இந்த மாத இதழ் அமுதசுரபியில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை. இதழாசிரியருக்கு நன்றியுடன்.. இங்கே..
தமிழ்த் தாத்தாவின் தாத்தா காலத்திற்கு முன்னரே சுவடிகளைத் தேடியவர்.
தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள், தமிழை வைத்தே பிழைத்தவர்கள், தமிழை வியாபாரம் செய்பவர்கள், தமிழால் புகழ் பெற்றவர்கள், தமிழைத் தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவர்கள், மனமகிழ்ச்சிக்காகத் தமிழைப் படித்தவர்கள், இலக்கிய சுவைக்காகத் தமிழை நேசித்தவர்கள்.. எனப் பல விதத்தில் தமிழைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கெல்லாம் தெரியும் கரையானுக்கும், செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த நூல்களைக் காப்பாற்றி நமக்குக் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுகிற உ.வே.சுவாமிநாத ஐயர்.என்பது.
ஆனால் தமிழ் தாத்தா பிறந்த 1855 ஆம் ஆண்டுக்கு 72 ஆண்டுகளுக்குமுன்னே(1783) அதாவது தமிழ் தாத்தாவின் தாத்தா காலத்திலேயே ஒரு மனிதன் தமிழக கிராமங்களில் சுவடிகளையும், செப்பு தகடுகளையும் தேடி அலைந்து சேகரித்து தொகுத்திருக்கிறார் என்பது ஓர் ஆச்சரியமான செய்தி. அதைவிட ஆச்சரியம் அந்த மனிதன் தமிழன் அல்ல என்பது மட்டுமில்லை தமிழே தெரியாத ஆங்கிலேயர் என்பது தான்.
அந்த ஆங்கிலேயர் காலின் மெக்கன்சி. தொல்பொருளியல், நாணயவியல், வரைபடவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், மதம், தத்துவம் சார்ந்த அறிவியல் போன்ற பல துறைகளில் ஆர்வம் மிகக் கொண்ட ஒரு ஆங்கிலேய அரசு அதிகாரி.. தமிழ்த் தாத்தாவைப்போல ஊர் ஊராகச் சென்று சுவடிகளைச் சேகரித்தது போல இவரும் கைப்பணத்தைச் செலவழித்து உதவியாளர்கள் மூலம் தொகுத்த சுவடிகளும், சில கல்வெட்டுக்களின் பிரதிகளும் பின்னாளில் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு மூல ஆதாரமாக இருந்திருக்கிறது. இவர் தமிழகம் மட்டுமில்லாமல் இலங்கை, ஜாவா தீவுகளுக்கும் சென்று சுவடிகளை சேகரித்திருக்கிறார்..
தமிழகத்தின் பல்வேறு முகங்களை வெளிக்காட்டும், அரியச் செய்திகளைச்சொல்லும் இந்தத் தொகுப்புக்களை தொகுத்துக் குவித்திருப்பவர் மெக்கன்ஸி என்ற ஆங்கிலேயர்.
யாரிந்த மெக்கன்சி?
இந்தியாவில் முதன் முதலில் கள ஆய்வினைத்தொடங்கிவைத்தவரான மெக்கன்சி ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அவர் கிழக்கிந்திய கம்பெனியில் 30ஆவது வயதில் இணைந்து சில போர்களிலும் பங்கேற்று இறுதியில் சென்னையில். தலைமை நில அளவை ஆய்வாளராக பொறுப்பேற்று அரை நூற்றாண்டு . காலம் பணியாற்றிய பொழுது ஆர்வம் காரணமாக செய்த காரியம் இந்த சேகரிப்பும் தொகுப்பும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. மெக்கன்சி தன் அலுவலக பணிக்காக சென்ற இடங்களில் எல்லாம் தன் சுவடி சேகரிப்பு, தொகுப்புப் பணிகளை செய்து வந்திருக்கிறார். இப்படி 30 ஆண்டுக்காலம் அவர் தொகுத்த தொல்பொருள் தொகுப்பை அவரே அழகாக வகைப்படுத்தி பட்டியிலிட்டிருக்கிறார். இன்றைக்குத் தமிழக வரலாற்றை ஆராய்பவர்களுக்கு உதவும் அரிய பொக்கிஷம். அவரது மரணத்திற்குப் பின்னர் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்ட அறிக்கை காணாமல் போயிவிட்டது. இன்று இருப்பது சென்னை ஆவணக்காப்பகத்திலிருக்கும் அதன் நகல் மட்டுமே
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதுரை தான் மெக்ன்சியின் தொகுப்புப் பணியில் முதலிடம் பெற்றிருக்கிறது அதற்குக் காரணம் அவர் அங்கு தங்கியிருந்த போது தமிழ் அறிஞர்களிடம், நண்பர்களிடமும் விவாதித்தபோதுதான் தமிழ் நாட்டின் வரலாறு, வாழ்க்கைமுறை, இலக்கியம் பற்றி நிறையத் தெரிந்துகொண்டிருக்கிறார். அவை பற்றிய செய்திகளின் சேகரிப்பின், தொகுக்கப்படவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்..
இந்த ஆர்வத்தினால், அலுவலக பணிக்காக அடிக்கடி குமரி முதல் கிருஷ்ணா வரையிலும் சென்று வரும்போதெல்லாம் தொகுப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார். பலருடன் இயங்கும் ஒரு நிறுவனம் கூட தொகுத்திட முடியாத அளவிலான தொகுப்புகளை தனிப்பட்ட முறையில் தொகுத்திருக்கிறார்.
இப்படி இந்த மனிதர் சேகரித்து தொகுத்திருப்பதின் எண்ணிக்கைகளைப் பாருங்கள். கல்லிலும் செம்பிலும் உள்ள சாசனங்கள்3000, பல்வேறு மொழிகளைச்சேர்ந்த சுவடிகள் 1568, கல்வெட்டுக்கள் 8076, ஓவியங்கள் 2630 வரைபடங்கள் 78 நாணயங்கள் 6218. இவற்றை சேகரிக்கபட்ட்து மட்டுமில்லாமல் மட்டுமில்லை மொழி வாரியாக, நியாயம் , தர்மம், சட்டம், கணிதம் எனப் பல பிரிவுகளில் தொகுக்கவும் பட்டிருக்கிறது.
தொல்பொருள் தொகுப்பில் மெக்கன்சி காட்டிய ஆர்வம் ஆச்சரியப்படவைக்கிறது. எங்கோ ஸ்காட்;லாந்தில் ஒரு சதாரண குடும்பத்தில் பிறந்து பணி நிமித்தம் இந்த நாட்டிற்கு வந்து செய்த அலுவலகப்பணியோடு இத்தகைய அரியச் சாதனை செய்திருக்கும் இவரது சேவைகளுக்கு நமது வரலாற்றில் உரிய இடம் தரப்படவில்லை,
மலையாளம், தெலுங்கு கன்னட மொழிகளுக்கு உதவ அறிஞர்கள், கிராமங்களுக்குச் சென்று சேகரிக்க பணியாளார்கள், குடும்பங்களின் வரலாறுகளை அந்த குடுபத்தினரையே எழுதிதரச்சொல்வது, மலைவாழ்மக்களை சந்தித்துக் குறிப்பு எழுதிக்கொள்வது, கல்வெட்டுகளைத் தாளில் பதிந்துகொள்வது, புரியாதவற்றை ஓவியமாக்கிக் கொண்டுவந்து பரிசீலிப்பது போன்ற முறைகளைப் பயன் படுத்தி தன் தொகுப்பைச் செம்மைப்படுத்தியிருக்கிறார். எல்லாவற்றையும் விட நம் கவனத்தை கவர்வது சேகரித்ததில் தெளிவாகப் புரியாத விஷயங்களைப் பற்றி ஒரு வினா பட்டியலை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விடைகள் பெற்று தொகுப்பில் சேர்த்திருப்பதுதான்.
தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமான 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சை வரலாற்றை அறிந்து கொள்ள, கல்வெட்டுகளில் இருக்கும் தவறுகளை திருத்திக்கொள்ள இவர் தொகுப்பில் இருக்கும் தெலுங்கு, தமிழ் சுவடிகள் தான் உதவியிருக்கின்றன. தவிர . அதே போல இவர் ஜாவா தீவுகளில் பணியாற்றிய போது கண்ட, எகிப்திய பிரமிடுகளைவிடப் பழமையான புத்தர் கோவிலை பற்றி இவர் எழுதிய குறிப்புக்கள் தான் புத்த மதம் ஜாவாவில் பரவியிருந்ததற்கு முதல் சான்று.
பணியில் இருந்த காலத்தில் (1818) இந்தியாவின் வரலாறு என்று ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டிருப்பதாக ஒரு குறிப்பில் சொல்லும் மெக்கன்சி இறுதிவரை அதை எழுதவே இல்லை. தன்னுடைய 38 ஆண்டுக்கால இந்திய பணியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய மெக்கன்சி கல்கத்தாவில் இருக்கும்போது தன் தொகுப்புப் பணிகளை இங்கிலாந்து சென்று தொடரவிரும்பினார், விடுமுறை கிடைப்பதற்குள் இறந்துவிடுகிறார். அவரது தொகுப்புகளை அவரது மனைவியிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி விலைக்குப் பெற்று அதை கம்பெனியின் சொத்தாக அறிவிக்கிறது. மெக்கன்சியின் தொகுப்புகள் பல இங்கிலாந்து அனுப்பபட்டுவிட்டன தென் இந்தியப்பகுதிகளைச் சேர்ந்த சுவடிகள் ஆவணங்கள், கட்டுரைகள், கல்வெட்டு பிரதிகள் போன்றவகைகள் இப்போது சென்னையில் இருக்கிறது. மெக்கசிக்கு பின் இவைகள் தேர்ந்த உதவியாளர்களால் பட்டியலிடப்பட்டிருக்கிறது
.
ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் சென்னை கோட்டையிலிருக்கும் ஆவணக்காப்பகத்தில் மெக்ஸியின் குறிப்புகளுக்கு என தனிப்பகுதியே இருக்கிறது. அதிலிருக்கும் தமிழ் சுவடிகளை பேராசியர் முனைவர் ராசேந்திரன் அன்றைய தமிழகத்தின் அரசியல், சமுதாயப் பொருளியல், பண்பாடு நிலைகள் பற்றி ஆய்ந்து 1793-95, 1796-1810, 1811-1813, என்று முன்று கால கட்டங்களாக பிரித்து காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் என ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இன்றும் பல வெளிநாட்டு உள்நாட்டு பல்கலைக்கழக மானவர்களின் ஆராய்சிகளுக்கு இந்தக் குறிப்புகள் உதவுகின்றன.
“ மெக்கன்சியின் பெருமையைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம் அவருடைய தொகுப்பே என்றும் அவர் பெருமையை சொல்லும்” என்று குறிப்பு எழுதியிருக்கிறார் அன்றைய வைஸ்ராய் கர்னல் வெல்லீஸ்லி.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்