக்கிறேன்.”
.
.
என்று சொல்லும் ஆங்கில மொழிபெயர்ப்பு. அந்த காலகட்டத்தில்
கல்லறைகளிலிருந்து எலும்புகள் திருடப்படுவது வழக்கமாம். அத்னால் இந்த வாசகங்கள் என்றார்
கைடு.
அன்றைய
விழாவிற்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்ஸும் அவரது மனைவி கேமிலாவும் வந்திருந்தனர்.
இளவரசர் சார்லஸ் போட்டோக்களில் பார்ப்பதைவிட சற்று வயதான ஆனால் கம்பீரமான தோற்றத்தில்
இருக்கிறார். .அன்று அரச தம்பதியினர் ராயல்ஷேக்ஸ்பியர் தியட்டரில் ஒரு நாடகமும் பார்த்தனர்.
ஆண்டுதோறும்
நமக்கும், இந்த உலகிற்கும் வயது அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் சில விஷயங்கள் எப்போதுமே
அழியாத இளமையுடன் இருக்கின்றன. அதில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் ஒன்று.
சந்திப்பு ரமணன்
மங்கையர் மலர் ஜுலை இதழிலிருந்து
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்