5/12/16

ஆச்சரியப்படுத்தும் ஆளுநர்
 “மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா. இந்திய மாநிலங்களிலேயே எல்லாப் பகுதிகளும் எழில்கொஞ்சும் இயற்கையின் பேரழகு மிளிரும் மாநிலம். அதன் தலைநகரான ஷில்லாங் நகரின் நடுவிலிருக்கும் அழகான ஏரியின் அருகில் பரபரப்பாக இயங்கும் குறுகிய சாலைகளின் இடையே, அமைதியாக, கம்பீரமாக நிற்கிறது ராஜ்பவன்.

பரந்த பசும்புல்வெளியின் பின்னே வண்ண மலர்கூட்டங்களுக்கிடையே இளஞ்சிவப்பு வண்ண கூரையுடன் நீண்ட வாராண்டாக்களுடன் இருக்கும் இந்த அரசுகட்டிடத்தின் வயது 113. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியில் கட்டப்பட்ட முதல் அரசு கட்டிடம் இது. நில நடுக்கங்களின் தாக்குதலுக்குள்ளாகாத வகையில் முழுவதும் தேக்கு, ஓக் போன்ற மரப்பலகைகளினாலும், மழைநீர் சேராதிருக்க கூம்பு வடிவ கூரைகளினாலும் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டிடம் இந்தியாவின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

நுழைவாயிலில் நிற்கும் தென்னக கோவில்களில் மட்டுமே காணப்படும் அடுக்கு விளக்கைக் கடந்து போகும் நம்மை இரண்டு யானைத்தந்தங்களுக்கிடையே தியானிக்கும் புத்தர் வரவேற்கிறார். வலது புறம் இருக்கும் நீண்ட அழகான வரவேற்பு கூடத்தில் நுழைகிறோம்

.
வாங்க வணக்கம்”. என முகமலர வரவேற்கிறார். மாநில ஆளுநர் சண்முகநாதன்.
தஞ்சை மாவட்டத்துக்காரர். தமிழகத்தின் தென்கோடியிலிருந்து அத்தனை கிராமங்களையும் அறிந்தவர். பல கிராமங்களிலும் நகரங்களிலும் இளைஞர்களைப் பன்முகதிறனாளிகளாக்க பயிற்சிகள் அளித்தவர். இளைஞர்களின் நலன், மேம்பாடுகுறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பல கட்டுரைகள் எழுதியிருப்பவர்.

நான் ஒரு சாதாரண, சாமானியங்க.”. எனது அரசியல் வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் இன்று இந்த மாநிலத்தின் ஆளுநர் என்ற கட்டத்தில் நிற்கிறேன்” என்று எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார். உடல் நலம் சற்று குன்றியிருந்தாலும் மிகத்தொலைவிலிருந்து தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நம்மைச் சந்திக்க அன்புடன் சம்மதித்திருந்தார்.
அவரே ஒரு எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் இருப்பதால் ,தமிழக இலக்கிய சுழல், பத்திரிகைகள்பற்றி நன்கு அறிந்திருக்கிறார். இவருடைய ஆங்கிலபுத்தகமான ‘The Remarkable Political Movement பல சமூக, கலாச்சார மேம்பாட்டு இயக்கங்களில் பிரபலமானது
.
பேசும்போது மிக இயல்பாகத் திருவாசகம், தேவார வரிகளைச் சொல்லுகிறார். மிக உயர்ந்த கருத்துகளைச் சொல்லும் இவற்றை இன்றைய இளைஞர்களுக்குச் சரியான முறையில் எடுத்துச் சொல்ல நாம் தவறிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்.
சிறு வயதில் பள்ளிநாட்களில் சமூக ஏற்றதாழ்வினால் சந்தித்த சில நிகழ்வுகள் ஏற்படுத்திய காயத்தினால், அதுபற்றி என் அம்மாவிடம் கேட்டேன்.” அது நமது சமூக அமைப்பு அப்படித்தான் இருக்கும்என்றார். என் மனம் ஏற்கவில்லை. பிறப்பினால் அனைவரும் சமம்- செய்யும் தொழிலில் காட்டும் திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னேரே தெய்வப்புலவன் திருக்குறளில் சொல்லியிருப்பதை உணர்ந்து என் திறமைகளை வளர்த்துக்கொண்டு இந்தநிலையை மாற்ற வேண்டும், நம்மால் ஆனதை இதற்காகச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகரின் வார்த்தைகள், விவேகானந்தர் கருத்துகள் எல்லாம் படித்தபொழுது இந்த எண்ணம் வலுப்பெற்றது.
.

பள்ளிக்காலத்தைத் தொடர்ந்து கல்லூரியில் காலடி எடுத்துவைத்தபோது இந்த எண்ணங்கள் வளர்ந்திருந்தது. அந்தக் கட்டத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவரது மாமாவிற்கு எழுதிய கடிதத்தைப் படிக்க நேர்ந்தது. அதில்தனிமனிதன் வாழ்க்கையில் வளர முடியும். ஆனால் அதேவளர்ச்சி நாட்டின் வளர்ச்சியில் இல்லாவிட்டால் என்ன பயன்? யாரோ உரமிட்டு வளர்த்த மண்ணில் நாம் இப்போது விளைச்சலின் அறுவடையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அந்த மண்ணை, மக்கள் நலனுக்காகச் சீராக்க பாதுகாக்க நமது அபிலாஷைகளைத் தியாகம் செய்யக்கூடாதா? என்ற எண்ணத்தில் நாட்டிற்காக சமூக பணிகளைச் செய்யப் போகிறேன்” -என்ற அந்தக் கடிதம் என்னை மிகவும் ஈர்த்தது. அதைப் படித்த எனக்கும் மனதிலும் அந்த எண்ணம் எழுந்தது. ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் தொண்டராக இணைந்தேன். இதற்காக வீட்டை விட்டு வெளியேறினேன்.. உடன் பிறந்தவர்கள் எல்லோரும் படித்து முடித்துத் தனி வாழ்க்கை அமைத்துகொண்டநிலையில் . சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில்லில் முதல் மாணவனாக வந்து வேந்தர் கையால் தங்க மெடல் பெற்ற நான் மட்டும் நல்ல பணிக்குப் போகாமல் திருமண வாழ்க்கையைத் தவிர்த்து இப்படி சமூக சேவையில் இறங்கிவிட்டதில் என் தாயாருக்கு மிகுந்த வருத்தம் தான்.
ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கட்டளைகளுக்கு ஏற்பப் பல நிலைகளில்., வெவ்வேறு காலகட்டங்களில் சமூகப்பணி. இளைஞர் நலம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தேன். ஒரு நல்ல மனிதன் என்பவன் எல்லோருக்கும் நண்பராக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். பின்னர் பிஜேபியில்  கட்சி பணிகள் பல மட்டங்களில் தொடர்ந்தன.
2003
லிருந்து டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் பணி. நமது நாடாளுமன்ற முறைகளை, பாதுகாப்புத்துறை, வெளிவிவகாரத்துறை குறித்து நிறையப் படித்து ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. வெளிநாட்டுப் பணிகளின் அனுபவமும் கிடைத்தது.
என்று தனது அரசியல் வாழக்கைப்பாதையை விவரிக்கும் இந்த ஆளுநர் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 90 களில் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற அமைப்பை முன்நின்று நடத்தியவர். இன்று சென்னையில் தமிழ் வளர்த்த சான்றோர், உறவுச்சுரங்கம் போன்ற அமைப்புகள் தமிழின் வளர்ச்சிக்காகச் செய்யும் பணிகள்பற்றி பேசும்போது. இந்தமாதிரி அமைப்புகள் செய்யும் முயற்சிகள் வரவேற்க தகுந்தவைகள் தான். ஆனால் இம்மாதிரி கூட்டங்களுக்கு இளைஞர்களை ஈர்க்க நிறைய முயற்சிகள் செய்ய வேண்டும். அது தான் தமிழின் வளர்ச்சிக்குச் செய்யும் உண்மையான பணி என்ற கருத்தை முன் வைக்கும் இவர் திவ்விய பிரபந்தத்தை ஒப்புவிக்கும் மாணவர்களுக்குப் பணப் பரிசுகளை அறிவித்திருக்கிறார்.
நாட்டின் பல்வேறு இளைஞர்கள் பங்கு கொள்ளும் ஒரு கூட்டத்தில் உன்னுடைய பிரார்த்தனை எதையாவது சொல்லு என்றால், கிருத்தவ இளைஞன் ,பைபிள் வாசகத்தையும் இஸ்லாமியர் குரான் வாசகங்களைச்சொல்லுகிறார்கள்இந்து மாணவன் தயங்கி எதையும் சொல்லுவதில்லை. இதை மாற்ற, நம் இளைஞர்களுக்குத் தமிழின் பெருமையை உணரச்செய்ய வேண்டும் என்கிறார்
.
ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புபற்றி, தமிழக உதல்வரின் உடல் நலம் பற்றிக் கேட்கிறார். “அவர் அரசியல் மட்டுமில்லை ஏழைகளின் மனத்தையும் அறிந்தவர். விரைவில் நலம் பெற வேண்டும்” என்கிறார்.
சந்திப்பு மதிய உணவு வேளையாக இருந்ததினால், உடன் உணவருந்த அழைக்கிறார். அந்த மாநிலவிசேஷமான இனிப்புடன் பளிரென்ற இட்லிகளுடன் வடை சட்னி எல்லாம் வருகிறது. மேகாலயா ராஜ்பவனில் இட்லி.! மிக மிருதுவான அதைத் தொட்டவுடன் தமிழரின் தயாரிப்பு என்பதைச்சொன்னது. சமையல் பணிக்குத் தமிழ் நாட்டிலிருந்து அழைத்துவந்திருக்கிறீர்களா என்ற நமது கேள்விக்குஇல்லை இங்கு 30 ஆண்டுகளாக பணியிலிருக்கும் முத்து தமிழ் நாட்டுக்காரர். உங்களுக்காக அவர் இதைச்செய்திருக்கிறார் என்கிறார்
ஆளூநருக்காக எடுத்துச் சென்ற தமிழ் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு விடைபெறுகிறோம்
.
இதைப்பார்த்தீர்களா? என அந்த அறையிலருக்கும் ஒரு படத்தைக் காட்டுகிறார். அது திருச்சி உச்சிபிள்ளையார் கோவிலிருக்கும் மலைக்கோட்டையின் முன் இரண்டு ஆங்கிலேயே அதிகாரிகள் நிற்கும் ஆயில் பெயின்ட்டிங். இந்த ராஜ் பவனில் பல ஆண்டுகளாக இருக்கும் படம் என்கிறார். புகழ்பெற்ற ஒரு தமிழ் நாட்டுக் கோவிலின் படத்தை அங்கு பார்த்ததில் ஆச்சரியம்

ஒரு மாநில ஆளுரை பார்த்ததைவிட அன்போடு பழகிய நல்ல நண்பரைப் பார்த்த உணர்வு மேலிட்டது. வாயிலைக் கடக்கும்பொழுது முகப்பில் பொறிக்கபட்டிருந்த The good man is friend of all living being என்ற வாசகங்கள் கண்ணில் பட்டது. இது இந்த மனிதருக்கும் மிகவும் பொருந்தும். எனத் தோன்ரியது.
ஆளுநரின் உதவியாளரான ராணுவ அதிகாரிக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்புபோது, நம்மை அழைத்துவந்த டாக்சியின் ஓட்டுநர், உங்கள் நாட்டிலிருந்து வந்திருக்கும் கவர்னர் மிக நல்லவர் என்கிறார்,
எப்படிச் சொல்லுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்நான் இங்கு பெரிய அளவில்  நடந்த கணேச பூஜையில் கலந்து கொண்டேன். இந்த ராஜ்பவனில் இது போன்றவைகள் இதுவரை நடந்ததில்லை”.
தமிழகத்திலிருந்து பல வெகுதொலைவில்  நாட்டின் வடகிழக்கு மூலையில் இருக்கும் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகனாக இருக்கும் இந்தத் தமிழன் அங்குள்ள சதாரண மனிதர்களின் மனதிலும் இடம் பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்தபோது பெருமையாக இருந்தது.

6.12.1கல்கி இதழலில் எழுதியது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்