கல்கி பவளவிழா மலரில் வெளியாகியிருக்கும் எனது பயணக் கட்டுரை
எங்கும் எரிந்த பிழம்புகளின் தழும்புகள். புகையின் கறைகளோடு நிற்கும் இடிந்த சுவர்கள். சாம்பல் குவியல்கள். நதிக்கரையிலிருந்த அந்த வணிக நகரம் முழுவதுமே எரிந்து நாசமாகியிருக்கிறது. தப்பித்து ஓடியவர்கள் மெல்லத் திரும்பித் தங்கள் உடமைகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். நகரின் நிர்வாகக் குழு நகரை மீண்டும் எழுப்பும் திட்டங்களை விவாதிக்க பாதிஎரிந்த நகர சபை கட்டிடத்தில் கூடியிருக்கிறார்கள்.
எங்கும் எரிந்த பிழம்புகளின் தழும்புகள். புகையின் கறைகளோடு நிற்கும் இடிந்த சுவர்கள். சாம்பல் குவியல்கள். நதிக்கரையிலிருந்த அந்த வணிக நகரம் முழுவதுமே எரிந்து நாசமாகியிருக்கிறது. தப்பித்து ஓடியவர்கள் மெல்லத் திரும்பித் தங்கள் உடமைகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். நகரின் நிர்வாகக் குழு நகரை மீண்டும் எழுப்பும் திட்டங்களை விவாதிக்க பாதிஎரிந்த நகர சபை கட்டிடத்தில் கூடியிருக்கிறார்கள்.
“எதையும் சிறிய அளவில் திட்டமிடாதீர்கள்....அவற்றில் மனித மனங்களின் ஆற்றலைத் தூண்டும் எந்த மந்திர சக்தியும் இல்லை. மிகப் பிரம்மாண்டமான பெரிய திட்டங்கள் - உயர்ந்த இலக்குகள், - கடின உழைப்பு எனத் திட்டமிடுங்கள். அப்போதுதான் நமது நகரை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க முடியும்”
இந்த அழிவில் கற்ற பாடங்களினால் ஒரு அழகான வலிமையான நகரை உருவாக்கத் திட்டமிடுவோம், புகழ்பெற்ற இந்த “make no little plans” வார்த்தைகளைச் “சொன்னவர். டேனியல் ஹட்ஸ்ன் பர்ன்பாம் என்ற நகர நிர்மாண கலைஞர். 1871ல் எரிந்து அழிந்துமீண்டு பினிக்ஸாக எழுந்த நகரம் தான் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ. இன்று அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம்.
நிமிர்ந்து பார்த்துப் பார்த்தே கழுத்து வலிக்கும் அளவிற்கு வானளாவ உயர்ந்து நிற்கும் பலமாடி கண்ணாடி கட்டிடங்கள் -பளீரென பல மைல்களுக்குக் கடற்கரைபோல் விரிந்து நிற்கும் வெண்மணற்பரப்பானஏரிக்கரை- பசுஞ்சோலைகளாகப் பரவிக்கிடக்கும் பெரிய பூங்காக்கள் -நகரின் நடுவே நேர்த்தியான பராமரிப்புடன் அழகாக ஓடும் சிக்ககோ நதி- அதன் மீது பல இடங்களில் கம்பீரமாக நிற்கும் பாலங்கள்- இவற்றையெல்லாம் இன்றைய சிக்காகோ நகரில் பார்க்கும்போது 100 ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்ட டேனியல் ஹட்சனின் தொலைநோக்கு பார்வையும், தொடர்ந்து வந்தவர்களின் அற்புதமான நிர்மாண ஆற்றலும் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
கடந்த ஆண்டு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியையும் தாண்டிவிட்டது. இதில் அமெரிக்க உள் நாட்டுப் பயணிகளும் அடக்கம். நகரின் பாரம்பரியமும், பிரம்மாண்டமும் மட்டும் சுற்றாலா பயணிகளைக் கவர காரணமில்லை. சுற்றுலாத்துறையின் சிறப்பான சேவையும், நகரை நேசிக்கும் உள்ளுர் வாசிகளும் ஒரு முக்கிய காரணம். நிரந்தர உழியர்கள் தவிர நூற்றுக்கணக்கில் தன்னார்வ தொண்டர்கள் உதவுகிறார்கள்.
விடுமுறைக்காலங்களில் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கிய இடங்களைப்பார்க்கப் பஸ் இலவசம். மூன்று வெவ்வேறு பாதைகளில் தொடர்ந்து சுற்றி சுற்றி ஓடிக்கொண்டே இருக்கும் இவற்றை டிராலி (படம்) என அழைக்கிறார்கள். செல்லும் பாதையை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள வெவ்வேறு வண்ணங்கள். அவை நிற்கும் இடங்களிலும் அதே வண்ணத்தில் போர்டுகள். பஸ்ஸில் டிரைவர், கண்டெக்டர், கைட் எல்லாம் ஒருவரே. கழுத்தில் தொங்கும் மைக்கில் பேசியபடியே ஒட்டுகிறார். தன் பணியை நேசிக்க தெரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்திற்கிறார்கள்! கதை சொல்லுகிறார். குழந்தைகளுடன் பாடுகிறார்.
நகரின் பெரும்பாலான சாலைகள், சோப்பு போட்டுக் கழுவிய வீட்டுத்தரையைப் போலப் படு சுத்தமாக இருக்கிறது. சாலைகள் மட்டுமில்லை, சுரங்கப்பாதைகள் பஸ் ஸ்டாப்களின் கண்ணாடிச் சுவர்கள் கூடப் பளீரென இருக்கிறது. சாலைகளின் நடுவில் பகுப்பு சுவர்களாக, தெரு விளக்குகளில் தொங்கும் கூடையாக, அரசு கட்டிடஜன்னல்களின் வெளி அலங்காரமாக எங்குப் பார்த்தாலும் நம்பைப்பார்த்துச் சிரிக்கும் வண்ண வண்ண மலர்கள். நகரில் போஸ்டர், பேனர்களுக்கு எங்கும் அனுமதியில்லை. பொது நிகழ்ச்சிகளின் விளம்பரங்களை நகர நிர்வாகமே அதற்காக நிறுவி யிருக்கும் அழகான கண்ணாடிப்பலகைகளில் மட்டும் செய்கிறது.விளம்பரங்கள் கலையுணர்ச்சியுடன்உருவாக்கபட்டிருக்கின்றன(6). செய்திதாட்கள் கடையில் விற்கப்படுவதில்லை காசு போட்டால் திறக்கக்கூடிய கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கபட்டிருப்பவைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அருகிலேயே ரூபாய் நோட்டுக்கு சில்லறை தரும் இயந்திரம். பூட்டப்படாத அலமாரிகளில் இலவச இதழ்கள்.
நகரின் நடுவே சிக்காகோ நதி அமைதியாக அழகழான பெரிய சிறிய படகுகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது..நதிக்கரையிலிருந்து சில நூறு அடிகளில் பலமான அஸ்திவாரங்களில் நெருக்கமாக எழும்பியிருக்கும் பல அடுக்கு மாடிகட்டிடங்கள். இந்த நதியின் கரையில் தரைதளத்திற்கும் கீழே பாதாளத்தில் நான்கு அடுக்குடனும் மேலே 14 மாடிகளுடனும் நகரின், முக்கிய ரயில் நிலையமான யூனியன் ஸ்டேஷன்(9) பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நதியின் பக்க சுவர்களை எவ்வளவு கவனமாகத் திட்டமிட்டு உருவாக்கியிருக்க வேண்டும்? என்ற வியப்பு தோன்றுகிறது. நதியின் நடுவே நகரவீதிகளையிணைக்கும் 52 பாலங்கள். அவைகளி¢ல் 38 நமது பாம்பன் பாலத்தைப் போலப் பெரிய படகுகள் வரும்போது திறந்து வழிவிடக்கூடியது. அவை மூடிச் சாலையாக யிருக்கும் இரும்பு பாலத்தில் பஸ்கள் போகும்போது அருகில் நாம் போகும் நடைபாதை கூட அதிர்கிறது. ஆனால் உள்ளுர் வாசிகள் இந்தப் பாலங்களில் மட்டுமில்லை, நகரின் பாதி சாலைகள் ஒருவழிப்பாதையாக இருப்பதால், எல்லாயிடங்களிலும் மிக வேகமாகத்தான் கார் ஓட்டுகிறார்கள்.
முழுவதும் மரக்கட்டங்களினால் உருவாக்கப்பட்டிருந்த நகரம் எரிந்துபோனதால் புதிய சிக்காகோ நகரம் ஸ்டில் சிமிண்ட் பயன் படுத்தி நிர்மாணிக்கப்பட்டது. உலகின் முதல் அடுக்குமாடி கட்டிடம் 1885ல் (10மாடிகள் !) எழுந்தது இங்குதான். தொடர்ந்த சில ஆண்டுகளில் பல பிரம்மாண்ட கட்டடங்கள் எழுந்தன. இதனால் நவீன கட்டிடகலையின் பிறப்பிடமாக சிக்ககோ கருதப்படுகிறது. நகரம் இன்று நூற்றுக்கணக்கான ---- அடுக்குமாடிக்கட்டிடங்களால் நிரம்பி வழிந்தாலும், இந்தக் கான்கீரிட் காட்டின் நடுவே ஆங்காங்கே அழகான ஆரஞ்சு வண்ண மலர்களாக பாதுகாக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க பழைய கட்டிடங்கள்.அவற்றின் முன்னே சரித்திரம் சொல்லும் சிலைகள். அப்படியொரு கட்டிடம் தான் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் ஆப்
சிக்காகோ.பெரிய இரண்டு சிங்கங்கள் கம்பீரமாக நிற்கும் இந்த ஓவிய கூடத்தைப் பார்க்க வேண்டும் என்பது உலகில் உள்ள ஒவ்வொரு ஓவியனின் கனவாகியிருக்கும்.. 1879ல் துவங்கிய இதில் உலகின் பல அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கண்காட்சியில் எரியும் சிகாகோவின் படத்தைப் பார்த்தபின் அந்த விபத்தின் விபரீதம் புரிந்தது.
இது தான் இளம்துறவி விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய இடம் என்பதால் அதைப் பற்றி விசாரித்தேன். அதிகம் பேர் அறிந்திராத இந்த விஷயத்தைக் கேட்டதும் அந்த காலரியில் பகுதி நேரத் தொண்டராக பணியாற்றி வரும் ஒரு 82 வயது மாது-முன்னாள் பள்ளி ஆசிரியை திருமதி AlienEva இன்ஸ்ட்ட்யூட் அலுவகத்தில் தேடி1893ல் அந்தக் கட்டிடத்தின் வரைபடத்துடன் அன்று விவேகானந்தர் பேசிய இடம் இன்று புதிப்பிக்கபட்டு ஃல்லர்டன் அரங்கமாக வடிவெடுத்திருப்பதையும், அவர் பேசிய இடம் தான் இன்றைய பேச்சாளர்கள் நிற்கும் மேடை என்பதையும் சொல்லும் குறிப்பையும் தந்தார். அந்த அரங்கத்தின் பக்க சுவரில் இதைச்சொல்லும் பட்டயம் பதிக்கப்பட்டிருக்கிறது.
தேடிப்போன அந்த அரங்கம் பூட்டப்பட்டிருந்ததால் மீண்டும் தொடர்புகொண்டவுடன் திறந்து காட்ட ஏற்பாடு செய்தார். 120 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் பேசிய இடத்தில் இன்று நிற்கிறோம் என்ற எண்ணம் எழுந்த அந்தக்கணம் உடலில் சிலிர்ப்பை எழுப்பியது நிஜம்.
அருகிலிருக்கும் தெருவிற்கு அவர் பெயர் சூட்டியிருக்கிறார்கள்
கான்கீர்ட் கட்டிடங்கள் மட்டுமில்லை. பல விஷயங்களில் “முதல்” என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்த நகரம். உலகின் முதல் தொழிளார் போராட்டம், உலகத்தொழிலாளிகளே ஒன்று படுங்கள் என்ற கோஷம் பிறந்ததும் இங்குதான். இன்று உலகின் பல நகரங்களில் ஒட்டும் மெட்ரோ பிறந்ததும் இங்கேதான்.
வாகனங்கள் செல்லும் குறுகிய சாலைகளில் இரும்புத்தூண்களை எழுப்பி அதன்மீது ஒடிய ரயில் இன்றும் ஓடுகிறது. லூப் என அழைக்கப்படும் அது. பயணம் செய்யும்போது. உயரமான பல மாடிக் கட்டிடங்களின் ஜன்னல்களின் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது ஒரு வினோதமான அனுபவம்
.
சிக்காகோவின் கட்டிடகலையின் அழகைக் காட்டுவதற்காகவே ஓர் படகுப் பயணத்தை நடத்துகிறார்கள் “சிக்ககோ ஆர்கிடெக்டெக்ரல் பவுண்டேஷன்” சங்கத்தினர். “சிக்காகோ'ஸ் பர்ஸ்ட் லேடி” என அழைக்கப்படும் அந்தச் சொகுசு கப்பலின் கூரையில்லாத மேல் தளத்தில் எல்லாப் பக்கங்களிலும் திரும்பும் வசதிகொண்ட நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறோம். படகின் மோட்டார் ஓசை அடங்கி நிதானமாகப் பயணிக்கிறது. மெல்லிய இசையுடன் வர்ணனை.
உங்களது வலது புறம் தெரிவது 1925ல் “நாட்ர்டாம் சர்ச் பாணியில் நிறுவப்பட்ட டிரிபியூன் டவர்ஸ். சிக்ககோ டிரிபியூன் செய்தித்தாளின் அலுவலகம். உலகின் அழகான கட்டிடத்திற்கான வடிவத்திற்கு போட்டிநடத்தி தேர்ந்தெடுத்த வடிவம். இந்தக் கட்டிடத்தின் உட்புற சுவரில் தாஜ்மஹல், (!) சீன நெடுஞ்சுவர் போன்ற உலகின் பல பிரபலமான கட்டிடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் பதிக்பட்டிருக்கின்றன -இடது புறம் நீங்கள் பார்ப்பது அவர்களின் புதிய 64 மாடி கட்டிடம். .” இப்படி 45 நிமிட பயணத்தை நேரம் போவது தெரியாமல் சுவாரஸ்யமாக்குகிறார்கள்.
புகழ் பெற்ற உலகின் உயர்ந்த 110 மாடிக்கட்டிடமான ஸீயர்ஸ் கட்டிடத்தின் அருகில் நெருங்கியதும் படகிலிருந்து இறங்கி கட்டிடத்தின் உள்ளே சென்று மேலேயிருந்து பார்த்துவிட்டு பயணத்தைத் தொடர அழைக்கிறார்கள்
கட்டிடத்தின் மேல் மாடியிலிருக்கும் தொலைநோக்கியில் 4 அண்டைமாநிலங்கள் தெளிவாகதெரிகிறது. பார்ப்பது கடல் இல்லை பெரிய ஏரி என்பதையும். 5 ஏரிகள் சுழந்திருக்கும் காட்சியை அந்த உயரத்தில் ஏரிகளின் நீரின் வண்ண வேறுபாடுகளுடன் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
ஸியர்ஸ் போலவே மற்றொரு மிக உயரமான கட்டிடம் ஜான் ஹான்காக் டவர்.(15) ஜான் ஹான்காக் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர். அமெரிக்காவின் முதல் இன்ஷுரன்ஸ் கம்பெனியைத் தனது பெயராலே நிறுவியவர். 46000டன் ஸ்டீலில் எழும்பியிருக்கும் இந்த 1500 அடி உயர,100மாடி கட்டிடத்தில்தான் உலகின் அதி வேகமான லிப்ட்..2 நிமிடத்தில் 94வது மாடி வந்துவிட்டது.அங்கேயிருந்து பார்க்கும்பொழுது மிச்சிகன்ஏரியின் படகுகள் எறும்புகளாகத் தெரிகிறது. இதன் 44வது மாடிக்குமேல் குடியிருப்புகள். வசிப்பவர்களின், ஜன்னலுக்கு கீழே மேகம் மிதந்து செல்வதால், வெளியில் கிளம்பும்போது கீழே செயூரிட்டிக்கு போன் செய்து தெருவில் மழையா வெயிலா என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள்.
படகில் போகும்போது சுட்டு நிறுத்திவைத்த சோளக்கதிர் கொண்டைகளின் முத்துக்கள் போல வட்ட வட்ட பால்கனிகளுடன் இரண்டு கட்டிடங்கள். முதல் 10 தளத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த விசாரித்தில் கட்டிடத்தின் பெயர் மெரீனா. 40 ஆண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் இடித்துவிட்டு வேறு கட்டுவார்களாம்.
பழைய பல மாடிக்கட்டிடங்களைத்தான் இடிக்கத் திட்டமிடுகிறார்களே தவிர நகரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கட்டிடங்களை
இளம்ஆரஞ்சுவண்ணமிட்டு அருமையாகப் பராமரிக்கிறார்கள். அவற்றில் ஒன்று சிக்காகோ மத்திய நூலகம். அலங்கார வளைவுகளில் தொங்கும் அழகிய லாந்தர் விளக்குகள் தங்க (ஜொலிக்கிறது) வண்ண கதவுகள் (19,20) என முன் புறமும், பளபளக்கும் கண்ணாடி சுவர்களுடன் பல மாடிகட்டிடமாக பின் பகுதியுமாக நிற்கும், இங்கே உலகின் பல மொழிகளில் புத்தகங்களிருக்கிறது. தமிழில் திருக்குறளும் பைபிளும்.. அரசின் முலமாகவோ அல்லது தூதரகத்தின் முலமாகவோ அனுப்பினால் தான் புதிய புத்தகங்களைப்பெற்றுக் கொள்வார்களாம்.நூலகத்தின் உச்சி மாடத்தின் முனையில் ஆந்தை சிற்பம். ஆந்தை அறிவு ஜிவிகளின் அடையாளமாம்.!
.
நகரின் நடுவே தியட்டர் டிஸ்டிரிக்ட் என்ற பகுதியில் நிறைய அரங்கங்கள். இந்தப் பகுதியில் உருவான முதல் தியட்டர். “தி சிக்காகோ தியட்டர் “. பாலிஷ் பளபளக்கும் மரக் கைப்பிடிகளுடன் வளைந்து செல்லும், கார்பெட் பதித்த அகலமான மாடிப் படிகள். சுவரெங்கும் கலைநயம் மிளிரும் ஓவியங்கள் நடுவில் தொங்கும் பெரிய சர விளக்கு.தங்கமாக மின்னும் கைப்பிடிகளுடன் வெல்வெட் நாற்காலிகள், பொன் வண்ணத்தில் ஓவியங்கள் (தேரில் சூரிய பகவான் ! ) சரவிளக்குகள் அலங்கரிக்கும் ஆடம்பரமான மேடையென ஒரு கிரேக்க அரண்மனைப் போல இருக்கும் இது ஒரு சினிமா, நாடகம்,இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம். 1921ல் துவங்கிய இது காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட மாற்றங்களுடன் தொடர்ந்து இயங்கிவருகிறது. . 3600 பேர் அமரக்கூடிய இந்த அரங்கத்தின் கடைசிக்காலரி 6 வது மாடியில்.
.1985ல் நஷ்டமதிகரித்ததனால் தியட்டர் மூடப்பட்டு விற்கபட்டுவிட்டது. மற்றொரு அடுக்குமாடி கட்டிடம் எழ வசதியாக இடிக்கப்படத் தயாரானது. வெகுண்டு எழுந்த கலை ஆர்வலர்கள் நீதி மன்றத்தில் போராடி காப்பாற்றியிருக்கிறார்கள். பராம்பரிய கட்டிடங்களைப் பாதுகாக்க சட்ட பிறக்க இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாகிறது. புதிபிக்கபட்டிருக்கும் இன்றைக்கு மிக அதி தொழில் நுட்ப வசதியுடன் இயங்குகிறது.
.சர்ச்சைகளை, சரித்திரங்களை உருவாக்கும் சிக்ககோ நகரின் சிற்பங்களில் இன்று, உலகம் முழுவதும் சிற்பகலைஞர்களால் பேசப்படுவது மில்லியனம் பார்க்கில் பிரமாண்டமாக நிற்கும் “க்ளவுட் கேட்” (cloud gate) என்ற படைப்புதான். 2004 ஆண்டு நகரின் நூற்றாண்டு விழாவின் நினைவாக ஒரு பெரிய சதுக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கிரேக்க பாணி நுழை வாயிலுடன் ஒரு பூங்கா, பரந்த புல்வெளி அதன்பின்னே ஒரு ரோஜாத் தோட்டம் என விரியும் இந்த வாளாகத்தின் ஒரு பகுதியில் பிரம்மாண்டமாக நிற்கிறது இந்தப் படைப்பு.
முழுவதும் பளபளக்கும் ஸ்டியன்லெஸ்ஸ்டிலால் ஆன இந்த படைப்புக்கு சிற்பி தந்த பெயர் “மேகங்களின் நூழை வாயில்”. ஆனால் ஒரு இது ஒரு பீன்ஸ் விதையைப்போலிருப்பதால் மக்கள் செல்லமாக பீன்ஸ் என்றே அழைக்கிறார்கள். 39 அடி உயரமும் 110 டன் எடையும் கொண்ட இதை வடிவமைத்தவர் அனிஷ் கபூர் என்ற இந்தியஓவிய சிற்ப கலைஞர்.. லண்டனில் வாழும் இந்த ஒவியரின் படைப்புகள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிரபலமானவை. இந்து மதகோட்பாடுகளை தனது ஒவியங்களின் மூலமாக திணிக்க முயல்பவர் என்ற சர்சையிலும் சிக்கியவர் என்பதால் இந்தபடைப்பும் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. நகரும் மேகங்களின் பின்னணியில் அருகில் உள்ள வானாளாவிய கட்டிடங்கள் தங்களை அழகு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பளபளக்கும் ராட்சதபடைப்புக்கு முன் நாம் நிற்கும்போது இந்த பெரிய உலகத்தின் முன் நாம் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணம் எழுகிறது.
மிகப் பிரம்மாண்டமான இதன் வழியே எளிதில் 50பேர் நுழைந்து வெளிவரலாம். அப்படி நுழையும்போது நமது உருவத்தையே தலைகிழாக தொங்குவதைப் போல் பார்ப்பது ஒரு வினோதமான அனுபவம்
.
அதே வாளாகத்தில் ஒரு 60 அடி உயர சுவற்றில், சுவர்முழுவதும் நிறைந்த ஒரு முகம் 5 நிடத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டேயிருக்கிறது.ஓவ்வொரு முறையும் அந்த உருவத்தின் வாயிலிருந்து நீர் கொட்டுகிறது.ஏதோ விளம்பரம் என்று நினைக்கத் தோன்றும் இதுவும் டிஜிட்டல் சிற்பகலையின் ஒரு வகையாக கருதப்படும் டிஜிட்டல் நீருற்று சிற்பம். பல மில்லியன் டாலர் செலவில் உருவாக்கபட்டிருக்கிறது. படங்கள் மாறிக்கொண்டேயிருக்கிறது. கண்களைச்சிமிட்டிய சில வினாடிகளில் வாயிலிருந்து நீர் கொட்டுகிறது. தோன்றும் முகங்கள் அனைத்தும் சிக்காகோ வாசிகள். அவர்கள் அறியாமல் எடுக்கப்பட்ட படங்கள்.இன்று தங்கள் முகம் வருமோ என்ற எதிர்பார்ப்புடன் உள்ளூர் வாசிகளும், நீரில் நனைந்து விளையாடக் குழந்தைகளும், ஒரு பெரிய படம் பலதுளி டிஜிட்டல் பட சதுரங்களாக படைக்கப்பட்டு இணைக்கபட்டிருக்கும். இதில் அடுத்த படம் மாறும் செய்நேர்த்தியை காண மக்கள் காத்திருக்கின்றனர். சிலைகள் சிற்பங்கள் என்றால் அசையாது நிற்கும் அழகான படைப்புகளையே பார்த்துப் பார்த்து பழகிவிட்ட நமக்கு இவைகளையெல்லாம் சிற்பங்கள் என ஏற்று கொள்ள சற்று கஷ்டமாகத்தானிருக்கிறது.
டேனியல் ஹட்ஸ்ன் கனவு கண்டதைப்போலச் சிக்காகோவில் எல்லாமே பிரம்மாண்டமாகத்தான்உருவாகி உலகின் முக்கிய நகரமாகி, விட்டது.இன்று இன்னமும் பிரம்மாண்டமாகிக்கொண்டே போகிறது. ஓவ்வொரு ஆண்டும் நகரம் உருமாறிக் கொண்டே யிருக்கிறது.
சிக்காகோவைப்பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன் மார்க் ட்வைன் சொன்னவை இது:
அவள் எப்போதுமே அழகாக, புதுமையாகயிருப்பவள்.
நீங்கள் கடந்த முறை பார்த்ததைப் போல
அடுத்தமுறை இருக்கமாட்டாள்
இன்னும் அழகாகியிருப்பாள். .
எவ்வளவு உண்மையான வாசகங்கள்?
அருமையான பயணம். அழகான படங்கள். நன்றி சார்,
பதிலளிநீக்குவிஜ்யராகவன் சென்னை